சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

உயர்கல்விக்கான விரிவுபடுத்தல் நாட்டில் பாரியதொரு சவால் மாற்றுவழி அவசியம் -விஷ்வ வர்ணபால

உயர் கல்வி கற்று ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழக தகுதியைப் பெற்றுக்கொள்கின்றபோதும் மிகக் குறைவானோருக்கே பல்கலைக்கழக அனுமதி கிடைக்கின்றது. இதற்கான மாற்று வழிகள் அவசியமென உயர் கல்வியமைச்சர் பேராசிரியர் விஷ்வ வர்ணபால தெரிவித்தார்.

சார்க் நாடுகளின் உயர் கல்வியமைச்சர்கள் மாநாடு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றபோது மாநாட்டில் ஆரம்ப உரை நிகழ்த்தும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பூகோளமயமாக்கலின் கீழ் புதிய உயர் கல்வி வாய்ப்புகள் சாத்தியமற்றதாகிவரும் நிலையில் சார்க் நாடுகள் தமது சொந்த வளங்களையும் மூலோபாயங்களையும் ஆற்றல்களையும் பயன்படுத்தி இத்தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற மேற்படி மாநாட்டில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் வர்ணபால, உயர் கல்விக்கான வசதிகளை விரிவுபடுத்துவது ஒரு சவாலான விடயமாகவே எம்முன் உள்ளது எனவும் தெரிவித்தார்.

மேற்படி மாநாட்டில் உரையாற்றிய சார்க் அமைப்பின் செயலாளர் நாயகம் டாக்டர் iல் காந்த் சர்மா, உயர் கல்வித்துறையில் அபிவிருத்தியின் தேவை இன்றியமையாதது என்பதுடன், சார்க் பிராந்திய நாடுகள் ஒரேவிதமான உயர் கல்விக் கொள்கையைப் பற்றி ஆராய்வதும் சிறந்தது எனத் தெரிவித்தார்.

இம் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் உயர் கல்வித் திணைக்களத்தின் செயலாளர் ஸ்ரீ ஆர். பி. அகர்வால், பாகிஸ்தானின் சார்பில் உயர் கல்வி ஆணைக்குழு உறுக்பினர் பேராசிரியர் ரியாஸ் அல்ஹக் தாரிக், ஆப்கானிஸ்தானின் சார்பில் உயர் கல்வியமைச்சர் கலாநிதி மொகமட் அஸாம் டட்பார், பங்களாதேஷ் சார்பில் கல்வியமைச்சர் நூருல் இஸ்லாம் நஹீட், பூட்டான் சார்பில் கல்வியமைச்சர் லியோன்போ தாஹீர் எஸ். யெளடியல், மாலைதீவின் சார்பில் கல்வியமைச்சர் அஹமட் அலி மனிக்கு, நேபாளம் சார்பில் கல்வியமைச்சர் ரேணுகுமாரி யாதவ், இலங்கையின் சார்பில் பிரதிக் கல்வியமைச்சர் மயோன் முஸ்தபா உட்பட அமைச்சின் அதிகாரிகள், முக்கியஸ் தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

ஜி 20 மாநாடு தொடர்பாக லண்டனில் ஆர்ப்பாட்டம்

protest_london.jpgஉலக பொருளாதார நெருக்கடி பற்றி அடுத்த வாரம் லண்டனில் நடக்கவிருக்கும் 20 முக்கிய நாடுகளின் மேனிலை மாநாட்டுக்கு முன்னொடியாக ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று லண்டன் வீதிகளின் ஊடாக அணிவகுத்துச் சென்றார்கள்.

வறுமை, வேலைவாய்ப்புகள், பருவநிலை மாற்றங்கள் ஆகியவை குறித்து அவசர நடவடிக்கை வேண்டும் என்று குரல் எழுப்பிய இந்த அணிவகுப்பாளர் கூட்டணியில் பல தொழிற்சங்கங்கள் பல அறநிலையங்கள், மதசார்புக் குழுக்கள், சுற்றாடல் பாதுகாப்பு பிரச்சாரகர்கள், இப்படிப் பலர் இணைந்திருந்தார்கள். தாம் சொல்ல விரும்புவது சமாதானமான முறையில் போய் சேரவேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஆனாலும்,  அடுத்த சில தினங்களில் நடத்தப்படவுள்ள மற்றைய ஆர்ப்பாட்டங்கள் தெருக்கலவரங்களை உருவாக்கக்கூடும் என்று கருதும் பாதுகாப்பு அதிகாரிகள் உஷார் நிலையில் இருக்கிறார்கள். இதேபோல பொருளாதார நெருக்கடி பற்றிய கண்டன ஆர்ப்பாட்டங்கள் ஜெர்மனியிலும் நடத்தப்படுகின்றன.

பாகிஸ்தான் பள்ளிவாசலில் குண்டு தாக்குதல்; 56 பேர் பலி 80 பேர் காயம்

moq-pak.jpgபாகிஸ்தானின் வடமேற்கே கூட்டம் நிறைந்த பள்ளிவாசல் ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகை ஆரம்பமான நேரத்தில் தற்கொலை குண்டுதாரி தாக்கியதில் குறைந்தபட்சம் 56 பேர் கொல்லப்பட்டும் 80 பேர் காயமடைந்தும் இருக்கின்றனர்

இந்நிலையில் காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், இறந்தவர்கள் தொகை மென்மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவம் நடைபெற்றபோது மேற்படி பள்ளிவாசலில் 250 பேர் வரை வெள்ளிக்கிழமை தொழுகைக்காக கூடியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.  தாக்குதலின் உக்கிரத்தில் பள்ளிவாசல் கட்டிடம் சேதமடைந்தது. ஆப்கானிஸ்தான் செல்லும் பாதையில் அமைந்துள்ள கைபர் கணவாய் அருகே இருக்கும் ஜம்ருத் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பிரதியமைச்சர் பாயிஸை எம்.பி. பதவியிலிருந்து நீக்க நேற்று இடைக்கால தடை

கால்நடை அபிவிருத்தி பிரதியமைச்சர் கே.ஏ. பாயிஸை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கு எதிராக நேற்று கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன இடைக்கால தடையுத்தரவைப் பிறப்பித்தார்.

பிரதியமைச்சர் பாயிஸ் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அல்லவென்றும், அவர் கட்சியை விட்டு வெளியேறி விட்டதாகவும், இவருக்கு ஐக்கிய தேசியக் கட்சி மூலம் வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குமாறும் கோரியே முஸ்லிம் காங்கிரஸ் இவ்வழக்கைத் தாக்கல் செய்திருந்தது. இவரை நீக்குவதற்கு எதிரான தடையுத்தரவு எதிர்வரும் 8ம் திகதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐ.தே.க. மற்றும் மு.கா. ஆகிய கட்சிகளுக்கே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷிய அணைக்கட்டு உடைந்ததில் 58 பேர் பலி

indo.jpg
இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்தாவின் அருகே அணைக்கட்டு ஒன்று உடைந்ததில் குறைந்தது ஐம்பத்து எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் காணாமல் போயுள்ள டஜன் கணக்கானவர்களை மீட்புப் பணியாளர்கள் தேடிவருகிறார்கள்.

டாங்கெரங் வட்டகையில் நகரவாசிகள் தூங்கிக்கொண்டிருந்த வேளையில் வந்த வெள்ளம் கார்களை அடித்துச் சென்றதோடு பள்ளங்களை நிறைத்தது. நீரில் மூழ்கியுள்ள பகுதிகளில் சடலங்களும் குப்பைகூளங்களும் மிதக்க ரப்பர் படகுகளில் மீட்புப் பணியாளர்கள் பயணிக்கிறார்கள். சென்ற நூற்றாண்டில் கட்டப்பட்டிருந்த இந்த களி மண் அணைக்கட்டு கடும் மழையை அடுத்து உடைந்திருந்தது.

சட்டரீதியற்ற பட்டங்களுக்குத் தடை – எஸ்.பி. அரசுக்கு நன்றி

spdesanayaka.jpg
அமைச்சர்களுக்கு சட்ட ரீதியற்ற வகையில் கலாநிதி, தேசபந்து போன்ற கௌரவப் பட்டங்கள் வழங்குவதைத் தடை செய்ய குழு ஒன்றை அரசு நியமித்துள்ளது.  இது வரவேற்கத்தக்கது. இதற்காக அரசுக்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என எஸ்.பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக் கழகங்களின் பட்டங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

சர்வதேச, உள்ளூர் அழுத்தங்களுக்கு நாம் ஒரு போதும் அடிபணியோம். – ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpgநாட்டுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை. நாம் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்ற நோக்கில் ஜனாதிபதியாகிய என்னையும், பாதுகாப்பு செயலாளரையும், இராணுவத் தளபதியையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக கொண்டு செல்வதற்குத் தேவையான தகவல்களைச் சிலர் திரட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட கிளைகளினதும் சங்கங்களினதும் பிரதிநிதிகள் சந்திப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் நேற்று நடைபெற்றது. இச்சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இச்சந்திப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், புலிகளின் பணத்திற்கும், அவர்களின் கவனிப்புக்கும் மதிமயங்கிய சிலரே இவ்வாறான செயலில் ஈடுபடுகின்றனர். எமது நாட்டிலேயே பிறந்து வளர்ந்த ஒரு சாராரும், வெளிநாட்டில் வாழுகின்ற வேறு சக்திகளும் தமக்குக் கிடைக்கின்ற பொருளாதார, அரசியல் இலாபங்களையும், பணத்தையும் மட்டுமே மனதில் கொண்டு இவ்வாறு செயற்பட்டு வருகின்றனர்.

சிலர் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மட்டுமல்ல அமெரிக்காவிலும் இருந்து கொண்டு இவ்வாறான செயலில் ஈடுபடுகின்றனர். நாட்டுக்கு கெடுதல் செய்யும் இவ்வாறான சூழ்ச்சிக்காரர்கள் நாம் முன்னெடுக்கின்ற வேலைத் திட்டங்களை தோல்வி அடையச் செய்வதற்கு எமக்கு எதிராக சர்வதேச அழுத்தத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.

நாம் புலிப் பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கின்ற நடவடிக்கை இன்னொரு இனத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கையாக அமையாது. பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பது என்பது இந்த நாட்டில் வாழுகின்ற சகல இனமக்களுக்கும் விமோசனத்தைப் பெற்றுக் கொடுக்கும் காரியமாகவே கருதுகிறேன்.

இந்த நிலைமையை சர்வதேச சமூகத்திற்கு நன்கு தெளிவுபடுத்தியுள்ளோம். இந்த நாட்டை அழித்தாவது, புலிகளுக்கு நாட்டைத் தாரை வார்த்தாவது அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் ஒரு சாரார் செயற்படுகின்றனர். அவர்கள் புலிகளுடன் சேர்ந்து செயற்படுகின்றனர். இலங்கை தொடர்பான தவறான அபிப்பிராயங்களை பல்வேறு வழிகளிலும் இவர்கள் உலகிற்கு வழங்கி வருகின்றனர். இவற்றைத் தோற்கடிப்பதற்காக நாம் செயற்படுகின்றோம்.

எமக்கு எதிராக அழுத்தங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த அழுத்தங்களின் நோக்கம் நாம் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளை இடைநிறுத்துவதே. எனினும் இந்த சந்தர்ப்பத்தில் ஒன்றை மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். எந்தவிதமான உள்ளூர், வெளியூர் அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் நாம் முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்போம். அவற்றை ஒரு போதும் இடைநிறுத்த மாட்டோம்.

நாம் பயங்கரவாதத்தை முழுமையாகத் தோற்கடிப்போம். அதற்காக எம்மை ஏற்கனவே அர்ப்பணித்து விட்டோம். இந்நாட்டில் வாழுகின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் சகலரையும் ஒரே மக்களாக பார்க்கிறோம் என்றார்.

இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப பல்கலைக் கழகம் ரத்மலானையில் – அமைச்சர் பியசேன தகவல்

piyasena_gamage.jpgரத்ம லானையில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது தொழில்நுட்பவியல் பல்கலைக் கழகத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 31ஆம் திகதி திறந்து வைக்கவுள்ளதாக வாழ்க்கைத் தொழில்சார் தொழில்நுட்பப் பயிற்சி அமைச்சர் பியசேன கமகே தெரிவித்தார்.

இந்த தொழில்நுட்பவியல் பல்கலைக் கழகம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

உயர்கல்வி வாய்ப்பை இழந்த நிலையில் பாடசாலையை விட்டு விலகிச் செல்லும் நாட்டின் இளம் சந்ததியினருக்கு முறையான பயிற்சிகளை வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமாகும். நாடு பூராகவுமுள்ள தொழில்நுட்ப நிறுவனங்களில் தற்போது 70 ஆயிரம் பேர் வரை பயில்கின்றனர். இந்த எண்ணிக்கையை ஒரு இலட்சமாக அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

ரத்மலானையிலுள்ள தேசிய கைத்தொழில் கற்கை நிறுவன வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பேராதனைப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தரான பேராசிரியர் கபில குணசேகரவை ஜனாதிபதி நியமித்துள்ளார்.

இலங்கையின் தொழில் பயிற்சிக் கல்வியை உயர்தரத்தில் பேனுவதற்கு தேசிய தொழில்சார் மதிப்பீட்டு சான்றிதழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனூடாக சலக கற்கைநெறிகளும் சமகாலத்துக்குப் பொருத்தமானதாக வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மருதானை மற்றும் அம்பாறை உட்பட நாடு முழுவதிலுமுள்ள 9 தொழில்நுட்பக் கல்லூரிகள் தரமுயர்த்தப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

கோவை, கொச்சினுக்கு இலங்கை விமான சேவை ரத்து

sri-lanka-air-lanka.jpgகோவை, கொச்சின் உள்ளிட்ட நான்கு இந்திய நகரங்களுக்கான விமான சேவையை இலங்கை ரத்து செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கான விமான சேவையை பாதியாக குறைத்துள்ளது.

இலங்கை ஏர்லைன்ஸ் நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. கடந்த நிதியாண்டில் முதல் காலிறுதியில் இந்நிறுவனம் சுமார் ரூ. 250 கோடி டாலர் நஷ்டத்தை சந்தித்தது. அதே நேரத்தில் இந்நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை வைத்திருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் ஒப்பந்தத்தை முறித்து கொண்டது.

இதையடுத்து இந்நிறுவனம் சிக்கன நடவடிக்கையை எடுக்க ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு இயக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையை வாரத்துக்கு 100 எண்ணிக்கையிலிருந்து 50 ஆக குறைத்துள்ளது. கோவை, கொச்சின், கோழிக்கோடு, ஹைதராபாத் ஆகிய நகருக்கான விமான சேவையை ரத்து செய்துள்ளது.

ஜனாதிபதியின் 7 நிதி திருத்த சட்டங்கள் நிறைவேற்றம்

ranjithsiyabalapitiya.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்துள்ள பொருளாதார மறுமலர்ச்சித் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையில் ஏழு நிதித் திருத்தச் சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் நேற்று (25) நிறைவேற்றப்பட்டன. கடந்த 2008 டிசம்பர் 30ஆம் திகதி ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்ட 16 பில்லியன் ரூபாய் பெறுமதியான பொருளாதார நிவாரணத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், நிதிச் சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதி சமர்ப்பித்த 2009ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்திற்குப் புறம்பாக பொருளாதார நிவாரணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதால், அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நிதிச் சட்டமூலங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுவதாக அரச வருவாய்த்துறை மற்றும் பிரதி நிதியமைச்சரான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

அடுத்த புதிய நிதியாண்டு ஆரம்பமாகும் ஏப்ரல் முதலாம் திகதிக்கு முன்னர் இந்த நிதித் திருத்தச் சட்டமூலங்களை விவாதித்து நிறைவேற்றுவதற்காக நேற்றைய தினம் பாராளுமன்றம் விசேட அமர்வாகக் கூட்டப்பட்டிருந்தது.

வழமையான அமர்வுகளைப் போலன்றி, வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் நேற்று இடம்பெறவில்லை. சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார தலைமையில் பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 இற்குக் கூடியபோது, அமைச்சர் சியம்பலாபிட்டிய ஏழு நிதித் திருத்தச் சட்டமூலங்களைச் சமர்ப்பித்து உரையாற்றினார்.

முழு உலகமும் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, நாட்டின் வர்த்தக சமூகத்தினர் குறிப்பாக ஏற்றுமதித்துறையின் மூலம் நாட்டுக்கு அந்நியச் செலாவணியைத் தேடித் தரும் வர்த்தக நிறுவனங்களுக்கு வரிவிலக்களிக்கும் வகையில் ஜனாதிபதி முன்வைத்த நிவாரணத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிச்சலுகையை நடைமுறைப்படுத்துவதற்கும் நிதித் திருத்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கம் பொதுமக்கள் மீது வரிச் சுமையைத் திணித்திருப்பதாக எதிர்க்கட்சியினர் கூறினாலும், இந்தச் சட்டமூலங்களால் பாரிய வரிச்சலுகை வழங்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.

முக்கியமாக தேசிய உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தேசிய ரீதியாக உற்பத்தி செய்யப்படும், தேயிலைத் தொழிற்துறைக்குத் தேவையான இயந்திர, உபகரணங்களுக்கு வரிவிலக்களிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத செயற்பாடுகளால் சேதமடைந்த பஸ் வண்டிகளுக்காக நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதுடன், உள்ளூர் பித்தளை தொழிற்துறைக்கு ஊக்குவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

நகைத்தொழிலில் ஈடுபட்டுள்ள பெருந்திரளானோரை மேம்படுத்தும் வகையில் உள்ளூரில் தயாரிக்கப்படும் தங்கநகைகளுக்கு வற்வரி நீக்கப்பட்டுள்ளது.

தேயிலையை பக்கற்செய்து ஏற்றுமதி செய்வோருக்கு வருமான வரி விலக்களிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை நிறுவனமொன்றோ, தனி நபரோ இலங்கைக்கு வெளியில் சேவையாற்றி ஈட்டும் வருமானத்தை வங்கி ஊடாக நாட்டுக்குக்கொண்டு வரும் வருமானத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் கமநெகும, மக நெகும, சமுர்த்தி அபிவிருத்தி ஆகிய திட்டங்களுக்கு வற்வரி நீக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை எந்தவொரு அரசாங்கமும் வழங்காத வரிச்சலுகை கலைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

புத்தகமொன்றை எழுதுவதன் மூலம், மேடை நாடகத் தயாரிப்பின் மூலம், பாடலொன்றை எழுதுவதன் மூலம், இசையமைப்பதன் மூலம், பாடுவதன் மூலம் கலைஞர்கள் பெறும் வருமானத்திற்கும் வரி விலக்களிக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் நிலையிலும் அரசாங்கம் பொருளாதார மேம்பாட்டுக்காக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த இரண்டு பாரிய சவால்களையும் எதிர்கொண்டு அரசாங்கம் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

ஐ.தே.க. வினர் நாட்டின் பொருளாதாரத்தைச் சிதைத்துவிட்டு 45 ஆயிரம் கோடிக்காக உலகைச் சுற்றினர். ஆனால், நாம் பொருளாதார அபிவிருத்திக்காக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெறுகின்றோம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்