சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

சோமாலிய கடற்கொள்ளையர்களின் பணய கைதிகளை விடுவித்துள்ளதாக நேட்டோ கூறுகிறது

piratasdentro.jpgசோமாலிய கடற்கொள்ளையர்களால் பிடித்து பணயமாக வைக்கப்பட்டிருந்த 20 பேரை ஏடன் வளைகுடாவில் பணியில் ஈடுபட்டிருந்த தமது கடற்படையினர் விடுவித்துள்ளதாக நேட்டோ கூறுகிறது.

அங்கு பணியில் ஈடுபட்ட நேட்டோவின் டச்சு கடற்படையினர் கடற்கொள்ளையர்களை நிர்ப்பந்தித்து, அவர்கள் பிடித்து வைத்திருந்த, பெரும்பாலும் ஏமன் நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் என்று நம்பப்படுகின்ற பணயக்கைதிகளை விடுவிக்கச் செய்ததாக நேட்டோ பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த கடற்கொள்ளையர்களின் ஆயுதங்கள் களையப்பட்ட போதிலும், டச்சுச் சட்டப்படி அவர்களை கைது செய்வது சட்ட விரோதம் என்பதால், அவர்களை தடுத்து வைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, இரண்டு பெல்ஜியம் நாட்டவர் மற்றும் ஒரு டச்சுக்காரர் உள்ளடங்கலாக 10 மாலுமிகளுடன் சேர்த்து பெல்ஜியம் கப்பல் ஒன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் பிடித்து வைத்துள்ளதாக பெல்ஜியம் கூறியுள்ளது

பெருந்தோட்ட ஆசிரியர் நியமனம்: எஞ்சிய 61 பேருக்கான நியமனம் மீளாய்வு

sri-lanka-upcountry.jpgமத்திய மாகாணத்தில் 61 பேருக்கான ஆசிரியர் நியமனத் தெரிவு மீளாய்வு செய்யப்படவுள்ளது.

கடந்த இரு வருடங்களுக்கு முன் வழங்கப்பட்ட பெருந்தோட்ட ஆசிரிய நியமனத்தின் எஞ்சிய 61 பேருக்கான நியமனத்திற்கான பெயர்ப்பட்டியல் நேர்முகப் பரீட்சையின் பின் கடந்த வருட இறுதியில் வெளியிடப்பட்டது.

இந்நியமனம் வழங்கும் முன் மாகாண சபை கலைக்கப்பட்டதுடன், தற்காலிகமாக நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் பின் தற்போதைய மத்திய மாகாண கல்வி அமைச்சர், பதவியேற்றவுடன் உடனடியாக இந்நியமனங்களை இரத்துச் செய்ததுடன் மீளாய்வு செய்யப்படும் என்றார்.

அமைச்சர் பி. இராதாகிருஷ்ணனின் வேண்டுகோளின் பேரில் மீளாய்வு நடவடிக்கை கெட்டம்பே கல்வி அமைச்சில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றது.

பெயர்ப்பட்டியல் பத்திரிகையில் வெளியிடப்பட்ட பின் நேர்முகப் பரீட்சை இம்மாத இறுதிக்குள் நடாத்தப்படும் என்று கல்வி அமைச்சு சுட்டிக்காட்டுகின்றது.

புதுமாத்தளனுக்கு மேலும் 1200 மெ.தொ. உணவுப் பொருட்கள். திருமலையிலிருந்து நாளை கப்பல் புறப்படுகிறது

p-devaaratna.jpg முல்லைத்தீவு, புதுமாத்தளன் பகுதிக்கு 1200 மெற்றிக் தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் மேர்க் டப்ளின் சரக்குக் கப்பல் நாளை திருகோணமலை துறைமுகத்திலிருந்து புறப்படுகிறது.

17,500 பக்கற் குழந்தைகள் பால் மா, அரிசி, சீனி, கோதுமை, சோயா இறைச்சி, மிளகாய், மல்லி உட்பட சமையலுக்கு தேவையான பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ன தெரிவித்தார். தற்போது கொண்டு செல்லப்படும் 1200 மெற்றிக் தொன் உணவுப் பொருட்களுடன் புதுமாத்தளனுக்கு ஏப்ரல் மாதத்தில் மட்டும் 2600 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் ஓமந்தை ஊடாக முல்லைத்தீவு புதுமாத்தளனுக்கு உணவுப் பொருட்கள் கொண்டு சென்றதை விட அதிகளவு தற்போது கப்பல் மூலம் கொண்டு செல்லப்படுகிறது எனக் குறிப்பிட்ட ஆணையாளர் புதுமாத்தளனில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு எந்த விதத்திலும் சந்தர்ப்பம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

ஏப்ரல் முதல் வாரம் புதுவருடத்திற்கு முன்னதாக 1400 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன என்றும் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண குறிப்பிட்டார்.

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கற்கை நிலையத்திற்கு நிதி ஒதுக்கீடு

badurdeen.jpgபுத்தளம் நகரத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள இலங்கை திறந்த பல்கலைக்கழக கற்கை நிலைய பணிக்கென வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சருமான றிசாத் பதியுதீன் 20 இலட்சம் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார். கால்நடை வளத்துறை அபிவிருத்திப் பிரதி அமைச்சர் கே.ஏ. பாயிஸ் விடுத்த வேண்டுகோளையடுத்து, இந்த நிதியினை அமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சரின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான செயலாளர் எஸ்.ஆர்.எம்.எம். இர்சாத் தெரிவித்தார்.

இப்புனரமைப்புப் பணிக்கான நிதி புத்தளம் மாவட்ட செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், கற்ற சமூகத்தை உருவாக்க எடுக்கப்படும் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பை அமைச்சர் றிசாத் பதியுதீன் வழங்கிவருவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, இத்திறந்த பல்கலைக்கழகத்தின் கற்கை நெறி புத்தளத்தில் ஆரம்பிக்கப்படுகின்ற போது புத்தளம் மாவட்டத்தில் உள்ள தமிழ் பேசும் மாணவர்கள் பல்துறைகளில் முன்னேற்றம் காணுவார்கள் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் குறிப்பிட்டுள்ளதாக, பாராளுமன்ற விவகாரங்களுக்கான செயலாளர் எஸ்.ஆர்.எம்.எம். இர்சாத் மேலும் கூறினார்

கிண்ணியாவில் அல்-அக்ஸா கல்லூரிகளை ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர வேண்டும்

கிண்ணியா வலயக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட அல் அக்ஸா கல்லூரியையும் அல் அக்ஸா கணிஷ்ட வித்தியாலயத்தையும் ஒன்றாக இணைத்து, ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர வேண்டுமெனக் கோரி கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி மாணவர் அமைப்பு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

தரம் 6 முதல் 13 வரையான வகுப்புக்களுடன் இயங்கிக் கொண்டி ருக்கும் அல்-அக்ஸா கல்லூரியையும் தரம் 1 முதல் 5 வரையான வகுப்புக்களுடன் இயங்கிக் கொண்டிருக்கும் அல்-அக்ஸா கனிஷ்ட பாடசாலையையும் ஒன்றாக இணைப்பதனால் ஏற்படும் அனுகூலங்களையும் அவை பிரிந்து செயல்படுவதனால் ஏற்படும் பாதிப்புக்களையும் அம்மாணவர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

1700 மாணவர்களைக் கொண்ட அல்-அக்ஸா கல்லூரிக்கு விளையாட்டு மைதானம் இல்லை.4 அல்லது 5 வருடங்களுக்கு ஒரு முறையே இல்ல விளையாட்டுப் போட்டி பல சிரமங்களுக்கு மத்தியில் ஒரு கிலோ மீற்றர் தொலைவிற்கு அப்பால் உள்ள கரடுமுரடான எழிலரங்கு மைதானத்தில் நடத்தப்படும். அத்தோடு கல்லூரியில் காலை தேகப் பயிற்சியையும் உடற்கல்வி பாடத்துக்கு தேவையான செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.

ஒரே காணிக்குள் இயங்கும் இரண்டு பாடசாலைகளும் ஒன்றாக இணைவதன் மூலம் 40 மீற்றர் நீளமும் 60 மீற்றர் அகலமும் கொண்ட ஒரு பயிற்சி மைதானத்தை உருவாக்க முடியும்.

உள்ளூராட்சி சபை திருத்தச் சட்டம் தொடர்பில் கால அவகாசம்

இலங்கையில் மத்திய அரசினால் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைகளின் விசேட திருத்தச் சட்டமூலம் தொடர்பாக மாகாண சபைகள் தமது கருத்துக்களை தெரிவிக்க வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை ஜனாதிபதி மேலும் ஒரு மாத காலம் நீடித்தள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவினால் கிழக்கு மாகாண ஆளுனருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தேச திருத்த சட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்படவிருந்த வேளையில் வெள்ளிகிழமையன்று கிழக்கு மாகாண சபையில் விவாதிக்கப்பட்ட போதிலும், இது தொடர்பாக எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படாத நிலையில், எதிர்வரும் திங்கள்கிழமைக்கு கிழக்கு மாகாண சபையின் அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறிப்பிட்ட இந்த அறிவித்தல் ஜனாதிபதி செயலகத்திலிருந்து மாகாண ஆளுனருக்கு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நில அதிர்வுகளையும் சுனாமி ஆபத்தையும் முன்கூட்டியே அறிந்துகொள்ள ஏற்பாடு!

alert_towers1.jpgநாட்டில் அனர்த்த முகாமைத்துவ முன்னேற்பாடுகளை விஸ்தரிக்கும் திட்டத்தின் கீழ் நில அதிர்வுகளையும் சுனாமி ஆபத்தையும் முன்கூட்டியே அறிவிக்கக்கூடிய இரு கருவிகள் பொருத்தப்படவுள்ளதாக இலங்கை புவிச்சரிதவியல் சுரங்க ஆய்வுப் பணியகத்தின் பணிப்பாளர் கலாநிதி கிஸ்ரி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்திலுள்ள மஹகந்தராவ மற்றும் மாத்தறையிலுள்ள ஹக்மன ஆகிய பிரதேசங்களில் பொருத்தப்படவுள்ள இவ்விரு கருவிகளும் அமெரிக்காவின் கலிபோனிய பல்கலைக் கழகத்தின் புவிச்சரிதவியல் பிரிவுடன் இணைந்ததாக செயற்படும்.

இந்து சமுத்திரத்தில் ஏற்படக்கூடிய சுனாமிப் பேரலைகள் குறித்து துரித தகவல்களைப் பெறும் ஆற்றல் இலங்கைக்கு கிடைத்துள்ளது. இதன்மூலம் அனர்த்தங்கள் குறித்து மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்க முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.4.8 கோடி பரிசு

images-ipl.jpg2 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் இன்று தொடங்கியது. மே 24 ந்தேதி வரை இந்தப்போட்டி அங்குள்ள 8 நகரங்களில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ், 2 வது இடம் பிடித்த சென்னை சூப்பர் சிங்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.
 
இந்தப்போட்டியில் சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.4.8 கோடி பரிசாக வழங்கப்படும். 2 வது இடத்துக்கு ரூ.2.4 கோடி கிடைக்கும்.  இதில் விளையாடும் 120 வீரர்கள் ரூ.1430 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டு உள்ளனர். இது கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
 
இதில் டோனி அதிகபட்சமாக 52 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக தெண்டுல்கர், கங்குலி, யுவராஜ்சிங் உள்ளனர். வெளி நாட்டு வீரர்களில் அதிகமான தொகைக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டவர் ஜெயசூர்யா ஆவார்.  ஐ.பி.எல். போட்டியில் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்து வீசாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். ரூ.10 லட்சம் முதல் ரூ.1.8 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.

பிரபாகரனை பாதுகாக்கும் நோக்கிலேயே நம்பியார் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார் : விமல் வீரவன்ச

vimal.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பாதுகாக்கும் நோக்கிலேயே ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் விசேட பிரதிநிதி விஜய் நம்பியார் இலங்கைக்கு விஜயம் செய்திருப்பதாக ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.பிரபாகரன் படையினரிடம் சரணடைவதனைத் தடுத்து ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் சரணடைவதனை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமையப் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழத்தை உருவாக்கும் இந்தியாவின் எண்ணம் இலங்கை வாழ் தமிழர்களிடம் இல்லை – அமைச்சர் கெஹெலிய

krambukkela.bmp

ஐக்கிய இலங்கைக்குள் ஒற்றுமையாக வாழ்வதே அனைத்து இன மக்களினதும் எதிர்பார்ப்பாகும். இந்நிலையில் நாட்டை இரண்டாக கூறுபோட்டு தனித் தமிழீழத்தை உருவாக்குவதான இந்தியாவின் எண்ணம் இலங்கை வாழ் தமிழர்களிடம் இல்லை என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்காக பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வல தெரிவித்தார்.

இலங்கையில் பெரும்பான்மை இனத்தவர்களிற்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் போன்று சமமான முறையில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில், அவர்களுக்கு நிர்வாக அதிகாரத்தை வழங்க வேண்டும். இந்த முயற்சி தோல்வி அடைந்தால், தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ ஏதுவாக அவர்களுக்கென தனி மாநிலம் அமைக்க வலியுறுத்தப்படும் என்று அ.தி.மு.க.வின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறித்து கருத்து கேட்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது நாட்டை இரண்டாகக் கூறுபோட்டு மற்றுமொரு அரசாங்கத்தின் அதிகாரத்தின் கீழ் செயற்பட நம்நாட்டுத் தமிழ் மக்கள் ஒருபோதும் விரும்பவிலலை. அவர்களுக்குத் தேவை ஐக்கிய இலங்கைக்குள் சுதந்திரமான வாழ்வு மட்டுமேயாகும். இதனை எமது அரசாங்கம் இன்னும் ஓரிரு நாட்களில் நனவாக்கிவிடும். அந்த நம்பிக்கை மக்களுக்கும் உண்டு.

இந்நிலையில் அ.தி.மு.க.வின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தமிழ்ப் பகுதிகளை புதுப்பிக்கவும் மேம்படுத்தவும் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காகவும் மானியமாக வழங்கப்படவுள்ள 10ஆயிரம் கோடி ரூபாவை இப்பொழுதே அரசாங்கத்திடம் வழங்க அக்கட்சி நடவடிக்கை எடுக்க முடியும்.

காரணம் எமது அரசாங்கம் சிங்களம் தமிழ் என்ற பேதமின்றியே தமது நடவடிக்கைகளைக் கையாண்டு வருகின்றது. அந்தவகையில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி நடடிக்கைகளுக்கு அந்தப் பணம் உதவியாக இருக்கும்.

இதேவேளை இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்படி உருவாக்கப்பட்ட 13ஆவது அரசியலமைப்பு சீர்த்திருத்தம் தற்போது நடைமுறையில் உள்ளது. அதில் குறைபாடுகள் இருப்பின் நிவர்த்தி செய்துகொண்டு அதற்கேற்றவாறு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.