சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

சர்வகட்சிக் குழு கருத்தொருமைப்பாட்டுடன் யோசனையை முன்வைக்கும் சாத்தியம் இல்லை -முஸ்லிம் காங்கிரஸ் தெரிவிப்பு

SLMC Gen Sec M T Hasan Aliயுத்தம் முடிவை அண்மித்துக் கொண்டிருப்பதாகவும் பயங்கரவாதமற்ற சூழ்நிலை ஏற்பட்டதும் அரசியல் தீர்வுத்திட்டத்தை முன்வைப்பதற்கு சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவினால் தயாரிக்கப்பட்ட யோசனை வரைபு தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் வியாழக்கிழமை வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்பில் தெரிவித்துள்ள நிலையில், சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் ஏகோபித்த கருத்தொருமைப்பாட்டுக்கான சாத்தியம் இல்லை என்பதை அக்குழுவிலுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுட்டிக்காட்டியிருப்பதுடன், அவ்வாறு ஒரு தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட்டாலும் அது ஆளும் கட்சியின் நிலைப்பாட்டை அடியொற்றியதாகவே இருக்கும் என்றும் அதனால் சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகள், அபிலாசைகள் நிறைவேறுமென எதிர்பார்க்க முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹசன்அலி, உண்மையில் தீர்வொன்றை முன்வைக்க அரசு விரும்பியிருந்தால் யுத்தம் இடம் பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் அதனை செய்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் தற்போது ஆளும்தரப்பிலுள்ள சிறுபான்மைக் கட்சிகளைத் தவிர வெளியேயுள்ள கட்சிகளா முஸ்லிம் காங்கிரஸும் ஜனநாயக மக்கள் முன்னணியுமே இருப்பதாகக் குறிப்பிட்ட அவர் எவ்வேளையிலும் முஸ்லிம் காங்கிரஸ் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிலிருந்து வெளியேறிவிடும் என்று எச்சரித்திருப்பதாகவும் கூறினார்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. இப்போது இல்லை, ஜே.வி.பி. யும் இல்லை. ஏனைய பெரும்பான்மை இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கும் குறைவான அதிகாரப் பகிர்வையே வலியுறுத்தி வருகின்றன. சிறுபான்மையினங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் 13 ஆவது திருத்தத்திற்கும் அதிகமானவற்றை வலியுறுத்துகின்றன. எண்கணிதப்படி பார்த்தால் +13 (13)=0 ஆகும். நடைமுறையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஏனையகட்சிகளை தனது நிலைப்பாட்டுக்கு இழுத்துவிடும் நிலைமையே காணப்படுகிறது. அதனால் சிறுபான்மையினர்களின் அபிலாஷைகளுக்குத் தீர்வுகாணும் யோசனை முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்க முடியாது என்று ஹசன் அலி தெரிவித்தார்.

அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவினால் முன்வைக்கப்படும் தீர்வுத் திட்ட யோசனை 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்லுமென அதன் தலைவர் தெரிவித்துள்ளார். இந்தியாவினதும் மற்றும் வெளிநாடுகளின் அழுத்தம் காரணமாகவே இதனை அரசு தெரிவிக்கின்றது. உண்மையில் பெரும்பான்மையினர் 13 ஆவது திருத்தத்துக்கு குறைவானதையே வழங்க விரும்புகின்றனர்.

அரசாங்கம் இது தொடர்பில் நம்பகத்தன்மையுடன் செயற்படவில்லையென்பதை நாம் அவதானிப்போம். இதையடுத்து இந்த குழுவிலிருந்து நாம் எந்நேரத்திலும் வெளியேறுவோம் எனத் தெரிவித்துள்ளோம். இன்றைய அரசு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினால் அமைக்கப்பட்டதாகும். அக்கட்சி அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு சமர்ப்பித்த தமது யோசனையில் அதிகாரப் பகிர்வுக்கு இடமில்லையெனத் தெரிவித்துள்ளது. மற்றைய கட்சிகளின் கருத்தினைப்பெற்று இதனைக் கேட்டு பிரச்சினைக்குத் தீர்வு முன்வைக்கும் யோசனையில் அரசு இல்லை. அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு 100 க்கு மேற்பட்ட தடவை கூடியுள்ளபோதும் யோசனையை முன்வைக்கவில்லை.

அவ்வாறான யோசனை இருந்தால் யுத்தத்தை நடத்திக்கொண்டே அரசியல் தீர்வினை அரசு முன்வைத்திருக்கும். வெற்றியின் பின்னர் குறைந்தளவிலான உரிமைகளையே முன்வைக்கப் பார்க்கின்றது. இந்த அரசு ஜே.வி.பி மற்றும் ஹெல உறுமயவுடன் தலதாமாளிகையில் செய்யப்பட்ட உடன்படிக்கையின் படி சரியான தீர்வினை முன்வைக்கமுடியாது. இந்நிலையில், அரசாங்கம் சரியான தீர்வுத் திட்டத்துக்கு கையை விரிக்கப்போகின்றதெனத் தெரிந்தும் சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அரசுக்கு ஆதரவு வழங்கி பலப்படுத்துகின்றன. இதற்கு அவர்கள் பதில் கூற வேண்டியவர்களாகவுள்ளார்கள்.

சிறுபான்மை சமூகத்துக்கு பாதகமான உள்ளூராட்சி திருத்தச் சட்டத்தை தடுப்பதற்கு நாம் நீதிமன்றம் சென்றோம். இவ்வாறு அரசு சிறுபான்மையினருக்கு பாதகமான செயற்பாட்டில் ஈடுபடும்போது அதற்கு ஆதரவளிக்கும் சிறுபான்மை கட்சிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

அரச ஊழியர்களுக்கு ஹோமாகமையில் வீடமைப்புத் திட்டம்

ferail_asrof.jpgஅரச ஊழியர்களுக்கென ஹோமாகமை மவுன்ட் க்ளிபர்ட் மற்றும் ஜல்தர ஆகிய பகுதிகளில் மஹிந்த சிந்தனையின் ஜனசெவன திட்டத்தின் கீழ் 850 வீடுகள் அமைப்பதறகு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

சீன அரசாங்கம் இத்திட்டத்திற்கு 160 மில்லின் யுவானை நிதியுதவியாக வழங்குவதுடன் இலங்கை அரசாங்கம் இத்திட்டத்திற்கு 600 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.  இத்திட்டத்தை எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பித்து 30 மாதங்களில் பூர்த்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அக்கினி நட்சத்திரம் பூமி – சூரியன் நேர் கோட்டில்; 28 வரை உஷ்ணம் உச்சத்தில்

தற்போது நாட்டில் நிலவி வரும் உஷ்ணமான காலநிலை எதிர்வரும் 28ஆம் திகதி வரை சற்று அதிகரித்தே காணப்படும். மே மாதம் நேற்று எட்டாம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இந்த அதிகரித்த உஷ்ணமான காலநிலை நிலவும். குறிப்பாக மே 8ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை சூரியனும் பூமியும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதாலேயே இந்த உஷ்ண நிலை சற்று அதிகரிப்பதற்கு ஏதுவாகிறது.

சூரியனும் பூமியும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதை சோதிட வல்லுநர்கள் அக்னி நட்சத்திர காலம் என கூறுவர்.

தற்போது இலங்கையில் 33, 34 செல்ஷியல் வெப்ப நிலை இருக்கின்ற போதும் குறிப்பிட்ட அக்னி நட்சத்திர காலப் பகுதிக்குள் சுமார் 36, 37 செல்ஷியஸ் வரை அதிகரிக்கலாம். இக்காலப் பகுதியில் இந்தியாவில் கூடுதலான வெப்ப தாக்க மரணங்களும் (Sun strok) ஏற்படலாம். இதுவரை அங்கு சுமார் 10 மரணங்கள் வரை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறான வெப்பதாக்க மரணங்கள் இலங்கையில் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் மிக குறைவாகவே உள்ளன. குறிப்பாக இலங்கையில் நாலாபுறமும் கடலால் சூழப்பட்டிருப்பதாலேயே இவ்வாறு நிகழ்வதில்லை. இருப்பினும், தற்போது காலநிலை மாற்றத்தால் கடலின் உஷ்ண நிலையும் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. இதனால் எந்நேரமும் அதிக வியர்வை, புழுக்கம் ஏற்படும். இந்த நிலை மாறவேண்டுமாயின் கடும் மழை பெய்வது மிக முக்கியமாக உள்ளது. கடலிலிருந்து உஷ்ணக் காற்று வீசுவதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.கடலின் உஷ்ண நிலை சுமாராக 24 செல்ஷியஸ¤க்கு குறைவாகவே காணப்பட வேண்டும். எனினும் தற்போது கடலின் உஷ்ணநிலை 29 முதல் 31 வரையிலான ஷெல்சியஸில் இருப்பதும் ஒரு காரணமாகும்.

வியட்நாம், காஸாவில் படுகொலை புரிந்தோர் இன்று இலங்கைக்கு உபதேசம் – திஸ்ஸ கரலியத்த

parliament-of-sri-lanka.jpgவியட்நாம், காஸா பகுதிகளில் படுகொலைகளை புரிந்தவர்கள் இன்று இலங்கைக்கு உபதேசம் செய்ய முற்படுவதாக அமைச்சர் திஸ்ஸ கரலியத்த குற்றம்சாட்டினார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

இலங்கையிலுள்ள கனிய வளங்களை அபகரிக்கவே இன்று பல வெளிநாடுகள் இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட போட்டி போடுகின்றன. அதற்காகவே இலங்கையை இரண்டாக்க முயற்சிக்கின்றனர்.

வியட்நாம், காஸா போன்ற இடங்களில் படுகொலைகளை புரிந்தவர்கள் கூட இன்று எமது நாட்டுக்கு உபதேசம் செய்கின்றனர்.

அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் இங்கே ஒருபோதும் வரமாட்டார்கள். அவர்கள் தமது சுயநலத்துக்காகவே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனரே தவிர இங்குள்ள தமிழ் மக்களின் மேல் உள்ள அக்கறையினால் அல்ல.

நாம் எம்மை, எமது நாட்டை நேசிக்கும் தொண்டர் அமைப்புகளுக்கு மட்டுமே இங்கே சேவையாற்ற அனுமதி வழங்கியுள்ளோம். ஏனையவர்களுக்கு வழங்க நாம் தயாராயில்லை.

அகதி முகாம்களில் குறைபாடுகள் உள்ளன. அவற்றை விரைவில் நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் இவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திக்க ஜனாதிபதி விரைவில் அனுமதி வழங்குவார்.

பன்றி இறைச்சி பயன்படுத்தத் தடை

mexican.jpgபன்றிக் காய்ச்சல் நோய் பரவுவது குறித்து சுகாதார அமைச்சு எச்சரித்திருப்பதால் தென் பகுதிகளில் உள்ள உல்லாசப் பயணிகள் ஹோட்டல்களில் பன்றி இறைச்சி உணவுக்காக பயன்படுத்துவது நிறுத்தப்பட்டுள்ளது.  அத்துடன் இங்கு காட்டுப் பன்றி வேட்டையும் நிறுத்தப்பட்டு வருகிறது.

பன்றி இறைச்சி இங்குள்ள விடுதிகள், ஹோட்டல்களில் தாராளமாக பயன்படுத்தப்பட்டு வருவது வழக்கமாகும்.

வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் மட்டுமல்ல உள்நாட்டு உல்லாசப் பயணிகளும் இங்குள்ள ஹோட்டல்களுக்கு பன்றி இறைச்சியை விரும்பி அதிகம் வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோல வீதிகளில் விற்கப்படும் பண்ணை வளர்ப்பு பன்றி இறைச்சிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நுளம்பு பரவும் சூழலுடன் காணப்படும் உரிமையாளர் மீது கடும் சட்ட நடவடிக்கை

nimal-siriiii.jpgநுளம்புகள் பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருக்கும் காணி, வீட்டு உரிமையாளர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இத்தண்டனை தண்டப்பணமாக மட்டுமன்றி சிறைத் தண்டனையாகவும் இருக்குமெனவும் எச்சரித்துள்ளார்.

அத்துடன், உங்கள் வீட்டிலுள்ள நுளம்பு உங்களுக்கு கடித்தால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பு. நாம் அந்தப் பொறுப்பை ஏற்க முடியாதென்றும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற நுளம்பு பரவலைத் தடுக்கும் கட்டளைச் சட்டப் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

நுளம்புகள் பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய சோதனைகளில் ஈடுபடும் சுகாதார அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.  நுளம்புகள் பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருக்கும் வீட்டு உரிமையாளர்கள், காணி உரிமையாளர்களுக்குத் தண்டம் விதிக்கப்படும். இது குற்றத்தின் அளவைப் பொறுத்து சிறைத்தண்டனை வரை அதிகரிக்கும்.

மலேரியா நோயைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை சாதனை படைத்துள்ளது. கடந்த வருடம் 640 பேரே இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 500 பேர் வன்னியிலுள்ள படையினராவர். விரைவில் மலேரியாவை முற்றாக ஒழித்து விடுவோம். டெங்கு, சிக்குன்குன்யா நோய்கள் ஒரேவகை நுளம்பினாலேயே பரவுகின்றன. இலங்கையில் தற்போது டெங்கு நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. இங்கு 2004 ஆம் ஆண்டு டெங்கு நோயால் பாதிக்கப்பட்டோர் தொகை 1,540 ஆக இருந்தது. இது முறையே 2005 இல் 820 பேரும் 2006 இல் 16, 972 பேரும் 2007 இல் 7,320 பேரும் 2008 இல் 6,431 பேரும் 2009 இல் இன்றுவரை 3,864 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நகரமயமாக்கல், காலநிலை மாற்றம், நுளம்புகளின் பரம்பல் அதிகரித்தல் ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள துவாரத்தினால் வெப்ப நிலை அதிகரிப்பு மற்றும் மாற்றங்களினாலேயே இந்நோய்கள் ஏற்படுகின்றன. இது இலங்கைக்கு மட்டும் உரிய பிரச்சினையல்ல. முழு உலகத்துக்குமுள்ள பிரச்சினை. இதனை வெற்றி கொள்ள மக்களின் ஒத்துழைப்பு அவசியம்.

யுத்தத் தீயில் வெந்த மக்களின் வெளிக்காயத்துக்கு மருந்து போடலாம் – சந்திரசேகரன் எம்.பி

parliament.jpgகடந்த 30 வருடங்களாக யுத்தம் என்ற கொடிய தீயினால் வெந்து நொந்த மக்களின் வெளிக்காயங்களுக்கு மருந்து போடலாம் ஆனால் அவர்களின் உள்காயங்களுக்கு மருந்து போடும் வகையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் போதுமானதல்லவென ஜே.வி.பி. எம்.பி. சந்திரசேகரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது.

மக்கள் மத்தியில் இனப்பிரிவினை கறைகளை துடைத்தெறிந்தது மக்கள் விடுதலை முன்னணிதான் நலன்புரி முகாம்களில் பெண்கள் அனுபவிக்கும் சொல்லொணாத்துயரங்களை களைய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன்பிருந்த வரலாறுகளையும் கலாசார பண்புகளையும் கொண்ட தமிழ் மக்கள் இன்று அனைத்தையும் இழந்து நிர்க்கதி நிலையடைந்துள்ளனர். இந்த துன்பங்களை களைய அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும்.

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி; ஒன்பது பேர் காயம்:

gun00.jpgகொழும்பு, மாளிகாவத்தை ஜும்மா பள்ளி வாசலுக்கு அருகில் உள்ள ஜும்மா மஸ்ஜித் வீதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 அளவில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர். ஜும்மா தொழுகையின் பின்னர், அந்த பிரதேசத்திற்கு வந்த முகமூடி தரித்த ஆயுததாரிகளினாலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

வன்னிக் குழந்தைகளுக்கு 5 இலட்சம் பால்மா பக்கட்களை வழங்கும் திட்டம் ஆரம்பம்

menikfarm.gifதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 5 இலட்சம் பால்மா பக்கட்டுகளை வழங்கும் திட்டம் நேற்று (07) காலை மட்டக்களப்பில் ஆரம்பமாகியது.

நாடளாவிய ரீதியில் 5 இலட்சம் பால் மா பக்கட்டுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மட்டு. மாவட்டத்தில் 5 ஆயிரம் பக்கட்டுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரி. ஈஸ்வரராஜா தெரிவித்தார். மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற தலைமையகத்தில் நடைபெற்ற பால் மா பக்கட்டுகள் கையளிக்கும் வைபவத்தில் மாகாண தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் கே. தவராஜாவும் கலந்துகொண்டனர்.

சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்ப சகல சமூகத்தினரும் முன்வரவேண்டும் – பிரதமர்

pmsl.jpgபெளத்த தர்மத்தின் அடிப்படை வழிகாட்டல்க ளின் பிரகாரம் தமது வாழ்க்கையினை சீர்செய்து கொண்டு சிறந்ததோர் சமூகத்தைக் கட்டியெழுப்பு வதற்கு சகல சமூகத்தினரும் முன்வரவேண்டுமென பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள வெசாக் தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, மிகவும் கருணையுடன் சகல உலகவாழ் உயிரினங்களுக்கும் நற்பாதையைக் காட்டிச் சென்ற எமது புத்த பெருமானின் அளவற்ற நற்குணங்களை நினைவுகூர்ந்து உலகவாழ் பெளத்த மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் புனித வெசாக் தினத்தைக் கொண்டாடும் இச்சந்தர்ப்பத்திலே பெளத்த தர்மத்தின் அடிப்படை வழிகாட்டல்களின் பிரகாரம் தமது வாழ்க்கையினை சீர்செய்துகொண்டு சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புதற்கு உதவுமாறு சகல சமூகத்தினருக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன்.

பெளத்த தர்மத்தால் வளர்க்கப்பட்ட மனித சமூகமொன்றும், உயர் கலாசாரமொன்றும் எமக்குள்ளது. குரோதம், வைரம் போன்ற தீய குணங்களற்ற, ஏனையோருக்கு மதிப்பளித்து உயர் மனிதர்களாக வாழ்வதற்குரிய நற்பாதைகளையும், சமூகத்திலே தீயபழக்கவழக்கங்களுடன் வாழ்வதன் மூலம் ஏற்படக்கூடிய கெடுதிகளையும் பெளத்த தர்மமானது சிறந்த முறையில் போதித்துள்ளது.

சகல பேதங்களையும் துறந்து அமைதியானதோர் இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சகல விடயங்களையும் அரசாங்கமானது மேற்கொண்டுவரும் இச்சந்தர்ப்பத்திலே மீண்டும் நற்பண்புகள் நிறைந்ததோர் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சகல உதவிகளையும் வழங்குவது உங்களது கட்டாய கடமையாகும்.

வடக்கு பிரதேசத்தில் தீவிரவாத செயற்பாடுகள் காரணமாக மிகவும் கஷ்டங்களுக்கு முகம்கொடுத்து இருப்பிடங்களை இழந்துள்ள மக்களுக்கு உதவிகள் தேவைப்படும். இச்சந்தர்ப்பத்திலே துணையற்றவர்களுக்கு உதவும் உயர் புண்ணிய கருமத்தை நிறைவேற்றுவதற்கு வெசாக் வாரத்தினுள் வாய்ப்புக் கிட்டியுள்ளது. இலங்பை வாழ் மக்களுக்கு புனித வெசாக் தினமானது சிறப்புற வாழ்த்துகிறேன். இவ்வாறு பிதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.