சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

இலங்கையை பலமுள்ள நாடாக நாம் கட்டியெழுப்பியுள்ளோம் – ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpgசர்வதேச நாடுகள் சில பலவீனமுற்ற நாடு என்ற முத்திரையை எம்மீது குத்த முயன்ற போதும் நாம் பலமுள்ள நாடாக இலங்கையைக் கட்டியெழுப்பியுள்ளோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பொருளாதாரம், சுகாதாரம் என பல்துறைகளையும் அபிவிருத்தியில் கட்டியெழுப்பியதுடன் துண்டாட முனைந்த நாட்டையும் மீட்டுள்ளோமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச நாடுகள் மட்டுமன்றி எம்மவர் சிலரும் இலங்கையை பலவீனமான நாடாக உலகுக்குக் காட்ட முனைந்தனர். அதற்கு ஒருபோதும் நாம் இடமளியோம். அத்துடன் சர்வதேச நிதியம் உட்பட நிதி வழங்கும் நாடுகளிடம் எமது நாட்டை அடிமைப்படுத்தவும் இடமளிக்க முடியாதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச தாதியர் தின நிகழ்வு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்

மறுசீரமைப்பு குழுவின் தலைவராக வஜிர எம்.பி – ஐக்கிய தேசியக் கட்சி

unp.jpgமாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை மேலும் கிரமமாக்குவதற்கும் பலப்படுத்துவதற்குமான விசேட திட்டமொன்று ஐக்கிய தேசியக் கட்சியின் மறு சீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படுவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக ஐ.தே.க.வினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

முன்னர் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற செயற்பாடுகளை கையாள்வதற்கென இரு குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. எனினும் இந்த மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற செயற்பாடுகளை கையாளும் பொறுப்பு ஒரு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அதன் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

தொலைபேசியை பாதுகாப்பாக வைத்திருக்க பத்து ரூபா அறவிடும் தேநீர்க்கடை உரிமையாளர்

imobile-phone.jpg
அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற பிரதேசத்துக்குள் கையடக்கத் தொலைபேசி கொண்டு செல்வதற்கு நீதிமன்று பொலிஸ் சோதனைச் சாவடியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நீதிமன்ற பொலிஸ் சோதனைச் சாவடியின் முன்பாகவுள்ள தேநீர்க்கடை உரிமையாளர் தொலைபேசியை வைத்திருப்பதற்காக பத்து ரூபா வீதம் அறவீடு செய்து கொள்ளை இலாபமீட்டுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நீதிமன்ற தேவைகளுக்காக பொத்துவில், அக்கரைப்பற்று, திருக்கோவில், ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, ஒலுவில் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த அதிகமான மக்கள் நாளாந்தம் தமது நீதிச்சேவையைப் பூர்த்தி செய்து வருகின்றனர். எனினும் இவர்கள் தமது கையடக்கத் தொலைபேசியை நீதிமன்ற பிரதேசத்துக்குள் பொலிஸ் சோதனைச்சாவடியூடாக உட்கொண்டு செல்லத் தடைசெய்யப்பட்டுள்ளது.

இதனாலேயே சோதனைச்சாவடிக்கு எதிரே உள்ள தேநீர்க்கடையில் கையடக்கத் தொலைபேசியை வைத்துச்செல்வதற்கு வாடகையாக பத்து ரூபா அறவீடு செய்யப்படுகின்றது. எனவே, கையடக்கத் தொலைபேசி கொண்டு செல்வதற்கான தடைக்குப் பதிலாக மாற்றுவழி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால், தேநீர்க் கடை வியாபாரி நாளாந்தம் இரண்டாயிரம் ரூபாவுக்கு மேல் வருமானம் பெற்றுவருவதுடன், இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் தரப்பினருக்கும் ஒருதொகைப்பணம் இலஞ்சமாக வழங்கப்படுகின்றது என பொதுமக்களால் தெரிவிக்கப்படுகின்றது.

ஊடகவியலாளர்கள் எந்தவொரு சம்பவத்தையும் துணிச்சலாக வெளிப்படுத்தக் கூடியவர்களாக மாறவேண்டும்

“கோழைத் தனத்தை எங்கள் மத்தியில் இருந்து தூக்கி எறிந்து விட்டு நேர்மையாக எவருக்கும் சோடை போகாத நிகழ்வுகளைத் துணிவாக வெளிப்படுத்தக்கூடியவர்களாக ஊடகவியலாளர்கள் மாறவேண்டும்’  இவ்வாறு சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற முஸ்லிம் சமூகம் ஊடகத்துறையில் எதிர்நோக்கியுள்ள சவால்கள் எனும் விடயம் பற்றிய கலந்துரையாடலில் உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம்.ஏ.றஸாக் (ஜவாத்) தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்; ஒவ்வொருவரினதும் கலாசாரத்தினையும் அந்தந்த கலாசாரத்தைச் சார்ந்தவர்கள் ஏதாவது ஒரு விழிப்புணர்வு அல்லது எழுச்சிக் கூட்டங்களை நடத்தி அதனைப் பாதுகாப்பதற்கான பல முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர். தற்போது எங்கள் மத்தியில் உள்ள சூழல் எங்களின் கலாசாரம், விழுமியங்கள், சுதந்திரங்கள், உரிமைகள் அழிந்துவிடுமா? அல்லது அழியப்போகின்றதா? அதனைத் தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன? என்று முயற்சி செய்ய வேண்டிய ஒரு காலகட்டத்தில் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம்.

எதையுமே வியாபாரமாக பார்க்கின்ற இக்காலத்தில் எல்லாமே இன்று வியாபாரமாகி விட்டது. சில விடயங்களை வெளிப்படையாகப் பேசுவதனால்தான் அதற்குரிய பதிலை உரியவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். உள்ளொன்று வைத்துக்கொண்டு வெளியில் ஒன்றைப் பேசுவதைத் தவிர்த்துக் கொண்டால் எமது சமூகம் முன்னேறுவதற்கு இதுவொன்றே போதுமாகும். எமது பிரதேசத்தில் இருக்கின்ற சில ஊடகவியலாளர்கள் மக்களின் பிரச்சினைகள் அல்லது அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல்கள் சம்பந்தமாக பத்திரிகைகளில் வெளிக்கொண்டுவருவதற்கு பயந்து ஒதுங்குகின்றார்கள்.

ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்க வான் தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

swat-pakkis.jpgமேற்கு ஆஃப்கானிஸ்தானில் போன வாரம் நடந்த அமெரிக்க வான் குண்டு வீச்சில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காபூல் நகரத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

அமெரிக்காவை உலகின் மிகப்பெரிய பயங்கரவாதி எனக் கூறும் பதாகைகளுடன் குழமியிருந்த மாணவர்கள் சிலர் கண்ணீர் விட்டு அழுதனர்.

அந்தத் தாக்குதலில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்தத் தொகை மிகவும் மிகைப்படுத்தப்பட்ட கணக்கு என்று அமெரிக்க ராணுவம் கூறுகிறது.

அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்களின் பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ் அவர்கள், விமானத் தாக்குதல்கள் இனிமேல் நடக்காது என்று தமது அரசால் உறுதி சொல்ல முடியாது என்றார்.

தலிபான்களுக்கு எதிராக பாரிய படை நகர்வு; 143 பேர் பலி

w_news.jpgபாகிஸ்தானில் ஸ்வாட் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையில் 143 தீவிரவாதிகள் பலியானார்கள். இந்த தகவலை இராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அத்தார் அப்பாஸ் தெரிவித்தார். தீவிரவாதிகள் அந்த பகுதியை விட்டு தப்பி ஓடுகிறார்கள். அவர்கள் அப்பாவிகள் தப்பிச் செல்லும் வழிகளை அடைத்து வைத்து உள்ளனர். தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் 15 ஆயிரம் வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர் என்று அவர் கூறினார்.

ஸ்வாட் பகுதியில் சண்டை நடப்பதால் அப்பாவி பொதுமக்கள் வீடுகளை காலிசெய்து விட்டு வெளியேறி வருகிறார்கள். ஏற்கனவே 5 இலட்சம் பேர் வெளியேறி விட்டனர். இப்போது மேலும் 2 இலட்சம் பேர் அந்த பகுதியை விட்டு வெளியேறி வருகிறாரகள். மேலும் 3 இலட்சம் பேர் வெளியேற தயாராகி வருகிறார்கள்.

பாகிஸ்தானில் செயற்படும் தலிபான்களின் தலைவர் பைதுல்லா மஷ¤தைக் கைது செய்ய இராணுவம் கடும் முயற்சிகளை எடுத்துவருகிறது. அவர் குறித்த தகவல்களை வழங்குவோருக்கு சன்மானத் தொகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இத் தொகையை அமெரிக்கா வழங்கவுள்ளது. அரபு நாடுகளிலுள்ள ஏராளமானோரை புனிதப் போருக்கு அழைக்கும் பணிகளில் பைதுல்லா மெசூத் ஈடுபடுவதாக பாகிஸ்தான் உளவுத்துறை நம்புகின்றது. இதனால் இவரின் மறைவிடங்கள், நடமாட்டங்களுள்ள பிரதேசங்களைத் தெரிந்துகொள்வதில் இராணுவ உயர் மட்டம் ஆர்வமாயுள்ளது. அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக ஸ்வாட் பகுதியில் தலிபான்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக்க பாரிய இராணுவ நகர்வுகளை ஆரம்பித்துள்ளது. பொதுமக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லும்படியும் அரசாங்க அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்குலகின் கைப்பிள்ளையான பாகிஸதான் அரசை அகற்றப் போவதாக தலிபான்கள் சூளுரைத்துள்ளனர். அமெரிக்க இராணுவமும் பாகிஸ்தான் இராணுவத்துக்கு உதவியளிக்கின்றது.

இடம்பெயர்ந்தோர் மறுவாழ்வுக்கு உதவ நிதிவளம் இல்லை என்கின்றன உள்ளூர் தொண்டு நிறுவனங்கள்

ngo.bmp
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களின் மறுவாழ்வுக்கு உதவுமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் நிராகரித்துள்ளன.  நலன்புரி நிலையங்களில் உள்ளவர்களுக்கு உதவி வழங்கக்கூடிய நிதிவளம் தங்களிடம் இல்லை என அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று  தகவல் வெளியிட்டுள்ளது. நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களுக்கான மறுவாழ்வுத்திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை உள்ளூர் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளை அலரிமாளிகையில் சந்தித்துக் கலந்தரையாடினார்.

ஒவ்வொரு நிறுவனமும் தம்மாலான உதவிகளை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். என்றும்  நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களிற்கு உதவக்கூடிய வகையில்  நிதிவளம் தங்களிடம் இல்லை என்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்கும் சிறிய நிதிகளைக் கொண்டு தாம் சிறு சிறு திட்டங்களை நடை முறைப்படுத்தி வருவதாகவும் உள்ளூர் தொண்டர் நிறுவனப் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறினர். உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் போதிய நிதி வளங்களுடன் செயற்படக் கூடிய திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தார் என்று கொழும்பு ஊடகம் தனது செய்தியில் விவரித்துள்ளது.

இலங்கை தமிழரிற்கு ஓப்ரா வின்பிரே உதவ வேண்டும்: பாடகி மாதங்கி அருள் பிரகாசம் (MIA) கோரிக்கை

mia-01.jpgஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் , தாக்குதல், மனித உரிமை மீறல், தமிழர்களின் துயரங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட உதவ வேண்டும் என உலக டாக் ஷோக்களின் முன்னோடியான ஓப்ரா வின்பிரேக்கு இங்கிலாந்தில் பிறந்த, இலங்கைத் தமிழ்ப் பெண்ணான பிரபல பாடகி மாதங்கி அருள் பிரகாசம் (MIA ) கோரிக்கை விடுத்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த மாதங்கி பிரபல பாடகியாவார். ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திலும் இவர் பாடியுள்ளார். இந்தப் பாடல் பேப்பர் பிளேன்ஸ் என்ற மாதங்கியின் (MIA) இசைத் தொகுப்பில் இடம் பெற்றதாகும். இப்பாடலே, ஸ்லம்டாக் மில்லியனர் படத்திலும் இடம் பெற்றது.

இதேபோல பைனாப்பிள் எக்ஸ்பிரஸ் என்ற தொகுப்பையும் வெளியிட்டுள்ள. மாதங்கி பேப்பர் பிளேன்ஸ், கிராமி விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீதான அடக்குமுறைகள், இனப்படுகொலைகள், பெண்களின் அவல நிலை குறித்து உலகத்திற்கு எடுத்துக் காட்டி அவர்களுக்கு உதவுமாறு ஓப்ரா வின்பிரேவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் MIA மாதங்கி

செய்தியாளர் சபேரியின் மேல்முறையீடு மீது விசாரணை

rokchana.jpgஇரானில் சிறை வைக்கப்பட்டுள்ள இராக்கிய அமெரிக்க செய்தியாளரான ரோக்சானா சபேரியின் மேல்முறையீட்டு மனு ஞாயிறன்று விசாரணைக்கு வரவுள்ளதாக அவருடைய வக்கீல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு வேவு பார்த்ததாக குற்றம் சுமத்தி இவருக்கு கடந்த மாதம் எட்டு ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டு விசாரணையின் போது தங்கள் தரப்பு கால அவகாசம் கோரவிருப்பதாக சபேரியின் தந்தை தெரிவித்துள்ளார்.

பாக். – அமெரிக்கா கூட்டு இராணுவ நடவடிக்கை

w_news.jpgபாகிஸ்தான் வடமேற்கிலிருந்து 5 இலட்சம் மக்கள் இடம்பெயர்வு பாகிஸ்தானின் வடமேற்கில் இருந்து 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளி யேறியுள்ளதாக ஐ. நா. அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெ ரிக்காவும், பாகிஸ்தானும் கூட்டு இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் சிவிலியன்கள் நூற்றுக் கணக்கில் கொல்லப்பட்டுள்ளதாக சீ. என். என். ஏஜென்ஸி செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நிலைமை எப்படி இருந்தாலும் தலிபான்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை தொடருமென பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி அறிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் வட மேற்கில் பழங்குடியினர் வாழும் பகுதியில் தலிபான் தீவி ரவாதிகள் செயல்பட்டு வருகிறார்கள். ஆப்கானிஸ்தானில் தங்கியுள்ள அமெரிக்க இராணுவத்தினர் மீது இவர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இதனால் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவும், பாகிஸ்தானும் கூட்டாக சேர்ந்து இராணுவ நடவடிக்கை எடுத்து வருகிறது. தலிபான்கள் மீது அமெ ரிக்க இராணுவம் ஏவுகணைகளை வீசியும் பீரங்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கு வசிக்கும் மக்களை கேடயமாக வைத்து தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர்.

கடந்த 2 நாட்களாக வடமேற்கு பாகிஸ்தானில் இராணுவ தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. அதில் 170 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இராணுவம் அறிவித்துள்ளது.

இராணுவ தாக்குதல் காரணமாக வட மேற்கு பகுதியில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேறிய வண்ணம் உள்ளனர். அவர்கள் அகதிகளாக மலைகளிலும் காடுகளிலும் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். தொடர்ந்து மக்கள் வெளியேறிய வண்ணம் உள்ளனர்.

ஆனால், மக்களை வெளியேற விடாமல் தீவிரவாதிகள் தடுத்து வருகிறார்கள். ஏற்கனவே இராணுவ நடவடிக்கை காரணமாக 2 இலட்சம் மக்கள் வெளியேறி விட்டனர். தற்போது மேலும் 3 இலட்சம் பேர் அங்கிருந்து வெளியேறி வருவதாக ஐ. நா. அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே தலிபான்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை நீடிக்கும் என்று பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி அறிவித்துள்ளார். வடமேற்கு பகுதியில் 45 ஆயிரம் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரியையும் பிரதமர் யூசுப் ரசாக் கிலானியையும் குடும்பத்தோடு கொல்லப்போவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். தொலைபேசி மூலம் பேசிய தலிபான்களின் பேச்சாளரொருவர், “முஸ்லிம்கள் என்ற வகையில் போராட்டத்திற்கு உதவுவார்களென எதிர்பார்த்தோம். முடியவில்லை. இவர்களை பழிவாங்கியே தீருவோம்” எனக் கூறியதாக இணையச் செய்திகள் தெரிவிக்கின்றன.