சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

வவுனியா நிவாரண கிராமங்களுக்கு ஹோம்ஸ் இன்று விஜயம்

John_Holmes_UNஇலங் கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதி செயலாளர் நாயகம் சேர். ஜோன் ஹோம்ஸ் இன்று 20 ஆம் திகதி வவுனியாவுக்கு விஜயம் செய்கிறார்.

வன்னியில் புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ள மக்களுக்கென வவுனியாவில் அமைக்க ப்பட்டிருக்கும் நிவாரணக் கிராமங்களையும் அவர் பார்வையிடவுள்ளார்.புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ள 35 ஆயிரத்து 756 பொதுமக்கள் 13 நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ளனர்.

வவுனியாவுக்கு விஜயம் செய்யும் ஐ. நா. வின் பிரதி செயலாளர் நாயகத்திற்கு அரசாங்கத்தின் மனிதாபிமான நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி. தெளிவுபடுத்தவிருக்கிறார் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம கூறினார். இதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஐ. நா. பிரதி செயலாளர் நாயகம் நாளை சனிக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

ஐ.நா. மனிதாபிமான விவகார பிரதிச் செயலர் ஹோம்ஸ் இன்று இலங்கை வருகை

UN_Logoஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் சேர். ஜோன்ஸ் ஹோம்ஸ் இன்று இலங்கை வருகிறார்.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று வருகை தரும் இவர், இரண்டு நாட்கள் தங்கியிருப்பாரென அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

இவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் உட்பட பல முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளார்.

இவரின் விஜயத்தின் போது வடக்கில் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான நடவடிக்கை குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் அது குறித்து தான் பிரதி செயலாளருக்கு விளக்கமளிக்க உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் கூறினார்.

தான் நேற்று முன்தினம் (17) ஜோன் ஹோம்ஸ¤டன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியதாக வும் இரு தரப்பினரும் இணைந்து மேற்கொள்ளும் நட வடிக்கைகள் குறித்தும் அவரின் விஜயத்தின் போது கவனம் செலுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

மேல் மாகாண சபைக்கான வேட்பு மனுக்கள் இன்று முதல் ஏற்பு

election_.jpgமேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று 19 ஆம் திகதி ஆரம்பமாவதுடன் எதிர்வரும் 26 ஆம் திகதி நன்பகல் 12.00 மணியுடன் பூர்த்தி அடையும் என்று தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மாகாண சபைக்கான 102 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி கொழும்பு மாவட்டத்திலிருந்து 43 உறுப்பினர்களும் கம்பஹா மாவட்டத்திலிருந்து 39 உறுப்பினர்களும் களுத்துறை மாவட்டத்திலிருந்து 20 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இத்தேர்தலில் வாக்களிக்க கொழும்பு மாவட்டத்தில் 15இலட்சத்து 60 ஆயிரத்து 593 பேர். கம்பஹா மாவட்டத்தில் 14 இலட்சத்து 58 ஆயிரத்து 295 பேர், களுத்துறை மாவட்டத்தில் 8 இலட்சத்து 1326 பேர் என்ற அடிப்படையில் தகுதி பெற்றுள்ளனர்.

வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு 1500 தாதியர்களை அவசரமாக அனுப்புவதற்கு அரசு தீர்மானம்

sri-lanka-nurses.jpgவவுனியா வில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்க ளுக்கு ஆரோக்கிய சேவை வழங்கவென 1500 மருத்துவத் தாதியரை உடனடியாக வவுனியாவுக்கு அனுப்பி வைப்பதற்கு சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சு முடிவு செய்துள்ளது.இந்தத் தாதியர் வவுனியாப் பகுதியில் அடுத்துவரும் ஆறு மாதங்களுக்கு தொடராகக் கடமையாற்ற வேண்டும் எனவும் அமைச்சு தீர்மானித்திருக்கிறது.

இதேநேரம், கொழும்பிலுள்ள அரசாங்க ஆஸ்பத்திரிகளில் கடமை புரியும் எட்டு முன்னணி மருத்துவ நிபுணர்கள் அடங்கிய மருத்துவ குழுவொன்றையும் அடுத்துவரும் இரு தினங்களுக்குள் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கவும் அமைச்சு முடிவு செய்திருக்கிறது.

புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து இற்றை வரையும் 35 ஆயிரத்து 756 பொதுமக்கள் தப்பி வந்துள்ளனர். இவர்கள் வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் 1 நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதே நேரம், முல்லைத்தீவில் சிக்குண்டிருந்த 1150 நோயாளர்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கடல் மார்க்கமாக அழைத்து வந்துள்ளது. இவர்கள் திருமலை, வவுனியா, பொலன்னறுவை ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இம்மக்களுக்கான ஆரோக்கிய சேவை தொடர்பாக சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நேற்று கொழும்பில் அவசரக் கூட்டமொன்று நடைபெற்றது. இக்கூட்டத் தின் போதே மேற்படி முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இதேவேளை, மன்னார், மதவாச்சி ஆஸ்பத்திரிகளின் ஆரோக்கிய சேவையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் மருத்துவ நிபுணர்களையும் தாதியரையும் உடனடியாக அவ்வாஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கவும் இக் கூட்டத்தின் போது முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் டாக்டர்கள், தாதியர் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களின் தங்குமிட மற்றும் உணவுவசதிகளைக் கவனிக்கவென மூன்று அதிகாரிகளை சுகாதாரப் பராமரிப்பு அமைச்சு இணைப்பாளராகவும் நியமித்திருக்கிறது.

நிவாரணக் கிராமங்களில் வாந்தி, வயிற்றோட்டம், வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் தோற்றம் பெறாதிருப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளை யும் மேற்கொள்ளுமாறு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

சிறுவர் துஷ்பிரயோகம்; இவ்வருடம் மாத்திரம் 97 முறைப்பாடுகள்; கடந்த வருடம் 1265

children-srilanka-01.jpgசிறுவர் துஷ்பிரயோகங்களை முறையிடும் ‘1929’ எனும் தொலைபேசி தொடர்பிலக்கத்தினூடாக இவ் வருடத்தில் மாத்திரம் 97 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. கடந்த வருடம் ஜனவரி மாதம் இச்சேவை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரையில் 1,265 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைச் சிறார்களின் நலனைக் கருத்திற் கொண்டு 2008 ஆம் ஆண்டு ஜனவரி 29ம் திகதி அமைச்சினால் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறான சேவைகள் வெளிநாடுகளில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. சிறுவர்களை கடத்தல் மற்றும் கடத்த முயற்சித்தலுடன் தொடர்புடைய 21 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

சிறுவர் திருமணங்கள் தொடர்பாக ஆறு முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. அமைச்சினால் வழங்கப்பட்ட தரவுகளுக் கேற்ப ஆசிரியர்கள் மாணவர்களை அடித்தமைக்காக 36 முறைப்பாடுகளும் பெற்றோர், உறவினர்கள் மற்றும் வேறு சிலர் அடித்து துன்புறுத்தியமைக்காக 85 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. பாடசாலைக்கு செல்லாத சிறுவர்கள் குறித்து 114 முறைப்பாடுகளும் குடும்ப பிணக்குகள் காரணமாக தனித்து விடப்பட்ட சிறுவர்கள் தொடர்பாக 119 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
பாரபட்சம் காட்டுதல் மற்றும் பிள்ளைகளை கவனியாமை தொடர்பான சம்பவங்கள் குறித்து 120 முறைப்பாடுகளும் வந்துள்ளன.

சிறுவர்களே நேரடியாக முறைப்பாடு செய்ய வேண்டுமென்பதற்காகவே இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்ட போதிலும் பெறறோர்கள், ஆசிரியர்கள், அயலவர்கள் மற்றும் ஏனைய பெரியோர்களாலேயே பெரும்பாலான முறைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

வவுனியா நலன்புரி நிலையங்களில் இருப்போருக்கு உணவு விநியோக நடைமுறையில் மாற்றம்

children-srilanka-02.jpgவன்னியி லிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள வவுனியா நலன்புரிநிலையங்களில் உணவு விநியோகத்தில் மாற்றங்களைச் செய்ய அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

30 ஆயிரம் மக்களுக்கு சமைத்த உணவே இதுவரை வழங்கப்பட்டு வந்தது. உணவு பழுதடைந்த நிலையிலும் தரமற்றதாகவும் காணப்படுவதாக கிடைத்த புகாரைத் தொடர்ந்து நலன்புரி நிலையங்களில் தலா 100 பேரைக் கொண்ட குழுக்களை அமைத்து அவர்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் வழங்கப்பட்டு உணவு தயாரிப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. உடனடியாக இதனை நடைமுறைப்படுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

உலக உணவு தாபனம் உலர் உணவுப் பொருட்களை வழங்க முன்வந்துள்ளது. மாவட்ட செயலகம் சமையலுக்குத் தேவைப்படும் உப உணவுப் பொருட்களை வழங்கும் சில அரசசார்பற்ற நிறுவனங்கள் சமையல் பாத்திரங்களையும் சமையலுக்குரிய கொட்டகைகளை அமைத்துக் கொடுக்கவும் முன்வந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் தரமானதும் சுவைமிக்க உணவுகளை பரிமாற்றம் செய்யக்கூடியதாயிருக்குமென நிவாரணப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களாக வழங்கப்பட்ட உணவுகள் பழுதடைந்து காணப்பட்டதாக செயலகத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.

இதற்கிடையில் வவுனியா நலன்புரிநிலையங்களில் தங்கியுள்ள மக்களுடைய விபரங்கள் அடுத்த சில தினங்களில் வெளியிடப்படும் என தெரிவிக்கும் வவுனியா செயலக சிரேஷ்ட உயர் அதிகாரி ஒருவர் அது தொடர்பான வேலைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

பிலிப்பைன்ஸில் கடத்தப்பட்ட இலங்கைப் பிரஜையை விடுவிக்க நடவடிக்கை!

pilipinas.jpgபிலிப் பைன்ஸில் கடத்தப் பட்டிருக்கும் இலங்கைப் பிரஜையைப் பாதுகாப்பாக விடுவிடுப்பதற்குத் துரித நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கம், பிலிப்பைன்ஸ் அரசைக் கேட்டுள்ளது. வெளி விவகார அமைச்சு இது தொடர்பாக  பிலிப் பைன்ஸ் வெளிவிவகார அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இதேவேளை பிலிப்பைன்ஸிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளும்; மணிலாவில் இயங்கும் வன்முறையற்ற அமைதிக்கான செயலணியினருடன்; பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மூதூரைச் சேர்ந்த ஒமர் ஜமில் என்பவர் வன்முறைகளற்ற அமைதி செயலணியில் தென் பிலிப்பைன்ஸில் பணியாற்றி வந்த வேளையில் கடந்த வெள்ளியன்று தென் பிலிப்பைன்ஸின் பாசிலான் தீவின் லமிற்றன் நகரில் தங்கியிருந்த சமயம் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளார்.

இவரைப் பாதுகாப்பாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சு பிலிப்பைன்ஸ் வெளிவிவகார அமைச்சைக் கேடடுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

நீதிமன்றத்தில் சுப்பிரமணியம் சுவாமி மீது தாக்குதல்

_swamy_.jpgஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையிலேயே சில வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டார். அவர் மீது அழுகிய முட்டைகளும் வீசப்பட்டன. சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மீது தலைமை நீதிபதி நடவடிக்கை எடுப்பார் எனக் கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களாகவே இலங்கைத் தமிழர்க்கு ஆதரவாக வழக்கறிஞர்கள், நீதிமன்ற வளாகத்திலேயே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், விடுதலைப்புலிகளுக்கு எதிராக கடும் நிலைப்பாடு எடுத்துவரும் சுப்பிரமணியம் சுவாமி, நேற்று, சிதம்பரம் நடராஜர் ஆலய தீ‌ஷிதர்கள் சார்பாக வாதாட நீதிமன்றம் வந்திருந்தார்.

நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா, மற்றும் சந்துரு முன்னிலையில் வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே சில வழக்கறிஞர்கள் அறைக்குள் நுழைந்து, சுவாமிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். நீதிபதிகளின் கண்டனங்களையும் மீறி சுவாமி மீது அழுகிய முட்டைகளை வீசியதோடு அவரைத் தாக்கவும் முயன்றனர்.

பின்னர் பொலிசார் விரைந்து வந்து வழக்கறிஞர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியம் சுவாமி தனக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு வழங்கத் தவறிவிட்டதென்றும், நீதிபதிகள் முன்னிலையில் இவ்வாறு தாக்குதல் நடைபெற்றிருப்பது தமிழ்நாட்டிற்கே அவமானம் என்றும், இது குறித்து உச்சநீதிமன்றத்தில் புகார் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

சுவாமி இவ்வாறு நீதிமன்றத்தி்ல் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஜெயலலிதா முதன்முறையாக முதல்வரானபோது அவருக்கு எதிராக பல்வேறு ஊழல் வழக்குகளைத் தொடர்ந்த சுவாமியை அதிமுகவினர் எல்லா இடங்களிலும் தாக்க முயன்றனர்.

உயர் நீதிமன்றத்தில் வைத்துக் கூட தாக்கும் முயற்சி நடந்தது. அப்போது அவரை வட சென்னை திமுகவினர் தான் காப்பாற்றினர்.

நீதிமன்றத்தையே அசிங்கப்படுத்தும் வகையில் சில மகளிர் அணியினர் சுவாமியின் கண் முன்னே புடவைகளை உயர்த்திக் காட்டிய மகா அசிங்கமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை மக்களை சர்வதேசம் காட்சிப் பொருளாக்குவதற்கு இடமளியேன் – ஜனாதிபதி

mahinda1402.jpgஇலங்கை மக்களை சர்வதேசம் காட்சிப் பொருளாக்கு வதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். வடக்கோ, தெற்கோ, தமிழரோ ஏனைய இனத்தவரோ அனைவரும் ஒருதாய் மக்கள், அவர்களை சகோதரர்களாக மதித்து அம்மக்களுக்கான சகல தேவைகளையும் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து பாதுகாப்புப் பிரதேசங்களுக்குள் பிரவேசிக்கும் மக்கள் மன அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுவதாக சில சக்திகள் சர்வ தேச நாடுகளில் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன. இதனை நாம் முற்றாக மறுக்கிறோம். நாட்டின் உண்மையான நிலையை நேரில் கண்டறிய இலங்கைக்கு வருமாறு தாம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஹோமாகம பமுனு ஆரச்சி பவுண்டேசன் நிறுவனத் தினரால் 100 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ள ஹோமாகம பொது வைத்தியசாலையின் புதிய கட்டிடத் தொகுதியை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைத்து உரையாற்றுகையி லேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

பயங்கரவாதிகளிடமிருந்து மீண்டு வரும் தமிழ் மக்களுக்கு மானசீக துன்புறுத்தலைப் படையினர் மேற்கொண்டு வருவதாகப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. புலிகளே இவ்வாறு செய்தாலும் படையினர் ஒரு போதும் இவ்வாறு செய்ய மாட்டார்கள் எனப்பது உறுதி.

இவ்வாறு பாதுகாப்புப் பிரதேசங்களுக்கு வரும் மக்களுக்கான சகல வசதிகளையும் குறைவின்றிப் பெற்றுக்கொடுப்பதில் அரசாங்கம் அதிககவனம் செலுத்திவருகிறது. அத்துடன் இவ்வாறு வரும் மக்களுக்குத் தேவையான சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் எமது டாக்டர்களும் தாதியர்களும் அங்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

பொதுமக்களின் அனைத்து தேவைகளையும் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சில சர்வதேச அமைப்புக்கள் மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்கென இங்கு வந்து, பல்வேறு பிரதேசங்களுக்கும் விஜயம் செய்து அம்மக்களுக்கு எந்த வித உதவியையும் செய்யாமலேயே மீண்டும் நாடு திரும்பிவிடுகின்றனர். அங்கு சென்று இலங்கை மக்களை அந்நாடுகளில் கண்காட்சிப் பொரு ட்களாக்கப் பார்க்கின்றனர்.

சுனாமி அனர்த்தத்தின் போது பல சர்வதேச நாடுகள் எமக்கு உதவியளித்தன என்பதை நாம் ஒரு போதும் மறுக்க முடியாது. எனினும் பெரும்பாலான சர்வதேச அமைப்புக்கள் உதவி என்ற பெயரில் எமது மக்களுக்கு உபயோகிக்க முடியாத பழைய உடைகளையும், காலாவதியான உணவுகளையும் வழங்கியிருந்தன. அவற்றை நாம் தீமூட்டியதையும் இங்கு நினைவு கூரவேண்டியுள்ளது. மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல் வெற்றியானது சர்வதேச அழுத்தங்களுக்கு பதிலாக அமைந்துள்ளது. தாய் நாட்டை நேசிக்கும் மக்கள் இருக்கும்வரை எவரும் தாய் நாட்டைக் காட்டிக் கொடுக்க முடியாது.  மேற்படி வெற்றியானது அரசாங்கத்தின் எதிர்கால பயணத்தை மேலும் வலுப்படுத்துவது உறுதி எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அதிகாரப் பகிர்வு தொடர்பாக எடுக்கும் தீர்மானங்களுக்கு இந்தியா முழுமையான ஆதரவு – ஆலோக் பிரசாத்

alokprasad-pillaiyanbatticalo.jpgஇந்திய உயர் ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் அடங்கலான தூதுக்குழுவினர் நேற்று கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டனர். கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்டறியும் வகையில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

இந்திய தூதுவர் தனது விஜயத்தின் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண அமைச்சர்கள், அரசஅதிபர்கள் உட்பட பல தரப்பினரையும் சந்தித்து உரையாடினர். இலங்கை அரசாங்கம் அரசியல் யாப்பின் 13ஆவது திருத்தத்தின்படி அதிகாரப் பகிர்வு தொடர்பாக எடுக்கம் தீர்மானங்களுக்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும் என்று இந்நிகழ்வுகளில் உரையாற்றிய போது அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்புக்கு விஜயம் செய்த இந்திய உயர் ஸ்தானிகருக்கு மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் வைத்து கிழக்கு முதல்வர் மற்றும் மட்டு. மேயர் ஆகியோரினால் வரவேற்பு அளிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய இந்திய உயர் ஸ்தானிகர் ஆலோக் பிரசாத், கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா தனது முழுப்பங்களிப்பையும் வழங்குமென்று தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த இந்திய உயர் ஸ்தானிகர், கிழக்கு மாகாணம் ஜனநாயக ரீதியில் இன்று செயற்படுவதையிட்டு இந்தியா தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றது.கிழக்கு மாகாண அபிவிருத்திக்கென கடந்த காலங்களில் இந்தியா சிறிய உதவிகளை செய்தது. மீன்பிடி உபகரணங்கள் மற்றும் பஸ் வண்டிகளை வழங்கியுள்ளது. எதிர்வரும் காலங்களில் மட்டக்களப்புக்கும் திருமலைக்குமிடையில் அதி நவீன புகையிரத வண்டியொன்றை வழங்கி சேவையில் ஈடுபடச் செய்ய உள்ளோம். அதேபோன்று இருபது தொழில் கல்வி நிலையங்களையும் ஆரம்பிப்பதற்கு இந்தியா உதவுமென மேலுமவர் தெரிவித்தார்.

அம்பாறைக்கு விஜயம் செய்த இந்திய உயர் ஸ்தானிகர், அம்பாறை அரச அதிபர் சுனில் கன்னங்கரவை அரச அதிபர் அலுவலகத்தில் வைத்து சந்தித்து உரையாடினார் அம்பாறை நகர அபிவிருத்திக்கு அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அரச அதிபர் இங்கு விளக்கமளித்துள்ளார். இந்திய அரசாங்கம் அம்பாறை உட்பட கிழக்கு மாகாணத்தை அபிவிருத்திசெய்ய பல செயற்திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகர் இந்த சந்திப்பின் போது கூறினார்.