சிறுவர் துஷ்பிரயோகம்; இவ்வருடம் மாத்திரம் 97 முறைப்பாடுகள்; கடந்த வருடம் 1265

children-srilanka-01.jpgசிறுவர் துஷ்பிரயோகங்களை முறையிடும் ‘1929’ எனும் தொலைபேசி தொடர்பிலக்கத்தினூடாக இவ் வருடத்தில் மாத்திரம் 97 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. கடந்த வருடம் ஜனவரி மாதம் இச்சேவை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரையில் 1,265 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைச் சிறார்களின் நலனைக் கருத்திற் கொண்டு 2008 ஆம் ஆண்டு ஜனவரி 29ம் திகதி அமைச்சினால் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறான சேவைகள் வெளிநாடுகளில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. சிறுவர்களை கடத்தல் மற்றும் கடத்த முயற்சித்தலுடன் தொடர்புடைய 21 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

சிறுவர் திருமணங்கள் தொடர்பாக ஆறு முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. அமைச்சினால் வழங்கப்பட்ட தரவுகளுக் கேற்ப ஆசிரியர்கள் மாணவர்களை அடித்தமைக்காக 36 முறைப்பாடுகளும் பெற்றோர், உறவினர்கள் மற்றும் வேறு சிலர் அடித்து துன்புறுத்தியமைக்காக 85 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. பாடசாலைக்கு செல்லாத சிறுவர்கள் குறித்து 114 முறைப்பாடுகளும் குடும்ப பிணக்குகள் காரணமாக தனித்து விடப்பட்ட சிறுவர்கள் தொடர்பாக 119 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
பாரபட்சம் காட்டுதல் மற்றும் பிள்ளைகளை கவனியாமை தொடர்பான சம்பவங்கள் குறித்து 120 முறைப்பாடுகளும் வந்துள்ளன.

சிறுவர்களே நேரடியாக முறைப்பாடு செய்ய வேண்டுமென்பதற்காகவே இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்ட போதிலும் பெறறோர்கள், ஆசிரியர்கள், அயலவர்கள் மற்றும் ஏனைய பெரியோர்களாலேயே பெரும்பாலான முறைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *