::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

புலிகளின் பாரிய அச்சகத்தொகுதி விசுவமடுவில் நேற்று கண்டுபிடிப்பு

udaya_nanayakkara_.jpgவிசுவமடு, சுந்தரபுரம் பிரதேசத்தில் புலிகளின் பிரதான அச்சகம் உள்ளிட்ட பாரிய முகாம் ஒன்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். பெரும்தொகையான புதிய ரக வாகனங்கள், நவீன அச்சக இயந்திரங்கள், புகைப்படக் கூடம், பிரபாகரனின் பெனர்கள், போஸ்டர்கள், கட்டவுட்கள், லெமினேடிங் இயந்திரங்கள், கமராக்கள் மற்றும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படையணியினர் நேற்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் இந்த முகாமை கைப்பற்றியுள்ளனர். விசுவமடு சுந்தரபுரம் பகுதியில் புலிகளுடனான கடும் மோதல்களைத் தொடர்ந்து முன்னேறிய படையினர் இந்த அச்சகப் பகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். 23 துப்பாக்கிகளும், புதிய ரகத்திலான வாகனங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

புலிகளின் தலைவர்கள் இம் முகாமில் கடந்த ஓரிரு தினங்களுக்குள் தங்கியிருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த அச்சகத்தில் அச்சிடப்பட்ட பெருந்தொகையான புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்களுடன் பெருந்தொகையான சீடிக்களும் கைப்பற்றப்பட்டன. புலிகள் நடத்திய பேச்சுவார்த்தைகள், சந்திப்புக்கள், உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் பதியப்பட்ட சீடிக்களையே படையினர் கைப்பற்றியுள்ளனர். அச்சகத்தில் உள்ள நவீன உபகரணங்கள் அண்மையில் கொள்முதல் செய்யப்பட்டதாகவே தென்படுவதாக படைத் தரப்பினர் தெரிவிக்கின்றனர். புலிகளின் உள்நாட்டு, வெளிநாட்டு பிரசார நடவடிக் கைகளுக்காக இந்த அச்சகத்தையே அவர்கள் பிரதானமாக பயன்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு தென்பகுதியில் படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தின் நான்கா வது செயலணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் நிஷாந்த வன்னியாராய்ச்சி தலமையிலான படைப் பிரிவினர் அந்தப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த மற்றுமொரு அச்சகம் ஒன்றையும், கட்டிங் இயந்திரம் ஒன்றையும் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார சுட்டிக்காட்டினார்.

புலிகள் இயக்க உறுப்பினர்களின் புகைப்படங்களும், புலிகளின் முக்கிய புகைப்படங்களும் அச்சிடப்பட்ட பெருந் தொகையான புத்தகங்களையே படையினர் மீட்டெடுத்துள்ளதாக தெரிவித்த அவர், அச்சு இயந்திரங்களுடன் அவற்றுக்குத் தேவையான பெருந்தொகையான உபகரணங்களும் இங்கிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

வன்னிப்பகுதியிலிருந்து வவுனியா வருபவர்கள் தொகை மேலும் அதிகரிக்கும் நிலை -அமைச்சர் ரிசாட் பதியுதீன்

civilians_arrive.jpgவன்னிப் பகுதிகளில் இருந்து வவுனியாவுக்கு வருகின்ற அகதிகளின் தொகை தினமும் அதிகரித்துக்கொண்டிருப்பதால் அடுத்த சில தினங்களில் மேலும் இத்தொகை அதிகரிக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்துள்ள மக்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களில் சுகாதார நிலைமைகள் மிக மோசமாகியுள்ளன எனவும் புகார்கள் வந்துள்ளன.

இடம்பெயர்ந்து வருகின்ற வன்னிப்பகுதி மக்களுக்கு சேவையாற்ற டாக்டர்கள் முன்வரவேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். குறிப்பாக கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு விசேட மருத்துவ சிகிச்சை தேவைப்படுகின்றன எனவும் அமைச்சர் கூறினார்.

இடம்பெயர்ந்துள்ள மக்களின் குடிநீர் உணவு சுகாதார விடயங்களில் உரிய கவனம் செலுத்தப்படவேண்டும் எனவும் அவர் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். இதனால் பலருக்கு பல நோய்கள் ஏற்பட்டுள்ளதாக தமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்த அகதிகளின் உடல் நலன்களை கருத்திற்கொண்டு மேலதிக டாக்டர்களை உடனடியாக வவுனியாவுக்கு அனுப்பிவைக்குமாறு அமைச்சர் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியா நகரில் உள்ள ஏனைய பாடசாலைகளில் இருபது தற்காலிக மலசல கூடங்கள் அமைத்துக்கொள்ளுமாறும் அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

வன்னியில் காயமடைந்த 240 பொது மக்களுக்கு திருமலை ஆஸ்பத்திரியில் உடனடி சிகிச்சை!

ship-10022009.jpgவன்னியில் நடைபெற்றுவரும் மோதல்களில் காயமடைந்த 240 பேரை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கடல்மார்க்கமாக திருகோணமலைத் துறைமுகத்துக்கு அழைத்து வந்துள்ளது. திருகோணமலை ஆஸ்பத்திரியில் இவர்களுக்கு உடனடி சிகிச்சைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் வந்துள்ளனர்! -அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

lakshman_yapa_abeywardena.jpgமுல்லைத் தீவு மீதான மனிதாபிமான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் நேற்று வரை அந்தப் பிரதேசத்திலுpருந்து 32 ஆயிரத்து 596 பேர் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வருகை தந்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். தகவல் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு பிரதேசத்திலிருந்து நாளொன்றுக்கு சுமார் ஆறாயிரம் பேர் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வருகின்றனர். மேலும் 30 அல்லது 40 ஆயிரம் பேர் மேலும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு வருகின்ற அனைவரையும் இரண்டு நாட்களில் மாதிரிக் கிராமங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் தேடி வருகின்ற அப்பாவித் தமிழ் மக்களை இலக்குவைத்தே  புலிகள் தாக்குதல் நடத்துகின்றனர். பாதுகாப்புப் படையினர் இல்லாத போது வந்தவர்களே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அரசாங்கம் ஆதாரங்களுடன் வெளிநாட்டு ஊடகங்களுக்கு நேற்று அறியக் கொடுத்தது. எத்தனை பேர் வந்தாலும் அத்தனை பேருக்கும் அரசாங்கம் எந்த நாட்டினதும் எந்த அமைப்பினதும் எவ்வித நிதியுதவியும் இல்லாத நிலையில் நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உதவிகளை வழங்க வரும்பினால் அரசாங்கம் ஊடாக அதனை மேற்கொள்ளலாம்;.
புதுக்குடியிருப்பு வைத்திசாலையில் இருந்த 240 நோயாளர்களையும் உதவியாளர்களையும் யுத்த சூன்ய பகுதிக்கு அழைத்து வருமாறு செஞ்சிலுவைச் சங்கத்தை கேட்டுக்கொண்ட போதும் அவர்கள் அந்த நோயாளர்களை மேற்குக்கு அழைத்துச் சென்றனர். செஞ்சிலுவை சங்கத்தினர் அவ்வாறு செய்துவிட்டார்கள் என விட்டுவிடாமல் அரசாங்கம் உடனடியாக அவர்களை கிரீன் ஓஷன் கப்பல் மூலம் திருகோணமலைக்கு அழைத்து வந்தது. இதற்காக நான்கு மணி நேர யுத்த நிறுத்துமும் கடைபிடிக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

“இந்தியா தவறினால் ஐ.நா.வை நாடுவோம்’

srikantha.jpgஇலங்கையில் யுத்தத்தை நிறுத்த இந்தியா தலையிட வேண்டுமென யாழ்.மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.என்.ஸ்ரீகாந்தா வலியுறுத்தியுள்ளார்.

கோயம்புத்தூரில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இதனைத் தெரிவித்த அவர், இலங்கையில் சண்டையை நிறுத்த இந்தியா நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.மத்திய அரசு இதனை மேற்கொள்ளத் தவறினால் ஐ.நா.மற்றும் வெளிநாடுகளை நாடி யுத்தத்தை நிறுத்துமாறு கோருவதைத் தவிர எமக்கு வேறு தெரிவு இல்லை என்றும் ஸ்ரீகாந்தா கூறியுள்ளார்.

ஏ.என்.ஐ.செய்திச் சேவை இதனைத் தெரிவித்தது.

வன்னி மருத்துவர்கள் வவுனியாவில் கடமை

nimal-siripala.jpgபுலிகளின் பிடியிலிருந்து வவுனியாவுக்குள் வரும் டாக்டர்கள், தாதியர்கள், சுகாதார சேவை உத்தியோகத்தர்கள், மருத்துவ மாதுகள் அனைவரும் உடனடியாக சேவைக்கு உள்வாங்கப்படுவர்.

அவர்களது சம்பள நிலுவைக் கொடுப்பனவுகள் அனைத்தும் தீர்க்கப்படுவதுடன் வவுனியா நலன்புரி நிலையங்களிலேயே சேவைக்கும் அமர்த்தப்படுவர் என சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.

தர்மரபுரம் தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு அரசு நஷ்டஈடு! -அமைச்சர் றிஷாத் தகவல்

vishwamadu_bomb-01.jpgமுல்லைத் தீவு தர்மரபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டோருக்கும் காயமடைந்தோருக்கும் அரசாங்கம் நஷ்டஈடு வழங்கவுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பலியான குடும்பஸ்தர் ஒருவருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வீதமும் குடும்பஸ்தர் அல்லாத ஒருவருக்கு தலா 50 ஆயிரம் ரூபா வீதமும் 18 வயதுக்குக் குறைந்தோருக்கு தலா 25 ஆயிரம் ரூபா வீதமும் நஷ்டஈட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது. இந்த சம்பவத்தில் பலியானோரின் இறுதிக் கிரியைகளுக்காக ஒருவருக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை  இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் காரணமாக காயமடைந்தோருக்கு முதற்கட்டமாக தலா 10 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது. காயமடைந்தோரின் வைத்திய அறிக்கையின்படி இத்தொகை மேலும் அதிகரிக்கப்படுமென்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 

பத்து நாட்களுக்குள் 30 ஆயிரம் சிவிலியன்கள் அரச பகுதிக்கு வருகை! – இராணுவப் பேச்சாளர் தகவல்

wanni.jpgஅரசாங்கத்தின் அழைப்பை ஏற்று புலிகளின் பிடியிலிருந்து தப்பி கடந்த பத்து நாட்களுக்குள் மாத்திரம் சுமார் 30 ஆயிரம் சிவிலியன்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி வருகை தந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரை 33,131 பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை தந்துள்ளததோடு, கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் 3848 பொதுமக்கள் வருகை தந்துள்ளனர். இத்தொகை கடந்த பத்து நாட்களுக்குள் மாத்திரம் 29, 283 ஆக அதிகரித்துள்ளது.

கடந் வருடத்தில் மாத்திரம் மொத்தமாக 1704 சிவிலியன்களே அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வருகை தந்திருந்தனர். தங்களது பிடியிலிருந்து பொதுமக்கள் தப்பிச் செல்வதை பல்வேறு முறைகளில் தடுத்த புலிகள், தற்பொழுது தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டு அந்த மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி தடுக்க முயற்சித்து வருகின்றனர். எனினும் புலிகளின் பிடியிலிருந்து தப்பி அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கி மக்கள் தொடர்ந்தும் வந்த வண்ணமுள்ளதாக பிரிகேடியர் மேலும் குறிப்பிட்டார். 

முல்லை. குருவிக்குளம் சந்தி நேற்று படையினர் வசம்

mi24_2601.jpgமுல்லைத் தீவு, குருவிக்குளம் சந்தியை பாதுகாப்புப் படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார்.

முல்லைத்தீவு முழுவதையும் புலிகளிடமிருந்து முழுமையாக விடுவிக்கும் நோக்குடன் முன்னேறிவரும் இராணுவத்தின் 57வது படைப்பிரிவினர் இந்தப் பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் இந்த குருவிக்குளம் பிரதேசம் அமையப்பெற்றுள்ளதாக தெரிவித்த அவர் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான ஆயுதங்களையும் படையினர் மீட்டெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரி – 56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும் துப்பாக்கி ரவைகள் மற்றும் பல்குழல் இயந்திர துப்பாக்கி ரவைகள் முழுமையாக நிரப்பப்பட்ட கொள்கலன் ஒன்றையும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இராணுவத்தினர் மீட்டெடுத்துள்ளனர்.

குருவிக்குளம் மேற்கு பிரதேசத்தை முழுமையாக கைப்பற்றிய இராணுவத்தின் 57வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தலைமையிலான படைப்பிரிவினர் இந்தப் பிரதேசத்தில் தொடர்ந்தும் பாரிய தேடுதல்களை மேற்கொண்டு வருவதாக பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, முல்லைத்தீவில் எஞ்சியுள்ள புலிகளின் பிரதேசங்களை நோக்கி பாதுகாப்புப் படையினர் முன்னேறி தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்த இராணுவப் பேச்சாளர் அங்கிருந்து பெருந்தொகையான ஆயுதங்களையும் மீட்டெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காயமடைந்த நோயாளர்கள் கப்பல் மூலம் திருமலைக்கு கொண்டு வருகை

ship-10022009.jpgவன்னியில் இருந்து நேற்று ஒரு தொகுதி நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாத்தளன் கடற்பரப்பில் நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் கப்பல் தரித்துநின்று நோயாளர்களை ஏற்றிச் சென்றுள்ளது.

நோயாளர்கள் படகுகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு கப்பலில் ஏற்றப்பட்டுள்ளனர்.  ‘ஓசின்’ எனும் கப்பலே மாத்தளன் கடற்பரப்புக்கு வந்து நோயாளர்களை ஏற்றிச் சென்றுள்ளது. நோயாளர்களுடன் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் வெளியேறியுள்ளனர்.கப்பலில் நோயாளர்கள் ஏற்றப்படுகின்றனர்.

கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்ட நோயாளர்கள் திருமலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் தஸநாயக்க கூறினார்.