புலம்பெயர் வாழ்வியல்

புலம்பெயர் வாழ்வியல்

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் அவர்களுடைய வாழ்வியல், சமூக, அரசியல் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

இன்றும் போராட்டங்கள் தொடர்கிறது! நேற்று பாரிஸில் 210 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது! : த ஜெயபாலன்

Protest_London_20Apr09இலங்கை அரச படைகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் ஊடுருவிக் கொண்டிருக்க பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் புலம்பெயர்ந்த தமிழர்கள் மிகவும் உணர்ச்சிகரமான போராட்டங்களில் குதித்துக் கொண்டு உள்ளனர். குறைந்தது கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மரணத்தின் விளிம்பில் இருந்து 30000க்கும் மேற்பட்ட மக்கள் எதிர்காலம் எப்படி இருக்குமோ இப்போதைக்கு உயிரைக் காப்பாற்றிக் கொள்வோம் என்று அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துகொண்டுள்ளனர். இன்னும் சில தினங்களில் புலிகளின் வசமுள்ள இறுதிப் பத்திற்கும் சற்று அதிகமான கிலோ மீற்றர் நிலப்பரப்பும் அரச படைகளின் கட்டுப்பாட்டிற்று வந்தவிடும் என படைத்தரப்பு தெரிவிக்கின்றது.

பெரும்பாலும் மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியைவிட்டு வெளியேறும் போது புலிகள் அரச படைகளுடன் நேருக்கு நேரான மோதலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நேற்றைய யுத்தத்திலும் புலி ஆதரவு ஊடகங்கள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை 1500 வரை இருக்கும் என செய்திகளை வெளியிட்டு உள்ளனர். இச்செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு உள்ளன. இழப்புக்கள் பற்றிய செய்திகள் புலம்பெயர் தமிழ் மக்களை மிகவும் உணர்ச்சிகரமாக வைத்துள்ளது.

ஏப்ரல் 5ல் புலிகளின் முக்கிய தளபதிகள் முக்கிய போராளிகள் இழக்கப்பட்டு தலைவர் வே பிரபாகரன் காப்பாற்றப்பட்டார். ஆயினும் புலிகளின் தலைமையை ஆபத்து நெருங்கியதை அடுத்து மேற்கு நாடுகள் முழுவதும் போராட்டங்கள் முடக்கிவிடப்பட்டது. உண்ணாவிரதப் போராட்டங்களும் முடக்கிவிடப்பட்டது.

இப்போராட்டங்களின் மையமாக பிரித்தானியாவின் இதயப்பகுதியான வெஸ்ற்மினிஸ்ரர் மாறியுள்ளது. இங்கு சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் 15வது நாளாகத் தனது போராட்டத்தை தொடர்கிறார். இவரது நிலை கவலைக்குரியதாக இருக்கையில் நேற்றுக் காலை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்து சந்தித்து போராட்டதை முடிவுக்கு கொண்டு வரலாம் என்ற நிலை அதற்கு முதல்நாள் இருந்தது. ஆனால் இலங்கை இராணுவம் புலிகளின் இறுதியாக உள்ள கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் முன்னேறி மக்கள் வெளியேறுவதற்கான பாதையை திறந்ததை அடுத்து போராட்டம் மேலும் உணர்ச்சிகரமாக மாறியுள்ளது. நேற்றுமாலை வெஸ்ற்மினிஸ்ரர் பகுதியைச் சுற்றிய போக்குவரத்துக்கள் முற்றாகத் தடைப்பட்டன. நூற்றுக்கணக்கில் பொலாசாரைக் கொண்டு வந்து இறக்கி வீதிகளை போக்குவரத்திற்கு அனுமதிக்க எடுத்த முயற்சி ஆயிரக் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டத்திற்கு முன்னால் பலனளிக்கவில்லை. சிலர் பாய்களைக் கொண்டு வந்து வீதியில் விரித்து படுத்தும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

ஏற்கனவே ஜி20 மாநாட்டை ஒட்டி இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கையை எடுத்த பொலிசார் அதில் ஒரு ஆர்ப்பாட்டக்காரர் மரணமானது தொடர்பிலும் அவர்களது நடவடிக்கை தொடர்பிலும் மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளனர். அவ்வாறான மற்றுமொரு நடவடிக்கையை மேற்கொள்ள பொலிசார் துணியவில்லை. மேலும் ஆர்ப்பாட்டக் காரர்கள் யாரும் வன்முறை நோக்கோடு செயற்படாததால் பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் முரண்பாடுகள் எழவில்லை. ஆனால் நாளையும் பிரித்தானியாவின் இதயப்பகுதியின் போக்குவரத்துக்கள் தடைப்பட்டால் அப்பகுதியின் சகஜநிலை பாதிக்கப்படும். பொருளாதார மையத்தில் மிகுந்த பொருளாதார நெருக்கடியான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இப்போராட்டம் அப்பகுதியின் ஸ்தீரத் தன்மையைப் பாதிக்கும். மேலும் இவ்வகையான போராட்டங்களை ஏனைய சமூகங்களும் மேற்கொள்ள முற்படலாம். அது அப்பகுதியின் பொருளாதார நடவடிக்கைகளைப் பாதிக்கும் என்பது கூர்ந்து அவதானிக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்திற்கு தடையை ஏற்படுத்தும் பட்சத்தில் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் பொலிஸார் இறங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இதே போன்று பிரான்ஸில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக பிரெஞ் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை ஆயுதக் கூட்டம் என்று விபரித்துள்ள பொலிஸ் அதிகாரி அவர்கள் போக்குவரத்தில் ஈடுபட்ட மூன்று பஸ்கள் மீதும் பொலிசார் மீதும் பொருட்களை வீசியதாகக் குற்றம்சாட்டி உள்ளார். ஒரு பொலிஸ் அலுவலர் உட்பட நான்கு பேர் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் பொலிஸ் அதிகாரி ராய்டர் செய்தி ஸ்தாபனத்திற்கு தெரிவித்து உள்ளார்.  ஆயுதக் கூட்டம் என்பது பொதுவாக கத்தி துப்பாக்கி இருப்புக் குற்றி போன்றவற்றை வைத்துள்ளவர்களுக்கே பயன்படுத்தவது வழக்கம். ஆனால் அப்பதம் தற்போது ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

பாரிஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்தை தடைசெய்ய முற்பட்ட ஆர்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் தண்ணீர் அடித்தும் அப்புறப்படுத்தினர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஸ்கூட்டர் ஒன்றுக்கு நெருப்பு வைத்ததாகவும் 3 பஸ்களினதும் இரு கார்களினதும் ஒரு லொறியினதும் முகப்புக் கண்ணாடிகளை உடைத்ததாகவும் ஏப்பி செய்தியாளர் பிரான்ஸ் 24 செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்து உள்ளார். பொலிசார் மீதும் குப்பைகளும் போத்தல்களும் எறியப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்ட 210 பேரை கைது செய்ததாக பிரெஞ் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இவற்றுக்கிடையே இன்று கனடாவின் ஒட்டோவா நகரிலும் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே நடந்த ஆர்ப்பாட்டங்களின் போது மாணவர்கள் விதிகளை மறித்து போக்குவரத்துக்களை தடைப்படுத்தினர்.

இலங்கை அரச படைகள் தங்கள் படைகளை புலிகளின் கடைசிச் சில கிலோ மீற்றர்களுக்கள் நகர்த்த புலம்பெயர் தமிழர்கள் தங்கள் போராட்டங்கள் பலனளிக்கவில்லை என்ற விகாரத்துடன் உணர்ச்சி பொங்க தங்கள் இறுதிப் போராட்டத்தை தொடர்கின்றனர். யுத்தத்தை நிறுத்தக் கோரி யுத்தத்தின் முடிவில் இவர்கள் ஆரம்பித்த போராட்டம் புலி அலையில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. இதனால் மண்ணோ மக்களோ காப்பாற்றப்படவில்லை.

புலிகளின் தலைமை இரு வாரங்களிற்கு முன்னரயே எஸ்கேப் ஆகிவிட்டது என்று உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவித்த போதும் அவர் உள்ளேயே இருக்கின்றார் என்று 24 மணிநேர காலக்கெடுவை இலங்கை அரசு அவர்களுக்கு வழங்கி உள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டது போல் புலிகளின் தலைமை இப்பகுதியைவிட்டு வெளியேறி இருந்தால் இராணுவம் பாரிய தாக்குதல்கள் இன்றி முன்னேற முடியும். ஆனால் அரசு குறிப்பிடும்படி புலிகளின் தலைமை இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள பிரதேசத்திற்குள் இருந்தால் மிக உக்கிரமமான மோதலுக்கான வாய்ப்பு உள்ளது. இன்னமும் 100000 மக்கள்வரை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் உள்ளனர். அவர்களுக்கு மத்தியிலேயே அவ்வாறான ஒரு மோதல் இடம்பெறும். இது இதுவரை சந்தித்திராத அவலதை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் தவிர்க்க முடியாதது. ( Project Beacon – இறுதிக் கட்டத்தில்!! புலிகளின் தலைமை ஆபத்தில்!!! : த ஜெயபாலன் , தலையோடு வந்தது தலைப்பாகையோடு போனது. ‘தலைவர் எஸ்கேப்’ : த ஜெயபாலன் )

நான்காயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்படடும் அதனைப் போன்று இரு மடங்கினர் காயமுற்றும் நடந்த இந்த யுத்தம் அழிவைத் தவிர எதனையும் தரவில்லை. இலங்கை அரசும் புலிகளும் சர்வதேச சமூகமும் இந்த அழிவைத் தடுத்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. இலங்கை அரசோ புலிகளோ காலம் காலமாக எடுத்துக் கூறப்பட்ட அரசியல் தீர்வு பற்றி அக்கறையற்று இருந்தனர். எப்போதும் இராணுவத் தீர்வு நோக்கியே அவை செயற்பட்டன. இன்றும் செயற்படுகின்றன. அதற்கு வேறுபாடின்றி இரு தரப்பும் மக்களைப் பணயம் வைத்து காய்களை நகர்த்தினர். இந்த உண்மையை கண்டுகொள்ளாத புலம்பெயர்ந்த தமிழர்கள் புலிகளையும் தமிழர்களையும் ஒன்றாகவே பார்த்தனர். அதனால் வன்னி மக்களின் பாதுகாப்பை இரண்டாம் பட்சத்திலேயே வைத்தனர். இவர்கள் அனைவரும் விட்ட தவறிற்காக வன்னி மக்கள் அதி உச்ச விலையச் செலுத்தினர். இந்த வலி வன்னி மக்களை வாழ்நாள் முழுவதும் தொடரும். இந்த மனித அவலத்தினை தடுக்க முடியாத வெறும் சாட்சிகளாக நாங்கள் ஆகிவிட்டோம்.

தூங்குபவனை எழுப்பலாம்… : சுமதி ரூபன்

Canadian_Protest_13Mar09கனேடியத் தமிழ் காங்கிரஸ், கனேடிய பாராளுமற்ற உறுப்பினர்களுடன் தமக்கு இருக்கும் சார்பு நிலையைப் பயன்படுத்தி, வன்னி மக்களின் பாதுகாப்பிற்காகத் தம்மால் ஆன போராட்டங்களை ஆர்ப்பாட்டங்கள் அற்ற முறையில், கறுப்புக் கொடியுடன் ஆரம்பித்து வைத்தது.

சிங்கள அராஜக அரசு வன்னி மக்கள் மேல் நடாத்தி வரும் மனிதாபதமற்ற தாக்குதல்களைக் கண்டித்து மக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு சிங்கள அரசின் மேல் அழுத்தங்களைக் கொடுப்பதன் மூலம் உடனடிப் போர் நிறுத்தத்தைக் கொண்டு வருவதுடன், உலக நாடுகளிடமிருந்து இலங்கை அரசு பெற்று வரும் உதவிகளைத் தடை செய்வது போன்றவையே இவர்களது போராட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தன. இப்போராட்டங்கள் மூலம் ஜ.நா விற்கு அழுத்தம் கொடுத்து தமிழ் மக்களுக்கு சார்பாக எதையாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் இவர்களிடம் இருந்தது என்று அறிய முடிந்தது.

கனேடிய பாரளுமன்ற உறுப்பினர்களிடம் சிறிதளவேனும் தமிழ் மக்களுக்கான உதவியைப் பெற வேண்டும் எனில் அவர்களது சட்டங்களை மதிக்க வேண்டும் என்பதில் கனேடியத் தமிழ் காங்கிரஸ் மிகவும் விழிப்போடிருந்தது.

ஆரம்ப காலப் போராட்டங்கள் கறுப்புக் கொடிகளுடன் அமைதியான முறையில் நடைபெற்றதால் கனடா வாழ் தமிழ் மக்களைப் பற்றிய ஒரு நல்லெண்ணத்தைக் கனேடிய அரசிற்கு நிச்சயம் அது வழங்கியிருந்தது.

ஆனால் எமது மக்கள் செய்த பாவமோ என்னவோ திடீரென்று அனைத்துப் போராட்டங்களும் திசைமாறி தமிழர்கள் என்றாலே சட்டத்தை மதிக்கத் தெரியாத வன்முறையாளர்கள் என்று உலக நாடுகள் அனைத்தும் ஒன்றாக முத்திரை குத்தும் அளவிற்கு தமிழ் மக்களுக்கான போராட்டம் இப்போது திசைமாறி விட்டது. தாம் என்ன செய்கின்றோம் என்று விளக்கமில்லாது வெறும் உணர்வுகளால் உந்தப்பட்டு, தம் மனச்சாட்சிக்காய், தம் பங்கிற்காய் எதையாவது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் பல பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்களும் இப்போராட்டங்களின் இணைந்திருக்கின்றார்கள் என்பதுதான் மிகவேதனையான விடையம்.

.-.-.-.-.-.

எமது நாட்டில் அடங்காத் துயரில் இருக்கும் மக்கள் தனது அன்றாட தேவைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களிடம் மிஞ்சியிருப்பது உயிர் ஒன்று மட்டுமே. அவர்களுக்குத் தேவையான உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உடனடி போர்நிறுத்தம் தேவை எனின் நாம் கையேந்தும் நாடுகளின் சட்டங்களை மதித்தே ஆக வேண்டிய நிலையில்தான் நாம் இன்று இருக்கின்றோம்.

கனேடியத் தமிழ் வானொலி ஒன்றின் கலந்துரையாடலை அண்மையில் கேட்டேன். வன்னி மக்கள் தமது சொந்த நிலத்தில்தான் வாழ வேண்டும் அவர்கள் வெளியேறத் தேவையில்லை என்று கனேடிய அரசியலில் ஈடுபட்டிருக்கும் தமிழர் ஒருவர் கூறினார். பண வசதி இருந்ததால் தனது சொந்த நாட்டை விட்டு, ஊரை விட்டு மூட்டை முடிச்சுடன் ஓடிவந்து கனடாவில் வாழும் இவர்கள் போன்றோர், இங்கு வந்து இறங்கியவுடன் முதலில் செய்தது மிஞ்சியிருக்கும் தமது சொந்தங்ளை இங்கே இறக்கியதுதான். தமது பிள்ளைகளுக்குத் தடிமன் வந்தால் கூடத் துடித்துப் போகும் இவர்கள், தமது உயிரைக் காத்துக் கொள்ள நாட்டை விட்டுக் கடல் கடந்து ஓடி வந்தவர்கள், வன்னி மக்கள் அனைத்தையும் தொலைத்துவிட்டு, மிஞ்சியிருக்கும் உயிர் ஒன்றையே கையில் கொண்டு எங்காவது போய்த் தப்பித்துக் கொள்ளலாமா என்று தவித்திருக்கும் போது அவர்கள் மேல் அக்கறை கொண்டவர்கள் போல் காட்டிக்கொள்ளும் புலம்பெயர்ந்த தமிழர்கள் வன்னிவாழ் மக்களை வன்னியை விட்டு அசையக் கூடாது என்பது விந்தையாக உள்ளது. கனடாவில் வாழப் பிடிக்காமல் திரும்பியவர்கள் கூட இந்தியா போன்ற நாடுகளில் குடியேறியிருக்கின்றார்ளே தவிர வன்னியில் குடியேற அவர்களும் தயாராக இல்லை. வன்னிவாழ் மக்கள் பலர் பல ஊர்களிலும் இருந்து அங்கு வந்து குடியேறியவர்கள் என்பதை இவர்கள் அறியாதவர்களுமல்லை. இதன் பின்புலம் என்ன என்பது அனைவரும் அறிந்ததே.

.-.-.-.-.-.

எம்பங்கிற்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற மனப்போராட்டத்தில் பல அமைப்புக்களும் தனி நபர்களும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இப்போது உள்ளார்கள். ஒரு அரசியல் ஆய்வாளரிடம் இதுபற்றிக் கேட்டேன். என்ன செய்ய முடியும் என்று நினைக்கின்றீர்கள்? என்று அவர் என்னிடம் திருப்பிக் கேட்டார். என்னிடம் பதில் இல்லை. நீங்கள் என்ன செய்தீர்கள் என்று யாராவது கேட்டால் சொல்லிக்கொள்ள எதையாவது செய்ய வேண்டுமா?

.-.-.-.-.-.

அனைத்து நாடுகளிலும் புலம்பெயர்ந்தோர் மாபெரும் போராட்டங்களை நடாத்தி வருகின்றார்கள் என்று பெருமை கொள்ளும் மக்களுக்கு ஏன் இன்னும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களை வந்து சந்தித்து உரையாற்றுகின்றார்கள் இல்லை என்ற கேள்வி எழுந்த வண்ணமே இருக்கின்றது. (குறிப்பாகக் கனடாவில்) இது பற்றி தமிழ் வானொலியில் உரையாடிய ஆய்வாளர் ஒருவர், எமது அடையாளமான கொடியை நாங்கள் கையில் ஏந்தியிருப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள் இல்லை என்றார். தொடர்ந்து அவர் கூறுகையில் தமிழர்கள் மிகவும் திறமையும் புத்திக் கூர்மையும் கொண்டவர்கள், கனேடியப் பாரளுமன்ற உறுப்பினர்களை கனேடியத் தமிழர்கள் தான் மெல்ல மெல்ல வளர்த்தெடுக்க வேண்டும் என்றார்.
 
வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெற இருக்கும் மாபெரும் உரிமைப் போரின் போது கனேடிய அரசியல் வாதிகளின் போக்கில் கொடிகளை மடித்து வைத்து விடுவோம், அவர்கள் வந்து உரையாடி எம்மக்களுக்காக எதையாவது செய்வதற்கு உடன்படுகின்றார்களா என்று பார்ப்போம் என்று இந்த ஆய்வாளர் தயங்கித் தயங்கி வானொலியில் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து வந்து உரையாடிய உறவுகள் (தற்போது நேயர்கள் அல்ல உறவுகள்) தாம் தமிழரின் அடையாளமான கொடியை ஒருபோதும் கைவிடமாட்டோம் என்று உணர்ச்சி பொங்கக் கூறினார்கள். இல்லை நாங்களும் சிறிது விட்டுக் கொடுத்தால்தான் கனேடிய அரசும் சிறிது விட்டு இறங்கி வரும் என்று கெஞ்சாத குறையாக இவர் கேட்டுக் கொண்டார். வன்னி மக்கள் மேல் கனடாவாழ் தமிழ் மக்களுக்கு எவ்வளவு அக்கறை இருக்கின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 முன்னைய கட்டுரை:

அந்தோ.. : சுமதி ரூபன்

ஒரு புறம் வேடன், மறுபுறம் நாகம் என்ற நிலையில் இன்று வன்னி மக்கள் படும் வேதனை தமிழ் தொலைக்காட்சிகளிலும், மின்தளங்களிலும் பார்த்து மௌனம் ஒன்றைத் தவிர வேறு வழியில்லா நிலையிலும், ஒருநிலைக்கு மேல் மௌனித்திருக்கவும் முடியா நிலையிலும் புலம்பெயர்ந்த எத்தனையே தமிழ் மக்கள் தங்களுக்குள் புலம்பித்தீர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

யூஎன் இடமோ இல்லையேல் தாம் புலம்பெயர்ந்து வாழும் நாட்டின் அரசிடமோ வன்னி மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற உதவுங்கள் என்று கையேந்த முடியாத நிலையில் உள்ளார்கள் இவர்கள். காரணம் பயங்கரவாத அமைப்பென்று தடை விதித்த பின்னரும் “அரசே உனது தடை எங்களுக்கு ஒரு வடை” என்று கோஷம் போட்டு தம்மை அகதிகளாக ஏற்றுக்கொண்ட அரசாங்கத்திடமே நாம் புலிக் கொடிகளோடுதான் எமது பேரணியை நடாத்துவோம் என்று திமிருடன் மோதுகின்றார்கள். நீங்கள் புலிக் கொடிகளோடு வந்தால் நாம் பேச்சு வார்த்தைக்கு வரமாட்டோம் என்று ஓட்டாவா பாராளுமன்றத்தின் முன்னால் இடம்பெற்ற பேரணியின் போது வெளியில் வந்து உரையாட இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மறுப்புத் தெரிவித்திருந்த போதிலும் அவர்கள் வராவிட்டால் கிடக்கட்டும் நாங்கள் கொடியோடுதான் போவோம் என்று அறிலித்தனமாக நடந்து கொண்ட இவர்களுக்கு, தாம் இழந்தது எதை என்று புரிந்து கொள்ளும் சிற்றறிவு கூட இல்லாமல் போனதுதான் வேதனை. கனேடிய அரசு இதனால் எதை இழந்தது? இவர்களுடைய வோட்டையா?

விடுதலைப் புலிகள் மேல் விதிக்கப்பட்ட தடையை நீங்கும் முகமாக நாகரீகமான முறையில் கோரிக்கைகளை வைத்துக் கொண்டே, கனேடிய சட்டத்தை மதித்து (அது உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ – எமது மக்களுக்காக இதையாவது செய்யாவிட்டால் நீங்கள் தமிழர் என்று சொல்வதில் எந்தப் பெருமையும் இல்லை) எமது மக்களின் அழிவைத் தடுக்க கறுப்புக் கொடிகளோடு இந்தப் பேரணிகளை நடாத்தியிருந்தால் தமிழ் மக்கள் மேல் அரசிற்கு சிறிதளவேனும் கரிசனை வந்திருக்கும். அதை விடுத்து எமது தலைவன் பிரபாகரன், என்று தொண்டை கிழியக் கத்திய வண்ணம் புலிக் கொடிகளை சிறுவர் கைகளில் கொடுத்து ஆட்ட வைத்து கனேடிய அரசை வம்புக்கு இழுப்பதால் தமிழ் மக்களை வன்முறையாளர்கள் என்று மேலும் கணிப்பதைத் தூண்டுவதாகவே அமையும். பயங்கரவாதிகள் என்ற தடை விடுதலைப் புலிகள் மேல் இருக்கும் வரை அதனை ஆதரிக்கும் அனைத்தும் சட்ட விரோதமாகப் பார்க்கப்படும். சட்டத்தை மீறு என்று கனேடிய அரசிடம் வேண்டுகின்றார்களா இவர்கள்?

வன்னி மக்களைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதை தற்போது புலம்பெயர் தமிழ் மக்கள் விரும்பவில்லை. ஆரம்பத்தில் மக்களுக்காகக் குரல் கொடுத்தவர்கள், திடீரென மாறி தற்போது பேரணிகளில் போது எமது தலைவர் பிரபாகரன் எமக்கு வேண்டும் தமிழ் ஈழம் என்றே குரல் கொடுக்கின்றார்கள். மக்களும் இயக்கமும் ஒன்றே பொதுமக்களைப் பிரித்தெடுத்து விட்டால் விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு அரசிற்கு சில மணிநேரங்கள் போதும் என்பதால், மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை தமது இயக்கத்தைக் காக்க வேண்டும் என்பதே புலம்பெயர் மக்களின் ஒரே குறிக்கோள். புலம்பெயர்ந்த மண்ணில் வாழும் வரை இவர்கள் கோஷம் இதுவாகத்தான் இருக்கும்.

அழிவது வன்னி மக்கள், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தமது மனச்சாட்சியின் உறுத்தலைத் தணிக்கப் பணத்தை இயக்கத்திற்குக் கொடுத்து விட்டுச் சுகபோகமாக வாழப்பழகிக் கொண்டவர்கள். தற்போதைய அரசியல் சூழல் அவர்களின் சுகபோக வாழ்க்கை முறையில் எந்த வித மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை. அதே வேளை இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி பணம் பண்ணும் வியாபாரிகள்தான் அதிகரித்திருக்கின்றார்கள். வீட்டிற்கு இரண்டு மூன்றென்று புலிக்கொடிகளும், ரீசேட்டும், கார் ஒட்டிகளும் வியாபாரிகளுக்கு பாரிய அளவில் வியாபாரத்தைக் கூட்டியிருக்கின்றன. (இயக்கத்திற்கு அனுப்பப் பணம் சேர்க்கின்றேன் என்று இனிமேலும் காதில் பூ சுத்த முடியாது) அதே வேளை எந்த அடிப்படை சட்ட அறிவும் இல்லாமல், யார் எதைச் சொன்னாலும் நம்பிவிடும் அறிவிலித் தனத்துடன் “வணங்காமண்” என்ற கப்பல் உணவுப் பொருட்களோடு லண்டனில் இருந்து ஈழம் நோக்கிச் செல்கின்றதாம் கனடாவில் இருக்கும் நாங்களும் ஏன் கப்பல் விடக் கூடாது என்று ஏங்குகின்றார்கள் சிலர்.

முப்பது வருட போராட்டத்தில் மிகப் பிரமாண்டமாக பேரணிகளைத் தற்போதுதான் உலகெங்கும் தமிழர்கள் நடாத்துகின்றார்கள். விடுதலைப் புலிகள் மேல் தடை விதிக்கப்பட்ட போது கூட சின்னதாக ஒரு சலசலப்போடு நிறுத்திக் கொண்டவர்கள், தொடர்ந்து சிங்கள இராணுவம் தமிழ் மக்கள் மேல் பிரயோகித்து வரும் வன்முறைகளுக்குப் பெரிதாகக் குரல் கொடுக்கவுமில்லை. அப்போதெல்லாம் கனடாவின் களியாட்ட வாழ்க்கையில் இன்புற்றிருந்த இவர்கள் தற்போது விடுதலைப் புலிகள் அழியும் நிலைக்கு வந்த போதுதான் தொண்டை கிழியக் கத்துகின்றார்கள். இத்தனை பெரிய போராட்டங்களை ஏன் இவர்கள் முன்பு நிகழ்த்தாமல் போய் விட்டார்கள்? நிகழ்த்தியிருந்தால் எப்போதே உலக நாடுகளின் உதவியை நாடியிருந்தால் ஏதாவது ஓரு சுமூகமான தீர்வு எமக்குக் கிடைத்திருக்கலாம் அல்லவா? அப்போதெல்லாம் தமது சொந்தங்களைப் பாதுகாப்பாக எப்படி வெளிநாட்டிற்கு எடுக்கலாம் என்பதில்தான் அவர்கள் கவனம் இருந்தது போலும்.

மின்தளங்களில் சிங்கள மக்களின் வாசகங்களைப் பார்க்கும் போதுதான் உறைக்கின்றது. இனிமேல் எமக்கென்று சொல்லிக் கொள்ள ஒரு இடமில்லை. புலம்பெயர்ந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஒட்ட முடியவில்லை. தமிழ் என்று குரல் கொடுத்துக் கொண்டு தமிழ் மக்களின் அழிவிலும், மண்ணின் அழிவிலும் வியாபாரம் செய்து தம்மைச் செழுமைப் படுத்திக் கொள்ளும் சிறுமைத்தனங்களைக் காணும் போது அடக்க முடியாத சினம் எழுகின்றது. அது மட்டும்தான் எம்மால் முடிகின்றது. இத்தனைக்கு அவர்கள்தான் தமிழ் உணர்வாளர்கள் என்ற பெயரோடு உலவுகின்றார்கள்.

இத்தனை வருட கால போராட்டத்தில், இயக்கத்திடம் பாரிய திட்டம் எதுவும் இருக்கவில்லை. ஆயுதங்களின் மிரட்டல்கள் தனிநாட்டைச் சுலபமாகப் பெற்றுத் தந்து விடும் என்று நம்பினார்கள். சிங்கள அரசோ மிக நிதானமாக இனச் சுத்திகரிப்பை திட்டம் போட்டு உலக நாடுகளில் துணையோடு அமுல் படுத்தி வருகின்றது. வடக்கில் பல இடங்களில் இராணுவம் பெரிய பண்ணைகளை ஆரம்பித்து தமிழ் மக்களை வேலைக்கமர்த்தி அவர்களுடன் இணைந்து வேலை செய்கின்றது. வவுனியாவிலும், இனிமேல் கைப்பற்றப்பட்ட வன்னிப் பிரதேங்களிலும் இதே செயல்திட்டத்தை அமுலுக்குக் கொண்டு வர உள்ளது. பாடசாலைகள், மருத்துவமனைகளை இப்பிரதேசங்களில் அமைத்துக் தமிழ் மக்களுடன் சுமூகமான ஒரு நிலையை உருவாக்கிய பின்னர் பாடசாலைகளில் மெல்ல மெல்லத் தனிச்சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்து காலப் போக்கில் தமிழை அழித்து இலங்கை எனும் நாடு தனிச் சிங்கள நாடாக மாற்றுவதே சிங்கள அரசின் திட்டம் என்றார் ஒரு தமிழ் அரசியல் ஆய்வாளர்.

தான் சாய்ந்தாலோ தடுமாறிப் போனாலோ துணையாய்ப் பக்க பலமாய் தன்னோடு இணைந்து போராட விடுதலைப் புலிகள் இயக்கம் இன்னொரு வளத்தைத் தயார்படுத்தி வைக்கவில்லை. இன்று தனிக்கல்லில் கட்டப்பட்ட உயர்ந்த கட்டிடமாய் வளர்ந்து நிற்கும் இயக்கத்தின் அஸ்திவாரம் ஆட்டம் காணும் நிலையில், முற்று முழுதாக உடைந்து சுக்கு நூறாகப் போகும் நிலை தான் மிஞ்சி உள்ளது. விடுதலைப்புலிகளில் வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் குளிர்காய்ந்த புலம்பெயர் மக்களே அதிகம். வெளிநாடுகளில் இருந்து புலிக் கொடிகளோடு கத்தி ஒன்றும் நிகழப் போவதில்லை என்பது இவர்களுக்கு உறைக்கவும் போவதில்லை. ஓட்டாவா பத்திரிகை ஒன்றில் தமிழ் மக்கள் பாராளுமன்றத்தின் முன்னால் நடாத்தும் போராட்டம் பற்றிக் குறிப்பிட்டு விட்டு, வீதிகளில் வாகனங்களுக்கும், பிரயாணிகளுக்கு இவர்கள் இடஞ்சலாக உள்ளார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கின்றது. அதே வேளை இந்தியாவில் சீமான், வைகோ போன்றோரின் வன்முறையைத் தூண்டும் பேச்சுக்கள் தமிழ்நாட்டு மக்களிடம், பொதுவாகக் குடும்பப் பெண்களிடம் சினத்தைதான் வரவழைக்கின்றது. எந்த நாடும் தனது சீர்நிலை குலைவதை விரும்பவதில்லை. அதனைத் தூண்டும் பேச்சுக்களையும் அது அனுமதிப்பதில்லை.  சிங்கள அரசிற்குத் தெரியும் எந்த ஒரு உலகநாடும் தனது இராணுவத்தை விடுதலைப் புலிகளுடன் இணைத்துக் கொண்டு தன்னை அழிக்கப் போராடாது என்று. அத்தோடு புலம்பெயர் நாடுகளில் தமிழ் மக்களின் அழுத்தம், உலக நாடுகள், யூஎன் ஆகியவற்றின் மேல் தாக்கத்தை ஏற்படுத்தின் அது வன்னி மக்களைப் பாதுகாப்பாக போர் வலையத்திலிருந்து வெளியேற்றுவதாக மட்டுமே அமைந்திருக்கும். அதைத்தான் சிங்கள அரசும் வேண்டி நிற்கின்றது.

புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் ஆயுதங்களுக்குப் பணத்தை மட்டும்தான் அனுப்ப முடியும். தாமும் இணைந்து கொண்டு இராணுவத்தைப் பலப்படுத்துவோம் என்று பேச்சுக்காவது இவர்கள் எண்ணினார்களா? கேட்டால் இங்கிருந்து வேலை செய்யவும் ஆட்கள் தேவை என்று முறைத்து விட்டு மறைந்து விடுவார்கள். இன்று புலம்பெயர்ந்த மக்களின் பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட அத்தனை ஆயுதங்களும் சிங்கள இராணுவத்தின் கைகளில் அகப்பட்டு தமிழ் மக்களையே அழிக்க உபயோகிக்கப்படப் போகின்றது.

இந்திய இலக்கியவாதி ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருக்கும் போது அவரின் தகவல்படி சிங்கள அரசு தனது உறுப்பினர்களை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிற்கும் அனுப்பி, அங்கிருக்கும் அரசியல்வாதிகள், முற்போக்குவாதிகள், பத்திரிகையாளர்களை சந்திக்கும்படி செய்து, விடுதலைப் புலிகள் இயக்கம் முற்று முழுதான ஒரு பயங்கரவாத இயக்கம், இதனால் தமிழ் மக்கள், சிங்கள மக்கள் அனைவருக்குமே பாதுகாப்பு இல்லை என்று உரை நிகழ்த்தி அவர்களை தம் சார்ப்பாக்கியிருக்கின்றது. அதே போல் உலக நாடுகள் பலவற்றுடனும் சந்திப்பு நிகழ்த்தியிருக்கினறது, ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கம் உலக நாடுகளில் ஆதரவைப் பெற்று கொள்வதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. தான் ஒரு மலையாள சஞ்சிகையில் தொடர்ந்து ஈழத்தமிழர்களில் நிலை பற்றி விளக்கி எழுதி வந்ததாகவும், கேரள அரசியல்வாதி ஒருவர் தன்னுடன் தொடர்பு கொண்டு தாங்கள் தவறான தகவல்களை மக்களுக்கு கொடுக்கின்றீர்கள் என்று கூறித் தன்னுடன் உரையாடியதாகவும் அந்த வேளையில் சிங்கள அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அரசியல் பயணம் நிகழ்த்தியிருக்கும் தகவலைத் தான் அறிந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

அடுத்தது என்ன?

ஏ சி சாந்தன் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றில் நிரூபிக்கப்பட்து

Santhanபிரித்தானியா தமிழ் அமைப்பின் ஸ்தாபகரும் பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளுக்கு பொறுப்பானவருமாக கருதப்பட்ட ஏ சி சாந்தன் கிங்ஸ்ரன் கிரவுண் நீதிமன்றில் குற்றவாளியாகக் காணப்பட்டார். குண்டு தயாரிக்கும் பொருட்களை புலிகளுக்கு விநியோகித்ததற்காகவும் பயங்கரவாதத்துடன் தொடர்பான ஆவணங்களை பெற்றுக் கொண்டதற்காகவும் சாந்தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு உள்ளது. 2004ல் புலிகளின் பொலிஸ் பிரிவுக்கு கைவிலங்குகளையும் பூட்ஸ்களையும் வாங்கி விநியோகிக்க முற்பட்ட போது பொலிஸாரால் ஏ சி சாந்தன் எச்சரிக்கப்பட்டதாகவும் ஆனாலும் அதனையும் மீறி அவர் இதனை மேற்கொண்டதாகவும் அரச தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

ஏ சி சாந்தனுடன் குற்றச்சாட்டப்பட்ட முருகேசு ஜெகதீஸ்வரன் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டார்.

Related News:

பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் பிணையில் விடுதலை

பிந்திய செய்தி: விடுதலைப் புலி ஆதரவாளர் மீண்டும் கைது

ஒருபேப்பர்-வாசன் அச்சக கட்டடிம் மீது சோதணை – பிரித்தானிய புலி ஆதரவாளர்கள் மூவர் கைது

சாந்தன் பிணையில் விடுவிக்கப்பட்டார்

ஆபிரிக்கா கண்டத்தின் மிக உயர்ந்த மலையான கிளிமஞ்சாரோ மீது ஏறி கவனயீர்ப்பு போராட்டம்

kilimanjarociegos.jpg வன்னி மக்களின் துன்ப துயரங்களை உலகறியச் செய்வதற்காக ஈழத் தமிழ் இளைஞரொருவர் ஆபிரிக்க கண்டத்திலுள்ள மிக உயரமான “கிளிமஞ்சாரோ’ என்ற மலையிலேறி கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். யாழ். குடாநாட்டைச் சேர்ந்த கீரன் அரசரட்ணம் (33 வயது) என்பவரே இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.ஆபிரிக்காவில் தன்சானியாவிலுள்ள கிளிமஞ்சாரோ மலையின் உயரம் 5,891.8 மீற்றர் (19,330 அடி). இந்த மலை மீதே அவர் நேற்று முதல் ஏறத் தொடங்கியுள்ளார்.

தனது 13 ஆவது வயதில் பிரிட்டனுக்குச் சென்று அங்கு பட்டப் படிப்பை முடித்து தற்போது லண்டனில் வங்கியொன்றில் பணியாற்றி வரும் இளைஞரே வன்னி மக்களின் அவல நிலையை முழு உலகிற்கும் எடுத்துக் கூறுவதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

வன்னி மக்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுடன் வன்னி நோக்கி புறப்படவுள்ள “வணங்காமண்’ கப்பலுக்காக இந்த முயற்சியின் மூலம் நிதி சேகரிக்கவும் கீரன் திட்டமிட்டுள்ளார்.

தோழர் பரா நினைவு ஒன்றுகூடல் : த ஜெயபாலன்

Tholar_Para_05Apr09பணிதல் மறுத்தவர் தோழர் பரா என்ற தலைப்பில் நினைவு ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஏப்ரல் 5ல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள இந்நிகழ்வு லேய்டன்ஸ்ரோன் குவாக்கர்ஸ் ஹவுஸில் மாலை இரண்டு மணிமுதல் மாலை ஒன்பது மணிவரை நடைபெறவுள்ளது.

தோழர் பரா என அன்புடன் அறியப்படும் குமாரசாமி பரராஜசிங்கம் 2007 டிசம்பர் 16ல் உயிரிழந்தார். புலம் பெயர்ந்த நாடுகளில் இலக்கிய சந்திப்புகளின் முன்னோடியும் சிந்தனை சஞ்சிகையின் ஆசிரியரும் இடதுசாரி அரசியலாளருமான இவர் தனது மரணத்தின் பின்னும் பலரது நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்.

அவரது மரணத்தை அடுத்து பரிஸ் ‘அம்மா’ மனோ தேசம்நெற் இல் பதிவு செய்த அஞ்சலிக் குறிப்பில் தோழர் பராவை இவ்வாறு நினைவு கூறுகிறார் ”பொதுவாழ்விற்காக தன்வாழ்வின் பெரும்பகுதியை அர்ப்பணித்த ஒரு மென்மையான மனிதர். தனது கடைசிக்காலம் வரை தன்து சிந்தனையை நிறுத்தாது தொடர்ந்து வந்தவர். சகல ஜனநாயக போர்க்குரல்களிலும் ஆர்வ்த்தோடு உற்சாகமாய் கலந்து தனது பங்களிப்பை வழங்கி வந்தவர். பெறுமதி மிக்க ஒரு மனிதரின் இழப்பு கவலையைத் தருகிறது.”

தோழர் பராவின் மறைவைத் தொடர்ந்து தேசம்நெற்றில் பதிவு செய்யப்பட்ட ஆக்கங்களும் அஞ்சலிகளும் விமர்சனங்களும்:

தோழர் பரா என்ற சிந்தனையானுக்கு எங்கள் இறுதி மரியாதை! :சர்வதேச பிராந்தியங்களின் ஒன்றியம்

இரயாகரன் – அவரது புனைவுகளும் அவர் கட்டமைக்கும் விம்பமும் :த ஜெயபாலன்

ஓரு தலித்திற்கு வாழ்வு கொடுத்த ஆதிக்க சாதியின் உண்மைக்கதை :ஜீவமுரளி

வழமையான? அங்கீகரித்தல்? பெண் கொடுத்தல்? தாமதமாகச் சில குறிப்புகள் :சந்துஸ்

இலக்கிய சந்திப்பு – சில கிறுக்கல்கள் : துடைப்பான்

சுதந்திர சிந்தனையாளர்களை உள்ளடக்கிய சர்வதேச செயலூக்க அரங்கமொன்றை அமைப்பதற்கான சாத்தியப்பாட்டை நோக்கி : அசோக்

‘A RACIST WAR IN SRILANKA’ Arundhati Roy – வன்னி மக்களுக்காக ஒலிக்கும் சர்வதேசக் குரல்கள் : த சோதிலிங்கம்

Arundhati_RoyCWI_21Mar09_Audienceஇலங்கையில் தமிழ் மக்கள் மீது நடாத்தப்படும் இனப்படுகொலைகளுக்கு எதிரான சர்வதேச அளவிலான பிரச்சாரம் ஒன்றை for Workers International – CWI ஆரம்பித்துள்ளனர். இதன் ஆரம்பக் கூட்டம் இந்தியாவில் தமிழ் நாட்டில் இடம்பெற்றது தேசம்நெற் வாசகர்கள் அறிந்ததே. ஜக்கிய சோசலிசக் கட்சியின் செயலாளரும் சிறீலங்கா மொனிற்றரிங் குறுப் தலைவரமான சிறீதுங்கா ஜெயசூரியா தலைமையில் இடம்பெற்ற இம்மாநாட்டின் தொடர்ச்சியாகவே மார்ச் 21 லண்டன் சந்திப்பு கொன்வே மண்டபத்தில் இடம்பெற்றது. தி சோசலிஸ்ற் பத்திரிகையின் ஆசிரயர் குழு உறுப்பினரான சாராவின் தலைமையில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

இங்கிலாந்தின் வேறுவேறு பகுதிகளைச் சேர்ந்த CWI ன் பிரதிநிதிகள் போராட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அமைப்புக்களின் பிரிதிநிதிகள் மாணவர் அமைப்பு பிரிதிநிதிகள் கலந்துகொண்டனர். இச்சந்திப்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சமூகங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டமை இதற்கு ஒரு சர்வதேச பரிமாணத்தை ஏற்படுத்தி இருந்தது. விரல்விட்டு எண்ணக் கூடிய சிலரைத்தவிர ஏனையவர்கள் தமிழரல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழரல்லாதவர்களால் வன்னி மக்களுக்காக முன்னெடுக்கப்படுகின்ற குறிப்பான போராட்டமாக இது அமைந்துள்ளது.

Sera_21Mar09சாரா தனது தலைமை உரையில் ‘நாம் ஏன் கூடி இருக்கிறோம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இலங்கை என்றதும் தமிழ் மக்கள் கேடயமாக்கப்பட்டு கொல்லப்படும் சம்பவம் எல்லோருக்கும் அறியப்பட்ட விடயமாகி விட்டது. மனிதக் கேடயங்களாக்கப்பட்டு உள்ள 200,000 மக்களை மனிதாபமற்ற முறையில் இலங்கை அரசு குண்டுகள் போட்டு அழித்துக் கொண்டிருக்கிறது.’ என்று தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் பேசுகையில் ‘உடனடியாக யுத்தத்தை நிறுத்தும் படியும், ஜனநாகத்தை அமுல்படுத்தும் படியும் கோரியும் பிரச்சாரங்களை உலகளாவிய ரீதியில் நடாத்த இன்று இந்த கூட்டத்தை கூடியுள்ளோம். நாமும் தமிழ் மக்களுடன் சேர்ந்து இயங்கவும் அவர்கள் நடாத்தும் பல ஊர்வலங்கள், கூட்டங்களுக்கு ஆதரவளிக்கவும் ஒத்துழைக்கவும் இந்த யுத்தத்திற்கு எதிராக பிரச்சாரத்தை மேற்கொள்ளவும் ஆரம்பித்துள்ளோம். இந்த பிரச்சாரத்தை ஒரு சர்வதேச பிரச்சாரமாக உருமாற்றி செயற்ப்படுத்தவே இங்கு கூடியுள்ளோம்.’ என்று சந்திப்பின் நோக்கத்தை விளக்கினார்.

சாராவின் தலைமை உரையை அடுத்து போராட்டத்தின் சர்வதேச இணைப்பாளராகத் தெரிவு செய்யப்பட்ட சேனன் இலங்கையின் இன்றைய நிலவரம் தொடர்பாக உரையாற்றினார். (இவ்வுரையின் சாரம்சம் : தமிழர்கள் தமிழர்களுக்காக போராடுவதன் மூலமே தமிழர்களை அழிவினின்றும் பாதுகாக்க முடியும். : சேனன்) அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். அவற்றில் சில ….

இலங்கை அரசு புலிகளை அழிப்பதன் மூலம் எல்லாவிதமான போராட்டங்களையும் முடிவுக்கு கொண்டு வரலாம் என்றும் இதன் பின்னர் தமிழ் மக்களுக்கு எந்தவித தீர்வையும் முன்வைக்கத் தேவையில்லை என்ற நிலைக்கு வரலாம் என்றுமே கருதி இந்த போரில் மிகுந்த அக்கறை காட்டுவதாயும் இந்த அரசுக்கு தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கொடுப்பதில் அக்கறையில்லை என்றே தெரிகிறது.

இந்திய வலதுசாரி ஆளும் வர்க்கமும் இலங்கை வலதுசாரி ஆளும் வர்க்கமும் கூட்டுச் சேர்ந்து தமது நலன்களைப் பேணுவதிலேயே அக்கறையுடன் இருக்கிறார்கள். மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளை மறைக்கவும் போரைப் பயன்படுத்துகின்றனர். தமது வர்க்கநலனை பேணவே அரசுகள் முயல்கிறது. அதனால் இந்த முதலாளித்துவ அரசுகளிடம் இருந்து தீர்வுகளை எதிர்பார்க்க முடியாது.

லண்டனில் வாழும் தமிழர்களில் அரைவாசிக்கு மேல் தெருக்களில் இறங்கி போராடிய போதும் தொழிற் சங்கங்கள்  இதில் அக்கறை காட்டாமல் இருப்பது மிகவும் கடினமானதாக இருப்பதாயும் லண்டன் தமிழர்கள் தொழில்ச்சங்கங்களுடன் இணைந்து செயலாற்ற ஆரம்பிக்க வேண்டும்.

விடுதலைப் புலிகள் அமைப்பு தமது மக்கள் மத்தியில் எப்படி ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்துகிறது என்பதில் கவனம் எடுக்க வேண்டும். ஜேவிபியினர் சிங்கள சோசலிஸ்ட்டுக்கள் தம்மை மாக்சிஸ்ட்டுக்கள் என்று சொல்லபவர்கள். இந்த போரை தவறாக பார்ப்பதும் இந்த இனப்படுகொலையை கண்டும் காணாமல் இருப்பதும் கண்டிக்கப்பட வேண்டும்.
தமிழ் பூர்ஜுவாக்களால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டம் வெற்றியடைவது மிக கடினமானது. சிங்கள தமிழ் தொழிலாளர்கள், சோசலிஸ்ட்டுக்கள் ஒன்றுபட்டு இந்த தமிழ் மக்களுக்கான உரிமைகள் வென்றெடுக்கப் போராடுவதே ஒரே வழி.

தமிழ் மக்களுக்கான தீர்வு சுயநிர்ணய உரிமையே. இது தான் சோசலிஸ்ட்டுக்ளால் முன்வைக்கப்படும் தீர்வு. தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக ஜக்கிய சோசலிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கிறது. ஆனால் இப்போதுள்ளது மனிதாபிமானப் பிரச்சினை இது. உடனடியாக போராட்டம் நடாத்தப்பட்டு முடிவு கட்டப்பட வேண்டும்.

இப்போதுள்ள தேவை யுத்தம் நிறுத்தப்பட்டு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுதலே முக்கியமானது.

அரசியல் உரிமை அந்த மக்களுக்கு உண்டு. வெளிநாடுகளில் உள்ளவர்கள் தமிழீழம் தனிநாடு என்றெல்லாம் சொல்லலாம் ஆனால் அந்த மக்கள் அந்தப் பிரதேசத்தில் தமது அரசியலைத் தீர்மானிக்க வேண்டும். அப்படி அவர்கள் தீர்மானிக்கக்க கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். அதற்காகவும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமிழர் உரிமைப் போராட்டத்தில் சிங்கள மக்கள் தொழிலாளர் சங்கங்கள் பலர் குரல் கொடுக்கிறார்கள். ஆனால் வட – கிழக்கு மக்களுக்கு தொழிலாளர் சங்கங்களைத் தெரியாது. இப்படியான சங்கங்களை எல்ரிரிஈ இல்லாது ஒழித்து விட்டனர்.

மக்களை சாதாரண வாழ் நிலைக்கு கொண்டுவருவதன் மூலமே தொடர்ந்து இம்மக்கள் தமது உரிமைக்கான போராட்டத்தை தொடரரும் தன்மையை வளர்க்கலாம்.

அந்த யுத்த பிராந்தியத்திலுள்ள 2000 புலிகளைக் காப்பாற்றி என்றாலும் 200000 மக்களையும் காப்பாற்றியாக வேண்டும்.

இவ்வாறு பல்வேறு கருத்துக்கள் அங்கு பரிமாறிக் கொள்ளப்பட்டது. நிகழ்வின் இறுதியாக இப்போராட்டங்களை லண்டனில் முன்னெடுப்பதற்கான தெரிவுக்குழுவொன்று உருவாக்கப்பட்டது. மலேசியா, கிறீக், பாக்கிஸ்தான், சிங்கப்பூர் மற்றும் ஜரோப்பிய நாடுகளிலும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. இப்போராட்ட நிகழ்வுகளுக்கூடாக மாணவர் அமைப்புக்கள், தொழிலாளர் அமைப்புக்கள் தொடர்புபடுத்தப்படும் என்றும் அங்கு உறுதியாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் போராட்டங்களை பலவீனப்படுத்த இந்தியா தொடர்ந்தும் முயன்று கொண்டிருப்பதாயும் இந்திய அரசு மட்டுமல்ல இந்திய நிறுவனங்ககள் சிலவும் இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகளுக்கு துணை நிற்பதாலும் ஏப்பிரல் 8ம் திகதி போராட்டம் இந்திய தூதரகங்களுக்கு முன்பாகவும் இந்திய நிறுவனங்களுக்கு முன்பாகவும் நடத்தப்பட இருப்பதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.

ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஏற்பாடு செய்யப்பட்ட உள்ள போராட்டங்களில் பின்வரும் கோரிக்கைகளை முன் வைப்பது என்றும் அச்சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டது.

1 உடனடியாக யுத்தத்தை நிறுத்து : இராணுவ அடக்குமுறையை உடனடியாக நிறுத்தித் தமிழ் மக்கள் வாழும் இடங்களில் இருந்து இராணுவத்தைத் திரும்பப்பெறு. மக்கள் கடத்தப்பட்டுக் காணாமற் போய்க் கொண்டிருப்பதை நிறுத்து.

2 தடுப்பு முகாம்களை மூடு : தேர்வு செய்யப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் மூலம் மக்களின் அடிப்படை வாழ்வாதார உரிமைகளான உணவு, தங்கும் வசதி, மருத்துவத் தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்.

3 போர் வெறி பிடித்த இராஜபக்ச அரசுக்கு ஒரு சதமோ ஒரு துப்பாக்கி குண்டோ வழங்காதே :
இந்தியா, சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல், ஈரான், யப்பான், மற்றும் இதர நாடுகள் இலங்கை அரசுக்கு வர்த்தக, இராணுவ உதவிகள் வழங்குவதை உடனடியாக நிறுத்து. இந்நாடுகளின் இராணுவப் பங்களிப்புக்கு எதிராக அந்நாட்டுத் தொழிலாளர்கள் அணிதிரள்வதை ஆதரிப்போம்.

4 அனைவருக்குமான ஜனநாயக உரிமைகளை உத்தரவாதப்படுத்து : பேச்சுரிமை, ஊடக உரிமை,சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களினதும் தொழிற்சங்க உரிமை, இனம் மதம் சாதி பால் வேறுபாடின்றி அனைவரது உரிமைகளையும் சமமாக மதிக்கும் கட்சிகள் சுதந்திரமாக இயங்க தேர்தலில் பங்குபற்றும் உரிமை, முதலான அனைத்து ஜனநாயக உரிமைகளையும் உத்தரவாதப்படுத்து.
 
5 ஒன்றுபட்ட தொழிற்சங்கங்களை உருவாக்குவதற்கான ஆதரவைத் திரட்டுவோம் : கூட்டமைக்கும் அல்லது அணிதிரள்வதற்கான உரிமையை வழங்கு. கொலை மற்றும் காணாமற் போகின்றவர்கள் பற்றிக் கண்காணிக்கும் ‘மக்கள் கண்காணிப்பு குழு’ போன்ற அமைப்புகள் சுதந்திரமாக பணியாற்றும் உரிமையை வழங்கு.

6 சுயநிர்ணய உரிமையை உத்தரவாதப்படுத்து : (நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நியாயமான மக்கள் பிரதிநிதிகளின் கண்காணிப்பில் வாக்கெடுப்பு மூலமோ அல்லது ஒரு சட்ட நிர்ணய சபையை உருவாக்குவதன் மூலமோ அல்லது வேறேதாவது முறையிலோ சுயநிர்ணய உரிமையைப் பாதுகாப்பதற்கான வழியேற்படுத்து.) வறிய மக்கள், தொழிலாளர்கள் ஒன்றுபடுதலின் அடிப்படையில் மக்கள் தம் எதிர்காலத்தைச் சுயமாக நிர்ணயிப்பதற்கான ஆதரவைத் திரட்டுவோம்.

._._._._._.

இப்போராட்ட முன்னெடுப்புகளின் தொடர்ச்சியாக சென்னை லொயோலா கல்லூரியில் மார்ச் 30ல் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் மனிதஉரிமைவாதியும் முன்னணி எழுத்தாளருமான அருந்ததி ராய் உரையாற்றுவதாக இருந்தது. ஆயினும் துரதிஸ்டவசமாக அவர் சமூகமளிக்கவில்லை. ஆயினும் வன்னி மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக வன்மையான தனது கண்டனத்தை அவர் எழுத்தில் வழங்கி இருந்தார். அதனை கீழே காணலாம்.

இக்கூட்டத்தில் இலங்கை ஐக்கிய சோசலிசக் கட்சித் தலைவர் சிறிதுங்க ஜெயசூரிய டெல்லி ஊடகவியலாளர் சத்திய சிவராம் தமிழீழ விடுதலைக் கூட்டமைப்பின் இணைப்பாளர் பவநீதன் ஈழத் தமிழ் மாணவர் போராட்டக் குழு சுதா காந்தி ஆகியொர் உரையாற்றுவதாக இருந்தது.

அருந்ததி ராய் வழங்கிய கண்டனக் கட்டுரை:

A RACIST WAR IN SRILANKA

Arundhati_RoyThe horror that is unfolding in Sri Lanka becomes possible because of the silence that surrounds it. There is almost no reporting in the mainstream Indian media—or indeed in the international press—about what is happening there. Why this should be so is a matter of serious concern.

From the little information that is filtering through it looks as though the Sri Lankan Government is using the propaganda of ‘the war on terror’ as a fig leaf to dismantle any semblance of democracy in the country, and commit unspeakable crimes against the Tamil people. Working on the principle that every Tamil is a terrorist unless he or she can prove otherwise, civilian areas, hospitals and shelters are being bombed and turned into a war zone. Reliable estimates put the number of civilians trapped at over 200,000. The Sri Lankan Army is advancing, armed with tanks and aircraft.

Meanwhile, there are official reports that several “welfare villages” have been established to house displaced Tamils in Vavuniya and Mannar districts. According to a report in The Daily Telegraph (14 Feb 2009), these villages “will be compulsory holding centres for all civilians fleeing the fighting”. Is this a euphemism for concentration camps? The former foreign minister of Sri Lanka, Mangala Samaraveera, told The Daily Telegraph: “A few months ago the government started registering all Tamils in Colombo on the grounds that they could be a security threat, but this could be exploited for other purposes like the Nazis in the 1930s. They’re basically going to label the whole civilian Tamil population as potential terrorists.”

Given its stated objective of “wiping out” the LTTE, this malevolent collapse of civilians and “terrorists” does seem to signal that the Government of Sri Lanka is on the verge of committing what could end up being genocide. According to a UN estimate several thousand people have already been killed. Thousands more are critically wounded. The few eyewitness reports that have come out are descriptions of a nightmare from hell. What we are witnessing, or should we say, what is happening in Sri Lanka and is being so effectively hidden from public scrutiny, is a brazen, openly racist war. The impunity with which the Sri Lankan government is being able to commit these crimes actually unveils the deeply ingrained racist prejudice, which is precisely what led to the marginalization and alienation of the Tamils of Sri Lanka in the first place. That racism has a long history, of social ostracisation, economic blockades, pogroms and torture. The brutal nature of the decades long civil war, which started as a peaceful, non-violent protest, has its roots in this.

Why the silence? In another interview Mangala Samaraveera says, “A free media is virtually non-existent in Sri Lanka today.” He goes on to talk about death squads and ‘white van abductions’, which have made society “freeze with fear”. Voices of dissent, including those of several journalists, have been abducted and assassinated. The International Federation of Journalists accuses the Government of Sri Lanka of using a combination of anti-terrorism laws, disappearances and assassinations to silence journalists.

There are disturbing but unconfirmed reports that the Indian government is lending material and logistical support to the Sri Lankan government in these crimes against humanity. If this is true, it is outrageous. What of the governments of other countries? Pakistan? China? What are they doing to help, or harm the situation?

In Tamil Nadu the war in Sri Lanka has fueled passions that have led to more than ten people immolating themselves. The public anger and anguish, much of it genuine, some of it obviously cynical political manipulation, has become an election issue.

It is extraordinary that this concern has not traveled to the rest of India. Why is there silence here? There are no ‘white van abductions’—at least not on this issue. Given the scale of what is happening in Sri Lanka, the silence is inexcusable. More so because of the Indian Government’s long history of irresponsible dabbling in the conflict, first taking one side and then the other. Several of us including myself, who should have spoken out much earlier, have not done so, simply because of a lack of information about the war.

So while the killing continues, while tens of thousands of people are being barricaded into concentration camps, while more than two hundred thousand face starvation, and a genocide waits to happen, there is dead silence from this great country.

It’s a colossal humanitarian tragedy. The world must step in. Now. Before it’s too late.

Arundhati Roy
29th March 2009

புலத்து தமிழ் மக்களின் இஸ்ரேலியக் கனவு ‘வணங்கா மண்’ : த ஜெயபாலன்

Exodus_1947Exodus 1947 :

1947 யூலை 11 அன்று ஒரு கப்பல் பிரான்ஸ் Port of Sète துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. இதில் பயணித்தவர்கள் ஹிட்லரின் வதைமுகாம்களில் இருந்து தப்பிய யூத மக்கள். வயோதிபர்கள், பெண்கள், குழந்தைகள், பெற்றோரை இழந்த குழந்தைகள் என 4515 பேர் தங்களுக்கான தாயகத்தை உருவாக்கப் போகிறோம் என்ற கனவுடன் தங்கள் பயணத்தை ஆரம்பித்தனர்.

1928ல் சேவைக்கு விடப்பட்ட இக்கப்பல் “President Warfield” மக்கள் போக்குவரத்திலும் படையெடுப்பிலும் பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் உலக மாகா யுத்தத்தின் பின் இக்கப்பல் Potomac Shipwrecking Co என்ற நிறுவனத்திற்கு பழைய இருப்புக்கு பேரிச்சம் பழம் என்பது போல் விற்கப்பட்டது. ஆனால் இந்தக் கப்பலை வாங்கிய Potomac Shipwrecking Co இடம்இருந்து அதனுடன் தொடர்புடைய Hagana என்ற யூத அரசியல் அமைப்பினூடாக இறுதியில் பலஸ்தீனத்தில் தலைமறைவாக செயற்படும் இரகசிய இயக்கமான Hamossad Le’aliyah Bet இன் கைகளில் சென்றடைந்தது.

Hagana அமைப்பு இந்தக் கப்பலை தங்களுக்கு என்று ஒரு தாயகத்தை உருவாக்கும் பணியில் ஈடுபடுத்தியது. அன்று பிரித்தானிய காலனி ஆதிக்கத்தில் இருந்த பாலஸ்தீனத்தில் தங்களுக்கு என்று ஒரு தாயகத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இறங்க இக்கப்பல் தயாரானது. பைபில் காலத்தில் குறிப்பிடப்படும் எகிப்தில் இருந்து கன்னான் க்கு இடம்பெற்ற இடம்பெயர்வைக் குறிக்கும் வகையில் Exodus 1947 இக்கப்பலுக்கு எனப் பெயரிடப்பட்டது.

1947 யூலை 11 அன்று பிரான்ஸ் Port of Sète துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட Exodus 1947 ஒரு வாரத்தில் யூலை 18 அன்று பாலஸ்தீனக் கடற்பரப்பை அடைவதற்கு முன்னரேயே பிரித்தானிய கடற்படை போர்க்கப்பல்கள் Exodus 1947யை சுற்றி வளைத்தன. இதில் நடந்த கலகத்தில் Exodus 1947 இன் செலுத்திகளில் ஒருவரும் யூதப் பயணிகள் இருவரும் கொல்லப்பட்டனர் பலருக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டது. அதன் பின் பிரித்தானிய கடற்படையினர் கப்பலை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தனர்.

இந்த கப்பல் பயணிகளின் பயணம் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தது. ஹிட்லரின் வதைமுகாம்களில் இருந்து தப்பியவர்களின் நாடு தேடும் பயணம் என்ற வகையில் அதற்கு அதீத முக்கியத்துவம் இருந்தது. இருந்தாலும் சட்ட விரோதமானவர்கள் என்ற அடிப்படையில் அவர்களைத் திருப்பி வந்த இடத்திற்கே அனுப்புவது என்று பிரித்தானிய காலனியாளர்களால் முடிவெடுக்கப்பட்டது. தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த Exodus 1947 யை பாலஸ்தீனத்தின் ஹய்பா துறைமுகத்திற்கு கொண்டு சென்று பயணிகளை வேறு மூன்று திருப்பி அனுப்புவதற்கு தயாரான Runnymede Park, Ocean Vigour, Empire Rival கப்பல்களில் ஏற்றி வந்த இடத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டனர். கப்பல்களில் பிரித்தானிய கடற்படையினரும் பயணம் செய்தனர்.

திருப்பி அனுப்பப்ட்ட கப்பல்கள் பிரான்ஸின் Port-de-Bouc துறைமுகத்தை அடைந்தது. ஆனால் தாயகம் அமைக்கும் கனவுடன் சென்ற பயணிகள் பிரான்ஸில் தரையிறங்க மறுத்தனர். அவர்களைப் பலவந்தமாக தரையிறக்குவதற்கு ஒத்துழைக்க பிரான்ஸ் மறுத்துவிட்டது. அதனால் பிரித்தானிய அரசு தனது கட்டுப்பாட்டு பகுதிக்கு கப்பலைக் கொண்டு வந்து பயணிகளைத் தரையிறக்க முற்பட்டது. அதற்கு ஜேர்மனியே அவர்களுக்கு அருகில் அமைந்திருந்தது.

ஏற்கனவே சர்வதேச கவனத்தை ஈர்த்திருந்த இந்த கப்பல் பயணம், ஹிட்லரின் வதைமுகாம்களில் கொடுமைப்படுத்தப்பட்ட அதே மக்களை ஜேர்மனியிலேயே கொண்டு சென்று தரையிறக்க முற்படுவது எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது விளக்க வேண்டிய அவசியம் அற்றது. அவர்களை கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்தி முட்கம்பி முகாம்களில் அடைக்கவும் பிரித்தானிய அரசு முடிவு எடுத்தது. ஜேர்மனியின் ஹம்பேக் துறைமுகத்தில் பயணிகள் தரையிறக்கப்பட்டனர். பெண்கள் குழந்தைகள் நீண்ட அலைச்சலில் சோர்வடைந்து போராட வலுவற்று தரையிறங்கினர். ஆண்கள் போராடினாலும் இறுதியில் பலவந்தமாகத் தரையிறக்கப்பட்டனர்.

திருப்பி அனுப்பப்பட்ட கப்பலில் பிரித்தானிய படைகள் மோசமாக நடந்துகொண்டதாக விபரிக்கப்பட்டது. ஒரு உதைபந்தாட்ட மைதானத்தில் விளையாடுவது போல் பிரித்தானிய படைகள் நடந்துகொண்டதாக உலக யூத கொங்கிரஸ் செயலாளர் Dr Noah Barou பதிவு செய்கிறார். கப்பலில் கொண்டு வரப்பட்டவர்கள் நாசி வதைமுகாம்களில் இருந்து தப்பியவர்கள் என்ற கரிசனை கூட இன்றி தாக்கப்பட்டதாக அப்பதிவு தெரிவிக்கிறது. கப்பலில் இருந்த யூத மக்கள் பிரித்தானிய படையினரை ‘Hitler commandos’, ‘gentleman fascists’, ‘sadists’ என்றெல்லாம் வர்ணித்து உள்ளனர்.

இந்த Exodus 1947 கப்பல் அகதிகள் பிரித்தானியாவை சர்வதேச அளவில் அம்பலப்படுத்தியது. குறிப்பாக நாசி வதைமுகாம்களில் இருந்து தப்பியவர்களை ஜேர்மனியிலேயே தரையிறக்கி தடுத்து வைத்தது பிரித்தானிய அரசுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அபகீர்த்தியானது. அந்த வகையில் Exodus 1947 ன் தாயகத்தை அமைக்கும் கனவு உடனடியாக நிறைவேறாது போனாலும் சர்வதேச கவனத்தை யூத மக்களின் மீது திருப்பியதுடன் சர்வதேசத்தின் ஆதரவை தமக்காகத் திருப்பியதிலும் வெற்றிகண்டது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள யூத மக்களின் போராட்டங்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பிரித்தானிய அரசு தனக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அவமானத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள யூத மக்கள் மீது அனுதாபம்கொள்ள ஆரம்பித்தது.

இறுதியில் 1948ல் பிரித்தானிய அரசு இஸ்ரேல் அரசை அங்கீகரித்தது. இஸ்ரேல் அரசு அங்கீகரிக்கப்பட்டதற்கு அப்போது இருந்த புவியியல் அரசியல் காரணங்களின் தாக்கம் மிக முக்கியமானது. குறிப்பாக இரண்டாம் உலகப்போரின் முடிவைத் தொடர்ந்து உருவான பனிப்போர் மத்திய கிழக்கில் மையங் கொண்டிருந்தமை முக்கிய அம்சமாகும்.

1948 ஏப்ரலில் ஜேர்மனியில் இருந்த இரு முகாம்களிலும் Exodus 1947 கப்பலில் பயணித்த 1800 அகதிகள் மட்டுமே இருந்தனர். ஏனையோர் பாலஸ்தீனத்துக்கு செல்ல முயல்கையில் கைதாகி காலவரையறையின்றி பிரித்தானிய ஆதிக்கத்தில் இருந்த சைப்பிரஸ்ஸில் தடுத்து வைக்கப்பட்டனர். இஸ்ரேலிய அரசு அங்கிகரிக்கபட்ட பின்னர் இவர்கள் தங்கள் தாயகபூமியாகக் கருதும் இஸ்ரேலைச் சென்றடைந்தனர்.

இவர்கள் பயணம் செய்த கப்பல் Exodus 1947, 1952ல் கடல் மட்டத்திற்கு எரிக்கப்பட்டு ஹய்பா கடற்கரையில் நிறுத்தப்பட்டது. 1963ல் இத்தாலிய நிறுவனத்தினால் பிரித்து மேயப்பட்டது.

Vanni_Mission வணங்கா மண் 2009 :

._._._._._.

“வணங்கா மண்”:  உலகமே கை விட்ட பின் எம் உறவுகளின் உயிர் காப்பதற்க்கான தாயகம் நோக்கிய பயணம்.

பிரித்தானிய வாழ் புலம் பெயர்ந்த உறவுகளால் ஈழத்து உறவுகளுக்கான உணவு மற்றும் உயிர்க்காப்பு மருந்துக்களுடன் தாயகம் நோக்கிய பயணத்திற்கு அனைவரும் ஒன்றிணையுமாறு “வணங்கா மண்” ஒருங்கிணைப்பு குழு கேட்டுக்கொள்கிறது.

தற்போதைய யுத்த நடவடிக்கையில் என்றுமில்லாதவாறு உணவு ஆயுதமாக பாவிக்கப்படுகின்றது. இதற்கு ஜநா முதல் உலகநாடுகள் அனைத்துமே எம்மக்களை தீண்டத்தகாதவர்களாக பார்க்கிறது. இந்நிலையில் எம் உறவுகளுக்காக பிரித்தானிய தமிழர்களால் “வணங்கா மண்” நடவடிக்கை இன்று முதல் பிரித்தானியாவில் பல்வேறு இடங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் குண்டுமழையில் சாவுக்குள் வாழ்வாய் வாழும் மக்களை பட்டியால் சாவு கொள்ள விடுவோமா? வேதனைகள் சோதனைகளை கடந்து வந்து புலம் பெயர்ந்து வாழும் நாம் எம்மினம் அழிய விடுவோமா? அரசுகள் கைவிட்டால் என்ன? மனிதநேயம் கொண்ட மக்களிடம் எடுத்து செல்லுங்கள் எம்துயரை, பெற்றுக்கொள்வோம் அவர்கள் ஆதரவை. காத்திடுவோம் எம் உறவுகளை என்று வேண்டிநிற்கிறது.

“வணங்கா மண்” ஒருங்கிணைப்பு குழு.

பிரித்தானியாவில் இருந்து ஒப்பரேஷன் “வணங்கா மண்” எனப்படும் கப்பல் அத்தியாவசிய பொருட்களையும் மருந்துவகை மற்றும் குழந்தைகளுக்கான பால்மா பொருட்களுடன் நேரடியாக முல்லைத்தீவு துறைமுகம் செல்லவிருக்கிறது.

இந்த நடவடிக்கைக்கு ஒப்பரேஷன் “வணங்கா மண்” என பெயரிடப்பட்டுள்ளது. சட்டச் சிக்கல்கள், கடல் வழிப்பயண அனுமதி, பயணிப்பவர்கள், மாலுமிகள் மற்றும் சர்வதேச அங்கிகாரத்துடனான பாதுகாப்பு என்பன பூர்த்தியாகியுள்ள நிலையில் இக்கப்பலில் கொண்டு செல்ல உலர் உணவுப் பொருட்களை ஏற்பாட்டாளர்கள் புலம் பெயர் பிரித்தானியர்களிடம் கோரி நிற்கின்றனர்.

நன்றி-பாரிஸ்தமிழ்.கொம்

._._._._._. 

Operation Vananga-Man  Vanni Mission என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பொருட்களை சேகரிப்பதில் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. மருந்துப் பொருட்கள் உலர் உணவுப் பொருட்கள் என்பன சேகரிக்கப்படுகின்றன. ஆனால் தற்போது பொருட்களாக இல்லாமல் பணமாக அன்பளிப்புச் செய்யுமாறு கேட்கப்படுவதாக தகவல்கள் எட்டுகிறது. இந்த நடவடிக்கைக்கு பிரித்தானிய பொதுஸ்தாபன ஆணையகத்தின் கீழ் பதிவு செய்யப்ட்ட Tamil Aid,  Tamils Health Organisation,  The Tamils Support Foundation,  Technical Association of Tamils ஆகிய அமைப்புகள் நிதி மற்றும் உதவிகளை வழங்குவதாகக் கூறப்பட்டு உள்ளது.

இந்த வணங்கா மண் நடவடிக்கையை எவ்வாறு அனைவருக்கும் அறியப்படுத்த முடியும் என பிரித்தானிய தமிழர் பேரவையின் சுரேன் சுரேந்திரன் மார்ச் 17ல் ஊடகவியலாளர் மேரி கொல்வினுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கேட்ட போது சர்வதேச ஊடகவியலாளர்களையும் இந்தக் கப்பலில் ஏற்றிக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

‘சட்டச் சிக்கல்கள், கடல் வழிப்பயண அனுமதி, பயணிப்பவர்கள், மாலுமிகள் மற்றும் சர்வதேச அங்கிகாரத்துடனான பாதுகாப்பு என்பன பூர்த்தியாகியுள்ளது’ என்று செய்திகள் கசியவிடப்பட்ட போதும் ‘வணங்கா மண்’ முல்லைத்தீவுத் தரையை தட்டும் என்பது ஒரு பகற்கனவாகவே உள்ளது.  நாம் அறிந்திராத நாடுகளின் கொடிகளுடன் எல்லாம் புலிகளின் கப்பல்கள் ஓடுகின்றன. அதனால் ஒரு கப்பலை அமர்த்தி பொருட்களை ஏற்றி பிரித்தானியத் துறைமுகம் ஒன்றில் இருந்து கப்பலை ‘வணங்கா மண்’ என்று பெயரிட்டு அனுப்புவது ஒன்றும் புலத்து புலி ஆதரவு அமைப்புகளுக்கு ஒரு விடயமே அல்ல. கப்பலில் இலங்கைக்கு பொருட்களை ஏற்றி இறக்கும் நிறுவனங்கள் இதனையே செய்கின்றன.

‘வணங்கா மண்’ இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைய அனுமதிக்கப்படுமா என்பதே இங்குள்ள முக்கிய கேள்வி. இலங்கை அரசும் பிரித்தானிய தூதரகமும் அவ்வாறான ஒரு கப்பலின் வரவு பற்றி தாங்கள் அறிந்திருக்கவில்லை எனத் தெரிவித்து உள்ளனர். மனிதாபிமான நோக்கத்துடன் அவ்வாறான ஒரு கப்பல் வருமாக இருந்தால் அது இலங்கைக் கடற்பரப்பினுள் அனுமதிக்கப்படுமா எனக் கேட்டபோது, இலங்கையின் கப்பல் போக்குவரத்து மற்றும் சுங்க விதிகள் கடைப்பிடிக்கப்பட்டு இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

‘வணங்கா மண்’ ஒரு பிரச்சார நடவடிக்கையாகவே அமைய உள்ளது. ‘வணங்கா மண்’ ஏற்பாட்டாளர்களுக்கு முல்லைத்தீவு கடற்பரப்பிற்குள் மட்டுமல்ல இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதற்கும் இலங்கை அரசின் அனுமதி அவசியம் என்பது தெரியும்.

1947ல் பிரான்ஸில் இருந்து பாலஸ்தீனத்திற்கு Exodus 1947 புறப்பட்டது போல் ஆங்கிலேயருக்கு பணியாது போரிட்ட பண்டார வன்னியன் வாழ்ந்த மண் – வன்னி மண் – வணங்கா மண் முல்லைத்தீவு நோக்கிப் பிரித்தானிய துறைமுகம் ஒன்றில் இருந்து புறப்படலாம். இலங்கைக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் அதனை இலங்கை கடற்படை வழிமறிக்கலாம். மனிதாபிமானக் கப்பல் வழிமறித்ததைத் தொடர்ந்து தமிழகத் தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் கொதித்தெழலாம். தீக்குளிக்கலாம். சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்க்கலாம். ஆனால் தமிழ் மக்களின் மேல் சர்வதேச அனுதாபத்தை அதனால் ஏற்படுத்த முடியுமா?

அன்றிருந்த சர்வதேச அரசியல் நிலவரம் பனிப்போர் இன்றில்லை. இது பயங்கரவாதத்திற்கு எதிரான அரசியல் ஆதிக்கம் பெற்றுள்ள காலம். மார்ச் 1ல் Tamils Against Genocide என்ற அமைப்பு அமெரிக்க சட்டவாதி புரூஸ் பெயின் என்பவரை அழைத்து லண்டனின் பல்வேறு பகுதிகளிலும் மரதன் ஓட்டத்தில் கருத்தரங்குகளை நடாத்தியது. அதில் ஒன்றில் நானும் கலந்து கொண்டிருந்தேன். ‘அமெரிக்காவில் உள்ள செனட்டர்களிடம் தமிழ் என்று சொன்னாலே அவர்கள் தமிழ் புலிகளையும் பெண் தற்கொலைக் குண்டுதாரிகளையும் தான் நினைக்கிறார்கள். அதனால் தமிழ் மக்களுடைய நியாயமான பிரச்சினையை அவர்களுக்கு புரிய வைப்பது கடினமானதாக இருக்கின்றது’ எனத் தெரிவித்தார். தமிழ் புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என்பதை முதலில் நிறுவ வேண்டி இருப்பதாகவும் அவர் கூறினார். இதுவே இன்றைய யதார்த்தம். அமெரிக்காவில் உள்ள சட்டத்தரணி தனது வாதத்தை வெல்வதற்கு தமிழ் மக்களும் தமிழ் புலிகளும் ஒன்றல்ல என்கிறார். இலங்கை அரசு புலிகளை அழிக்கிறது என்ற போர்வையில் தமிழ் மக்கள் மீது இன அழிப்பைக் கட்டவிழ்த்து விட்டு உள்ளது என்று சரியாகவே தனது வாதத்தை ஆங்கிலத்தில் வைக்கின்றார்.

ஆனால் இந்த அமைப்புகள் புலம்பெயர் மக்களுக்கு தமிழில் பேசும் போது தமிழ் மக்களையும் புலிகளையும் பிரிக்க முடியாது புலிகள் தான் தமிழ் மக்கள் தமிழ் மக்கள் தான் புலிகள் என்று சொல்லி முல்லைத்தீவு மக்களை மரணப்பொறிக்குள் நிறுத்தி வைத்துள்ளனர். அதுமட்டுமல்ல வாயும் வயிறும் கட்டப்பட்டு உள்ள மக்களுக்காக குரல்கொடுப்பதாகக் கூறிக்கொண்டு பூர்வீக மண்ணைவிட்டு – அந்த மரணப் பொறியைவிட்டு அவர்கள் வெளியெற மாட்டார்கள் என்று இவர்கள் குரல் எழுப்புகிறார்கள். ரொறன்ரோ லண்டன் சிட்னி என்று வீடும் வளவும் வாங்கி விட்டுவிட்டு முல்லைத்தீவை பூர்விக மண் என்று அந்த மக்களின் தலையில் கட்டிவிட்டு கதையளக்கிறார்கள் புலத் தமிழர்கள்.

‘வன்னி மாடுகளை (மக்களை) ஒரு கட்டு வைக்கோலுடன் சமாளிப்பேன்’ என்றவர் ‘அடங்காத் தமிழன் வன்னியசிங்கம்.’ இங்கு புலத் தமிழன் ‘வணங்கா மண்’ கப்பல் அனுப்புகிறான் வன்னி மக்களுக்கு. வன்னி மக்கள் எல்லாத்துக்கும் தலையைத் தலையை ஆட்டுவார்கள் என்ற நினைப்பில் ‘வணங்கா மண்’ என்று றீல் விடுகிறார்கள்.

இலங்கை அரசு பேரினவாத அரசு என்பதை மட்டும் சரியாகவே இனம்காட்டி தமது தலைமைகளைத் தக்க வைத்துக் கொள்வதைத் தவிர தமிழ் அரசியல் தலைமைகளால் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வெற்றிகொள்ள முடியவில்லை. அதற்கு தந்தை செல்வா முதல் அண்ணன் அமிர்தலிங்கம் உட்பட தம்பி பிரபாகரன் வரை யாரும் விதிவிலக்கல்ல. முன்னையவர்கள் இருவரும் மிதவாத அரசியல் தலைவர்கள். அவர்களின் பார்வை தமிழ் வாக்கு வங்கியின் மீதே இருந்தது. அதனால் அவர்களுக்கு ஓரளவு தமிழ் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும் இருந்தது. பின்னையவருக்கு அந்தக் கவலையும் இல்லை. ஏகபிரதிநிதி. தனிக்காட்டு ராஜா.
 
தமிழ் மக்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக இழக்கப்பட தியாகிகளும் துரோகிகளும் என்று கொல்லப்பட்டவர்களின் பட்டியல் எகிறிக்கொண்டே சென்றது. துரோகிகளின் வரைவிலக்கணங்கள் காலத்திற்குக் காலம் மாற்றப்பட்டு இன்று தங்கள் உயிரைக்காக்க மரணத்தின் விளிம்பில் இருந்து தப்பிக்க ஓடுபவர்களும் துரோகியாகி விட்டார்கள். ரொறன்ரோவிலும் லண்டனிலும் பாரிஸிலும் இருந்து கொண்டு தமிழ் மக்களின் பூர்வீக பூமி பற்றி விசேட கருத்தரங்குகள். மரணத்தின் விளிம்பில் நின்றாலும் பரவாயில்லை பூர்வீக மண்ணை பாதுகாப்பதற்காக இறுதிவரை போராட வேண்டுமாம். அதற்காக தாங்கள் ஐரோப்பாவில் இருந்து உணவும் மருந்தும் வணங்கா மண்ணில் முல்லைத் தீவுத் துறைமுகத்திற்கு வந்து சேருமாம்.

இலங்கை அரசுகளுடைய பேரினவாதப் போக்கும் தமிழ் தலைமைகளின் குறுந்தேசியவாதப் போக்கும் அரசியல் வறுமையும் தமிழ் மக்களை இன்று மிக மோசமான போர்ச் சூழலில் நிறுத்தி உள்ளது. மீளவும் தங்கள் தலைமையை நிறுவ புலிகள் தங்களிடம் உள்ள அனைத்து துருப்புச் சீட்டக்களையும் பயன்படுத்துகின்றனர். அதில் ஒன்று வன்னி மக்களின் உயிரிழப்புகளால் ஏற்படக் கூடிய மனித அவலம் என்பதும் வெளிப்படையாகி விட்டது. ஒரு பக்கம் இனவாத அரசு. மறுபக்கம் அதற்கு பலிகொடுக்கத் தயாராக நிற்கும் புலிகள். இரண்டுக்குமிடையே வன்னி மக்கள்.
 
‘நான் 25 வருடமாக யுத்தத்தை எதிர்த்து வருபவன். இன்று முல்லைத்தீவில் 1 1/2 முதல் 2 1/2 இலட்சம் வரையான மக்கள் நெருக்கடியான நிலைக்குள் அகப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது மனிதநேய நெருக்கடியிலிருந்து அழிவை நோக்கி நாம் செல்கின்றோம். இது போன்ற நிகழ்வு முன்னர் இங்கு இடம்பெற்றதில்லை. இது தொடர்பில் இருதரப்பும் ஒரு முடிவுக்கு வராவிட்டால் 30 ஆயிரம் மக்கள் மடியலாம். இதனை எந்தவொரு நவீன சமூகமும் ஏற்காது. எனவே நாம் என்ன செய்யவேண்டும் என்று சிந்திக்க வேண்டிய நிலையிலுள்ளோம்.’

கலாநிதி குமார் ரூபசிங்க

இன்று எல்லோர் முன்னும் உள்ள மிகப்பெரிய பொறுப்பு ஏற்படப் போகின்ற மனித அவலத்தை தடுத்து நிறுத்தவது. தாகத்திற்கு தண்ணி தாருங்கள் என்று மக்கள் உயிருக்கு தவிக்கிறார்கள். ஆறாயிரம் மைலுக்கு அப்பால் இருந்துகொண்டு ‘வணங்கா மண்’ணில் தண்ணி அனுப்புவம் என்று றீல் விடுவதை விட்டுவிட்டு அங்குள்ள அவலத்தை தடுக்க யதார்த்த்தமான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மரணத்தின் விளிம்பில் வன்னி மக்கள் நிற்க, லண்டனில் ….. : த ஜெயபாலன்

Marie_CalvinMarie_CalvinMarie_Colvin_Before1._._._._._.

வன்னி மக்கள் மீது இலங்கை இராணுவம் மேற்கொள்ளும் பாரபட்சமற்ற தாக்குதல்கள் பற்றி விருதுகள் பெற்ற யுத்தச் செய்தியாளர் மேரி கொல்வின் வெஸ்ற்மினிஸ்ரர் பாராளுமன்றக் கட்டிடத்தில் பார்வையாளர்களுக்கு விளக்கியது மட்டுமல்ல பிரித்தானியாவின் தேசிய நாளிதலான சண்டே ரைம்ஸ் பத்திரிகையிலும் விரிவாகவே எழுதி உள்ளார். இலங்கை இராணுவத்தின் பிடியில் தமிழர்கள் எதிர்நோக்கக் கூடிய இன்னல்கள் பற்றி அவர் யாரிடமும் கேட்டு அறிய வேண்டிய தேவை இருக்கவில்லை. 2001ல் வன்னிப் பகுதிக்குள் சென்று திரும்பியவர் இராணுவத்தின் பிடியில் ஏற்பட்ட சொந்த அனுபவமே தமிழர்களின் நிலையை விளக்க போதுமானதாக இருந்தது.’The Forgotten Conflict in Sri lanka’ என்ற தலைப்பில் மார்ச் 17 நடைபெற்ற விசேட கருத்தரங்கில் மேரி கொல்வின் வன்னி மக்களின் அவல நிலைபற்றி எடுத்துக் கூறினார். அமெரிக்க ஊடகவியலாளரான மேரி கொல்வின் பிரித்தானிய தேசிய நாளிதலான ரைம்ஸ் பத்திரிகையில் பணிபுரிகிறார்.

200 000 பேர் வரையானவர்களை புலிகளே தடுத்து வைத்துள்ளனர் என்ற இலங்கை அரசின் பிரச்சாரத்தை நிராகரித்த அவர் வன்னி மக்களுக்கு இலங்கை இராணுவத்தின் மீதுள்ள பீதி பயம் அவர்களைப் புலிகளுடனேயே செல்ல நிர்ப்பந்தித்தாகவும் கூறினார். புலிகள் தங்களைப் காப்பவர்கள் என்ற எண்ணமே வன்னி மக்களிடம் இருப்பதாகவும் அவர்களிடம் பெரும்பாலும் புலிகளுக்கான ஆதரவு இருப்பதாகவும் மேரி கொல்வின் சுட்டிக்காட்டினார்.

ஊடகங்கள், மனிதாபிமான அமைப்புகள் அனைத்துக்கும் இலங்கை அரசு தடைவிதித்துள்ள நிலையில் ஊடகங்கள் வன்னி யுத்தம் பற்றி செய்திகளை வெளியிட இயலாத நிலை இருப்பதைச் சுட்டிக்காட்டிய மேரி கொல்வின் ஊடகங்கள் – தாங்கள் அங்கு நின்று செய்திகளை வெளியிடவே விரும்பவதாகவும் ஆனால் அதற்கு தாங்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

சர்வதேச சமூகம் இப்பிரச்சினையில் பாராமுகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர் பிரித்தானியாவிற்கு காலனித்துவ பொறுப்பு இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இக்கருத்தரங்கை All Party Parlimentary Group for Tamils அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இக்கருத்தரங்கிற்கு இவ்வமைப்பின் முக்கியஸ்தரும் பிரித்தானிய தமிழர் பேரவையின் முக்கியஸ்தருமான சென் கந்தையா தலைமை தாங்கினார். வன்னி மக்களின் நிலை தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மேற்கொண்ட முன்னெடுப்புகள் எதுவும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கவில்லை என்றும் ஆயினும் தொடர்ந்தும் கவனத்தை ஈர்ப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சென் கந்தையா தெரிவித்தார். காஸாவில் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலை 22 நாட்களில் முடிவுக்கு கொண்டு வந்த சர்வதேச சமூகம் அதனிலும் மோசமான யுத்தம் நடைபெறும் வன்னியில் தாக்குதலை நிறுத்த முயற்சிக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். இலங்கை அரசாங்கம் பிரச்சார ரீதியில் நங்களிலும் பார்க்க முன்னுக்கு நிற்பதையும் சென் கந்தையா சுட்டிக்காட்டினார்.

சென் கந்தையாவின் தலைமை உரையை அடுத்து வன்னி யுத்த களத்தில் பதிவு செய்யப்பட்ட 10 நிமிட விடியோப் பதிவு காட்சிப்படுத்தப்பட்டது. அப்பதிவில் வன்னி மக்கள் ஒவ்வொரு நிமிடமும் எதிர்கொள்ளும் சொல்லொனாத் துயரமும் விபரிக்க முடியாத வேதனையும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதற்கு அப்பால் அதனை விபரிக்க வேண்டிய அவசியம் தன்ககு; இல்லையென அதனைத் தொடர்ந்து உரையாற்றிய மேரி கொல்வின் குறிப்பிட்டு இருந்தார்.

இவற்றைத் தொடர்ந்து வன்னியில் தங்கள் உறவுகளை இழந்தவர்கள் தங்கள் துயரை வெளிப்படுத்தினர். நடேசன் மயில்வாகனம் என்பவர் சாதாரண காய்ச்சல் வந்து அதற்கு சிகிச்சை எடுக்க முடியாத நிலையில் தனது வயோதிபத் தந்தை காலமானதை வேதனையுடன் சுட்டிக்காட்டினார். தந்தையைக் காண வவுனியாவின் எல்லைவரை சென்ற நடேசன் மயில்வாகனம் தந்தையை உயிருடன் பார்க்க முடியவில்லை.

இன்னும் சிலர் தங்கள் உறவுகள் உயிரிழந்த செய்திகளைப் பகிர்ந்து கொண்டனர்.

ஆனால் தனது சகோதரி, தனது தாய், தனது அண்ணி என குடும்பத்தில் மூவரை ஒரே நேரத்தில் பறிகொடுத்த பெண்ணொருவர் கண்ணீர் மல்க தனது இழப்பை பகிர்ந்து கொண்டது அங்கிருந்த ஒவ்வொருவரது உள்ளத்தையும் தொட்டது. உயிரிழந்த உறவுகளை கண்ணாடிச் சட்டத்தினுள் தாங்கியவாறு நின்ற அப்பெண் எதுவும் பேசவில்லை. அதுவே பல விடயங்களைப் பேசியது. வார்த்தைகளிலும் பார்க்க அந்த மௌனம் அந்தக் கண்ணீர் உண்மையானதாக இருந்தது. உணர்வுகளைத் தொட்டது.

இக்கருத்தரங்கில் All Party Parlimentary Group for Tamils அமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக தொழிற்கட்சி லிபிரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களே பெரும்பாலும் கலந்து கொண்டிருந்தனர். தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கொன்சவேடிவ் பாராளுமன்ற உறுப்பினர் லியம்பொக்ஸ் வெளியிட்ட அறிக்கை இலங்கை அரசுக்கு சார்பானதாக அமைந்ததாக அங்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. பிரதமர் கோர்டன் பிரவுணும் அவரது அமைச்சரவையும் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் கரிசனையுடன் நடந்துகொள்வதாகப் பாராட்டிய சென் கந்தையா பிரித்தானியாவே முதலில் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தியதாகவும் பிரித்தானியாவின் அழுத்தத்தினாலேயே அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து அறிக்கையை வெளியிட்டதாகவும் அங்கு குறிப்பிட்டார்.

ஆனால் இதற்கு முற்றிலும் எதிர்முனையாக இனப்படுகொலைக்கு எதிரான மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் தங்கள் அரசாங்கத்தைக் கொண்டு மகிந்த ராஜபக்ச அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். தாங்கள் மாணவர்களாகவும் தமிழ் மக்களும் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்ட போதும் பிரித்தானிய அரசு அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை என்று குறிப்பிட்ட அம்மாணவர், இலங்கை அரசு இனப்படுகொலை புரிவதாகவும் நைஜீரியா பிஜி பாகிஸ்தான் ஆகிய நாடுகளை பொதுநலவாய அமைப்பில் இருந்து நீக்கியது போல் இலங்கையையும் பொதுநலவாய அமைப்பில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரினார்.

அதற்குப் பதிலளித்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரித்தானியா அதற்கு முயற்சிப்பதாகக் கூறினார். யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தவும் இலங்கைக்கு அழுத்தத்தைக் கொடுக்கவும் பிரித்தானிய அரசு கடுமையாக உழைப்பதாகக் கூறிய அவர் யுஎன் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதை ரஸ்யா தடுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

இரண்டு மணிநேரம் வரை நீடித்த இந்தக் கருத்தரங்கில் வழமையான புலிப் பல்லவிகளுக்கும் சரணங்களுக்கும் எவ்வித பற்றாக்குறையும் இருக்கவில்லை. மேற்குறிப்பிட்ட ஒரு சிலர் ஒரு சில விடயங்கள் தவிர மற்றும்படி வழமையான கோயில் மேளங்களே முழங்கின. அதனால் அங்கு பேசப்படக் கூடிய ஆரோக்கியமான அம்சங்களும் கோயில் மேளத்தின் சத்தத்தில் கரைந்து போனது.

2._._._._._.

‘தமிழீழமே எமது மக்களுக்கு ஒரே தீர்வு.’ ‘புலிகளுடைய தடையை நீக்க வேண்டும்.’ புலிகள் சிறுவர்களை படையில் சேர்ப்பதில்லை.’ ‘புலிகள் மனித உரிமைகளை மீறுவதில்லை.’ ‘சர்வதேசம் இலங்கை அரசு சொல்வதையே நம்புகிறது.’ போன்ற விடயங்கள் இவ்வாறான புலி ஆதரவு அமைப்புகளால் நடாத்தப்படும் கூட்டங்களில் கலந்து கொள்ளும் அதே  நபர்களால் கூறப்படுகிறது. கருத்தரங்கு என்னவோ மறக்கப்பட்ட வன்னி மக்களுக்காக என்று சொல்லப்பட்டாலும் வன்னி மக்களை அந்த மரணப் பொறியில் இருந்து எவ்வாறு விடுவிக்கலாம் என்பதிலும் பார்க்க இந்த அவலத்தைக் கொண்டு தங்கள் தமிழீழக் கனவுக்கு உறுதி சேர்ப்பதாகவே கருத்துக்கள் அமைந்தது.

வழமையான புலி ஆதரவுக் கூட்டங்களில் கருத்துச் சொல்ல எழும் அம்மையார் ஒருவர் இந்தக் கருத்தரங்கையும் விட்டுவைக்கவில்லை. புலிகள் சிறுவர்களை படைகளில் சேர்ப்பதாக பொதுவாக குற்றம்சாட்டப்படுகிறது என்று ஆரம்பித்த அவர் தான் சிறுமியாக இருக்கும் போதே இங்கு வந்துவிட்டதாகவும் ஆனால் தனக்கு குழந்தைகள் இருந்திருந்தால் அவர்கள் வீணாக இறப்பதிலும் பார்க்க புலிகளில் சேர்ந்து இறந்திருந்தால் அதனை எண்ணிப் பெருமைப்பட்டு இருப்பேன் எனக் கூறினார். அதற்கு அங்கிருந்தவர்கள் பலத்த கரகோசம் எழுப்பினர். விசிலடிக்காத குறை. இதிலுள்ள உண்மை என்னவென்றால் அந்த அம்மையார் குழந்தைக்கு தாயானவர் அல்ல. திருமணமாகாதவர். அரசியல்வாதிகள் போல் கைதட்டல்களுக்காகவும் விசிலடிச்சான் குஞ்சுகளைத் திருப்திப்படுத்தவும் மிக முக்கியமான விடயங்களை கவர்ச்சியாக்கி பேசும் இப்போக்கு தமிழரசுக் கட்சி கூட்டணி என்று இன்று லண்டனிலும் தொடர்கிறது.

இது அந்த அம்மையாரில் மட்டும் தவறு அல்ல. அதற்கு கூட இருந்து கைதட்டிய சீமான்களும் சீமாட்டிகளும் அவருக்கு எவ்விதத்திலும் குறைந்தவர்களும் அல்ல. பெரும்பாலும் பிரைவேட் ஸ்கூலில் படிக்கும் டொக்டராகவும் இன்ஜினியராகவும் இல்லாவிட்டால் குறைந்தது எக்கவுண்டனாக ஆவது வரக் கனவு காணும் தங்கள் பிள்ளைகளை தங்கள் தமிழீழக் கனவுக்கு அனுப்புவார்களா? ஆனால் வன்னியில் உள்ளவர்கள் மட்டும் தங்கள் குழந்தைகளை விரும்பி புலிகளின் படைகளில் சேர்ப்பிக்கிறார்கள். அதற்கு இவர்கள் கைதட்டி பாராட்டுகிறார்கள்.

நாங்கள் எங்கள் வருமானத்தைப் பார்க்காமல் வேலைகளை விட்டுவிட்டு பெல்ஜியத்துக்கு சென்று குரல் எழுப்பினோம் ஆனால் எந்தப்பயனும் இல்லை என்று குறைப்பட்டார் அங்கு கருத்து வெளியிட்ட ஒரு வர்த்தகப் பிரமுகர். ஒரு சில நாள் போராட்டத்திற்கே கணக்குப் பார்க்கும் இவர் கடந்த முப்பது வருடமாக போராடி கடந்த மூன்று மாதகாலமாக தங்கள் பதுங்கு குழிகளே புதைகுழிகளாகலாம் என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் அந்த மக்களின் கணக்கு வழக்கைப் பார்க்கத் தயாரா?

இந்த உரையாடலில் சென் கந்தையா கொள்கை விளக்கம் அளிக்கிறார். வன்னி மக்களை வெளியேற்றுவது பற்றி பிரித்தானிய தமிழர் பேரவை ஒரு உறுதியான நிலைப்பாடு எடுத்து உள்ளதாம். அந்த மக்களை அவர்கள் வாழும் பூர்வீகப் பிரதேசங்களில் இருந்து வெளியேற்றுவதை புலம்பெயர்ந்த மக்கள் அனுமதிக்க முடியாதாம். வடக்கு கிழக்கை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மேற்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து விட்டனர். மிகுதமானோரில் அரைப்பங்கினர் தெற்கிற்கு இடம்பெயர்ந்துவிட்டார்கள். ஆக மொத்தம் வெளிநாடுகளுக்குப் போக வசதியுள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றாகிவிட்டது. வசதி சற்று குறைந்தவர்கள் கொழும்புக்குச் சென்றாகிவிட்டது. எதற்கும் நாதியற்றவர்கள் முல்லைத்தீவில். இவர்களுக்கு இல்லாத பூர்வீக பூமியின் அக்கறை முல்லைத் தீவில் மரணத்தின் விளிம்பில் உள்ளவர்களுக்கு இருக்கிறதாக சென் கந்தையா விளக்கம் அளிக்கிறார். கேக்கிறவன் கேனையன் என்றா இப்படித்தான் கொள்கை விளக்கங்கள் இருக்கும்.

வன்னிக்கு வாழ்க்கையில் ஒரு தடவையோ சில தடவையோ சென்ற ஒரு ஊடகவியலாளரைக் கூட்டிவந்து தமிழ் மக்களுக்கு வன்னி அவலத்தை விளக்க வேண்டிய அவசியம் பிரித்தானிய தமிழர் பேரவைக்கு ஏன் வந்தது என்பது தெரியவில்லை. (சில சமயம் போராட்ட காலத்துக்கு முன்பே புலம்பெயர்ந்த டொக்கடர் என்ஜினியர்களுக்கு ஆனந்தி அக்கா சொன்னால் விளங்காது ஒரு வெள்ளைத் தோல் ஜேர்னலிஸ்ட் மூலம் தான் கதைசொல்ல வேண்டும் என்றும் கருதி இருக்கலாம்.) பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் பிரித்தானிய ஊடகவியலாளர்களையும் அழைத்து வந்து இந்த கருத்தரங்கை அவர்களுக்காக நடத்தி இருந்தால் வன்னி நிலவரத்தை சர்வதேச மயப்படுத்த உதவியிருக்கும். இவ்வாறான கோயில் மேளங்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்து நடத்தப்படும் கருத்தரங்குகள் கூட்டங்கள் …… வாக்கு வங்கிகளுக்கு மட்டுமே உதவும்.

அத்துடன் கூட்டத்தின் முடிவில் 5 பவுண்களுக்கு ‘Free Tamil Eelam’ விற்கலாம். நேற்றும் விற்றார்கள். புலம்பெயர் மக்கள் 5 பவுண்களுடன் தமிழீழத்தை பெற்றுக்கொண்டார்கள்.

கனடிய வீதியை முடக்கிய போராட்டம் தமிழ் இளையோர் போராட்டம்

Canadian_Protest_13Mar09ரொரன்ரோ மத்தியில் மார்ச் 13 காலை 6.30 மணிமுதல் முற்பகல் 11 மணிவரை கனேடிய தமிழ் இளையோரால் மாபெரும் கவனயீர்ப்பும் வீதி மறியல் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 6.30 மணி முதல் ரொரன்ரோ மத்தியில் அமைந்துள்ள யங் மற்றும் ஷெப்பார்ட் சந்திப்பிற்கு அருகில் திரண்ட இளையவர்கள் தமிழீழ விடுதலை வேண்டியும் தமிழ் மக்களது அவலத்தைப் போக்க நடவடிக்கை எடுக்குமாறும் ரொரன்ரோ நகரின் மிக நெரிசல் மிக்க முக்கிய சந்தியை மறித்துக் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். இந்த வீதித் தடைப் போராட்டம் தொடர்பான ஒரு வாக்கெடுப்பை சிபி24 என்ற ரொறன்ரோ செய்தி நிறுவனம் இணையத்தில் நடத்துகிறமை குறிப்பிடத்தக்கது.

Canadian_Protest_13Mar09தமிழீழத்தின் தேசியக் கொடியை ஏந்தி நின்ற இளையவர்கள் “விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்குங்கள்” “தமிழீழத்தை அங்கீகரியுங்கள்” போன்ற கோசங்களை எழுப்பி வீதியின் குறுக்கே படுத்து ரொரன்ரோவின் பிரதான சந்தியினை மறித்து நின்றனர். தமது கோரிக்கைகள் செவிமடுக்கப்படாது விடப்படுமானால் தம்மீது வாகனத்தைச் செலுத்தினாலும் தாம் அங்கிருந்து அகலப்போவதில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வாகனநெரிசல் அதிகமாகவுள்ள காலை 8 மணியளவில், சுமார் 45 நிமிடங்களிற்கு மேலாக வீதியில் போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது.

தமிழீழ தேசியத்தலைமையை அங்கீகரிக்குமாறும், தமிழீழ விடுதலையை அங்கீகரித்து இலங்கைத் தீவில் தமிழனத்திற்கு சுய நிர்ணய உரிமையைப் பெற கனேடிய பல்லின சமூகம் தமிழினத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். தமிழர் தாயகமெங்கும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன அழிப்பை இனியும் கனேடிய இளைய சமூகம் பொறுத்திருந்து பார்க்காது என்றும் இளையவர்கள் கோபாவேசமாகத் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகி 30 நிமிடங்களிற்குப் பின்ன அவ்விடத்திற்கு வந்த காவற்றுறையினர் வீதிப் போக்குவரத்தினை சீர்படுத்துவதற்காக கலகம் அடக்கும் காவற்றுறையினரின் உதவியையும் நாடினர்.

ஆயினும் தொடர்ந்து தமது ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட கனடிய தமிழ் இளைய சமூகம் காவற்றுறையினருடன் தமது ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் தொடர்பாக உரையாடினர். இவ் ஆர்ப்பாட்டம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த இளையவர்கள், ‘எமது உறவுகள் நித்தம் அழிக்கப்பட்டு இன அழிப்பினை சிறீலங்கா அரசு முன்னெடுத்து வருவது தொடர்பாக எமது கனடிய அரசிற்கு நாம் அமைதி வழியில் எடுத்துரைத்தோம். அதனைத் தடுத்து நிறுத்த ஆவன செய்யுமாறு வேண்டினோம். எதுவும் பயனளிக்கவில்லை. அந்நிலையிலேயே நாம் இப் போராட்டத்தை முன்னெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டோம். இன்று நாம் இவ் வீதி மறியலில் ஈடுபடுவதற்கா முழுக் காரணமும் கனடிய அரசினையே சாரும்’ என்றனர்.

தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில், எமது இத்தகைய ஆர்ப்பாட்டத்தினால் பலரும் தங்கள் பணிக்குச் செல்வதற்கு இடையூறு ஏற்படும் என்பதை நாம் அறிவோம். ஆயினும் எம் கண்முன்னே ஓர் இனம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் அதைத் தடுத்து நிறுத்தவேண்டிய பணி அனைவரிடமும் உள்ளது. அந்த வகையில் எம்மினம் அழிக்கப்படும் போது, அதனைக் காப்பதற்காக நாம்தான் போராட வேண்டும். அத்துடன் இந் நாட்டின் மக்களின் வரிப்பணம் இலங்கைக்கு உதவி என்ற பெயரிலே அள்ளிக் கொடுக்கப்படுகிறது. அந் நிதியுதவிகள் அனைத்தும் எம் இனத்தை அழிக்கும் நடவடிக்கைக்காக சிறீலங்கா அரசால் பயன்படுத்தப்படுகிறது. தங்கள் பணம் எவ்வாறு இனப்படுகொலைக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பது தொடர்பாக நாம் இந் நாட்டு மக்களிற்கு இதன் மூலம் தெரியப்படுத்துகிறோம். ஆகையால், இதன் மூலம் மக்களிற்கு தாங்களும் இவ் இனப்படுகொலைக்குக் காரணகர்த்தாக்கள். தாங்களும் இதற்கெதிராகக் குரல்கொடுக்கவேண்டும் என்ன உண்மை எம்மால் புரியவைக்க முடியும் என்றனர்.

ரொரன்ரொ மத்தியில் ஏற்பட்ட வீதி நெரிசலால் பல்லின ஊடகங்களின் கவனத்தையும் இக்கவனயீர்ப்பு நிகழ்வு ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கனடியத் தமிழ் சமூகத்தில் இவ்வாறான சாலைமறியல் நடவடிக்கைகள் சட்டத்திற்குப் புறம்பானது, இவை தவிர்க்கபட்ட வேண்டும் என்ற எண்ணவோட்டத்தினால் இவ்விளையோரின் முயற்சிக்கு அவர்களது ஆதரவு குறைவாக இருந்தது கவனிக்கப்பட்டது. ஆயினும், இவ்வாறான நடவடிக்கைகள் பாரிய அளவில் அனைவரது ஆதரவோடும் செயல்வடிவம் கொள்ளும் போது இவ்விளையவர்களினால் பெறப்பட்ட கவனயீர்ப்பை விட அதிகளவில் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. காலையில் இளையோர்கள் அணிதிரண்டு இந்தப் போராட்டத்தை யாரும் எதிர்பார்க்காத வகையில் நடாத்தியமை கனேடிய தமிழர்களின் போராட்டங்களில் புதிய திருப்பு முனையாக அமையும் என பலரும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன்  இன்று 16ம் திகதி திங்கட்கிழமை கனடிய மாணவர் சமூகமும், அனைத்துத் தமிழ் சமூக அமைப்புக்களும் இணைந்து பாரிய மனிதச் சங்கிலி நிகழ்வொன்றினை ரொரன்ரோ மாநகரின் மத்தியில் ஏற்பாடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம்: சட்டரீதியாகவோ வழக்குகளின் அடிப்படையோ மாறவில்லை. ஆனால் நீதிமன்றங்கள் நீதி வழங்குகின்ற பொறுப்பை தட்டிக் கழிக்க பார்க்கிறார்கள். – அருண் கணநாதன் உடனான நேர்காணல் : த ஜெயபாலன்

Arun Gananathan ._._._._._.
அருண் கணநாதன் பிரித்தானியாவில் நன்கு அறியப்பட்ட அரசியல் தஞ்ச சட்டவல்லுனர். பிரித்தானிய அரசின் அரசியல் தஞ்சம் தொடர்பான கடும் போக்கை கடுமையாக விமர்சிப்பவர். பிரித்தானிய அரசில் தஞ்ச நடைமுறைகளுக்கு எதிராக எப்போதும் குரல் கொடுத்து வருபவர். ‘தேசம்’ ஏற்பாடு செய்த அரசியல் தஞ்சம் தொடர்பான நடவடிக்கைகளில் எப்போதும் தனது ஆதரவை வழங்குபவர். இன்று ஒரு புறம் இலங்கையில் மிக மோசமான மனித அவலம் நிகழ்ந்து கொண்டிருக்கையில் பிரித்தானியாவில் இருந்து அகதிகளைத் திருப்பி அனுப்புகின்ற நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெறுகிறது. இவை தொடர்பாக லண்டன் குரல் பத்திரிகைக்கு சட்ட வல்லுனர் கணநாதன் வழங்கிய நேர்காணலின் முழுமை இங்கு தரப்படுகிறது.
._._._._._.

ல.குரல்: பிரித்தானிய அரசியல் தஞ்ச நடைமுறைகள் அண்மைக்காலத்தில் எவ்வாறு உள்ளது?
கணநாதன்: சட்டரீதியாகவோ வழக்குகளின் அடிப்படையோ மாறவில்லை. ஆனால் உள்துறை அமைச்சினுடைய அணுகுமுறையில் கடும் போக்கு ஏற்பட்டு உள்ளது. அத்தோடு நீதி மன்றங்களும் பாராபட்சமாக தனிப்பட்ட வழக்ககளில் தலையிட்டு நீதி வழங்குகின்ற பொறுப்பை தட்டிக் கழிக்க பார்க்கிறார்கள். இப்படியான மாற்றங்கள் தான் ஏற்பட்டு இருக்கிறது. அகதிச் சட்டத்தில் சட்ட ரீதியான மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.

பப்ளிக் லோ (public law) என்று எடுத்தால் அதற்குள் தான் இமிகிரேசன் (immigration) வருகிறது. ப்ளட்கேற் (floodgate) என்று சொல்வார்கள். எத்தனை எத்தனை பேர் நாட்டுக்கு வருகிறார்கள் நாட்டின் நலன் என்ற அரசியல்கள் கட்டாயம் இருக்கும். அது தொடர்பான விசயங்களைக் கொண்டு தான் முடிவுகளை எடுப்பார்கள். தனிப்பட்ட அகதித் தஞ்ச வழக்கில் கொள்கை, ப்ளட்கேற்றை வைத்து முடிவெடுப்பது வந்து பக்க சார்பன தீர்ப்பாகிவிடும். அதனால் அவர்கள் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல் மறைமுகமாக அதைத்தான் செய்கிறார்கள்.

ல.குரல்: நீதித்துறையின் இந்த தட்டிக் கழிக்கும் போகை;கை சட்டப்டி எதிர்கொள்ள முடியாதா?
கணநாதன்: இன்றைக்கு இமிகிரேசன் ஜடஜ் ஆக இருக்கட்டும், அப்பீல் கோட் ஜட்ஜ் ஆக இருக்கட்டும், ஹைக்கோட் ஜட்ஜ் ஆக இருக்கட்டும் இந்த நீதிபதி வந்தால் அகதிக்கு எதிராகத்தான் தீர்ப்பு வழங்குவார் இந்த நீதிபதி வந்தால் அகதிக்கு சார்பாக நீதி வழங்குவார் என்பது பெரும்பாலும் எல்லாருக்கும் தெரியக் கூடிய வகையில் தீர்ப்பு வழங்கிக் கொண்டு வருகிறார்கள். அப்படி இருந்தும் இந்த நீதிபதி அகதிக்கு சார்பாக எப்போதும் நீதி வழங்காதவர் என்ற அடிப்படையில் வழக்கைத் தொடருவதற்கு பிரித்தானிய நீதித்துறையில் ஒரு செயன்முறையில்லை.

அதனை எப்படி எதிர்கொள்ளலாம் என்றால் இந்த நீதிபதி தட்டிக்கழித்து நீதி வழங்காதவிடத்து வேறு சட்டக் காரணங்களின் அடிப்படையில் அவ்வழக்கு மேலே செல்லும் போது அந்த நீதிபதி அகதிக்கு சார்பாக தீர்ப்பளிப்தற்கான வாய்ப்பு ஏற்படும்.

அதில் இப்போது உள்ள பிரிச்சினை என்னவென்றால் வழக்கை மேலே கொண்டு செல்வதற்கான செலவீனம். இவ்வாறு அரசியல் தஞ்சத்தை இறுக்கமாக்கிய உள்துறை அமைச்சு சட்ட உதவி வழங்குவதையும் தொண்ணூறு வீதம் வரை குறைத்துவிட்டுள்ளது. அதனால் அகதிகளும் தொடர்ந்தும் பணத்தை இறைத்து இந்த வழக்குகளைத் தொடர முடியாத நிலையில் வழக்குகளைக் கைவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

ல.குரல்: பிரித்தானியாவில் இருந்து அண்மையில் 150 பேர் வரை இலங்கைக்கு திருப்பி அனுப்பபட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இது பற்றி நீங்கள் அறிந்தவற்றைக் கூற முடியுமா?
கணநாதன்: ஈராக் போன்ற நாடுகளுக்கு கனகாலமாக இப்படி செய்துகொண்டு இருக்கினம் ஆனா இலங்கையைப் பொறுத்தவரை charter flight புக் பண்ணி ஆட்களை திருப்பி அனுப்பினது இது தான் முதற்தடவை. இதை பிரித்தானிய தூதரகமும் உறுதிப்படுத்தி இருக்கிறது. தமிழ் மக்கள் பத்தியில் 150 பேர் அனுப்பப்பட்டதாக கதை உலாவுகிறது. ஆனால் நான் அறிந்த அளவில் 40 முதல் 50 பேர் வரையே திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர்.

இலங்கையில் உள்ள பிரித்தானிய துதரகமும் இவர்கள் திருப்பி அனுப்பபட்டதைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள். இலங்கையில் யுத்தம் ஒரு முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது அதனால் தான் தாங்கள் இப்படியான இறுக்கமான ஒரு முடிவுக்கு வந்திருக்கிறம் என்றும் சொல்லி இருக்கிறார்கள். மற்றது திருப்பி அனுப்பப்படுவது தொடர்பாக இலங்கைக்கும் பிரித்தானியாவுக்குமிடையே ஒரு பிரத்தியேக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டு உள்ளதாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது.

எங்கள் சமூகத்தில் உள்ள பிரச்சினை என்னென்று கேட்டால் வழமையாகவே 10 முதல் 30 பேர் வரை கிழமைக்கு திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இதை நாங்கள் கண்டும் காணாமல் விட்டுவிட்டு இருந்துவிடுகிறோம்.

ஆனால் இந்த சாட்டர் ப்ளைட்டில் தொகையாக ஆட்கள் அனுப்பட்ட விடயம் தான் ஒரு பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. அது தான் அரசாங்கத்தின் நோக்கமும். இந்த அரசாங்கம் வந்து போடர்களை ரைற்ரின் பண்ணி இந்த நாட்டில் சட்ட விரோதமாக வந்து அகதி அந்தஸ்து கேட்கிற நிலையை சரியாகக் குறைத்து விட்டது. மற்றைய நாட்டவர்களை விட இலங்கையர்கள் தொடர்ந்து இவர்களது எல்லையை கட்டுப்பாடுகளை உடைத்து விசாக்களை எடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நாட்டுக்கு வந்தால் அகதி அந்தஸ்து வழங்கப்படும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது என்று பிரித்தானிய அரசாங்கம் பயப்படுகிறது. இந்த நம்பிக்கையை உடைத்து திருப்பி அனுப்பப்படுவினம் என்ற திகிலை ஏற்படுத்தவதற்குத் தான் பிரித்தானிய அரசாங்கம் இந்த சாட்டர் ப்ளைற் என்ற நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்கள் என்றது என்னுடைய கருத்து.

Asylum_Cartoonல.குரல்: அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்கள் திருப்பி அனுபப்பப்படுவது தீவிரமடைந்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இது பற்றி விரிவாகக் கூறமுடியுமா?
கணநாதன்: இதற்கு முதல் ஒரு சமூகமாக வந்து கூடி இந்த திருப்பி அனுப்பப்படுவதை பேசியது வந்து 2007 யூனில். அப்போது எல்பி என்றவரின் வழக்கு முடிவு வரப்போகிறது. அந்த முடிவு வந்தால் அது அகதி வழக்குகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்பதனால் அதற்கு முன்னர் உள்துறை அமைச்சு திருப்பி அனுப்புவதில் துரிதகதியில் செயற்பட்டது. அதற்குப் பின்னர் என்ஏ என்பவருடைய வழக்கு ஈரோப்பியன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததால் திருப்பி அனுப்பப்படுவது ஓரளவு நிறுத்தப்பட்டது. தமிழர்கள் ஐரோப்பிய நீதிமன்றத்திற்குப் போய் தடை உத்தரவுகளைப் பெற்று ஓரளவு இந்த நாடுகடத்தலை தவிர்த்துக் கொண்டு வந்தனர். அதற்குப் பிறகு ஈரோப்பியன் கோட் போன வருடம் 2008 ஏழாம் மாதம் தங்களுடைய தீர்ப்பினை வழங்கியது. அது சாதகமான தீர்ப்பாகத் தான் இருந்தது. ஆனால் தடை உத்தரவை வந்து வெறுமனே தமிழர் என்ற அடிப்படையில் வழங்க முடியாது என்று தெரிவித்திருந்தது. ஆனால் என்ஏ இன் வகைக்குள் வருபவர்களுக்கு அதுவும் யுகே நீதிமன்றங்கள் முழுமையாக நிராகரித்த பின்னர்தான் தாங்கள் தடையுத்தரவை வழங்குவோம் என்று ஈரோப்பியன் நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.

அதற்குப் பிறகும் தமிழர் என்ற அடிப்படையில் தருப்பி அனுப்புவதை நிறுத்தவதற்கான தடையுத்தரவைக் கேட்டவர்களுக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுக் கொண்டு வந்தது. இப்ப ஒரு இரண்டு மூன்று மாதமாக திருப்பி அனுப்புவது தீவிரம் அடைந்திருக்கிறது. ஒரு வருடமாக ஈரோப்பியன் கோர்ட்டின் தடையால் அனுப்ப முடியாமல் போன வெற்றிடத்தை துரித கதியில் அனுப்பி ஈடுசெய்ய உள்துறை அமைச்சு முற்பட்டு உள்ளது.

ல.குரல்: அண்மைக்காலத்தில் திருப்பி அனுப்பப்பட்டவர்கள் யாராவது மீண்டும் அழைக்கப்பட்டு இருக்கிறார்களா?
கணநாதன்: அண்மைக்காலத்தில் இல்லை. ஆனால் 2001ல் குமரகுருபரனுடைய வழக்கை கூறலாம். குமரகுருபரன் இந்த நாட்டில் இருந்து அனுப்பப்பட்டு விட்டார். அப்படியிருக்க அவரை திருப்பிக் கொண்டுவர வெண்டும் என்று கோரி நாங்கள் ஹைக் கோட்டுக்குப் போய் நிரூபித்து திருப்பிக் கொண்டு வந்து வதிவிட உரிமையையும் பெற்றுக் கொடுத்தோம்.

அதற்கு முன்னரும் 1987 – 88 காலப்பகுதியில் சிவகுமாரன் என்பவருடைய வழக்கு ஐரோப்பிய நீதிமன்றம் வரை சென்றது. திருப்பி அனுப்பப்பட்டவர் மீண்டும் திருப்பி அழைக்கப்பட்டார்.

ல.குரல்: அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகளைத் தொடர முடியாமல் எத்தனை பேர் உள்ளனர் என்று மதிப்பிட முடியுமா? அவர்களின் எதிர்காலம் என்ன?
கணநாதன்: என்னைப் பொறுத்தமட்டில் குறைந்தது நூற்றுக் கணக்கிலாவது இருப்பார்கள் என்று தான் நினைக்கிறேன். பலபேர் 1990க்களில் வந்து நிராகரிக்கப்பட்டவர்கள். அதற்குப் பிறகு வழக்கு கைவிடப்பட்ட நிலையில் அப்படியே இருக்கிறார்கள். அதற்கப் பிறகு 2000 – 2004 ம் ஆண்டுக்கு இடையில் நடந்த வழக்குகளால் பல பேர் அப்படியே காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த திருப்பி அனுப்புதல் என்பது 2005, 2006க்குப் பின்னர்தான் தொடங்கப்படுகிறது. அதற்கு முன்னர் பெரிய அளவில் இலங்கைத் தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படவில்லை.

லிகசி கேஸஸ் (legacy case) என்ற அடிப்படையில் 2007ல் இருந்து பல குடும்பங்களுக்கு விசாக்கள் வழங்கி தஞ்ச வழக்கு முடிவுகள் தெரியாமல் இருந்தவர்களின் தொகையை சரியாகக் குறைத்துக் கொண்டார்கள். 2008லும் விசாக்கள் வழங்கப்படாமல் இழுபட்ட பல வழக்குகளுக்கு விசாக்களை வழங்கி அந்தத் தொகையைக் குறைத்துக் கொண்டார்கள்.

என்னுடைய மதிப்பீட்டின்படி அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகளைத் தொடர முடியாதவர்களின் எண்ணிக்கை குறைந்தது 5000 பேராவது இருப்பார்கள். இவர்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்துக் கொண்டால் சற்று கூடுதலாக இருக்கும். அவர்களுக்கு முடிவில்லாத சூழ்நிலை ஒன்று இருப்பதையும் பீதி ஒன்று நிலவுவதையும் பார்க்கக் கூடியதாய் இருக்கிறது. திருப்பி அனுப்பப்டுவதற்கான அச்சமும் இருக்கிறது.

உள்துறை அமைச்சைப் பொறுத்தவரை லிகஸி கேஸ் அடிப்படையில் 2007 – 2008 நடுப்பகதி வரை விசாக் கொடுக்க வேண்டியவர்கள் எல்லோருக்கும் விசா கொடுத்தாகி விட்டது. இனி உள்ளவர்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டியவர்கள் தான் என்ற மனநிலையுடன் செயற்படுவதாகவே நான் நினைக்கிறேன். இப்படியான பார்வையால் ஏற்படுகின்ற உளவியல் தாக்கம் உண்மையில் பாதிக்கப்பட்டவர்களது வழக்கையும் தட்டிக்கழிக்கின்ற நிலைக்கு இட்டுச் செல்கிறது. அதனால் அவதானமாக இருக்க வேண்டியது அவசியம்.

ல.குரல்: அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டு ஆனால் விதிவிலக்குகளின் அடிப்படையில் (எக்செப்சனல் லிவ்ற்று ரிமெயின் – Exceptional Leave to Remain ELR) விசா வழங்கப்பட்டவர்களின் விசாக்கள் பறிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா?
கணநாதன்: இப்ப எக்செப்சனல் லீவ்ற்று ரிமெயின் என்பதை நிப்பாட்டி டிஸ்கிரேசனல் லீவ்ற்று ரிமெயின் (Discretionary Leave to Remain) என்பதைத்தான் கொடுத்து வருகினம். அதற்கு உரிமைகள் கொஞ்சம் குறைவாகவே உள்ளது. முன்னர் வந்து 4 வருடம் ஒருவர் ஈஎல்ஆர் ல் இருந்தால் அவருக்கு ஐஎல்ஆர் வழங்கப்பட்டு வந்தது. இப்ப ஒருவர் ஆறுவருடம் டிஸ்கிரேசனல் லிவ்று ரிமெயினில் இருந்தால் தான் அவருக்கு ஐஎல்ஆர் கொடுக்கப்படலாம். ஆனால் ஐஎல்ஆர் (Indefinite Leave to Remain ILR) கொடுக்கிற தன்மை வந்து இப்ப குறைந்து வருகிறது.

அப்படி இருந்தாலும் கொடுத்ததை பறிக்கிற தன்மை என்பது அவர்கள் இந்த நாட்டில் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. பொய்சொல்லி பிழையாக நடந்து இந்த விசாவைப் பெற்று இருந்தால் விசாவுக்கு கொடுத்த காரணங்கள் இல்லாமல் போனால் அதாவது திருமணம் முடிக்கும் போது அதற்காக மற்றவருக்கு வழங்கப்பட்ட விசா அவர்களுடைய திருமணம் விவாகரத்தில் முடிந்தால் மற்றவருடைய வீசா மீளப் பெறப்படலாம். எல்லாவற்றிலும் மிக மிக முக்கியமானது சம்பந்தப்பட்டவர்கள் கிரிமினல் குற்றச் செயல்களில் ஈடுபட்டு அதற்காகத் தண்டணை பெற்றல் அவர்களுக்கு வழங்கப்பட்ட விசா பறிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.

Arun Gananathanல.குரல்: தஞ்சம் மறுக்கப்படுவதில் சட்டத்தரணிகளின் கவலையீனங்கள் அறிவீனங்கள் முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. அது பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
கணநாதன்: சட்டத்தரணிகளின் கவலையீனங்கள் பற்றி நாங்கள் வருடாவருடம் கதைத்துக் கொண்டு வாறம். அது வந்து ஒரு புதிய ரொப்பிக் இல்லை. ஆனால் நான் அவர்கள் பிழைவிடவில்லை என்று சொல்லவரவில்லை. அது இருந்துகொண்டுதான் இருக்கிறது. அது ஒரு பிரச்சினை தான். அது தமிழருக்க மாத்திரம் உரித்தானது இல்லை. மற்ற சமூகங்களுக்கும் உள்ள பிரச்சினைதான்.

ஆனால் என்னுடைய கருத்து வந்து இந்த நாட்டில் இந்த சட்டங்களின் தரம் குறைந்துவிட்டது. மற்றும்படி எல்லாத் துறைகளிலும் தங்கள் தொழில்சார்ந்த பொறுப்புகளை உணராதவர்கள் செய்யாதவர்கள் இருக்கிறார்கள். அப்படி சட்டதுறையிலும் இருக்கிறார்கள். ஆனால் இதைப்பற்றிய விழிப்புணர்வு எங்களுடைய மக்கள் மத்தியில் நிறைய இருக்கிறது. அதனால் நல்ல சட்டத்தரணிகளுக்கும் சட்ட ஆலோசகர்களுக்கம் கூட சங்கடங்கள் உண்டு. ஏனென்று சொன்னால் அந்த நம்பகத் தன்மை வந்து சரியாக உடைக்கபட்டுவிட்டது. நல்ல சட்ட ஆலோசனைகளை வழங்கினாலும் அதனையும் சந்தேகத்துடன் பார்க்கின்ற போக்கு வந்தள்ளது.

சட்டத்தரணிகள் கவலையீனமாக இருந்தாலும் அதனை கவனித்தக் கொள்ள பல வழிகள் இருக்கின்றது. முக்கியமாக நாங்கள் அடிப்படை ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். பத்திரங்களைப் பார்த்து என்ன நடந்து இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அடுத்தது முக்கியமாக பைலை வைத்திருக்க வேண்டும். அதுக்கு முக்கியமாக சட்டத்தரணிகளோ சட்ட ஆலோசகரோ தான் பிழையென்று சொல்ல முடியாது. 10 – 12 வருடங்கள் இருப்பார்கள். ஆனால் இரண்டு துண்டு பேப்பர் மட்டும்தான் அவர்களிடம் இருக்கும். தங்களுடைய பத்திரங்களின் கொப்பிகளை கவனமாக எடுத்து வைக்கிறதில்லை. அதைத் தவறவிட்டு இருந்தால் கூட உள்துறை அமைச்சிற்கு 10 பவுண்களைச் செலுத்தி அதற்கான பிரதிகளை எடுத்து வைத்திருக்க வேண்டும். இப்படி நாடுகடத்தப்படுகின்ற அபாயமான சூழல் உள்ள இந்தக் காலப்பகுதியில் ஒவ்வொருத்தரும் 10 பவுணைக் கட்டி தங்கள் பைலை முழுமையாக எடுத்து வைத்திருக்க வேண்டும். அப்பதான் நாடு கடத்துவதற்கு பிடித்தவுடன் அதைத் தடுப்பதற்கான முதலாவது ஜீடிசல் ரிவியூவை (judicial review)செம்மையாகப் போட்டு நாடுகடத்தல் அபாயத்தில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

ல.குரல்: பிரித்தானியா உட்பட சர்வதேச அளவில் பொருளாதார விழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. இது அரசியல் தஞ்ச விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதா?
கணநாதன்: ஓம். தாக்கத்தை ஏற்கனவே ஏற்படுத்தி இருக்கிறது. எப்படியென்று கேட்டால் சட்ட ரீதியாக சட்டங்கள் எதனையும் உட்புகுத்தவில்லை. ஆனால் இன்றைக்கு வந்து அகதிகளை மிகவும் பிழிந்து மிகவும் கஸ்டமான நிலையில் தான் இந்த அரசாங்கம் தள்ளி வைத்திருக்கிறது. பொதுவாக பொருளாதார வீழ்ச்சி ஏற்பட குற்றச்செயல்கள் அதிகரிக்கும். அதில் இந்த அகதிகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்படுவார்கள் என்ற பயம் இவர்களுக்கு இருக்கிறது. அது கொள்கை ரீதியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

அதைவிட இன்னொரு காரணம் என்னவென்றால் உள்துறை அமைச்சில் பொலிசி என்றொன்று இருக்கிறது. மற்றது அதனை நடைமுறைப்படுத்துவது. அலுவர்கள் மட்டத்தில் நடைமுறைப்படுத்துபவர்கள் தங்களுடைய வேலைக்கு தங்களுடைய குடும்பத்தினரின் வேலைக்கு ஆபத்து வருமா என்ற கலக்கத்துடன் விண்ணப்பங்களை பரசீலிக்கும் போது அவர்கள் பெருந்தன்மையாக நடக்கக் கூடிய சூழ்நிலை இல்லாமல் போகிறது. அது அவர்களையும் கடும்போக்கு உடையவர்களாக்குகிறது.

உதாரணமாக அண்மைக்காலமாக வேர்க் பெர்மிசன் (work permision) வந்து பல பேருக்கு நிப்பாட்டி வந்தார்கள். ஒரே ஒரு குழுமத்தைத் தான் விட்டு வைத்தார்கள். அதாவது ஒரு வருடத்திற்கு மேல் தஞ்ச விண்ணப்பம் தொடர்பாக முடிவெடுக்கப்படாதவராக இருந்தால் வேர்க் பெர்மிசன் கொடுக்க வேணும் என்று இமிகிரேசன் லோவில் இருக்கிறது. அந்த வகைப்பட்டவர்களுக்கு வேர்க் பெர்மிசன் கொடுத்து இருந்தார்கள். அதைவிட முன்னர் வேர்க் பெர்மிசன் வழங்கி அவர்களுடைய வழக்கு முடிவுக்கு வராமல் இருந்தாலும் வேர்க் பெர்மிசனை கொடுத்து வந்தார்கள். அண்மைக் காலத்தில் திடீரென்று ஐடி கார்ட்டில் வேர்க் பெர்மிசன் இருக்க வேண்டும் என்பது கட்டாயமானது. அப்படி இருக்கும் போது கடந்த 3 – 4 மாதங்களுக்குள் ஐடி காட் புதுப்பிக்க வேண்டும் என்று கூப்பிட்டுப் விட்டு வேர்க் புரொகிபிற்றற் (work prohibited) என்று புது ஐடி காட்டை அடித்து கொடுக்கிறார்கள். இது நேரடியாகவும் மறைமுகமாகவும் பொருளாதார வீழ்ச்சி அகதி விண்ணப்பங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதையே காட்டுகிறது.

ல.குரல்: இலங்கையில் இன்று இராணுவச் சமநிலையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் பிரித்தானியாவிலும் ஐரோப்பாவிலும் அரசியல் தஞசம் கோரியுள்ளவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் மாற்றத்தை ஏற்படுத்துமா?
கணநாதன்: உண்மையாக ஒரு மாற்றத்தையும் கொண்டு வரக்கூடாது. ஏனென்று கேட்டால் யுத்தம் என்றது சிவில் வோர். சிவில் வோர் ரிப்பியூஜிஸ் 1951 கொன்வென்சனுக்குக் (Civil War Refugees – 1951 Convention) கீழ் அடங்க மாட்டார்கள். அதனால் தான் எங்களுக்கு யுத்த காரணங்களுக்காக அகதி அந்தஸ்து வழங்கப்படுவதில்லை. இருந்தாலும் பிரித்தானிய தூதரகம் அதனையும் ஒரு காரணமாகக் காட்டி உள்ளது. அதாவது இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த கொண்டிருக்கிறது அதனால் தான் அகதிகளைத் திருப்பி அனுப்புவதில் தீவிரமாக இருக்கிறோம் என்று.

அவர்களுக்கு உள்ள பயம் என்னென்று கேட்டால் வடக்கில் நடக்கிற கொன்வென்சனல் வோர் வந்து பிரச்சினைக்கு உள்ளானால் தென்பகுதியில் வந்து கொரில்லா முறையிலான யுத்தம் பரவும் என்று பயப்படுகின்றார்கள். இந்த நாட்டில் அகதிகளின் வழக்குகள் வந்து கொழும்பில் என்ன நிலைமைகள் என்பதை வைத்துத்தான் தீர்மானிக்கப்படுகிறது. உள்துறை அமைச்சுக்கு உள்ள பீதி என்னென்றால் யுத்தம் கொழும்புக்கு பரவுகிற நிலை ஏற்பட்டால் அது அகதிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும். அதனால் தங்களால் அகதிகளைத் திருப்பி அனுப்ப முடியாமல் போவதுடன் அகதி அந்தஸ்து வழங்க வேண்டிய கட்டாயமும் ஏற்படலாம் என்பது.

ல.குரல்: இலங்கை யுத்தத்தின் இராணுவச் சமநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் விடுதலைப் புலிகளின் போராளிகள் அல்லது விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய பலர் அரசியல் தஞ்சம் கோருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அவர்களுடைய விண்ணப்பங்கள் எவ்வாறு பரிசீலிக்கப்படும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
கணநாதன்: விடுதலைப் புலிகள் மாத்திரம் என்றல்ல பொதுவாக வேரர்க் க்ரைம் (war crime) என்று 1951 அகதிச் சட்டத்திலேயே கூறப்பட்டு இருக்கிறது. அதாவது தனிப்பட்ட முறையில் அகதித் தஞ்சம் கோருபவர்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால் அல்லது பெரிய அளவில் மனித உரிமை மீறும் அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்திருந்தால் அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கக் கூடாது என்று என்று எக்ஸ்குளுசன் குளோஸ் (exclusion clause)என்ற தன்மையும் தமிழர்களுடைய வழக்குகளை நிராகரிக்கின்ற தன்மை 2006ல் இருந்து காணப்பட்டு வருகிறது.
 
இது தமிழீழ விடுதலைப் புலிகளை மாத்திரமல்ல எந்த இயக்கத்தைச் சார்ந்திருந்தாலும் அவர்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார்களா? அந்த அமைப்புகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனவா? என்று பார்த்து அதற்கு சிறு ஆதாரமாவது இருந்தால் அதனைக் காரணமாகக் காட்டிக் கூட அவர்களது வழக்குகளை நிராகரித்து வருகிறார்கள். அப்படி நிராகரித்தாலும் அவர்களை நாட்டுக்குத் திருப்பி அனுப்ப முடியாது. ஏனெனில் அகதி அஸ்தஸ்து கிடைக்காவிட்டாலும் மனித உரிமை சாசனத்தின் ஆட்டிக்கிள் 3 இன் கீழ் அவர்களை இந்த நாட்டில் இருந்து திருப்பி அனுப்பாமல் பாதுகாப்புத் தேடக்கூடிய சூழ்நிலை இருக்கிறது.

இந்த அடிப்படையில் வழக்குள் நிராகரிக்கப்பட்டு தொடர்ந்தும் வழக்குகள் நீதிமன்றங்களில் வாதாடப்பட்டு தொடர்ந்தும் அகதி அந்தஸ்து பெற்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஒரு சில வழக்குகள் இந்த எக்ஸ்குளுசன் குளோசில் சேர்க்கப்பட்டு அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்களாகவும் ஆட்டிக்கிஸ் 3 இன் கீழ் திருப்பி அனுப்பப்படுவதில் இருந்து பாதுகாப்புப் பெற்றும் இருக்கிறார்கள்.

ல.குரல்: அண்மைக்காலத்தில் அரசியல் தஞ்ச விண்ணப்பங்கள் தஞ்சம் கோரியவருக்கு சாதகமாக பரிசீலிக்கப்பட்டு உள்ளதா? எவ்வாறான விண்ணப்பங்கள் தஞ்சம் கோரியவருக்கு சாதகமாகப் பரிசிலிக்கப்பட்டு உள்ளது?
கணநாதன்: இது புதிதாக வந்து அரசியல் தஞ்சம் பெற்றவர்களுக்கான கேள்வி என்று பார்க்கிறேன். அப்படி பார்க்கும் போது ஓம்! இந்த நியூ அசைலம் மொடல் ஏப்ரல் 2007ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்குக் கீழ் வந்த வழக்குகள் சாதகமான முடிவுகளைப் பெற்றது. அதுவும் இப்ப 2008 கடைசிப் பகுதியில் இருந்து மோசமான நிலைக்கு போய்விட்டது. பழைய ஹோம் ஒபிஸ் மாதிரி எதையும் நிராகரிக்கிற நிலைக்குப் போய்விட்டது. இது இலங்கை அகதிகளுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் அப்படியான நிலையே ஏற்பட்டு இருக்கிறது.

ல.குரல்: வழமையாக வழங்கப்படும் ஐஎல்ஆர் முறை நீக்கப்பட்டு தற்போது எல்எல்ஆர் Limited leave to remain (LLR) வழங்கப்படுவது பற்றி சற்று விளக்கவும்?
கணநாதன்: இந்த நடைமுறை வந்து 2005லேயே வந்துவிட்டது. அகதி அஸ்தஸ்து கிடைத்தாலும் ஐஎல்ஆர் வழங்கப்படுவதில்லை. எல்எல்ஆர் 5 வருடங்களுக்கு வழங்குகிறார்கள். அதுக்குப் பிறகு அவர்கள் இந்த நாட்டில் எந்தவித குற்றங்களும் புரியாமல் இருந்தால் அவர்களுடைய நாட்டின் சூழ்நிலை குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் காணாத இடத்தில் அவர்களுக்கு அந்த 5 வருடங்களின் பிறகு ஐஎல்ஆர் வழங்குவது என்பது தான் நடைமுறையாக இருக்கிறது. அதில் ஒரு விடயம் முக்கியமாக வருகிறது. என்னவென்றால் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் இலங்கையில் அல்லது இந்தியாவில் இருந்தால் (அவர்கள் அகதி அந்தஸ்து கோருவதற்கு முன்னரேயே திருமணமாகி இருந்தால் பெரிய மாற்றம் இல்லை.) அவர்கள் தங்கள் குடும்பங்களைக் கூப்பிடக் கூடியதாக இருக்கிறது. இல்லாமல் தனி இளைஞராக வந்து அவரது அரசியல் தஞ்சம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவருக்கு எல்எல்ஆர் வழங்கப்பட்டால் அவர் மற்ற நாட்டுக்குச் சென்று திருமணம் முடித்து ஸ்பொன்சர் செய்யும் போது சில சிக்கல்கள் ஏற்படும்.

Asylum_Cartoonல.குரல்: அரசியல் தஞ்சம் கோரி உலகின் பல பாகங்களிலும் பலர் தங்கள் பயணத்திற்காகக் காத்து இருக்கின்றனர். அவர்களுக்கு நீங்கள் என்ன ஆலோசனை வழங்க முடியும்?
கணநாதன்: சட்டத்தின் கீழ் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவது சரியான நடவடிக்கை இல்லை. பொதுவாக ஒரு அரசியல் என்று கதைத்தால் அது அவர்களுடைய முடிவு. இன்றைக்கு இலங்கையின் மனித உரிமைநிலைமை மிகவும் மோசமானதாக இருக்கிறது. அரசியலில் சம்பந்தப்படாத ஒரு தமிழரும் கூட நிம்மதியாக வாழ முடியாத சூழல் ஒன்று அங்கிருக்கிறது. அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவது என்பது எங்களுக்கு விளங்கக் கூடியதாக இருக்கிறது. அவர்களை வரவேண்டாம் என்று சொல்கிற உரிமை எங்களுக்கு இல்லை. நாங்கள் என்ன சொல்லலாம் என்றால் இங்கு வந்தவுடன் ஏதோ அள்ளிக் கொடுக்கினம் இங்க வந்தவுடன் அகதி அந்தஸ்து கிடைக்கிறது என்ன மாயையை வந்து நாங்கள் கொடுக்கக்கூடாது. இந்த நாட்டின் போக்கு வந்து ஒவ்வொருநாளும் இறுக்கமாகவும் கடும் போக்கிலும் தான் போய்க் கொண்டு இருக்கிறது. ஆனால் ஒருவருக்கு உயிராபத்து இருக்கிறது என்று சொன்னால் அவர் இந்த நாட்டுக்கு வரத்தான் வேணும். அதுக்கான சட்டத்தை இந்த நாடு வைத்திருக்கிறது. அதற்குக் கீழ் அரசியல் தஞ்சம் கேட்க வேணும் என்றால் கேக்கத்தான் வேணும். சரியான வழியில் சரியான சட்ட ஆலோசணைகளைப் பெற்று முதற்தடவையே சரியான முறையில் வழக்கை நடத்தி முடிவைக் காண வேண்டும்.

ல.குரல்: அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டவர்கள் அங்கிருந்து தாம் திருப்பி அனுப்பப்பட்டதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமா?
கணநாதன்: ஓம். இதுவும் ஒரு தட்டிக்கழிக்கின்ற கடும் போக்குத்தான். இங்கிருந்து திருப்பி அனுப்பப்படும் போதே எப்படி அனுப்பகிறார்கள் என்றால் யூடிசியல் ரிவியூ போட்டு முதலாவது படியில் தோற்றாலும் அவர்கள் மேலும் போகக் கூடிய உரிமை சட்டத்தில் இருக்கிறது. மேற் கொண்டு செல்லும் போதும் முதலாவது படியில் நிராகரிக்கும் போது நீதிமன்றம் என்ன சொல்கிறது என்றால் உங்களை நிராகரிக்கிறது மாத்திரமல்ல உங்களை நாடுகடத்துவதற்கும் எதிராக உங்கள் விண்ணப்பத்தை மேற்கொண்டு சென்றாலும் நாடுகடத்துவதை நிறுத்தமாட்டோம் என்று முதலாவது படியில் வழங்குகிற தீர்ப்பிலேயே சொல்கிறார்கள். அதனால் தான் அவர்கள் நாடு கடத்தப்படுகிறார்கள்.

இருந்தாலும் யூடிசியல் ரிவியூவை அவர் நாடு கடத்தப்பட்ட பிறகும் தொடரலாம். முதலாவது படியில் நீதிபதி மறுத்திருந்தாலும் நான் இந்த வழக்கைத் தொடர விரும்புகிறன் என்று இங்கு தன்னுடைய சட்டத்தரணியூடாக தொடர வேண்டும். என்னை திருப்பி அனுப்பியது சட்டத்திற்குப் புறம்பானது திருப்பி அனுப்பப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்டு இருந்தால் அதனை ஆதாரபூர்வமாகக் காட்டி தன்னை திருப்பி பிரித்தானியாவுக்க அழைக்க வேண்டும் என்று ஹைக்கோட்டிடம் முறையிடலாம். ஹைக்கோட் சாதகமாகத் தீர்ப்பு வழங்கினால் அவர் இந்த நாட்டுக்கு திருப்பி அழைத்தவரப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இதைவிட பிரித்தானிய தூதரகத்திற்கும் சென்று முறைப்பாடுகளைச் செய்யலாம். ஆனால் நடைமுறையில் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

ல.குரல்: அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தமிழ் பொது அமைப்புகளின் செயற்பாடுகள் எப்படி உள்ளது? அவர்கள் என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்?
கணநாதன்: அகதிகளுக்காக ஒரு அமைப்பு மட்டும் தான் இயங்குகிறது. என்று நினைக்கிறன். மற்றும்படி எந்த ஒரு தமிழ் அமைப்பும் அகதிகளுக்காக இயங்கவில்லை.

ல.குரல்: நீங்கள் ருவானைக் குறிப்பிடுகிறீர்களா?
கணநாதன்: ஓம். வேறு ஒரு அமைப்பும் அகதிகள் சம்பந்தமாக இயங்குவதாக எனக்கு தெரியவில்லை. வடிவாகப் பார்த்தால் ஹோம் ஒபிஸ் வந்து அந்த நிலையை ஒரு சிஸ்ரமற்றிகாககத்தான் உருவாக்கியது. முன்னர் நிதிகளைக் கொடுத்து சமூகத்தை பலப்படுத்தி வந்தார்கள். ஆனால் பிறகு இதையெல்லாம் குறைத்து அத்தோடு எங்களுக்குள்ள போட்டிகள் பிரச்சினைகளுக்காகவும் எல்லாம் சேர்ந்து குறைத்துக் கொள்ளப்பட்டது. இப்ப அந்த அமைப்புகள் எதுவும் அகதிகள் பிரச்சினையைத் தொடுவதே இல்லை. ருவானும் பொலிசி வேர்க் என்றில்லாமல் கேஸ் வேர்க்குகள் செய்துதான் தனிப்பட்ட முறையில் உதவி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

ல.குரல்: இந்த விடயத்தில் தமிழ் பொது அமைப்புகள் ஏதாவது செய்யலாம் என்று நினைக்கிறீர்களா?
கணநாதன்: இந்தக் க்ளைமற்றில அவர்கள் பங்களிக்கிறதுக்கு இல்லை. அவர்கள் திருப்பியும் பிழையான நம்பிக்கைகளைக் கொடுக்காமல் அவர்கள் அப்படியே இயங்காமல் போறது நல்லது. அப்படி இருக்கும் போது அகதிக்காவது நான் என்னுடைய அலுவலைப் பார்க்க வேண்டும் என்ற பொறுப்பு ஏற்படும். அவை இருக்கினம் இந்த அமைப்பு இருக்கு அவை கம்பைன் பண்ணுறார் என்று பார்த்து அது எந்த பலனையும் தாற சூழ்நிலை இன்றைக்கு இல்லை. அப்படியான நிலையில இந்த அமைப்புகள் நச்சுரல் டெத்தை சந்தித்தது என்னைப் பொறுத்தவரை நல்லது. அந்த அமைப்புகள் இனி உருவாக்கப்பட்டாலும் அதன் பங்களிப்பு மிகக் கடினமாகத்தான் இருக்கும்.

ல.குரல்: திருப்பி அனுப்பப்படுவதை தடுக்கின்ற விடயத்தில் தமிழ் அமைப்புகள் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்?
கணநாதன்: இந்த திருப்பி அனுப்பபடுகிற விசயத்தை நாங்கள் சமூகமாக விழிப்புணர்ச்சியோடு பார்க்கிறம். ஆனால் ஒருவர் திருப்பி அனுப்பப்பட்டதும் நாஙகளும் திருப்பி அனுப்பப்டவரும் அதை அப்படியே விட்டுவிடுறம். ஹோம் ஒபிஸ் என்ன சொல்லப் பார்க்கிறது என்றால் இத்தனை பேரை திருப்பி அனுப்பின நாங்கள். அவை அங்கு போய் பிரச்சினை இல்லாமல் இருக்கிறார்கள். அதனால் நாங்கள் திருப்பி அனுப்பிறது சரி என்று. அதனால் தாங்கள் அகதிகளைத் தொடர்ந்து திருப்பி அனுப்பிக் கொண்டுதான் இருப்பம் என்று. அப்ப திருப்பி அனுப்பப்பட்ட ஆட்களுக்கு என்ன நடந்தது என்ற ஆதாரங்கள் சேகரிக்க முடியும் என்றால் அது இங்குள்ளவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

புதிய அமைப்புகளை உருவாக்குவதிலும் பார்க்க திருப்பி அனுப்புகிறவர்களுக்கான அட்வைஸ் லைன் ஒன்றை உருவாக்கி அவர்களுக்கான உதவிகளை வழங்க முடியும் என்றால் அது பெரிய உதவியாக இருக்கும்.

ல.குரல்: அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்கள் திருப்பி அனுப்பப்படுவதை நிறுத்தவதற்கு ஏதாவது வழிகள் உண்டா?
கணநாதன்: இன்றைக்கு அகதிகளைத் திருப்பி அனுப்புவதை நிறுத்தச் சொல்வதையும் இலங்கையில் யுத்தத்தை நிறுத்தி யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வரக் கோருவதையும் நான் ஒன்றாகத்தான் பார்க்கிறன். இன்றைக்கு நாங்கள் லொபி பண்ணி யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வரலாம் என்று சொல்லுவாராக இருந்தால் நிச்சயமாக அகதியை அனுப்புவதையும் நிறுத்தலாம். அரசியலில் அடிபட்ட ஒருவருக்குத் தெரியும் இரண்டுமே சரியான கஸ்டம். கொள்கை முடிவுகள் எங்கெங்கோ எடுக்கினம் அதுக்கு ஜனநாயக மூலாமைப் பூசி வைக்கினம். அதில மக்களோ லொபி குறூப்போ வந்து இம்பக்றை ஏற்படுத்த முடியாமல் இருக்கிறது. இது தமிழர்களுக்கு மட்டுமல்ல பொதுவான ஒரு நிலை. முன்னர் ஒரு அகதியைத் திருப்பி அனுப்பினால் அகதி அமைப்புகள் குரல் கொடுக்கும், பிசப் குரல் கொடுப்பார் எத்தினையோ என்ஜிஓ எல்லாம் போர்க்கொடி எழுப்பும்.

ஆனால் இப்ப சட்ட ரீதியாக வாதாடக் கூடிய அடிப்படை உரிமைகளையே கொடுக்காமல் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் உயிராபத்தில் உள்ளவர்களே கண்மூடித்தனமாக திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறார்கள். அவ்வளவத்திற்கு அரசாங்கத்தின் போக்கு கடுமையாக இருக்கிறது. அதனை எதிர்கொண்டு தடுக்கிறது மிகவும் கஸ்டமாக இருக்கிறது.

அரசியல் ரீதியாகவோ லொபி செய்தோ அதைச் செய்யலாம் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

தனிப்பட்ட வழக்குகளில் சட்டரீதியாகச் சென்று முதலில் இருந்தே சரியான முறையில் வாதிட்டு முதற்தடவையே சரியான முறையில் வழக்கு கையாளப்பட்டால் இந்த சூழலிலும் சாதகமாக தஞ்ச விண்ணப்பத்தை பரிசிலிக்கச் செய்ய முடியும். அப்படி இல்லாமல் நிராகரிக்கப்பட்டு நாடுகடத்தலைத் தடுப்பதற்கு முதல் முறையாகப் போடுகிற ஜீடிசறி ரிவியூவை செம்மையாகப் போட்டு இருந்தாலும் உச்ச நிதிமன்றம் வரை சென்று நாடுகடத்தலை நிப்பாட்டக் கூடிய சூழல் இருக்கிறது. அதில் நிராகரிக்கப்பட்டால் கூட ஐரோப்பிய நீதிமன்றம் வரை சென்று நாடுகடத்தலை நிறுத்த முடியும்.