புலம்பெயர் வாழ்வியல்

புலம்பெயர் வாழ்வியல்

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் அவர்களுடைய வாழ்வியல், சமூக, அரசியல் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

வன்னி முகாம் மக்களுக்கு உதவ முன்வருபவர்களுக்கு ஆப்படிக்கும் காரைநகர் நலன்புரிச் சங்கம்!!! : த ஜெயபாலன்

kws-logo.jpg
கண்ட கண்ட ஆட்களையும் எங்களின் வீடுகளில் இருத்தவோ?’
வன்னியில் இடம்பெற்ற அவலத்தை கற்பனையிலோ எழுத்திலோ கொண்டுவர முடியாது. அந்த அவலம் அவ்வளவு கொடியது. அதிலிருந்து தப்பிய மக்கள் இன்று இலங்கை அரசு நலன்புரி முகாம்கள் என்று சொல்லும் முட்கம்பி வேலிக்குள் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். இம்முகாம்களின் நிலை பற்றி மிக விரிவாக சர்வதேச ஊடகங்களே தொடர்ச்சியாக எழுதி இலங்கை அரசின் முகத்திரையைக் கிழித்து வருகின்றன. ஆனால் மறுமுனையில் இந்த முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவும் நடவடிக்கைகளுக்கு லண்டனில் உள்ள சில அமைப்புகள் முட்டுக்கட்டையாகவும் உள்ளன.

குறிப்பாக காரைநகர் நலன்புரிச் சங்கம், லண்டன் அம்மன் ஆலய நிர்வாகிகள் சிலர் முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவ முன் வருபவர்களுக்கு எதிராக அவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக கையெழுத்து வேட்டையில் இறங்கி உள்ளனர்.

பொதுவாக உரிமை மீறல்களுக்கு எதிராக அடிப்படை உரிமைகளைக் கோரி கையெழுத்துப் போராட்டங்கள் நடத்தப்படுவது வழமை. ஆனால் மாறாக தங்கள் சுயநல நோக்குகளுக்காக இந்த ஜனநாயக நடைமுறையை கையெழுத்து வேட்டையை சிலர் நடாத்த முயல்கின்றனர். நுனிநாக்கில் ஜனநாயகம் பேசும் இவர்கள் தமிழ் மக்களின் நலன்தொடர்பில் ஆபத்தானவர்களாக உள்ளனர். ஒரு சிலரின் தூண்டுதலால் முழுமையான புரிதல் இன்றி கையெழுத்து இடுவோர் ஒரு சிலரின் சுயநலன்களுக்கு துணை போய்விடுகின்றனர்.

காரைநகர் நலன்புரிச் சங்கம் ஏற்கனவே சாதியச் சங்கம் என்று பெயரெடுத்துக் கொண்டது. லண்டன் குரல் 19 (ஒக்ரோபர் 2007 – நவம்பர் 2007) இதழிலும் அதற்கு முன்னர் வெளியான இதழ்களிலும் காரைநகர் நலன்புரிச் சங்கத்தின் சாதியப் போக்குத் தொடர்பாக விரிவாக எழுதப்பட்டு இருந்தது. ( காரைநகரும் சாதிய முரண்பாடும் :காரை முகுந்தன் ) சங்கத்தின் பொதுக் கூட்டத்தில் அதன் உறுப்பினர் ஒருவரை சாதிப் பெயரைச் சொல்லி விழித்ததைத் தொடர்ந்து இச்சர்ச்சை உருவாகியது. தற்போது காரைநகர் நலன்புரிச் சங்கம் தனது சாதியச் சிந்தனைக்காக மற்றுமொரு தடவை சர்ச்சைக்குள் சென்றுள்ளது. ( காரை மக்களைத் தலைகுனிய வைத்த காரை நலன்புரிச் சங்கம் :காரை முகுந்தன் )

வன்னி முகாம்களில் உள்ள மக்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பாக கிழக்கு லண்டனில் நடைபெற்ற கலந்துரையாடலில் யுத்தத்தில் சம்பந்தப்படாத பகுதிகளைச் சேர்ந்தவர்களை அந்தக் கிராமத்தவர்கள் பொறுப்பெடுத்து பார்க்க முடியும் என்ற யோசனையை பி சோமசுந்தரம் முன்வைத்தார். காரைநகர் நலன்புரிச் சங்க உறுப்பினரான இவர் காரைநகரில் பல கல்வீடுகள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. வன்னி முகாம்களில் உள்ள காரைநகர் மக்களைப் பொறுப்பேற்று அவர்களை காரைநகரில் மீளவும் குடியமர்த்தலாம் என்ற யோசனையை பி சோமசுந்தரம் முன் வைத்தார். அதனைப் பலரும் அன்று வரவேற்றனர். சோமசுந்தரம் தனது யோசனையை பேச்சுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. உத்தியோகபூர்வமாக செயற்பாட்டிலும் இறங்கினார்.

இலங்கை அரசுக்கு தனது யோசனையை எழுதிய சோமசுந்தரம் காரைநகர் மக்களை மீளவும் காரைநகரில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டார். சோமசுந்தரம் இலங்கை அரசைக் கேட்டுக் கொண்டதில் எந்தத் தவறும் இல்லை. ஏனென்றால் சர்வதேசமே இன்று இலங்கை அரசிடம் மக்களை மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கும் படியே கேட்கின்றது. அதற்கு பதிலளித்த இலங்கை அரசு இதுதொடர்பாக பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்பு கொண்டு மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டிருந்தது.

இதனை காரைநகர் நலன்புரிச் சங்கத்திற்கு சோமசுந்தரம் தெரியப்படுத்தினார். இது தொடர்பாக காரைநகர் நலன்புரிச் சங்கம் மே 31 2009ல் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து காரை மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பாகவும் பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தடன் பேசுவதற்கும் ஒரு உபகுழுமைக்கப்பட்டது. அதில் சோமசுந்தரம் பிரபல வானொலி அறிவிப்பாளர் தயானந்தா ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். ஆனால் உப குழுவோ அல்லது காரைநகர் நலன்புரிச் சங்கமோ மேற்கொண்டு நடவடிக்கையில் இறங்க மறுத்தனர். இலங்கைத் தூதரகத்துடன் வன்னி முகாம்களில் உள்ள மக்கள் பற்றி பேசுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கோரும் கடிதம் ஒன்று தயாரிக்கப்பட்டு ( Letter_Prepared_for_SLHC )அனுப்பப்பட முடிவெடுக்கப்பட்ட போதும் அதனை காரைநகர் நலன்புரிச் சங்கம் அனுப்பி வைக்கவில்லை.

சோமசுந்தரம் தானே நேரடியாக மின் அஞ்சலில் அக்கடிதத்தை அனுப்பி வைத்தார். அதற்கு யூன் 16 2009ல் பதிலளித்த இலங்கைத் தூதரகம் யூன் 26 2009ல் சந்திப்பதற்கு நேரத்தை ஏற்பாடு செய்து வழங்கியது.

இதற்கிடையே இந்த உப குழு அமைக்கப்பட்ட பின் காரைநகர் நலன்புரிச் சங்கத்தை சேர்ந்த சிலர் இந்த மீளக் குடியமர்த்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்பட ஆரம்பித்தனர். ‘தூதரகத்துடனோ துரோகக் கும்பல்களுடனோ சங்கம் தொடர்புகொள்வதை நிறுத்துமாறு தயவாகக் கேட்டுக்கொள்கிறோம்.’ என்று லண்டன் வாழ் காரைநகர் மக்கள் என்ற பெயரில் பிரசுரம் ஒன்றை வெளியிட்டு பலரிடம் கையெழுத்தும் பெறப்பட்டு உள்ளது. ( Karai_Diasporas_Petition ) இந்தப் பிரசுரத்தை காரைநகர் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் சிவா ரி மகேசன் சோமசுந்தரத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் கையழுத்து இட்டவர்களின் பட்டியலை செயலாளர் சிவா ரி மகேசன் வெளியிடவில்லை. கையெழுத்து இட்டவர்களின் பட்டியலை சோமசுந்தரம் கேட்டிருந்த போதும் இதுவரை அப்பட்டியல் வழங்கப்படவில்லை.

இலங்கை அரசு வன்னி மக்களைத் தடுத்த வைத்துள்ள நிலையில் அவர்களிடம் பேசுவதற்கு என்ன உள்ளது என்பது நியாயமானதாக இருந்தாலும் கடிதத்தின் உள்நோக்கம் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. மேலும் காரைநகர்ச் சங்கத்தின் கடந்தகால வரலாறும் சந்தேகத்திற்குக் காரணமாக இருக்கின்றது.

இந்தச் சூழ்நிலையில் தொடர்ந்தும் இந்த உபகுழுவில் இருப்பது அர்த்தமற்றது என்று கூறி பி சோமசுந்தரம் யூன் 21 2009ல் உப குழுவில் இருந்து வெளியேறினார். தான் மக்களுக்குச் செய்ய வேண்டியதை சுயாதீனமாக சிறிய அளவில் செய்வேன் என்றும் அவர் தனது ராஜினாமாக் கடிதத்தில் தெரியப்படுத்தி இருந்தார்.

யூன் 22 2009ல் இலங்கைத் தூதரகத்திற்கு காரைநகர் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் சிவா ரி மகேசன் அச்சந்திப்பில் தவிர்க்க முடியாத காரணங்களால் தங்கள் உறுப்பினர்கள் கலந்தகொள்ள முடியாது எனத் தெரிவித்து பதில் எழுதினார். ( KWS_Letter_to_SLHC )

இச்சம்பவங்கள் பற்றி சிவா ரி மகேசனுடன் யூலை 4ல் தொடர்பு கொண்ட போது காரைநகர் நலன்புரிச் சங்கத்தின் கீழ்மட்ட உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தமையால் தாங்கள் மேற்கொண்டு செயற்பட முடியவில்லை என சிவா மகேசன் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் ‘அந்த மக்கள் முகாம்களுக்கு வெளியே வந்தபின் அவர்கள் உதவிகளை வழங்க விரும்புகிறார்கள்’ என்றார். உதவி தேவைப்படும் போது தானே செய்ய வேண்டும். இப்போது தானே அவர்களுக்கு உதவி தேவை என்ற திருப்பிக் கேட்ட போது ‘அவர்களுடைய ஆதரவு இன்றி தாங்கள் செயற்பட முடியாது’ என்றும் சிவா மகேசன் தெரிவித்தார். 

வன்னி முகாம்களில் உள்ள காரை மக்களை காரைநகரில் உள்ள கைவிடப்பட்ட வீடுகளில் மீளக்குடியமர்த்துவது பற்றிய யோசனையை சோமசுந்தரம் முன்வைத்த போது உடனேயே எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ‘கண்ட கண்ட ஆட்களையும் எங்களின் வீடுகளில் இருத்தவோ?’ எனச் சிலர் முறுகியதாக லண்டன் குரலுக்கு செய்திகள் எட்டின. அதுபற்றி சிவா மகேசனிடம் காரைநகரில் கைவிடப்பட்டுள்ள லண்டனில் வாழும் ‘உயர் சாதி’ இனரின் வீடுகளில் ஏனைய சாதிக்காரர்கள் குடியிருப்பதை தடுப்பதற்காகவா இந்த முயற்சி கைவிடப்பட்டதா? என்று கேட்ட போது, சிவா மகேசன் முற்றாக அதனை மறுத்தார். ‘சாதிப் பிரச்சினை அங்கு ஒரு விடயமாகப் பார்க்கவில்லை’ என்றார் சிவா மகேசன்.

ஆனால் ‘கையெழுத்து வைத்து இதனை எதிர்த்தவர்கள் பெரும்பாலும் காரையில் உள்ள தங்கள் வீடு வளவுகளில் ஏனைய சாதியினர் வந்துவிடுவார்கள் என்பதாலேயே எதிர்த்தனர். அதற்கு அவர்கள் வைக்கும் காரணங்கள் நொண்டிக் காரணங்களைக் கூறுகின்றனர்’ என இத்திட்டத்தை ஆதரித்தவர்கள் லண்டன் குரலுக்குத் தெரிவித்தனர். ‘கையெழுத்து இட்டவர்கள் யார் என்ற பட்டியலை வெளியிட்டால் இந்த உண்மை வெளியே வந்துவிடும்’ என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். புது றோட்டு – களபூமி என்று பிரிந்து நிற்கும் உயர் சாதி உப பிரிவுகள் இரண்டும் இந்த காரையில் உள்ள கல்வீடுகளில் வன்னி முகாம்களில் உள்ளவர்கள் குடியமர்த்தப்படுவதை கடுமையாக எதிர்ப்பதில் ஒன்றாகவே செயற்படுவதாகவும் குடியேற்றத் திட்டத்தை ஆதரிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை சென்று திரும்பிய குழுவின் மாநாடு ஜேர்மனியில்.

அண்மையில் நடந்தேறிய அனர்த்தங்களால் இடம்பெயர்ந்து தற்போது வன்னியில் தடுப்பு முகாம்களில் வசித்துவரும் தமிழ் மக்களின் வாழ்வியலை மேம்படுத்தும் முகமாக ஜரோப்பிய முழுமையான அமைப்பொன்றை நிறுவுவதற்காக July 17ம் திகதி தொடக்கம் 19ம் திகதி வரை Germany – Stuttgart இல் கூட்டத் தொடர் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டத்திற்கு ஜேர்மனி, டென்மார்க், சுவிற்சலாந்து, பிரான்ஸ், ஜக்கிய இராச்சியம், நோர்வே போன்ற நாடுகளில் இருந்து எழுபதிற்கும் அதிகமான பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும் ஊடகவியலாளர்களும் கலந்து கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மகாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் கடந்த பங்குனி மாதம் ஸ்ரீலங்கா விஜயம் செய்து பசில் ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டாக்கடர் பாலித கோகன்ன ஆகியோருடன் 3 நாட்கள் மாநாட்டில் கலந்து கொண்டதுடன், செட்டிக்குளம் தடுப்பு முகாம்களுக்கும் விஜயம் செய்தது குறிப்பிடத்தக்கது. இவ் விஜயத்தில் ஜக்கிய இராச்சியம், கனடா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜேர்மனி, சவுதி அரேபியா, சுவிற்சலாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளில் இருந்து 21 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யும் இலங்கை அரசின் அதிகாரிகளை தனிப்பட்டரீதியில் சந்தித்து பேசுவதை தவிர்த்து, ஒரு சர்வதேச அமைப்பாக இயங்குவதே இக்குழுவின் முக்கிய நோக்கம்.

மார்ச் மாதத்தில் கொழும்பில் இடம்பெற்ற மாநாட்டை தொடர்ந்து தற்போது அவுஸ்திரேலியாவில் இக்குழு இயங்கத் தொடங்கியுள்ளது. ஜரோப்பாவில் அமையவிருக்கும் இக்குழு அவுஸ்திரேலியா மற்றும் ஏனைய நாடுகளில் அமையவிருக்கும் குழுவுடன் இணைவாக பணிபுரியும் எனத் தெரியவருகின்றது.

வன்னி முகாம்களின் நிலை தொடர்ந்தும் மோசமானதாக உள்ள நிலையில் ஏற்பாட்டாளர்கள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

ஏடு – அங்குரார்ப்பணக் கூட்டமும் கலை விழாவும் – 18th July

aedu-image-for-thesam1.jpg
ஏடு அங்குரார்ப்பணக் கூட்டமும் கலை விழாவும்.
Launching The Association for Education Development of Underprivileged – AEDU

Venue:
HARROW TEACHERS CENTRE, TUDOR ROAD, HARROW,MIDDLESEX, HA3 5PQ
Saturday – 18th July 2009, 5PM

Programme:
Introduction to AEDU
Presentation – Underprivileged Children
Orchestra
Live Music
Read the full details in the PDF

Tickets £10.00 under five s – Free
Contact: admin@aedu.info
www.aedu.info

இலங்கையின் வடக்க கிழக்கு பகுதியில் கடந்த 30 வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நல்வாழ்விற்கு உதவம் வகையில் இந்த ஏடு அமைப்பு உருவாக்கப்பட்டு செயற்ப்பட்டுக் கொண்டிருக்கிறது, மட்டக்களப்பு வுவுனியா திருகோணமலை மன்னார் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் தமது குழந்தைகள் நல பராமரிப்பு பாதுகாப்புத் திட்டங்களை ஆரம்பித்து இயங்கி வருகின்றனர்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பலவிதமான கஸ்டங்களை அனுபவித்துவரும் எமது குழந்தைகளை பாதுகாக்க
ஓரிரு அமைப்புக்களே இயங்கிய போதிலும் மேலும் பல அமைப்புக்களின் ஒத்தழைப்பும் அவசியமும் இந்த குழந்தைகளுக்கு தேவைப்படுகின்றது. கடந்த கசப்பான ஆபத்தான காலங்களிலும் இந்த அமைப்பினரும் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களும் பல உதவிகளை குழந்தைகளுக்கு தனிப்படவே செய்து வந்திருந்தனர். இந்த அமைப்பின் அங்குரார்பணம் இவர்களை மேலும் ஊக்குவிப்பதற்கும் இவர்களது குழந்தைகள் நலன் சேவைகளை மேலும் பரவலாக்கவும் பல ஆதரவாளர்களையும் சேவையாளர்களையும் இணைத்துக்கொள்ளவும் உதவிசெய்யும்.

பல பில்லியன்கள் யுத்தத்திற்கு வழங்கிய புலம்பெயர் மக்களின் பொறுப்பிலிருந்து இந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பிலிருந்தும் ஒதுங்கிவிட முடியாததாகும்.

—————————————————————————————————————-

அன்புடையீர்,
வாழ்வோம் வாழ்விப்போம்.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக எமது தாய்மண்ணில் இடம்பெற்றுவரும் யுத்தமும், அதன் விளைவான இடப்பெயர்வுகளும்,அண்மையில் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காவுகொண்ட ஆழிப்பேரலையும் (வுளரயெஅi) எமது மக்களைப் பேரழிவுக்குள்ளாக்கியதோடு பெருந்துயரத்தினுள்ளும் இட்டுச் செல்வதை நாம்
கண்கூடாகக் கண்டுகொண்டிருக்கின்றோம்.

இத்தகைய சூழ்நிலையில் மிக மோசமான பாதிப்புக்களுக்கு உள்ளாவோர் சிறுவர்களும் பெண்களுமேயாவர். இன்று பல்லாயிரக் கணக்கான சிறார்கள் தாயையோ,தந்தையையோ,அன்றேல் இருவரையுமோ இழந்து பரிதவிக்கின்றனர். விதவைகளாக்கப்பட்டுள்ள பெண்கள் பல்லாயிரக் கணக்கினர். பெற்றோரை இழந்த
குழந்தைகளுக்காக சிறுவர் பராமரிப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

பெற்றோர் உயிருடனுள்ள போதிலும் தொழில் வாய்ப்புக்கள் இயற்கையாகவோ,செயற்கையாகவோ தடுக்கப்படும் காரணத்தால் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பலர் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் வளர்கின்ற கொடுமையை இங்கு பரக்கக் காணலாம்.
புள்ளி விபரங்களை எடுத்து நோக்குவோமாயின் பெற்றோர் உயிருடனிருந்த போதிலும் தம் பிள்ளைகளைப் பராமரிக்க இயலாமையால் அவர்கள் சிறுவர் பராமரிப்பு இல்லங்களை நாடுகின்றனர்.இதன் காரணமாகப் பெருமளவு சிறார்கள் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் வாழ்வது வெளிக் கொணரப்பட்டுள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி பொருளாதார பலமின்மையால் பல்லாயிரக்கணக்கான சிறார்கள் பாடசாலைக் கல்விக்கு முற்றுப்பள்ளி வைத்துவிட்டு இடைவிலகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பல சிறார்கள் பாடசாலைக்கே செல்ல முடியாத நிலைமையும் வெளிப்பட்டுள்ளது.

இத்தகைய துர்ப்பாக்கிய நிலை நீடிக்குமாயின் எமது சமூகம் பேரழிவுக்குள்ளாகும் என்பதை எவரும் மறுக்கவியலாது.

நகரப் புறங்களில் அமைந்துள்ள சில பாடசாலைகள் கல்வி அமைச்சு, கல்வித் திணைக்களம்,புலம்பெயர்ந்து வாழும் மக்கள் ஆகியோரால் பேணப்படுவதனால் சிற்சில வசதிகளைப் பெற்றபோதினும் பின்தங்கிய கிராமப்புறப் பாடசாலைகள் கவனிப்புக்குள்ளாகாததுடன் அப்பகுதி மாணவர்களது எதிர்காலம் குறித்துக்
கவலைப்படாத அவலமும் இல்லையென்று சொல்வதற்கில்லை.

பெற்றாரை இழந்து ஆதரவற்றுக் காணப்படும் சிறார்களும்,வறுமைக்கோட்டின் கீ;ழ் வாழ்ந்துவரும் குடும்பங்களைச் சேர்ந்த சிறார்களும் தம் பாடசாலைக் கல்வியைத் தடையின்றித் தொடரவும் அன்பும் அரவணைப்பும் பெற்றுத் தத்தம் குடும்பங்களுடனோ, உற்றார் உறவினர்களுடனோ குடும்பச் சூழலில் தங்கி வளரும் வாய்ப்பை வழங்கவும், இப்பிள்ளைகள் நிறுவனப்படுத்தப்படுவதைத் தவிர்க்கவும், பின்தங்கிய கிராமப்புறப் பிரதேசப் பாடசாலைகளின் கல்வித்தர மேம்பாட்டுக்கு உதவுவதையும், நோக்கங்களாகக்
கொண்டு தாபிக்கப்பட்டதே எமது அமைப்பு.

இந்த நோக்கங்களை எய்தும் பொருட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ்வமைப்பு வெற்றிகரமாகத் தன் பணியைத் தொடர்கிறது. இவ்வமைப்பின் செயற்பாட்டாளர்களது நோக்கங்களைப் பலப்படுத்தவும், மேற்படி செயற்பாடுகளை வட-கிழக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கவும,; தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்.. இதன்பொருட்டுத் தங்களது ஆக்கபூர்வமான ஆதரவையும் ஊக்குவிப்பையும் நாடி நிற்கின்றோம்.

18.07.2009 சனிக்கிழமை நடைபெறவுள்ள எங்கள் அமைப்பின் அறிமுக நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் தங்கள் மேலான ஆதரவை நல்குமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

[Launch of AEDU on Saturday the 18th of July 2009 @ 5.00 pm at Harrow Teachers’ Centre, Tudor Road, Wealdstone, Harrow, Middlesex Ha3 5PQ, Nearest tube station- Harrow & Wealdstone. Contact us for Dinner tickets (£10 per person)].

ஆதரவற்ற மற்றும் வறுமையில் வாடும் சிறார்களுக்கு கல்வி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதோடு, அவர்கள் நிறுவன மயப்படுத்தப்படுவதைத் தவிர்த்து வளமுள்ள நற்பிரஜைகளாக்குவதே எமது இலக்காகும்.

பெற்றாரையும், உற்றாரையும், உடன் பிறப்புக்களையும் காலத்தின் கட்டாயத்தால் பிரிந்து, அன்பையும் அரவணைப்பையும் இழந்து பரிதாபகரமான சூழலில் அல்லலுற்றுக்கொண்டிருக்கும் சின்னஞ்சிறாரை காப்பும் கணிப்பும் உடையவர்களாக மாற்றியமைக்க உதவுவதே எமது நோக்காகும்.

இது தொடர்பான மேலதிக விபரங்களும், நடைமுறைப் படுத்தப்படும் முறையும், எமது அறிமுக நிகழ்வின்போது தெளிவுறுத்தப்படும்.

அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல்
ஆலயம் பதினாயிரம் கட்டல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர்ஏழைக்(கு) எழுத்தறிவித்தல் — மகாகவி பாரதி.

இங்ஙனம்,

Admin-AEDU

இன்று பிரித்தானியாவில் சாதியப் பாகுபாடு விழிப்புணர்வு மாநாடு

Virendra Sharma MPபிரித்தானியாவில் காணப்படும் சாதியப் பாகுபாட்டை அடையாளப்படுத்தம் மாநாடு ஒன்று யூலை 15ல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. Voice of Dalit International (VODI) என்ற அமைப்பும் Catholic Association for Racial Justice (CARJ) என்ற அமைப்பும் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. இம்மாநாட்டில் ஆபிரிக்க ஆசிய சமூகங்கள் முகம்கொடுக்கும் இனப்பாகுபாடு பற்றியும் பேசப்பட இருக்கின்றது.

ஈலிங் சவுத்தோல் பா உ விரேந்திர சர்மா சிறப்புப் பேச்சாளராக உரையாற்றும் இம்மாநாட்டில் சகல சமயக் குழுக்கள், தேவாலயங்கள், பாதிக்கப்பட்ட சமூகங்கள், பொது அமைப்புகள், ஊடகங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் என 70 பேர்வரை கலந்துகொள்கின்றனர்.

National Council of Dalit Christians (NCDC) என்ற இந்தியாவில் உள்ள அமைப்பில் இருந்து வி ஜே ஜோர்ச் சர்வதேசப் பேச்சாளராகக் இம்மாநாட்டில் உரைநிகழ்த்த உள்ளார்.

பிரித்தானியாவில் ஆசிய சமூகங்களின் பெருக்கத்துடன் சாதியப்பாகுபாடு சமுகங்களை சாதிய அடிப்படையில் பிளவுபடுத்துவதாக Catholic Association for Racial Justice (CARJ) அமைப்பு இம்மாநாடு பற்றிய தனது அழைப்பிதழில் தெரிவித்து உள்ளது. இச்சாதியப் பாகுபாடு ஒரு பரம்பரையில் இருந்து மற்றைய பரம்பரைக்கு கைமாற்றப்படுவதாகவும் அவ்வமைப்பு தெரிவிக்கின்றது.

சாதியப்பாகுபாடு பாதிக்கப்பட்டவர் மீது கீழான முத்திரையைக் குத்துவதாகவும் அவருடைய ஆளுமையை பாதிப்பதாகவும் சமூகத்தில் பெறுமதி அற்றவர் என்ற உணர்வைத் தோற்றுவிப்பதாகவும் Catholic Association for Racial Justice (CARJ)  தெரிவிக்கின்றது. பிரித்தானியா உறுதியாகக் கடைப்பிடிக்கும் சுதந்திர விதிகள் சமத்துவம் என்ற ஜனநாயக விழுமியங்கள் சாதியப் பாகுபாட்டினால் கீழ்நிலைப் படுத்தப்படுவதாக Catholic Association for Racial Justice (CARJ) அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் 3.5 மில்லியன் தெற்காசியர்கள் வாழ்கின்றனர். இவர்கள் பிரித்தானியாவின் மொத்த மக்கள் தொகையில் 5.7 வீதம். இவர்களில் 50 000 தொடக்கம் 200 000 பேர் வரையானவர்கள் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் என Voice of Dalit International (VODI) அமைப்பு தெரிவிக்கின்றது.

‘இதனைச் சிலர் இந்து சமயப் பிரச்சினையாகக் கூறுகிறார்கள். ஆனால் அப்படியல்ல’ என்று கூறும் ஈலிங் – சவுத்தொல் பா உ விரேந்திர சர்மா  ‘இஸ்லாம், சீக், கிறிஸ்தவம், பௌத்தம் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் துணைக் கண்டத்தில் இருந்த வந்திருந்தால் அவர்களது சமூகப் பின்னலில் சாதியமும் பின்னப்பட்டு இருக்கும்’ என்கிறார். சர்மா IANSற்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்து இருந்தார்.

மேற்கு லண்டனில் உள்ள Voice of Dalit International (VODI) அமைப்பின் அலுவலகத்திற்கு சாதியப் பாகுபாடு பற்றிய 20 குற்றச்சாட்டுகள் ஒவ்வொரு வாரமும் வருவதாக அவ்வமைப்பின் இயக்குநர் Eugene Culas தெரிவிக்கின்றார். இக்குற்றச்சாட்டுக்கள் திருமணம், தொழில், சேவைகள், கல்வி அகியவை தொடர்பாக வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

பாதிக்கப்பட்டவர்களில் ராம் லஹாக் என்ற கொவன்ரியின் முன்னாள் மேயர் ஒருவரும் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இந்தியர் இல்லாத பகுதியில் போட்டியிட நேர்ந்தது. பள்ளியில் இவரது பிள்ளைகளும் பாதிக்கப்பட்டனர். இவர் தனது கதையை ‘No Escape: Caste Discrimination in the UK. என்ற அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

தெருக்கதை: வழிப்போக்கன்

kulan-article2.jpg
தெருக்கதைகள்: 1

நான்: யோசப்பு அண்ணை! எல்லாம் உப்புச்சப்பு இல்லாமல் முடிஞ்சு போச்சுது. நீங்கள்தான் புலிகளின்டை முதல் புள்ளியாக நிண்டனீங்கள்.
யோசப்பு: ஓம் தம்பி எங்கடை காலகஸ்டம் இப்படியாப்போச்சு. யாருக்குத் தெரியும் இவன் உப்பிடிப் படம்காட்டுவான் எண்டு.

நான்: நீங்கள்தான் தலைவரைத் தலையிலை கொண்டு திரிந்தனீங்கள். இப்ப உப்பிடிக் கதைக்கிறியள்.
யோசப்பு: கொண்டு தெரிஞ்சனாங்கள் தான். எங்களுக்கு விடுதலைவேணும் தானே தம்பி.

நான்: நீங்கள் மட்டும்தான் உண்மையைச் சொல்லுறியள். உங்களுக்கு மட்டும்தான் விடுதலை வேணும் எண்டு. புலியள் மக்களுக்கு விடுதலை, மக்களுக்கு விடுதலையெண்டு தங்களுக்குக்குத் தானே நாடு கேட்டவங்கள், நாடு நாடாய் காசு சேர்த்தவங்கள்.
யோசப்பு: நான் எங்களுக்குகெண்டது மக்களுக்குத் தான் தம்பி.

நான்: அப்ப நீங்கள் என்னும் மாறேல்லை?
யோசப்பு: நான் மாறிட்டன் அப்பு. கே.பின்டை பக்கம் மாறிட்டன். நான் இப்ப புலியில்லை.

நான்: அப்ப கே.பின்டை குழுவை என்னெண்டு சொல்லுறது?
யோசப்பு: அது பிரபாகரன் புலி இது கேபியின் புலி.

நான்: உங்கடை புலி என்ன செய்யப்போகுது?.
யோசப்பு: செய்தியள் பாக்கிறதில்லையோ? நாடுகடந்த தமிழ்ஈழத்துக்கான போராட்டம் தொடங்கிட்டம். எங்கடை அரசியல் போராட்டம்தான்.

நான்: நீங்கள் எல்லாரும் வைச்சால் குடும்பி வழிச்சால் மொட்டைதான்? ஒண்டில் ஆயுத போராட்டம் இல்லையெண்டால் அரசியல் போராட்டம்.
யோசப்பு: ஆயுதப்போராட்டம்தான் எல்லாம் முடிஞ்சுபோச்சே. உலகநாடுகள் எல்லாம் சேர்ந்து எங்களை நாசம் அறுத்துப்போட்டுதே. போதாதே தம்பி?.

நான்: வெளிநாடுகளைக் குறைசொல்லாதையுங்கோ? நீங்களும் அமெரிக்காவேடையும் சண்டைக்கு நிண்டனியள்தானே. எண்டைக்கு அரசியலைப்பற்றி யோசிச்சனியள்? சரி கிடைச்ச தீர்வுகளையாவது வைச்சுக் கொண்டு தொடர்ந்து போராடியிருக்கலாம் தானே? நீங்களும் எங்கடை மக்களையே கொன்றுபோட்டு இராணுவம் கொல்லுது என்று உலகுக்குப் படம் காட்டினியள் தானே. உங்கடை திருகு தாளங்களையெல்லாம் சற்றலைட்டிலை மற்றநாடுகள் பாத்திருக்கும். சொந்த மக்களையே பயணக்கைதியாக வைத்திருந்த ஒரேயொரு போராட்டம் உங்கடைதான்.
யோசப்பு: நடந்ததைக் கதைச்சுப் பிரயோசனம் இல்லை, நடக்க வேண்டியதைப் பாப்பம்.

நான்: இனி நடக்க என்ன கிடக்கு. ஊரை அடிச்சு அரசாங்கத்துக்குக் குடுத்தியள். போராட்டம் என்று போராடும் சக்திகளான மக்களையே கொன்று குவிச்சியள். மிச்சம் மீதியாய் கொஞ்சச்சனம் தப்பி ஒட்டி இருக்குதுகள். தொடருங்கோ உங்கடை போராட்டுங்களை. கிழக்கிலை நீங்கள் வளத்துவிட்ட நம்பிக்கை நட்சத்திரங்கள் கிளம்பிட்டினம். இனி இந்தியாவும் தன்ரை பங்குக்கு தமிழ்குழுக்களுக்கு காசும் ஆயுதப்பயிற்சியும் குடுத்துவிடும் சீனனை இலங்கையிலை இருந்து எறிய.
யோசப்பு: என்னடா தம்பி நம்பிக்கையைக் கைவிடக்கூடாது. இப்ப என்ன செய்யச் சொல்லுறாய்.

நான்: எல்லாம் செய்து முடிச்சுப்போட்டு இப்ப எங்களிட்டை வாறியள். அப்ப சொன்னம் கேட்டனியளோ? இப்பவும் நீயோ நானோ என்று பிரிஞ்சு நின்று அடிபடாமல் எல்லாருமாய் சேர்ந்து சேர்த்த காசுகளை அந்தமக்களுக்குக் கிடைக்கச் செய்கிறதோடை ஆயுதம் அது இது என்று அவசரப்படாமல் நிதானமாய் எப்படி உலகநாடுகளின் அனுசரணையோடை எம்மக்களுக்கு குறைந்தபட்ச அரசியல் தீர்வு ஏதாவது கிடைக்குமோ என்று பாருங்கோ.
யோசப்பு: அதைத்தானே எங்கடை கேபியும் சொல்லுறார். பிரபாகரன் இருக்கிறார் எண்ட மற்றக்குழு பிரபாகரன் வரட்டும் எண்டு பாத்துக் கொண்டிருக்கினம்.

நான்: கேபி சொல்லுறது சரி தமிழீழம் என்றும் சொல்லுறியள். உலகநாடுகளே சொல்லிப்போட்டுது சின்னத்தீவைப் பிரிக்க ஏலாது எண்டு. இப்ப பிரபாகரன் இருக்கிறாரோ இல்லையோ எண்டதில்லை இண்டைய பிரச்சனை. இருந்தா வரட்டும், அவர் வரமாட்டார் சனத்தைப்படுத்தின பாட்டுக்கு சனமே அடிச்சுச் சாக்காட்டிப் போடும். உங்கடை கேபியும் தமிழீழம் எண்டு காலத்தை இழுத்தடிக்கிறதை விட்டுப் போட்டு ஏதாவது உடனடியாக சூட்டோடை சூடா உலகத்தின்ரை பார்வை மற்றப் பக்கங்களுக்கு திரும்பமுன்னம் நடக்க வேண்டியதைப் பாருங்கோ. ஆறினால் கஞ்சி பழங்கஞ்சிதான்.

நான்: (யோசப்புவின் நண்பர் ஒருவர் முகத்தைத் திருப்பிக் கொண்டு போகிறார்) அண்ணை உங்கடை பிரெண்டு உங்களைக் கண்டும் காணாத மாதிரிப்போறார்.
யோசப்பு: அவர் என்ணோடை கொஞ்சம் மனக்கசப்புத் தம்பி. எல்லாம் புலிப்பிரச்சனைதான். வேறை என்ன காசுதான்.

நான்: புலிக்கெண்டு வாங்கி உங்கடை பொக்கட்டை நிரப்பிப்போட்டியள் போலை?
யோசப்பு: தம்பி உப்பிடிக் கதைக்கப்படாது. நான் புலிக்கு விசுவாசத்தோடைதான் காசு சேத்தனான். எங்களுக்கு, சேர்க்கிற காசிலை 15 விகிதகொமிசன் தந்தவங்கள்தான். நாங்கள் எங்கடை வேலை வில்லட்டியை விட்டுப்போட்டுத்தானே காசு சேர்க்கப் போனனாங்கள். போற இடத்திலை எத்தினை கேள்வி நியாயம். மழை வெய்யில்…காடு கரம்பையெண்டு திரிஞ்சனாங்கள்.

நான்: சரி மனச்சாட்சிப்படி சொல்லுங்கோ உது உதவியோ தொழிலோ?
யோசப்பு: உதவிதான் தம்பி. மற்றவை எல்லாம் வீட்டிலை குளிரிலை நித்திரை கொள்ளேக்கை நாங்கள் மட்டும் உந்தப் பனிக்கிள்ளையும் குளிருக்கிள்ளையும் திரிஞ்சு காசு சேத்தனாங்கள்.

நான்: அதுக்குத்தானே உங்களுக்கு கொமிசன் தந்தவங்கள். உங்களுக்குக் காசு தந்தவங்கள் எல்லாம் வானத்திலை இருந்து கொட்டுண்டதைப் பொறுக்கித்தரேல்லை.
யோசப்பு: நீ என்ன தம்பி உதிலைபோன என்ரை பழைய பிரெண்டு மாதிரிக்கதைக்கிறாய். அவரும் உப்பித்தான்; தந்தகாசைத் திருப்பித்தா எண்டு கேட்கிறார். போராட்டத்துக் கெண்டு கொடுத்துப்போட்டு என்னட்டைக் கேட்டால் நான் எங்கை போறது தம்பி.

நான்; கனக்கவே தந்தவர்? வாங்கின கொமிசனிலை குடுக்கவேண்டியது தானே.
யோசப்பு: ஒரு இலட்சம். அந்தக்காசை ஒவ்பிசிலை குடுத்திட்டன். போய் அவங்களைக் கேட்க வேண்டியது தானே.

நான்: உங்களிட்டைத் தந்த காசை எப்படி அவங்களிட்டைக் கேட்கிறது. உங்களுக்குத் தெரியுமோ அந்தாள் பொலிசுக்குப் போகலாமமெண்டு.
யோசப்பு: அதுதானே முடியாது தம்பி. தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு எப்படி காசு குடுப்பாய் என்று கேட்டு அவரையுமெல்லோ உள்ளுக்குப் போடுவாங்கள்.

நான்: ஓகே..கொஞ்சப்பேர் வந்து தன்னை வெருட்டிக்காசு கேட்டது என்று சொல்லலாம் தானே. புலியள் வெருட்டிக்காசு வாங்கிறது ஐரோப்பா முழுக்கத் தெரியும் தானே.
யோசப்பு: அதுக்குத்தானே நான் கே.பின்டை பக்கம் போட்டேனே. பொலிஸ் வந்தால் நான் கூட்டிக் கொண்டுபோய் யாருட்டை காசு கொடுத்தனான் எண்டு காட்டுவன். பேந்து புலிகளும் அவரும் பட்டபாடு. இல்லையெண்டால் சொல்லுவன் நான் இப்ப கேபியின் பக்கம் புலியைப்பற்றி எனக்குத் தெரியாது எண்டு.

நான்: உப்பிடிச் சொல்லி நீங்கள் நழுவேலாது. தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு காசு சேர்க்கிறதற்கு சட்டம் இடங்கொடுக்காது. காசுகுடுத்த எல்லாரும் சேர்ந்து பொலிசுக்கோ கோட்டுக்கோ போனால் வாங்கின காசுக்கு நீங்கள் தான் பொறுப்பு.
யோசப்பு: அதுதானே பிரபாகரனின்டை கையெழுத்தோடை றிசீட்டுக் கொடுத்திருக்கிறம். போய் பிரபாகனிட்டைக் கேட்க வேண்டியது தானே.

நான்: நீங்கள் சொல்லுறமாதிரி பிரபாகன் மேசையிலை இருந்து உந்த றிசீட்டுக்களுக்கு கையெழுத்துப் போட்டுக் கொண்டு இருந்ததாலைதான் போராட்டம் தோத்துப் போனதாக்கும். என்ன கதைவிடுகிறியள் அண்ணை. உந்த றிசீட்டே கள்ளவேலை தான். ஒண்டைப் பிடிக்கப்போய் எல்லாம் பிடிபடப்போகுது.
யோசப்பு:அப்ப என்ன தம்பி செய்கிறது.

நான்: போய் பிரபாகரனிட்டைக் கேழுங்கோ.
யோசப்பு: தம்பி என்னை நடுத்தெருவிலை விட்டுவிட்டுப் போகிறீர்.
நான்: நீங்கள் எல்லாரும் கறக்கிறதையெல்லாம் கறந்து போட்டு எங்களையும் மக்களை நடுத்தெருவிலைதானே விட்டுனீங்கள். வருவன் இப்பவில்லை… காசெண்டு வந்தால் பொல்லோடை வருவன்…

கொலை மற்றும் தலையை வெட்டிக் கொல்ல முற்பட்ட 10 பேருக்கு சிறைத் தண்டனை!!!

Murder_Weaponநோர்வேயில் கொலை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்ட நோர்வேத் தமிழர்களுக்கு ஒஸ்லோ நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

யூலை 9ல் வழங்கப்பட்ட இத்தீர்ப்பில் கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட ஐவருக்கு 3 வருடங்கள் முதல் 14 வருடங்கள் வரை ஒவ்வொருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. பாரிய உடற்காயங்களை விளைவித்த மேலும் ஐவரும் குற்றவாளிகளாக இனம்காணப்பட்டு உள்ளனர். இந்த வன்முறைக் குழுக்கள் தமிழ் சமூகத்தினுள் பயப் பீதியை ஏற்படுத்தி உள்ளதாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக அப்போது நோர்வேயில் வெளியாகிய செய்திகளை அருகில் உள்ள இணைப்பில் காணலாம்.
http://www.vg.no/nyheter/innenriks/artikkel.php?artid=174946
http://www.vgtv.no/player/index.php?id=10749

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் உள்ள கல்பக்கன் எனும் இடத்தில் ஓகஸ்ட் 12 2007ல் இடம்பெற்ற குழு மோதலில் செலிக்கன் ரஞ்சன் என்ற 19 வயது இளைஞர் கொல்லப்பட்டார். முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இளைஞர் துப்பாக்கிச் சுட்டுக்கு இலக்காகி அவ்விடத்திலேயே கொல்லப்பட்டார். நேர்வேயில் தமிழ் சமூகத்திடையே இடம்பெற்ற மோசமான ஒரு மோதல் சம்பவமாக இது இருந்தது.

ரமணன் விவேகானந்தன் (20) என்பவரைக் கொலை செய்யத் திட்டமிட்டு 10க்கும் மேற்பட்டவர்கள் பல பாகங்களில் இருந்தும் ஒஸ்லோவின் கல்பக்கன் பகுதிக்கு கத்தி, வாள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் துப்பாக்கியும் தாங்கி வந்துள்ளனர். அனைவரும் ஒஸ்லோவில் கூடி கல்பக்கன் பகுதியில் இருந்த ரமணன் விவேகானந்தன் மீது பதுங்கி இருந்து தாக்கி உள்ளனர். அப்போது ரமணன் விவேகானந்தனுடன் ஐவர் இருந்துள்ளனர். ரமணன் விவேகானந்தனின் தலையிலும் உடலிலும் துப்பாக்கிச் சூடுபட்டு அவர் நிலத்தில் வீழ்ந்த போது அவருடைய தலையைத் துண்டிக்க முற்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு வருடங்களாக இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த மோதலுக்கு காரணம் என்று தெரியவருகிறது.

இச்சம்பவத்தில் கண்ணன், குகன் ஆகிய இருவரும் சூட்டுக்காயம் மற்றும் வாள்வெட்டுக் காயங்களினால் எற்பட்ட அதிக இரத்தப் போக்குடன் மிக ஆபத்தான நிலையில் உளவல் பல்கலைக்கழக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

Murder_Weaponசம்பவம் இடம்பெற்ற மைதானப் பகுதியில் இருந்து ஒரு பிஸ்டலையும் ஒரு வாளையம் பொலிஸார் மீட்டனர். இச்சம்பவத்தில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஆதரவாகப் பலர் பின்நிறுத்தப்பட்டதாகவும் அவர்கள் ஜேர்மன், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து ஒஸ்லோவிற்கு இந்த நோக்கத்திற்காக வந்திருந்ததாகவும் ஒஸ்லோ நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Yogarajah_Balasinghamஇம்மோதலில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் எல்ரிரிஈ உடன் தொடர்புபட்டவர்கள் என்றும் ஒஸ்லோவில் உள்ள வியாபார நிறுவனம் ஒன்றின் உரிமம் தொடர்பில் எழுந்த சர்ச்சையே இந்தத் தாக்குதலைத் தூண்டியதாகவும் செய்திகள் அப்போது வெளியாகின. ஆனால் அப்போது நோர்வே பொறுப்பாளராக இருந்த பாலசிங்கம் யோகராஜா இக்குற்றச்சாட்டை முற்றாக மறுத்திருந்தார். எல்ரிரிஈக்கும் இச்சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென அவர் தெரிவித்திருந்தார்.

தனது குழந்தைகளைக் கொலை செய்த பின் தற்கொலை செய்ய முயன்ற தாய்

Rita Ariyaratnam with her childrenஅவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இத்துயர சம்பவத்தில் ஏழு மாத இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்தனர். மகப்பேற்றுக்குப் பின்னான மனஉளைச்சலுக்கான மாத்திரைகளை அதிகமாக உட்கொண்ட நிலையில் தாயும் குழந்தைகளுக்கு அருகில் மயங்கிய நிலையில் காணப்பட்டார். மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் ஆபத்தான நிலையைக் கடந்து உடல்நிலை தேறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் கிழக்கு பேர்த் பகுதியில் உள்ள குளோவர்டேல் பகுதியில் வாழும் செல்வின் அரியரத்தினம் எனபவரின் குடும்பத்திலேயே இப்பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. யூலை 6ம் திங்கட்கிழமை மாலை 3:30 மணிக்கு வேலை முடிந்து வீடு திரும்பிய அரியரத்தினம் அவரது குழந்தைகளான லாச்லன், சொஃபீ ஆகிய இருவரும் மனைவி றீட்டாவும் வரவேற்பறையில் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போனார். அவர்களுக்கு அருகில் றிட்டாவுக்கு மருத்துவர்களால் வழங்கப்பட்ட மனஉளைச்சலுக்கான மாத்திரைப் போத்தலும் காணப்பட்டது.

உடனடியாக ‘000’ அவசரசேவைக்கு அவசர அழைப்புவிடுத்தார். மருத்துவ வண்டி வரும்வரை றீட்டாவின் இதயத்தை தொடர்ந்தும் இயக்குவதற்கான செயன்முறைகளை தொலைபேசியில் வழங்க அரியரத்தினம் அதனை மேற்கொண்டார். மருத்துவ வண்டி வந்தடைந்ததும் றீட்டா றோயல் பேர்த் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். குழந்தைகள் இருவரும் பிறின்சஸ் மார்கிரட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர்கள் மருத்துவமனையை அடைகையில் உயிரிழந்தனர்.

குழந்தைகளின் தாயார் றீட்டா பிரசவத்தை அடுத்து ஏற்பட்ட அழுத்தக் குறைவு காரணமாக பல நாட்களாக கோமா நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவர் என்று நெருங்கிய உறவினர் ஒருவர் பொலிஸாரிடம் தெரிவித்தார். குழந்தைகளின் பெற்றாரான இளம் தம்பதியர் எதுவித பிரச்சினைகளுமின்றி திருப்தியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள் என்று இக்குடும்பத்தின் நெருங்கிய நண்பி ஒருவர் தெரிவித்தார்.

Twins_Ariyaratnamஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக இரு குழந்தைகளுடன் திருப்திகரமாக வாழ்ந்து வரும் இக் குடும்பத்தின் இளம் தாயார் நீண்ட காலமாக குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருந்தார் என்றும் இது தற்செயலாக ஏற்பட்ட கர்ப்ப தரிப்பு அல்ல என்றும் அந்த குடும்ப நண்பி மேலும் கூறினார். தாய்லாந்தை பூர்வீகமாக கொண்ட திருமதி றீட்டா அரியரத்தினம் ஒரு அன்பான தாய் என்றும் அவருக்கு அழுத்தக் குறைவு நோய் ஏற்பட்டதும் இதற்கு சிகிச்சை பெற்றதும் அவ்வேளையில் தமக்கு தெரியாது என்றும் அந்த நண்பி கூறினார்.

அவருக்கு டாக்டரினால் வழங்கப்பட்ட மருந்துகள் வீட்டில் காணப்பட்டன என்று சிரேஷ்ட பொலிஸ் சார்ஜன்ட் மார்க் ஃபை தெரிவித்துள்ளார். எந்த விதமான மருந்துகள் என்று தெரிவிக்காத அவர் மருந்தை அளவுக்கதிகமாக அவர் உட்கொண்டிருப்பாரென தாம் கருதுவதாகவும் கூறினார்.
குழந்தைகளின் மரணத்துக்கான காரணத்தை தம்மால் கூற முடியாதிருக்கிறது என்று தெரிவித்த பொலிஸ் சார்ஜன்ட் குழந்தைகளின் பிரேத பரிசோதனை முடிவு கிடைத்த பின்னரே உத்தியோகபூர்வமாக காரணத்தை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

தாய் தனது குழந்தைகளை கொலை செய்து தன்னையும் அழித்துக் கொல்ல முயற்சித்த சம்பவம் தமிழர்கள் மத்தியில் இது முதற்சம்பவம் அல்ல. கனடாவில் சில ஆண்டுகளுக்கு முன் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றது. கடந்த ஆண்டு லண்டனிலும் இவ்வாறான ஒரு துயரம் நிகழ்ந்தது. (அந்த மழழைகளின் இறுதி நிகழ்வு : த ஜெயபாலன், கனவிலும் தோண்றாத கொடூரம் – தமிழ் குழுந்தைகள் மரணம் பெற்றோர் கைது!!!) வேறு வேறு நாடுகளில் தமிழர்கள் மத்தியில் இடம்பெற்ற மூன்று சம்பவங்களிலுமே இரு குழந்தைகளும் கொல்லப்பட்டனர். தாய்மார்களின் தற்கொலை முயற்சி தோல்வியடைந்து அவர்கள் காப்பாற்றப்பட்டனர். தமிழ் மக்கள் மத்தியில் மன அழுத்தம் மன உளைச்சல் போன்றவற்றின் தாக்கம் முழுமையாக உணரப்படவில்லை. குறிப்பாக பெண்கள் மத்தியில் அவர்களது பிரசவத்திற்கு முன் பின்னாக இது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

லிப்ற் கொடுப்பதாகக் கூறி பாலியல் வல்லுறவு கொண்ட இருவருக்கு, 17 ஆண்டுகள் சிறை!!!

Rapists_Tharmaseelan_and_Arunanலிப்ற் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வல்லறவிற்கு உட்படுத்திய இரு தமிழ் இளைஞர்களுக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. தர்மசீலன் தங்கவேல் (27) அருணன் தனபாலசிங்கம் (30) ஆகிய இரு இளைஙர்களுமே பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுள்ளனர். யூலை 6ல் போற்ஸ்மோத் கிறவுண் நீதிமன்றத்தில் மூன்றுநாள் வழக்கின் முடிவில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இவர்களுக்கான தண்டனையை வழங்கிய நீதிபதி கிரகாம் உவைற் தண்டனைக்காலம் முடிந்ததும் அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

மேலும் இவர்கள் குற்றவாளிகளாகக் கணப்பட்டு உள்ளதால் பாலியல் குற்ற ஆவணத்தில் அவர்களது பெயர் விபரம் காலவரையறையின்றி பதிவு செய்யப்படும். இதனால் இவர்கள் தண்டனைக் காலம் முடிந்த பின்னரும் தங்களது நகர்வுகள் இருப்பிடம் வாழ்விடம் பற்றி பொலிசாருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 21 வயதான பல்கலைக்கழக மாணவி சம்பந்தப்பட்டவர்கள் எப்போதும் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று விரும்பினாலும் அவர்கள் நீண்டகாலச் சிறைத் தண்டனை பெற்றது ஆறுதல் அளிப்பதாகத் தெரிவித்தார். இவர் மூன்று நாட்கள் நிதிமன்றத்தில் சாட்சியமளித்தார். தனக்கு நிகழ்ந்த கொடுமையை விபரித்து மற்றையவர்களுக்கும் அவ்வாறு நிகழ்ந்து விடாது தடுத்துள்ள அம்மாணவியின் துணிச்சலை டிடெக்டிவ் சார்ஜன் சூ முரே பாராட்டினார்.

பிரித்தானியாவின் ஹம்பசெயர் என்ற இடத்தில் உள்ள போஸ்ட்மவுத் பிரதேசத்தில் சவுத்சீ பகுதியில் வெளியே சென்று குடித்துக் கொண்டிருந்த மாணவியை தர்மசீலன் தங்கவேலும் அருணன் தனபாலசிங்கமும் வீட்டில் இறக்கி விடுவதாக்க கூறி தங்கள் காரில் ஏற்றினர். காரில் ஏற்றியவர்கள் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு இன்னுமொரு அறை பயன்படுத்தப்படாமல் இருப்பதாகக் கூறி அதில் தங்கலாம் தூங்கலாம் என அந்த மாணவிக்குத் தெரிவித்தனர்.

பின்னர் இருவரும் மாறி மாறி அந்த மாணவியுடன் பாலியல் வல்லுறவு கொண்டுள்ளனர். அந்த மாணவி எவ்வளவோ கெஞ்சிய போதும் இவர்கள் வல்லுறவு கொள்வதை நிறுத்தவில்லை என அம்மாணவி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதன் பின்னர் மீண்டும் அம்மாணவியை காரில் ஏற்றிவந்து சவுத்சீயில் வீதியோரத்தில் அவரை இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

அதன் பின்னர் தர்மசீலன் தங்கவேலும் அருணன் தனபாலசிங்கமும் கைது செய்யப்பட்டனர்.
குற்றவாளிகள் இருவரும் மாணவியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதை மறுத்துள்ளனர். அம்மாணவியின் சம்மதத்துடனேயே அவருடன் உறவு கொண்டதாக அவர்கள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

யூரிகள் மூன்று நாட்கள் வாதப் பிரதிவாதங்களைக் கேட்ட பின் மூன்று மணிநேரம் அவற்றை ஆராய்ந்து தர்மசீலன் தங்கவேல், அருணன் தனபாலசிங்கம் இருவரையும் குற்றவாளிகளாகக் கண்டனர்.

இவர்கள் ஒவ்வொருவருக்கும் எட்டு ஆண்டுகளும் ஆறுமாதங்களும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள கடினமான குடிவரவு விதிகளுக்கமைய நீதிபதியின் பரிந்துரைக்கு அமைய குற்றவாளிகள் திருப்பி அனுப்புவதற்கு உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இளைஞர்கள் குழுக்களிடையே வன்முறையைப் போன்று பாலியல் துஸ்பிரயோகங்கள் பல இடம்பெற்றுள்ளன. ஆனால் ஊடகங்களில் மிகச்சிலவே வெளிவந்துள்ளது. வயது குறைந்தவர்களை பாலியல் இச்சைகளுக்கு உள்ளாக்கிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது. இவற்றில் ஈடுபட்ட பலர் நீதிக்கு முன் நிறுத்தப்படவில்லை.

‘தமிழ் மக்களுடைய எதிர்ப்புணர்வு இலங்கை அரசுக்கு எதிரானதே அன்றி சிங்கள மக்களுக்கு எதிரான வன்மமாக அமையக் கூடாது’ கொமன்வெல்த் முன்பான ஆர்ப்பாட்டத் தொகுப்பு : த ஜெயபாலன்

Robin_Speech_at_the_Protestபுலம்பெயர் தமிழ் அரசியல் சூழல் மிகவும் குழப்பகரமானதாகவே இருந்து வந்துள்ளது. இன்னமும் அவ்வாறே உள்ளது. இங்கு முன்னெடுக்கப்படும் அரசியல் நடவடிக்கைகள் தாயகத்தில் உள்ள மக்களைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக அம்மக்களை தங்கள் எஜமானர்களுக்குப் பணிய வைப்பதாகவே இருந்து வந்துள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் புலி ஆதரவு அமைப்புகளானாலும் சரி, கிழக்கிலங்கை – தலித் – ஜனநாயக முன்னணிகள் போன்ற பெயரளவில் அல்லது பெயரில் மட்டும் ஜனநாயகத்தைக் கொண்டுள்ள புலி எதிர்ப்பு அமைப்புகளானாலும் சரி தாயகத்தில் உள்ள மக்களுக்கு தாங்களே குரல் கொடுப்பதாக கூறிக்கொண்டாலும் உண்மையில் அவர்கள் அம்மக்களின் குரல்களை இருட்டடிப்புச் செய்து தங்கள் அரசியல் நலன்களைத் தக்க வைக்கவே முயன்று வந்துள்ளனர்.

இவற்றுக்கு அப்பால் மக்கள் நலன் சார்ந்து முன்னெடுக்கபடும் போராட்டங்கள் மிக அருமையாகவே நடைபெறுகிறது. இது மிகக் குறைந்தளவினருடன் மேற்கொள்ளப்பட்ட போதும் அப்போராட்டங்கள் அரசியல் ரீதியில் தங்கள் நியாயத்தை உறுதிப்படுத்தி விடுகின்றன. அந்த வகையில் தமிழ் சொலிடாரிற்றி – தமிழ் ஒருங்கிணைப்பு அமைப்பினால் யூன் 24 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் குறிப்பிடத்தக்கது. கொமன்வெல்த் அலுவலகத்திற்கு முன் நூறுக்கும் உட்பட்டவர்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சமூகங்களையும் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அதில் கலந்துகொண்ட தமிழர்களுக்கு இணையாக பிற சமூகத்தவர்களும் கலந்துகொண்டதுடன் அவர்களே ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

Serra_Leading_the_Protestஒரு ரூபாயோ ஒரு பெனியோ மகிந்த ராஜபக்ச அரசுக்கு கொடுக்கப்படாது!
வழங்கப்பட்ட நிதிக்கு கணக்குகள் காட்டப்பட வேண்டும்!
வன்னியில் உள்ள முகாம்கள் உடனடியாக மூடப்பட வேண்டும்!

போன்ற கோசங்கள் அங்கு ஓங்கி ஒலித்தது. Stop Slaughter of Tamils என்ற சர்வதேசப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களே தமிழர் ஒருங்கிணைப்பு என்ற தலைப்பில் தற்போதைய போராட்டங்களை தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப முன்னெடுக்கின்றனர். பிரித்தானியாவில் உள்ள இடதுசாரி அமைப்பான Committee for Worker’s International என்ற அமைப்பே இப்போராட்டங்களின் உந்து சக்தியாகச் செயற்படுகின்றது. முக்கியமாக ‘த சோசலிஸ்ட’ பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவரான Sarah இப்போராட்டத்தில் முன்னின்று கோசங்களை வைத்தார். ஏனையவர்களும் ஈடுபட்டனர்.

இடையிடையே கலந்துகொண்டவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. பல்வேறு சமூகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர். அவர்கள் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி நிலையை சுட்டிக்காட்டி அதற்காக தாங்கள் தார்மீக அடிப்படையில் குரல் கொடுக்க வேண்டிய அவசியத்தை சொல்லிச் சென்றனர்.

Robin_Speech_at_the_Protestகுறிப்பபாக ரொபின் என்பவரது கருத்துக்கள் தமிழ் மக்களது போராட்டங்கள் தொடர்பான மதிப்பீடாக அமைந்திருந்தது. நடந்த சம்பவங்கள் தொடர்பில் இலங்கை அரசு மீது மிகுந்த கண்டனத்தை தெரிவித்த ரொபின் இது சிங்கள பொது மக்களுக்கு எதிரான வன்மமாக அமையக் கூடாது என்பதைத் தெளிவுபடுத்தினார். இங்கு லண்டனில் சிலர் பௌத்த விகாரைக்கு தீயிட்டதையும் லோட்ஸ் மைதானத்தில் யூன் 21 அன்று இலங்கை – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க வந்த சிங்கள இளைஞர்கள் தாக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டிய ரொபின் இவ்வாறான சிங்கள மக்களுக்கு எதிரான வன்மங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சிங்கள மக்கள் தமிழ் மக்களுடைய எதிரிகள் அல்லர் அரசாங்கத்திற்கு எதிராகவே செயற்பாடுகள் அமைய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கட் போட்டியில் தமிழர்கள் சிலர் பாகிஸ்தானின் வெற்றியை எதிர்பார்த்து நின்றதையும் பாகிஸ்தானுக்காக குரல் கொடுத்ததையும் புரிந்துகொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்ட ரொபின் கடைசியாக இடம்பெற்ற யுத்தத்தில் பாகிஸ்தான் முழுமையான இராணுவ ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்கி இருந்ததையும் பாகிஸ்தான் விமான ஓட்டிகள் நேரடியாக யுத்தத்தில் ஈடுபட்டதையும் சுட்டிக்காட்டினார். உண்மையில் தமிழர்களுடைய எதிர்ப்புணர்வு பாகிஸ்தான் அரசுக்கு எதிராகவும் அன்று அமைந்திருக்க வேண்டும் என்றும் ரொபின் கூறினார்.

இலங்கைத் தமிழ் மக்களுக்கான போராட்டம் வெறும் தமிழர்களுடைய போராட்டமாக அல்லாமல் பிற சமூகங்களையும் இணைத்து போராட வேண்டியதன் அவசியத்தை விளக்கிய ரொபின் ஏனைய ஒடுக்கபட்ட மக்களுக்காகவும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் குரல்கொடுக்க வேண்டும் என்றும் பரஸ்பரம் புரிந்துணர்வு வளர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். தமிழர்களுடைய பிரச்சினை மட்டுமல்ல பாலஸ்தீனியர்களுடைய பிரச்சினை காஸ்மீரியரின் பிரச்சினை எல்லாம் ஒரே வகையினதே என்று கூறிய ரொபின் இம்மக்களுடனும் இணைந்து போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இறுதியாகத் தெரிவித்தார்.

இலங்கை அரசும் சர்வதேச நாடுகளும் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளும்வரை தங்கள் போராட்டங்கள் தொடரும் என்ற உறுதியுடன் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.

துரோகிகள் …….??? : ரி கொன்ஸ்ரன்ரைன்

Pro_LTTE_Protest_in_Bernதுரோகிகள் என்றதும் நான் யாரைக் குறிப்பிடுகிறேன் என்று ஒரு கணம் எண்ணியிருப்பீர்கள். இன்றைய புலிகளின் தலைவர் பத்மநாபனா…….? அல்லது நடேசனா?? புலித்தேவனா??? இளந்திரையனா???? அல்லது மறைந்த தலைவர் பிரபாகரனைத் தான் குறிப்பிடுகிறேனா?????

அரசியலில் மாற்றுக் கருத்தாளர்களை, அரசியல் எதிரிகளை, விமர்சகர்களை அனைவரையும் வரிசையாக துரோகிகள், எட்டப்பர்கள் என்று கூறி சுட்டுக் கொன்றதை விடுதலையின் பேரில் மௌனமாக ஏற்றுக் கொண்டவர்களும் அரசியல் வியாக்கியானங்கள் கொடுத்து நியாயம் கற்பித்தவர்களும் வாயடைத்துப் போய் மௌனிகளாக நிற்கின்றனர். இன்று மக்களைக் காப்பாற்றுகிறோம் விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் எனக்கூறி ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்றொழிப்பதைக் கண்டித்து இலட்சக்கணக்கில் படை எடுத்துள்ளனர்.

அன்று புலிகள் எந்த வாதத்தை மூலகாரணமாக வைத்து தமது அரசியல் விமர்சகர்களையும் சக போராளிகளையும் அழித்தனரோ, அதே வாதம் ஸ்ரீலங்கா அரசினால் முன்வைக்கப்பட்டு கொடூர இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவைச் சேர்ந்த காலம் சென்ற நடேசனும் புலித்தேவனும் சரணடைய எடுத்த முனைப்புகளை Times (UK) பத்திரிகையாளரான Marie Covin தனது குறிப்பில் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறார். நடேசனும் புலித்தேவனும் சரணடைய விடுத்த விடயம் ஜனாதிபதி ராஜபக்ச உட்பட, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் டாக்டர் பலிதகோகன்ன, ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி விஜய் நம்பியார் அனைவரிடமும் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதை திகதி கால குறிப்புடன் வெளிப்படுத்துகிறார் மேரி. இவ்வாறான ஒரு தெளிவான சரணடையும் விடயம் தெரிவிக்கப்பட்டும் ஸ்ரீலங்கா அரசு நடந்து கொண்ட விதம் சர்வதேச போர் விதிகளுக்கு புறம்பானது என தற்போது பலதரப்பட்டவர்களால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.       

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களும் ஆதாரங்களும் எந்தளவு சர்வதேச நீதிமன்றம் வரை சென்றடையும் என்பது பெரிய கேள்விக்குறி. விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய நடவடிக்கைகள், அதிலும் குறிப்பாக முன்னாள் இந்தியப் பிரதமரின் கொலையை அடிப்படையாக வைத்து முன்னெடுக்கப்பட்ட சர்வதேச தடை, இவற்றுடன் ஒப்பீட்டளவில் பார்க்கும் போது விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு எடுத்த நடவடிக்கை சர்வதேச நீதிமன்றத்தை எட்டும் சாத்தியம் மிகமிக குறைவு என்றே சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக ஸ்ரீலங்கா அரசின் இந்த மூர்க்கத்தனமான இராணுவ முன்னெடுப்பின் பின்னணியில் சீனா, இந்தியா போன்ற பலம் மிக்க நாடுகள் வெளிப்படையாக உடந்தையாக இருந்திருக்கும் நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் சர்வதேச நீதிமன்றம் வரை போக சாத்தியம் இல்லையென்றே கூறவேண்டும்.

சர்வதேச சட்ட முனைப்புக்களை விடுத்து சாதாரண முறையில் ஸ்ரீலங்கா அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் வித்தியாசமான வாதத்தை தனிப்பட்ட முறையில் முன்வைக்கிறார்கள். பிரேமதாசாவின் ஆட்சிக் காலத்தின் போதும் ஜனாதிபதி ராஜபக்சவின் ஆட்சி ஆரம்பத்தின் போதும் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் கிழக்கு மாகாணத்தில் சரணடைந்த நிராயுதபாணிகளான சிங்கள பொலிசாரை விடுதலைப் புலிகள் சுட்டுக்கொன்ற சம்பவங்களை அவர்கள் கூறுகின்றனர்.

இன்று இல்லாத ஒருவர் உயிருடன் இருப்பதாக கூறி அரசியல் நடாத்த பலர் தயாராகின்றனர். நடைமுறை இப்படி இருக்கும் போது பிரபாகரனின் குடும்பத்தில் ஒருவரையோ அல்லது விடுதலைப் புலிகளின் உயர் தலைவர் ஒருவரையோ உயிருடன் பிடித்திருந்தால் அது தேவையில்லாத அரசியல் தலையிடியை தமக்குத் தந்து சிங்கள இராணுவ வீரர்கள் இதுவரை செய்த தியாகங்களை வீணடித்திருக்கும் என்ற வாதமும் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆக மொத்தமாக பார்க்கும் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிப்பும், அதனை ஒட்டிய அரசியல் அழுத்தங்களும் காலப்போக்கில் மங்கிப் போகும். அதற்குரிய சகல நடவடிக்கைகளையும் அரசு அதிகூடிய வேகத்தில் செயலாற்றி வருகின்றது. வரும் ஓகஸ்ற் மாதத்தில் வடமாகாணத்திற்கான தேர்தல் என்ற அரசின் அறிவிப்பும், 180 நாட்களில் பெரும்பாண்மையான அகதிகளை மீள் குடியமர்த்துவோம் என்ற அறிவிப்பும், தமிழீழ விடுதலைப் புலிகளினால் வெளிநாடுகளில் செய்யப்படும் அரச எதிர்ப்பு பிரச்சாரங்களை முற்றாக தவிடுபொடியாக்கப் போகின்றது. மற்றும் தற்போது புலம் பெயர்ந்த நாடுகளில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை மிகவும் மோசமாகவும் கோமாளிகளாகவும் ஆக்கப்போகின்றது.

இன்று விடுதலைப் புலிகளின் பெயரில் சேர்க்கப்பட்ட பணம் லண்டனில் கோயில்களாகவும், நகைக்கடைகளாகவும், வீடுகளாகவும், தனிப்பட்டவர்களின் பெயரிலும், சில வசரளவ களிலும் உள்ளன. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல இன்றைய நிலையில் பல லட்சக்கணக்கான புலிகளின் சொத்துக்கள் சில தனிப்பட்டவர்களை சென்றடைய இருக்கின்றன. இதன் முதற்கட்டமாக விடுதலைப் புலிகளை மையப்படுத்தி வன்னியில் இயங்கும் வெண்புறா, அம்மன் வசரளவ போன்ற அமைப்புக்களின் கணக்கு விபரங்களை ஆராய்வதற்கு புலிகளின் உண்மையான விசுவாசிகளையும் சில பொதுவானவர்களையும் நியமித்து விசாரணை குழுக்கள் அமைக்கப்படல் வேண்டும். அதன் முதற்கட்டமாக வணங்கா மண் வேலைத் திட்டத்தில் சேர்க்கப்பட்ட பணத்தைப் பற்றி விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் பெயரில் சேர்க்கப்பட்ட பணம் மீள வசூலிக்கப்பட்டு வன்னிப் பிரதேசத்தில் அகதிகளாக உள்ள மக்களுக்கு செலவிடப்படல் வேண்டும். அத்துடன் ஆயிரக்கணக்கில் அநாதரவாக விடப்பட்ட பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு காத்திரமான பங்களிப்பை செய்ய புலம்பெயர் தமிழர்கள் முன்வர வேண்டும். இன்றைய யதார்த்த அரசியலைப் புரிந்து, ஆதாரம் பெற முடியாத கோசங்களை முன்வைத்து, நடைமுறை சாத்தியம் இல்லாத அரசியல் வேலைத் திட்டங்களை கைவிட்டு, யதார்த்த அரசியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மே 18ம் திகதி இடம்பெற்ற சம்பவம் புலம்பெயர் தமிழர்கள் எவ்வளவு தூரம் கனவுலகத்தில் வாழ்ந்துள்ளார்கள் என்பதை கோடிட்டு காட்டியுள்ளது. இனிமேலாவது தமிழ் மக்கள் துரோகி, எட்டப்பர் என்ற வெற்று பதங்களை மறந்து ஆரோக்கியமான அரசியலை முன்னெடுக்க உடந்தையாக இருக்க வேண்டும்.