::தேர்தல்கள்

::தேர்தல்கள்

இலங்கைத் தேர்தல்கள் பற்றிய செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

இந்தியாவில் ஏப்ரல் 16 முதல் மே 13 வரை 5 கட்டமாக மக்களவைத் தேர்தல்

election_ballot_.jpg இந்தியாவில் ஏப்ரல் 16ம் தேதி தொடங்கி மே 13ம் தேதி வரை மக்களவைத் தேர்தல் 5 கட்டமாக நடக்கவுள்ளது. மே 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது.

முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 16ம் தேதியும், 2ம் கட்ட வாக்குப்பதிவு 23ம் தேதியும், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 30ம் தேதியும், 4வது கட்ட வாக்குப்பதிவு மே 7ம் தேதியும், 5ம் கட்ட வாக்குப்பதிவு மே 13ம் தேதியும் நடக்கவுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் 5 கட்டமாகவும், பிகாரில் 4 கட்டமாகவும், மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் 3 கட்டமாகவும், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், ஜார்க்கண்ட், பஞ்சாப், ஒரிஸ்ஸா, அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் 2 கட்டமாகவும் தேர்தல் நடக்கவுள்ளது. தமிழகம் உள்ளிட்ட மற்ற 15 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.

இந்த அறிவிப்புகளை தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி டெல்லியி்ல் வெளியிட்டார்.

ஏப்ரல் 16ம் தேதி நடக்கும் முதல் கட்ட வாக்குப் பதிவில் 124 தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்கிறது. 23ம் தேதி 141 தொகுதிகளுக்கும், ஏபரல் 30ம் தேதி 107 தொகுதிகளுக்கும், மே 7ம் தேதி 85 தொகுதிகளுக்கும், மே 13ம் தேதி 86 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது.

மே 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக கோபால்சாமி அறிவித்தார். இந்தத் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 71.40 கோடியாகும். இது கடந்த தேர்தலைவிட 4.3 கோடி அதிகமாகும்.

மொத்தம் 40 லட்சம் அரசு ஊழியர்கள், 21 லட்சம் போலீசார், ஊர்க்காவல் படையினர் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் இந்தத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

நாடு முழுவதும் மொத்தம் 8,28,804 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்படும். தற்போதைய நாடாளுமன்றத்தின் காலம் ஜூன் 1ம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்த மக்களவை ஜூன் 2ம் தேதிக்குள் அமைய வேண்டும். அதன் அடிப்படையில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தாழ்த்தப்பட்டோருக்கான ரிசர்வ் தொகுதிகள் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த தேர்தலைவிட 5 இடங்கள் அதிகமாகும். அதேபோல பழங்குடியினருக்கான தொகுதிகள் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த தேர்தலை விட 6 தொகுதிகள் அதிகமாகும். இப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமியின் பதவி்க் காலம் ஏப்ரல் 20ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா தலைமைத் தேர்தல் ஆணையராவார்.

இதனால் முதல் கட்ட தேர்தலையடுத்து கோபால்சாமி விலகிவிடுவார். அடுத்த 4 கட்டத் தேர்தல்கள் சாவ்லாயின் தலைமையில்தான் நடைபெறும்.

தேர்தல் திகதி எக்காரணம் கொண்டும் மாற்றப்படாது – மேலதிக தேர்தல் ஆணையாளர்

sri-lanka-election-01.jpgஏப்ரல் 25ம் திகதியே மேல் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும். எக்காரணம் கொண்டும் தேர்தல் திகதி மாற்றப்படாது என மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமனசிரி நேற்று தெரிவித்தார்.

தேர்தல் திகதியை மாற்றுமாறு ஐ. தே. க., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடங்களான பல எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையாளரை கோரியுள்ளன. இது குறித்து வினவிய போதே மேலதிக ஆணையாளர் மேற்கண்வாறு கூறினார்.

சகல விடயங்களையும் ஆராய்ந்த பின்னரே தேர்தல் ஆணையாளர் தேர்தல் தினத்தை முடிவு செய்துள்ளார். தமிழ்- சிங்கள புதுவருடம் மற்றும் விசேட தினங்கள் குறித்து ஆராய்ந்த பின் பொருத்தமான திகதியை தேர்தல் ஆணையாளர் முடிவு செய்ததாகவும் மேலதிக தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டார்.

வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்படும் இறுதி திகதியில் இருந்து 5 வாரங்களுக்கும் 8 வாரங்களுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தேர்தல் திகதி அறிவி க்கப்பட வேண்டும். தேர்தல் சட்ட விதிகளின் படியே திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றம் செய்யும் திட்டமெதுவும் கிடையாது எனவும் அவர் கூறினார்.

தேர்தலுக்கான திகதியினை மாற்றுமாறு கட்சிகள் கோரிக்கை.

election_.jpgமேல் மாகாணசபைத் தேர்தலுக்கான திகதியினை மறுபரிசீலணை செய்யுமாறு பிரதான இரு அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸ்ஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளன. ஏப்பிரல் மாதம் 25ம் திகதி தேர்தலினை நடாத்துவது என கடந்த 26ம் திகதி தேர்தல்கள் செயலகம் அறிவித்திருந்தது. இந்த திகதியினை மாற்ற வேண்டும் என இரண்டு கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

தேர்தலுக்கான காலம் நீடித்துள்ளதன் காரணமாக இந்த திகதியை மாற்ற வேண்டும் என தாம் தேர்தல்கள் செயலகத்திடம் கோரியிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸஅத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த திகதியில் தேர்தலினை நடாத்துவதில் தமக்கு எதுவித ஆட்சேபனையும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்த திகதியினை மாற்றுவது தொடர்பில் ஐ.தே.க பொதுச் செயலாளர் தம்முடன் கலந்துரையாடினார் எனவும் ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட திகதியினை ஒருபோதும் மாற்ற முடியாது எனத் தாம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் எதிர்வரும் காலங்களில் தேர்தலுக்கான திகதியினை அறிவிக்கும்போது தேர்தல்கள் ஆணையாளர் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடும் முறைமையொன்றினை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணி வேட்பாளர்கள் மூவரையும் தெரிவு செய்து எமது கரங்களை பலப்படுத்துங்கள் – மனோ எம்.பி.

election_ballot_.jpgஐக்கிய தேசியக் கூட்டணியில் போட்டியிடும் எமது பொதுச்செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரன், தேசிய அமைப்பாளர் பிரபா கணேசன், கொழும்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.ராஜேந்திரன் ஆகிய எமது மூன்று வேட்பாளர்களையும் வெற்றி பெறச்செய்வதன் மூலம் மேல் மாகாணத்தில் எமது கட்சியினதும், தலைநகர தமிழ் மக்களினதும் சக்தியை முழு நாட்டிற்கும் நாம் வெளிப்படுத்த வேண்டும். மலையகத்திலே நாம் முதன் முறையாகப் பெற்றுள்ள வெற்றி தலைநகரிலே பலமடங்காக எதிரொலிக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோகணேசன் எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மேல் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் மனோ எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தலைநகரத்திலே தமிழ் மக்கள் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் உள்ளாகி தவிக்கும் வேளையில் எமது மக்களுக்காகக் குரல் கொடுத்து போராடுவது எமது கட்சியே. அன்று முதல் இன்றுவரை அணிமாறாமல் கொள்கை வழி நின்று தலைநகர தமிழ் மக்களுக்கு காவலர்களாகப் பணியாற்றுவது எமது கட்சியே. அச்சுறுத்தல்களுக்கும் பதவிகளுக்கும் தலைவணங்காது நிமிர்ந்து நிற்பது எமது கட்சியே. எமது இந்த நேர்மையான செயற்பாடு தலைநகரிற்கு வெளியே மலையகத்திலும் வட, கிழக்கிலும் எதிரொலிக்கின்றது.

இந்நிலையில் தலைநகர தமிழ் வாக்காளர்கள் கொழும்பு மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் எமது மூன்று வேட்பாளர்களுக்கும் பெருவாரியாக வாக்களித்து அவர்களை வெற்றி பெறச்செய்து எனது கரங்களைப் பலப்படுத்தவேண்டும் என்று உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

கொழும்பு மாவட்டத்திலே வாக்காளராகப் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு தமிழ் வாக்காளரும் தேர்தல் தினத்தன்று கட்டாயமாக வாக்களிக்கவேண்டும். வாக்களிக்கும் ஒவ்வொரு தமிழ் வாக்காளரும் எமது கூட்டணி சின்னமான யானை சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டும். யானைச் சின்னத்திற்கு வாக்களிக்கும் ஒவ்வொரு தமிழ் வாக்காளரும் தமது மூன்று விருப்பு வாக்குகளையும் எமது மூன்று வேட்பாளர்களுக்கும் வழங்க வேண்டும். இதன் மூலமே தலைநகரத்திலே வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் மக்கள் இந்த நெருக்கடியான காலகட்டத்திலே தலைநிமிர்ந்து வாழக்கூடிய சூழலை எமது கட்சியால் உருவாக்க முடியும்.

கொழும்பிலே வாழும் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள், வட, கிழக்கை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்கள் மற்றும் கொழும்பை பிறப்பிடமாக கொண்ட தமிழ் மக்கள், தமிழை தமது தாய்மொழியாகப் பேசிவரும் மலையாள, தெலுங்கு வம்சாவளி மக்கள் ஆகிய அனைவரும் ஒன்று சேர்ந்து வாக்களிக்க வேண்டும். நாம் பெறப்போகும் வெற்றி தலைநகர வரலாற்றிலே பாரிய சாதனையாக அமைய வேண்டும். இதுவே கொழும்பு மாவட்டத்தில் நாம் இதுவரையில் செய்துவந்துள்ள பணிகளுக்கும், நாம் எடுத்துள்ள நிலைப்பாடுகளுக்கும் தமிழ் மக்கள் தரக்கூடிய விருதாகும். எமது வேட்பாளர்களின் வெற்றி எனது வெற்றியாகும். எனது வெற்றி ஒட்டுமொத்த தலைநகர தமிழர்களின் வெற்றியாகும்

மேல் மாகாண சபைக்கு ஏப்ரல் 25ல் தேர்தல்; 38 கட்சிகள், 23 சுயேச்சைகள் போட்டி; 2378 வேட்பாளர்கள் களத்தில்

sri-lanka-election-01.jpgமேல் மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறுமென தேர்தல் திணைக்களம் நேற்று அறிவித்தது. 102 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தலில் 2378 பேர் போட்டியிடுகின்றனர்.

இம்முறை தேர்தலில் 38 கட்சிகளும் 23 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐ. தே. க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், புதிய இடதுசாரி முன்னணி, சோசலிச சமத்துவக் கட்சி, ஐக்கிய சோசலிசக் கட்சி அடங்லாக 17 கட்சிகளும் 13 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.

கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐ. தே. க. முஸ்லிம் காங்கிரஸ் அடங்கலான 11 கட்சிகளும் 4 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட உள்ளன.

களுத்துறை மாவட்டத்தில் ஐ. ம. சு. முன்னணி, ஐ. தே. க., முஸ்லிம் காங்கிரஸ் அடங்கலான 10 கட்சிகளும் 6 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட உள்ளன. 07 கட்சிகள் 6 சுயேச்சை குழு நிராகரிப்பு கொழும்பு மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகளும் 07 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்தன. கொழும்பு பதில் தெரிவத்தாட்சி அதிகாரி ஆர். எம். ஏ. எல். ரத்னாயக்க முன்னிலையில் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

இதன்போது இரண்டு கட்சிகளினதும் 3 சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஈழவர் ஜனநாயக முன்னணி, ஐக்கிய இலங்கை ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளினதும் எம். அன்பழகன், பி. பன்னீர்ச் செல்வன், விஜே குணவர்த்தன தலைமையிலான சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தில் 14 அரசியல் கட்சிகளும் 6 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்தன. இதில் 3 அரசியல் கட்சிகளினதும் 2 சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி, ஐக்கிய இலங்கை ஜனநாயகக் கட்சி, ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி ஆகிய கட்சிகளினது வேட்பு மனுக்களே நிராகரிக்கப்பட்டதாக கம்பஹா உதவித் தேர்தல் ஆணையாளர் மொஹமட் தெரிவித்தார்.

களுத்துறை மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகளும் 7 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்தன. இதிலே 2 அரசியல் கட்சிகளதும் ஒரு சுயேச்சைக் குழுவினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பூமிபுத்ர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய கட்சிகளின் வேட்பு மனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.

இம்முறை தேர்தலில் ஐ. ம. சு. முன்னணியில் இ. தொ. கா., மலையக மக்கள் முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி, ஐ. தே. க. (ஜனநாயகக் குழு), கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி, மக்கள் கட்சி அடங்கலான பல கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன.

கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளராக சுனில் ஜெயமினியும் கம்பஹா மாவட்ட முதன்மை வேட்பாளராக பிரசன்ன ரணதுங்கவும் களுத்துறை மாவட்ட முதன்மை வேட்பாளராக ரெஜினோல்ட் கூரேயும் போட்டியிடுகின்றனர். ஐ. தே. க. முதன்மை வேட்பாளராக லக்ஷ்மன் அபே குணவர்த்தன போட்டியிடுவதோடு ஜே. வி. பி. முதன்மை வேட்பாளராக துமிந்த தாககமுவவும் முஸ்லிம் காங்கிரஸ் முதன்மை வேட்பாளராக அப்துல் ஹையும் போட்டியிடுகின்றனர். இது தவிர, ஐ. ம. சு. முன்னணி பட்டியலில் அஜ்மல் மெளஜுட், எம். எச். மன்ஸில், நவுஸர் பெளசி, வசந்தா ரோஹினி தேவி, கே. ரி. குருசாமி, செல்லசாமி திருக்கேஷ்வரன், முத்து சங்கரலிங்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஐ. தே. க. சார்பாக 5 முஸ்லிம்களும் 2 தமிழர்களும் போட்டியிடுகின்றனர். சாஹுல் ஹமீட், எம். எஸ். எம். பைரூஸ், அப்துர் ரஹுமான் முஹம்மது முயீஸ், ஏ. ஜே. எம். முஸம்மில், துஆன் ஆமித், கிருஷாந்தா யோகதாஸ், குமர குருபரன் ஆகியவர்களே போட்டியிடுபவர்களாவர்.களுத்துறை மாவட்டத்தில் எம். எம். எம். அம்ஜாத், அம்ராஸ் மஜீத், தங்கராஜா ஜயராஜ் ஆகிய சிறுபான்மையினரும் கம்பஹா மாவட்டத்தில் சலீம் முஹம்மது சதாவுல்லா, கே. புஷ்பராஜ் ஆகியோர் ஐ. ம. சு. முன்னணியில் போட்டியிடுகின்றனர்.

களுத்துறை மாவட்ட ஐ. தே. க. முதன்மை வேட்பாளராக கித்சிறி கஹடபிடியவும், ஜே. வி. பி. முதன்மை வேட்பாளராக டாக்டர் நன் ஜெயதிஸ்ஸவும், மு. கா. சார்பாக எம். அஸ்லமும் போட்டியிடுகின்றனர்.

கம்பஹா மாவட்ட ஐ. தே. க. முதன்மை வேட்பாளராக மாதிவலயும் ஜே. வி. பி. சார்பாக வருணா தீப்தி ராஜபக்ஷவும் மு. கா. சார்பாக சாபி ரஹீமும் போட்டியிடுகின்றனர்.

முதலமைச்சர் வேட்பாளர்

ஐ. ம. சு. முன்னணி சார்பாக இம்முறை முதலமைச்சர் வேட்பாளர் எவரும் நிறுத்தப்படவில்லை. கட்சி இது குறித்து பின்னர் முடிவு செய்யும் என அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் கூறினார். ஐ. தே. க. வும் இம்முறை முதலமைச்சர் வேட்பாளர் எவரையும் அறிவிக்கவில்லை. கூடுதல் விருப்பு வாக்கு பெறுபவர் முதலமைச்சராக நிய மிக்கப்படுவாரென ஐ. தே. க. கூறியது.

மேல் மாகாண சபைத் தோ;தல் ஏப்ரல் 25ஆம் திகதி- தேர்தல்கள் செயலகம் இன்று அறிவிப்பு

election_ballot_.jpgமேல் மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் செயலகம் இன்று அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இன்று நண்பகலுடன் முடிவடைந்தன. இதனையடுத்தே தேர்தல் நடைபெறும் தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண சபையில் 102 ஆசனங்களைக் கைப்பற்றுவதற்காக இம்முறை 19 அரசியல் கட்சிகளையும் 26 சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த 2581 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேல் மாகாண சபை கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதி கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. தேர்தல்கள் செயலகம் அறிவிப்பு

sri-lanka-election.jpgமேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் தினம் இன்றுடன் முடிவடைவதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேல் மாகாண சபைத் தேர்தலுக்காக கடந்த 19ஆம் திகதி முதல் இன்று வரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இன்று நண்பகல் 12.00 மணியுடன் இந்தக் கால எல்லை முடிவடைகிறது.

இத்தேர்தலில் சுயேச்சைக் குழுக்கள் கட்டுப் பணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நேற்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைந்தது.

இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐ.ம.சு.முன்னணி கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்ட செயலகங்களில் நேற்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தது. முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த 3 மாவட்டங்களிலும் வேட்பு மனுக்களைக் கையளித்தார்.

இதேவேளை  ஐ.தே.க. இன்று இம்மூன்று மாவட்டங்களிலும் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளதோடு ஜே.வி.பி. மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகியனவும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்புமனுத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் பூர்த்தியானதன் பின்னர் தேர்தல் ஆணையாளரினால் இன்று பிற்பகல் மேல் மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு கொழும்புää களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்ட செயலகங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

10 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் இழந்தன

sri-lanka-election.jpgமத்திய மாகாண சபைக்கு நுவரெலியா மாவட்டத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்த பத்து சுயேச்சைக் குழுக்களும் கட்டுப் பணத்தை இழந்துள்ளன. மேற்படி சுயேச்சைக் குழுக்கள் ஒவ்வொன்றும் 30 ஆயிரம் ரூபா வீதம் 3 இலட்சம் ரூபாவை கட்டுப்பணமாக செலுத்தியிருந்தன. மத்திய மாகாண சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 5 வீத வாக்குகளை எந்தவொரு சுயேச்சைக் குழுக்களும் பெற்றுக் கொள்ள முடியாமையினாலேயே இந்நிலையேற்பட்டுள்ளது.

இம்முறை மாகாண சபையில் போட்டியிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் ஐ.ம.சு.மு., ஐ.தே.க. தவிர்ந்த எந்தவொரு அரசியல் கட்சியும் ஒரு ஆசனத்தையும் பெற முடியவில்லை. இம்முறை மக்கள் விடுதலை முன்னணிக்கு நுவரெலியா மாவட்டத்தில் கிடைத்த மொத்த வாக்குகள் 3,039 ஆகும். இது மாவட்டத்தின் மொத்த வாக்குகளில் 1.07 சதவீதமாகும்.

மேல் மாகாணத்தில் மு.கா.தனித்து போட்டி

SLMC Gen Sec M T Hasan Aliமேல் மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடத் தீர்மானித்திருப்பதாகவும் வேட்பாளர் பட்டியல்கள் தயாராகியுள்ளதாகவும் தெரிவித்த அக்கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி இன்று செவ்வாய்க்கிழமை அல்லது நாளை புதன்கிழமை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேல்மாகாணத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டே கட்சி தனித்துப் போட்டியிடத் தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கம்பஹா, களுத்துறை மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டியல்கள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த ஹஸன் அலி அந்த இரண்டு மாவட்டங்களுக்குமான வேட்பு மனுக்கள் இன்று அந்தந்த மாவட்டங்களில் தாக்கல் செய்யப்படவிருப்பதாகவும் கூறினார்.

கொழும்பு மாவட்டத்துக்கான வேட்பாளர் பட்டியல்கள் இன்று காலை பூர்த்தி செய்யப்படவிருப்பதாகவும் அப்பணி நிறைவுற்றதும் தாமதமின்றி இன்று அல்லது நாளையே வேட்புமனுதாக்கல் செய்யப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

வடமேல் மாகாண தேர்தல் முன்னாள் உறுப்பினர்கள் 21 பேர் தோல்வி

sri-lanka-election-02.jpgஇம்முறை வடமேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட மாகாண சபையின்முன்னாள் உறுப்பினர்கள் 21 பேர் தோல்வியடைந்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியில் 11 பேரும், மக்கள் விடுதலை முன்னணியில் 8 பேரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருவரும் என 21 முன்னாள் உறுப்பினர்கள் தோல்வியுற்றுள்ளனர்.

குருநாகல் மாவட்டத்தில் சுதந்திர முன்னணியில் ஒருவரும், ஐக்கிய தேசிய கட்சியில் ஏழு பேரும், மக்கள் விடுதலை முன்னணியில் ஐந்து பேரும் இத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில் சுதந்திர முன்னணியில் ஒருவரும், ஐக்கிய தேசிய கட்சியில் இருவரும் மக்கள் விடுதலை முன்னணியில் மூவரும் தோல்வியடைந்துள்ளனர். மாகாண சபையில் ஆரம்பகாலம் முதல் உறுப்பினராக இருந்த புத்தளம் மாவட்ட ஐ.தே.கட்சியின் முதன்மை வேட்பாளர் யூ. எம். ஐயூப்கான் இம்முறை தோல்வி அடைந்துள்ளார்.