ஐக்கிய தேசியக் கூட்டணியில் போட்டியிடும் எமது பொதுச்செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரன், தேசிய அமைப்பாளர் பிரபா கணேசன், கொழும்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.ராஜேந்திரன் ஆகிய எமது மூன்று வேட்பாளர்களையும் வெற்றி பெறச்செய்வதன் மூலம் மேல் மாகாணத்தில் எமது கட்சியினதும், தலைநகர தமிழ் மக்களினதும் சக்தியை முழு நாட்டிற்கும் நாம் வெளிப்படுத்த வேண்டும். மலையகத்திலே நாம் முதன் முறையாகப் பெற்றுள்ள வெற்றி தலைநகரிலே பலமடங்காக எதிரொலிக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோகணேசன் எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மேல் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் மனோ எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தலைநகரத்திலே தமிழ் மக்கள் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் உள்ளாகி தவிக்கும் வேளையில் எமது மக்களுக்காகக் குரல் கொடுத்து போராடுவது எமது கட்சியே. அன்று முதல் இன்றுவரை அணிமாறாமல் கொள்கை வழி நின்று தலைநகர தமிழ் மக்களுக்கு காவலர்களாகப் பணியாற்றுவது எமது கட்சியே. அச்சுறுத்தல்களுக்கும் பதவிகளுக்கும் தலைவணங்காது நிமிர்ந்து நிற்பது எமது கட்சியே. எமது இந்த நேர்மையான செயற்பாடு தலைநகரிற்கு வெளியே மலையகத்திலும் வட, கிழக்கிலும் எதிரொலிக்கின்றது.
இந்நிலையில் தலைநகர தமிழ் வாக்காளர்கள் கொழும்பு மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் எமது மூன்று வேட்பாளர்களுக்கும் பெருவாரியாக வாக்களித்து அவர்களை வெற்றி பெறச்செய்து எனது கரங்களைப் பலப்படுத்தவேண்டும் என்று உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
கொழும்பு மாவட்டத்திலே வாக்காளராகப் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு தமிழ் வாக்காளரும் தேர்தல் தினத்தன்று கட்டாயமாக வாக்களிக்கவேண்டும். வாக்களிக்கும் ஒவ்வொரு தமிழ் வாக்காளரும் எமது கூட்டணி சின்னமான யானை சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டும். யானைச் சின்னத்திற்கு வாக்களிக்கும் ஒவ்வொரு தமிழ் வாக்காளரும் தமது மூன்று விருப்பு வாக்குகளையும் எமது மூன்று வேட்பாளர்களுக்கும் வழங்க வேண்டும். இதன் மூலமே தலைநகரத்திலே வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் மக்கள் இந்த நெருக்கடியான காலகட்டத்திலே தலைநிமிர்ந்து வாழக்கூடிய சூழலை எமது கட்சியால் உருவாக்க முடியும்.
கொழும்பிலே வாழும் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள், வட, கிழக்கை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்கள் மற்றும் கொழும்பை பிறப்பிடமாக கொண்ட தமிழ் மக்கள், தமிழை தமது தாய்மொழியாகப் பேசிவரும் மலையாள, தெலுங்கு வம்சாவளி மக்கள் ஆகிய அனைவரும் ஒன்று சேர்ந்து வாக்களிக்க வேண்டும். நாம் பெறப்போகும் வெற்றி தலைநகர வரலாற்றிலே பாரிய சாதனையாக அமைய வேண்டும். இதுவே கொழும்பு மாவட்டத்தில் நாம் இதுவரையில் செய்துவந்துள்ள பணிகளுக்கும், நாம் எடுத்துள்ள நிலைப்பாடுகளுக்கும் தமிழ் மக்கள் தரக்கூடிய விருதாகும். எமது வேட்பாளர்களின் வெற்றி எனது வெற்றியாகும். எனது வெற்றி ஒட்டுமொத்த தலைநகர தமிழர்களின் வெற்றியாகும்