மேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் தினம் இன்றுடன் முடிவடைவதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேல் மாகாண சபைத் தேர்தலுக்காக கடந்த 19ஆம் திகதி முதல் இன்று வரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இன்று நண்பகல் 12.00 மணியுடன் இந்தக் கால எல்லை முடிவடைகிறது.
இத்தேர்தலில் சுயேச்சைக் குழுக்கள் கட்டுப் பணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நேற்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைந்தது.
இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐ.ம.சு.முன்னணி கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்ட செயலகங்களில் நேற்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தது. முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த 3 மாவட்டங்களிலும் வேட்பு மனுக்களைக் கையளித்தார்.
இதேவேளை ஐ.தே.க. இன்று இம்மூன்று மாவட்டங்களிலும் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளதோடு ஜே.வி.பி. மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகியனவும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்புமனுத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் பூர்த்தியானதன் பின்னர் தேர்தல் ஆணையாளரினால் இன்று பிற்பகல் மேல் மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு கொழும்புää களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்ட செயலகங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.