யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் 300 கிலோ கஞ்சா மீட்பு !

யாழ்ப்பாணத்தில் 300 கிலோ கஞ்சா மீட்பு !

 

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 154 பொதிகளில் அடங்கிய 300 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா நேற்றைய தினம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இராணுவம் மற்றும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது, மீன்பிடிப் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை

SK கிருஷ்ணாவுக்கு இப்போதைக்கு விடுதலையில்லை – அடக்கி வாசிக்கும் யூடியுப்பர்கள் !

SK கிருஷ்ணாவுக்கு இப்போதைக்கு விடுதலையில்லை – அடக்கி வாசிக்கும் யூடியுப்பர்கள் !

 

வீடு ஒன்றினுள் வீட்டாரின் அனுமதியின்றி அத்துமீறி வீடியோ எடுக்க முற்பட்ட யாழ்ப்பாண யூடியூப்பர் SK கிருஷ்ணா, எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் அவர் கடந்த மார்ச் மாதம் 09ஆம் திகதி பண்டத்தரிப்பு பகுதிக்கு சென்றவேளை சில்லையூர் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அண்மையில் கைதாகியிருந்த கிளிநொச்சி யூடியுபரான DK கார்த்திக் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதனிடையே அண்மைய நாட்களில் உதவி செய்வதாக ஈழத்து யூடியுப் சேனல்களில் பதிவேற்றப்பட்ட பலருடைய வீடியோக்கள் காணாமலாக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

யாழில் நீர் இழப்பால் இரு ஆசிரியர்கள் திடீர் மரணம் !

யாழில் நீர் இழப்பால் இரு ஆசிரியர்கள் திடீர் மரணம் !

 

மார்ச் 16 ஆம் திகதி 53 வயதான கொக்குவில் இராமகிருஷ்ண வித்தியாலய ஆசிரியை பிரியதர்ஷினி கனகரத்தினம் பாடசாலையில் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார். இதேமாதிரி மார்ச் 09 ஆம் திகதி

வடமராட்சி வதிரியைச் சேர்ந்த 47 வயதான நெல்லியடி மத்திய கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணன் தணிகைவேள் என்பவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளார். இம் மரணங்களுக்கு அதிக வெப்பத்தால் நீரிழப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்ததாக யாழ்ப்போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வெப்பநிலை அதிகரித்துள்ள நிலையில் ஆசிரியர்கள் கற்பிக்கின்ற போதும் அதிக நீரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஐரோப்பிய நாடுகளில் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை தாண்டும் பொழுதே நீராகாரத்தை உட்கொள்ளுமாறு ஆலோசனைகளை வழங்க ஆரம்பித்துவிடுவார்கள்.

அப்படி இருக்கையில் இலங்கையின் குறிப்பாக வடக்கின் வெப்பநிலைக்கு குடிதண்ணீர் நிலையங்கள் பரவலாக அமைக்கப்பட வேண்டும் குறிப்பாக பாடசாலைகளில் குடிநீருக்கான வசதிகள் பரவலாக அமைக்கப்பட்டிருப்பது மிக அவசியம்.

பிரதமர் ஹரிணியின் யாழ்.விஜயம் – பல்வேறு தரப்பினருடன் சந்திப்பு

பிரதமர் ஹரிணியின் யாழ்.விஜயம் – பல்வேறு தரப்பினருடன் சந்திப்பு

 

யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் செய்த பிரதமர் ஹரிணி அமரசூரிய பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்று சமூகத்துடன் ஊடாடினார்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்றுக் காலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்து கல்லூரி அதிபர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அதேவேளை, கல்லூரி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடம் கலந்துரையாடிய பிரதமர் தேவைகளை கேட்டறிந்து கொண்டதுடன், கல்லூரி அருங்காட்சியகம், மாணவர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.

யாழ்ப்பாணம், கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு மதியம் சமூகமளித்த பிரதமர் புனரமைக்கப்பட்ட நூலகத்தை திறந்து வைத்துள்ளார். இதன்பின் அங்கு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

தொடர்ந்து சுழிபுரம் உட்பட பல இடங்களில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்டார்

வருடா வருடம் வெள்ளக்காடாகும் யாழ்ப்பாணம் – நிவாரணப்பொருட்கள் கையளிப்பதுடன் முடிந்து போகும் பெருஞ்சோகம் !

யாழ். மாவட்டத்தில்  சீரற்ற காலனிலையால் 3,300 குடும்பங்களைச் சேர்ந்த 11,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் வெள்ள நிலைமை காரணமாக மாவட்டத்தில் இதுவரை 3,300 குடும்பங்களைச் சேர்ந்த 11,416 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக யாழ்ப்பாணம்,நல்லூர், சண்டிலிப்பாய், சங்கானை,உடுவில், தெல்லிப்பளை, கோப்பாய், சாவகச்சேரி, பருத்தித்துறை, மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவுகளிலேயே அதிகமான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றது. இந்த தடவை பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் இடம்பெயர்ந்த பகுதிகளே கடந்த வருடமும் வெள்ளப்பெருக்கால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளாகும். கடல் பகுதிகள் இல்லாத மாவட்டங்கள் கூட வெள்ளப்பெருக்கை முறையாக கட்டுப்படுத்தி அனர்த்தத்தை வெற்றிகரமாக எதிர்கொள்கின்ற நிலையில் மூன்று பக்கமும் கடல் சூழ்ந்த யாழ்ப்பாணம் வருடா வருடம் வெள்ளத்தால் பாதிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

ஒரு பக்கத்தில் குளங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு நகரங்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றன. மக்கள் பொறுப்பற்ற விதத்தில் குப்பைகளை வாய்க்கால்களிலும் வடிகால்களிலும் கொட்டி மூடிவிடுகின்றமையால் வடிகாலமைப்பு தொகுதிகள் முழுமையாக குப்பைகளால் நிறைந்து போயுள்ளன. நீர் போகவழியில்லாது பெரிது பெரிதாக எழுப்பப்ட்டுள்ள சுவர்கள் என இந்த வெள்ளப்பெருக்குக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் நாம் அனைவரும் மட்டுமே.

மாநகரசபைகளும் – பிரதேசசபைகளும் மழைக்காலத்தில் மட்டுமே அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கின்றன. மக்களை பாதுமுகாக்கும் நோக்கமுடையாராயின் வெள்ளம் வருவதற்கு முன்பே இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வருடமும் மழை வந்த பிறகே வெள்ளம் பற்றியும் சிந்திக்கிறார்கள்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த வெள்ள காலகட்டங்களில் மேற்கொள்ளும்  பணிகள் அளப்பரியன. பாராட்டுதற்குரியன. ஆனால் பொருட்களை கொடுப்பதற்கு அப்பால் கடந்த வருடமும் வெள்ள காலத்தில் மக்கள் இடர்பட்ட அதே பகுதிகள் இந்த வருடமும் இடர்படுகின்றன. ஏன் இவ்வாறு குறித்த பகுதிகள் மட்டும் அனர்த்தத்துக்குள்ளாகின்றன..? அதற்கான தீர்வு திட்டங்கள் போன்றன தொடர்பில் அறிக்கைகளை தயாரித்து சம்பந்த தரப்பினரிடம் சேர்க்க வழி செய்வதுடன் அவற்றை ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொண்டு வருவதற்கான நகர்வுகளையும் தன்னார்வ அமைப்புக்கள் மேற்கொள்ள வேண்டும்.

பொறுத்திருந்து பார்ப்போம் இந்த அனர்த்தத்துக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் என்ன என்ன பதில்களையெல்லாம் கூறப்போகிறார்கள் என !

 

யாழில் ஒரு வாரத்தில் 12பேர் சாவு

யாழில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 12 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் தொற்றாளர்களது எண்ணிக்கை கணிசமாக வீழ்ச்சியடைந்து வருகின்ற போதிலும் நாளாந்த உயிரிழப்புகள் தொடர்ச்சியாக பதிவாகும் நிலை நீடித்து வருகிறது.
ஜூலை 01 முதல் ஜூலை 07 வரையான ஒரு வாரத்தில் மட்டும் இவ்வாறு 12 கொரோனா இறப்புகள் யாழ். மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.
இதன்படி, ஜூலை மாதம் முதலாம் திகதி 4 பேரும், ஜூலை 2ஆம் திகதி 2பேரும், ஜூலை 4 ஆம் திகதி ஒருவரும், 5ஆம் திகதி ஒருவரும், ஜூலை 6ஆம் திகதி 3 பேரும், 7ஆம் திகதி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் ஜூலை 7ஆம் திகதி வரையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் பிரதேச செயலர் பிரிவு வாரியாக நோக்கும் போது, யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் – 33 பேரும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 12 பேரும், நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 12 பேரும், உடுவில் பிரதேச செயலர் பிரிவில் – 09 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவு, பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவு மற்றும் சங்கானை பிரதேச செயலர் பிரிவில் தலா 8 பேரும், தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவில் 5 பேரும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவு, சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவு, வேலணை பிரதேச செயலர் பிரிவு ஆகியவற்றில் தலா 3பேரும், காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 2பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் ஒருவரும் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொய்யான குற்றச்சாட்டில் எனது கணவன் கைது! மனித உரிமைகள் ஆனைக்குழுவில் மனைவி புகார்

பொய்யான குற்றச்சாட்டில் எனது கணவனை கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டிச் சாரதியின் மனைவி மனித உரிமைகள் ஆனைக்குழுவில் நேற்று முறையிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் நகரப் பகுதியில் நேற்று காலை  முச்சக்கர வண்டியில் பயணித்த சிவில் உடையில் இருந்த பொலிஸார் முச்சக்கர வண்டி சாரதி தன்னை தாக்கியதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். இதனையடுத்து சிவில் உடையில் நின்ற பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டில் முச்சக்கர வண்டி சாரதி யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதியின் மனைவி யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழுவில் தனது கணவன் பொலிசாரால் திட்டமிட்டு பழிவாங்கும் பட்டுள்ளதாக முறையிட்டுள்ளார்.முச்சக்கர வண்டியில் பயணித்தமைக்கான பணத்தினைக் கேட்டபோது முரண்பட்டு விட்டு தன்னை தாக்கியதாக பொய்யான முறைப்பாட்டை பதிவு செய்து தனது கணவனை கைது செய்து தடுத்து வைத்துள்ளனர் என்று முறையிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயிலுடன் மோதுண்டு 17 மாடுகள் பலி

யாழ்ப்பாணம் தென்மராட்சி மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றத்துக்கு அருகாமையில் ரயிலுடன் மோதுண்டு 17 மாடுகள் பலியாகியுள்ளன.

இந்தச் சம்பவம் நேற்றிரவு (20.07) 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலுடன் மோதுண்டே இந்த மாடுகள் உயிரிழந்துள்ளன.

இருந்தும் மாடுகளுக்கு எவரும் இதுவரை உரிமை கோரவில்லையென சாவகச்சேரி பிரதேச சபையின் வெளிக்கள மேற்பார்வை உத்தியோகத்தர் கைலாயபிள்ளை சிவநேசன் தெரிவித்தார்.

இதேவேளை அண்மையில் கிளிநொச்சி பரந்தன் ஏ -35 வீதியின் வெலிக்கண்டல் சந்திப்பகுதியில் டிப்பர் வாகனத்தில் மோதுண்டு 18 மாடுகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.