வருடா வருடம் வெள்ளக்காடாகும் யாழ்ப்பாணம் – நிவாரணப்பொருட்கள் கையளிப்பதுடன் முடிந்து போகும் பெருஞ்சோகம் !

யாழ். மாவட்டத்தில்  சீரற்ற காலனிலையால் 3,300 குடும்பங்களைச் சேர்ந்த 11,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் வெள்ள நிலைமை காரணமாக மாவட்டத்தில் இதுவரை 3,300 குடும்பங்களைச் சேர்ந்த 11,416 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக யாழ்ப்பாணம்,நல்லூர், சண்டிலிப்பாய், சங்கானை,உடுவில், தெல்லிப்பளை, கோப்பாய், சாவகச்சேரி, பருத்தித்துறை, மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவுகளிலேயே அதிகமான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றது. இந்த தடவை பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் இடம்பெயர்ந்த பகுதிகளே கடந்த வருடமும் வெள்ளப்பெருக்கால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளாகும். கடல் பகுதிகள் இல்லாத மாவட்டங்கள் கூட வெள்ளப்பெருக்கை முறையாக கட்டுப்படுத்தி அனர்த்தத்தை வெற்றிகரமாக எதிர்கொள்கின்ற நிலையில் மூன்று பக்கமும் கடல் சூழ்ந்த யாழ்ப்பாணம் வருடா வருடம் வெள்ளத்தால் பாதிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

ஒரு பக்கத்தில் குளங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு நகரங்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றன. மக்கள் பொறுப்பற்ற விதத்தில் குப்பைகளை வாய்க்கால்களிலும் வடிகால்களிலும் கொட்டி மூடிவிடுகின்றமையால் வடிகாலமைப்பு தொகுதிகள் முழுமையாக குப்பைகளால் நிறைந்து போயுள்ளன. நீர் போகவழியில்லாது பெரிது பெரிதாக எழுப்பப்ட்டுள்ள சுவர்கள் என இந்த வெள்ளப்பெருக்குக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் நாம் அனைவரும் மட்டுமே.

மாநகரசபைகளும் – பிரதேசசபைகளும் மழைக்காலத்தில் மட்டுமே அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கின்றன. மக்களை பாதுமுகாக்கும் நோக்கமுடையாராயின் வெள்ளம் வருவதற்கு முன்பே இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வருடமும் மழை வந்த பிறகே வெள்ளம் பற்றியும் சிந்திக்கிறார்கள்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த வெள்ள காலகட்டங்களில் மேற்கொள்ளும்  பணிகள் அளப்பரியன. பாராட்டுதற்குரியன. ஆனால் பொருட்களை கொடுப்பதற்கு அப்பால் கடந்த வருடமும் வெள்ள காலத்தில் மக்கள் இடர்பட்ட அதே பகுதிகள் இந்த வருடமும் இடர்படுகின்றன. ஏன் இவ்வாறு குறித்த பகுதிகள் மட்டும் அனர்த்தத்துக்குள்ளாகின்றன..? அதற்கான தீர்வு திட்டங்கள் போன்றன தொடர்பில் அறிக்கைகளை தயாரித்து சம்பந்த தரப்பினரிடம் சேர்க்க வழி செய்வதுடன் அவற்றை ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொண்டு வருவதற்கான நகர்வுகளையும் தன்னார்வ அமைப்புக்கள் மேற்கொள்ள வேண்டும்.

பொறுத்திருந்து பார்ப்போம் இந்த அனர்த்தத்துக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் என்ன என்ன பதில்களையெல்லாம் கூறப்போகிறார்கள் என !

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *