பொன்னம்பலம் கஜேந்திரகுமார்

பொன்னம்பலம் கஜேந்திரகுமார்

ஜனவரி 25 தமிழ் தேசியத்தின் மாற்றத்திற்கான ஆரம்பம் என்று கஜா சொன்னது: சிவிகே சிவஞானத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதா ?

ஜனவரி 25 தமிழ் தேசியத்தின் மாற்றத்திற்கான ஆரம்பம் என்று கஜா சொன்னது: சிவிகே சிவஞானத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதா ?

புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் நாடாளுமன்றில் கூட்டாக செயற்படுவது தொடர்பான கலந்துரையாடலுக்கு இலங்கை தமிழரசு கட்சிக்கும் உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 25இல் தமிழ் தேசியத்தின் தலைவிதியை மாற்றப் போவதாக பத்திரிகையாளர் மாநாட்டைக் குப்பிட்டு பொன்னம்பலம் கஜேந்திரகுமார் சொன்னது இந்த கூட்டத்திற்கு வரச்சொல்லி அமைப்பிதழ் கொடுப்பதையா? எனப் பலரும் புரவங்களை உயர்த்துகின்றனர்.

அந்தவகையில் எழுத்து மூலமான அழைப்பு கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் நேற்றையதினம் வழங்கியுள்ளார்.

நாடாளுமன்றில் 8 ஆசனங்களைக் கொண்டிருக்கின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியும், தலா ஒவ்வொரு ஆசனத்தைப் பெற்றுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் ஒரு புள்ளியில் சந்திப்பதன் மூலம் தமிழர் தாயகத்தில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறுதிப் பெரும்பான்மையான 10 ஆசனங்களை நாடாளுமன்றில் உறுதிப்படுத்துவதற்குரிய ஒரு முயற்சியை மேற்கொள்கின்ற வகையிலேயே இந்த முயற்சி அமைந்துள்ளது என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் தமிழரசுக்கட்சிக்கு முறையான அழைப்பு எதுவும் விடுக்கப்பட்டால் மாத்திரமே நாம் அது தொடர்பில் நாம் பரிசீலிப்போம் என சீ.வி.கே சிவஞானம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இந்த கடிதத்தை பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கையளித்துள்ளார்.

 யாழ் மத்திய கல்லூரி அதிபர் மீது கஜா பாய்ச்சல் ! மீண்டும் சாதிய முழக்கமா ?

யாழ் மத்திய கல்லூரி அதிபர் மீது கஜா பாய்ச்சல் ! மீண்டும் சாதிய முழக்கமா ?

‘யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் அதிபர் அதற்குத் தகுதியில்லாதவர். இன்னமும் பதவியில் இருக்கின்றார்’ என்ற தொனிப்பட யாழ் பா உ உறுப்பினர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் பாராளுமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார். தற்போது அப்பாடசாலையின் அதிபராக உள்ளவர், அப்பாடசாலையின் அதிபராகச் செயற்பட முடியாதவர் என்ற பொருள்படவும் கஜேந்திரகுமார் குற்றம்சாட்டியிருந்தார். இக்குற்றச்சாட்டுக்கள் ஜனவரி 22இல் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

தற்போதைய அதிபர் எஸ் இந்திரகுமாரை, ஏன் பிரதமர் ஹரிணி அமரசூரிய இதுவரை கலைக்கவில்லை. டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டினால் கொண்டுவரப்பட்டவரே எஸ் இந்திரகுமார் எனக் குற்றம்சாட்டியிருந்தார், தமிழ் தேசியய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்.

“முன்னைய பாராளுமன்றத்தில் ஹரினி அமரசூரிய எனக்குப் பின்னால் இருந்தவர்’ என்றும் ‘அன்று யாழ் மத்திய கல்லூரி தொடர்பில் ஒரு பிரச்சினையை எழுப்பி இருந்ததார், என்றும் சுட்டிக்காட்டினார் கஜேந்திரகுமார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், “ஹரினி அமரசூரிய இப்போது கல்வி அமைச்சராக, அரசாங்கத்தில் சக்திவாய்ந்த ஒரு நபராக இருக்கின்றார். ஆட்சிக்கு வந்து 100 நாட்களாகிவிட்டது. யாழ் மத்திய கல்லூரியின் தற்போதைய அதிபர் எஸ் இந்திரகுமாரை ஏன் இன்னமும் மாற்றி அமைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். இப்பதவி நியமனம் போன்ற, முறையற்ற செயற்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பில் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் ஒருவரைத் தொடர்புகொண்டு கேட்டபோது. “சோலியன் குடுமி சும்மா ஆடுமா ? பொன்னம்பலம் கஜேந்திரகுமார் ஏன் யாழ் மத்திய கல்லூரியைப் பற்றி இப்ப கதைக்க வேண்டி வந்தது ?” என்று கேள்வி எழுப்பிய அவர், “எஸ் இந்திரகுமார் சோனல் டிரைக்டராக இருந்து அதிபராக வந்தவர். அவருடைய தலைமையில் யாழ் மத்திய கல்லூரி பாரிய வளர்ச்சியைக் கண்டு கொண்டுள்ளது. அவர் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அதிபர். ஆனால் அவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சாதியைச் சேர்ந்தவரல்ல. அதனால் தான் கஜேந்திரகுமார் பாராளுமன்றத்தில் கூடுதல் நேரம் கேட்டு தன் சாதியத் திமிரைக் காட்டுகின்றார்” என்று குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட யாழ் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான அனஸ்லி ரட்ணசிங்கம் தற்போது ஜேர்மனியில் வாழ்கின்றார், அவர் இது பற்றிக் குறிப்பிடுகையில் “தற்போதைய அதிபர் எஸ் இந்திரகுமார் கல்லூரியின் ஒரு சொத்து. அவருடைய தலைமைத்துவத்தில் கல்லூரி வெகுவான முன்னேறி வருகின்றது. ஹரினி முன்னர் இது தொடர்பில் கேள்வி எழுப்பி இருந்தாலும், அதற்குப் பின் மக்கள் அவருக்கு கையொப்பமிட்டு கடிதங்களை அனுப்பி வைத்து, விளக்கமளித்ததைத் தொடர்ந்து அவர் மேற்கொண்டு இவ்விடயத்தில் தலையீடு செய்யவில்லை” எனத் தெரிவித்தார்.

இதுதொடர்பில் கேள்வி எழுப்பிய மற்றுமொரு யாழ் மத்திய கல்லூரி மாணவன் லண்டனில் வாழும் ரங்கநாதன் ரமணன், “அதிபராகத் தகுதியில்லாத, அதிபர் தரத்தைப் பெற்றிராத ஆறு திருமுருகன் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியை குட்டிச்சுவராக்கிய போது, யாழ் பல்கலைக்கழத்தின் பேரவையில் இருந்து பல்கலைக்கழத்தை குட்டிச்சுவராக்கிய போது, இந்த கஜாக்களுக்கு அவர்களை விமர்சிக்க சாதிய விசுவாசம் விடவில்லையோ” எனக் கேள்வி எழுப்பினார். “ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த ஒருவர் யாழ் நகரின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றை நிர்வகிக்கின்றார். அதிலும் அதனை மிகத் திறம்பட நிர்வகிப்பதாக அங்கு கற்கும் மாணவர்களின் பெற்றோர்களே பாராட்டுகின்ற போது, கொழும்புக்கு ஓடிப்போய் பாராளுமன்றத்தில் முறையிட்டு ஒரு நல்ல தகுதியான அதிபரை விரட்டியடிக்க நினைப்பது என்ன மனநிலை” என்றும் கேள்வி எழுப்பினார்.

பொன்னம்பலம் கஜேந்திரகுமார், தற்போது யாழ் மாவட்ட மக்களை மிகவும் பாதிக்கின்ற குடி தண்ணீர் பிரச்சினை அதனால் ஏற்படுகின்ற சுகாதாரப் பிரச்சினை, யாழ் மீனவர்கள் எதிர்கொள்கினற வாழ்வாதாரப் பிரச்சினை என்று பல பிரச்சினைகள் இருந்த போதும் அவை பற்றியெல்லாம் பாராளுமன்றத்தில் வாய் திறப்பதில்லை. இல்லாத பிரச்சினையை வெறும் சாதிய நலன்களுக்காக முன்வைக்கின்றார் என்றே பழைய மாணவர்களும் தற்போதைய கல்விச்சமூகமும் உணர்கின்றது.

முன்னைய அதிபர் ஓய்வுபெற்றுச் சென்றபோது அங்கு உப அதிபராக இருந்தவர் நியமிக்கப்பட்டார். ஆண்கள் பாடசாலைக்கு பெண் அதிபர் வேண்டாம் என்ற போராட்டமும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து தகுதிகள் பலவுடைய தற்போதைய அதிபர் எஸ் இந்திரகுமார் நியமிக்கப்பட்டார். அதன் பின்னால் அப்போது அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவின் அழுத்தங்கள் இருந்ததாகச் சொல்லப்பட்டது. எது எவ்வாறாக இருந்தாலும் தற்போதைய அதபர் எஸ் இந்திரகுமார் மக்களால் வரவேற்கப்படுகின்றார் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபருக்கான தகுதியில்லாமல் ஆறுதிருமுருகன் யாழ் ஸ்கந்தவரோதாயாக் கல்லூரியில் நியமிக்கப்பட்டார். யாழ் பல்கலையில் பேரவையிலும் நியமிக்கப்பட்டார். இவர் இப்பதவிகளைப் பெற முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசு இருந்தது. தான் போன கல்வி நிறுவனங்களைச் சீரழித்தார் ஆறுதிருமுருகன். ஆனால் யாரும் ஆறு திருமுருகன் மீது கேள்வி எழுப்பவில்லை. ஏனெனில் அவர் ஆதிக்க சாதி, ஆளப் பிறந்தசாதி, பொன்னம்பலம் கஜேந்திரகுமாரின் சாதி என்பதைத்தவிர வேறு காரணங்கள் இல்லை.

கஜாவின் புதிய கண்டுபிடிப்பு: அனுரா கோட்டபாயாவைக் காட்டிலும் மோசமான இனவாதி !

கஜாவின் புதிய கண்டுபிடிப்பு: அனுரா கோட்டபாயாவைக் காட்டிலும் மோசமான இனவாதி !

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பா உ பொன்னம்பலம் கஜேந்திரகுமார் யாழில் தங்களுடைய கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போது முன்னாள் ஜனாதிபதி கோட்ட பாயவும் செய்யாத அளவுக்கு இனவாத அரசியலை தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேற்கொள்ள முயல்கிறார் எனக் குறிப்பிட்டார். தமிழ் தேசிய மக்கள் சக்தி தேர்தலின் போது அரசியல் கைதிகள் விடுதலை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவது, விடுவிப்பு போன்ற வாக்குறதிகளை வழங்கிவிட்டு தற்போது அவற்றிலிருந்து பின்வாங்கி இனவாத அரசியலை முன்னெடுப்பதாக குற்றம்சாட்டினார். தமிழ் மக்கள் ஜேவிபி இன் இனவாத முகத்தை கவனிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என ஜனாதிபதி அனுர பதிவியேற்று 100 நாட்களிலும் புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட்டு 50 நாட்களிலும் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தனது பாரிய கண்டுபிடிப்பை ஊடகங்களுக்கு வெளியிட்டார்.

ஜனவரி 25 இல் நடக்க உள்ள சந்திப்பு தமிழ் தேசிய அரசியலின் ஆரம்பப்புள்ளியாக அமையும் என்றும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அழைப்பு விடுத்துள்ளார். இவரது அழைப்பை வடக்கு கிழக்கில் உள்ள எந்த அரசியல் கட்சியும் கணக்கில் எடுத்ததாக இதுவரை தகவல் இல்லை.

இவர்கள் மத்தியானச் சாப்பாட்டுக்கு பிறகு கதைக்கிறது எல்லாம் அரசியல் சந்திப்பு என்ற கணக்குக்குள் வராது என பா உ சாணக்கியன் தெரிவித்துள்ளார். அவருடைய தமிழரசுக் கட்சி தங்களுடைய வழி தனி வழி என்றும் தங்களுடைய பயணம் ஏலவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என்றும் கூறுகின்றனர். அந்தப் பயணத்துக்கான குழுவில் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரோடு பேசிய பா உ சிறிதரனும் உள்ளார்.

இந்தியா தலையிடாட்டி சந்தோசம், 13யை தொடமாட்டோம் என்கிற கதைக்கே இடமில்லை, இந்தியா, மாகாணசபை, 13 இல்லாவிட்டால் தாங்கள் உடன்கட்டை ஏறுவோம் என்கிறார் அரசியலில் தனிக்கட்டையாக நிற்கும் பா உ செல்வம் அடைக்கலநாதன்.

தமிழ் அரசியலில் மூன்று தனிக்கட்டைகள்: பொன்னம்பலம் கஜேந்திரகுமார், சிவஞானம் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன்.இவர்கள் தனிக்கட்டைகளாக இருப்பதால் அரசியலில் கூட்டுக்கலவியில் ஈடுபட விருப்பம் கொண்டவர்கள் தான். ஆனால் இவர்களுக்கு ஒற்றுமைப்படுவதற்கான கொள்கை எதுவும் இல்லை என்பது பெரும் பிரச்சினை. இவர்களைவிட இன்னுமொரு தனிக்கட்டை இருக்கின்றார். அவர் அரசியலிலும் தனிக்கட்டை சுயேட்சைக்குழு இராமநாதன் அர்ச்சுனா. இவர் தலைவெட்டப்பட்ட கோழி போல் எந்தப் பக்கம் பாய்வார் என்று அவருக்கே தெரியாது.

அதனால் தான் இவர்களுடைய அரசியல் என்பது பாராளுமன்றம் செல்வதும், கொழும்பில் இருக்கும் போது எங்களுக்கு நேரம் தாருங்கள் என்று கெஞ்சிக் கூத்தாடி வெள்ளைக்கார ராஜதந்திரிகளிடம் நேரம் எடுத்து அவர்களோடு தேநீர் குடித்தவிட்டுவருவதும் என ஈழநாடு பத்திரிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

பொன்னம்பலம் கஜேந்திரகுமார் மதிப்பளிக்கும் இந்த வெள்ளைக்கார தொரைகளே, இலங்கையில் இனவாதம் இல்லாத ஒரு அரசாங்கத்தை அனுரா நடத்துவதாக நற்சான்றிதழ்கள் கொடுக்கின்றனர். பொன்னம்பலம் கஜேந்திரகுமாரின் குற்றச்சாட்டை, அதாவது ஜனாதிபதி அனுரா, முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயாவை விட மோசமான இனவாதி என்ற கருத்தை கஜேந்திரகுமாரின் நெருங்கிய நட்பான அமெரிக்க தூதுவர் யூலி சங்கே ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. குண்டுச் சட்டிககுள் சைக்கிள் ஓடி இருக்கிற ஒரு ஆசனத்தையும் தொலைக்கப் போகின்றார் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் என்கிறார் பிரான்ஸில் வாழும் சமூக அரசியல் செயற்பாட்டாளர் சோலையூரான் என அறியப்பட்ட முருகவேள் யோகராஜா.

13வது திருத்தம் ‘அப்பிட எப்பா’, மாகாணசபை ‘அப்பிட எப்பா’, இந்தியா ‘கமக்நா’ ரில்வின் அல்ல கஜா !

13வது திருத்தம் ‘அப்பிட எப்பா’, மாகாணசபை ‘அப்பிட எப்பா’, இந்தியா ‘கமக்நா’ ரில்வின் அல்ல கஜா !

13வது திருத்தச் சட்டமும் வேண்டாம் மாகாண சபையும் வேண்டாம் இவை இனப்பிரச்சினைத் தீர்வுக்கான தொடக்கப் புள்ளியாகக் கூட இருக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் ஊடகவியலாளருடைய கருத்துக்கு இட்ட பதில் கருத்தில், இந்தியா இவைபற்றிப் பேசாது ‘கம்மென்று’ இருப்பதையிட்டு தனக்குப் பெருமகிழ்ச்சியென்றும் குறிப்பிட்டுள்ளார். ஒரு பக்கம் இந்தியாவின் முகவர்களான பா.உ எஸ் சிறிதரனுடனும் பா உ செல்வம் அடைக்கலநாதனுடனும் கூட்டுச் சேர்ந்து அரசியல் தீர்வை முன்வைக்கப் போகிறோம் என்று பேச்சுவாரத்தை நடந்தது. அதற்கு சுமந்திரன் ‘கட்சியின் அரசியல் யாப்பு சீர்திருத்த நடவடிக்கைகளுக்குப் புறம்பாக செயற்படுபவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்’ என்று இறுக்கிய ஆப்போடு பொன்னம்பலம் கஜேந்திரகுமார் மீண்டும் முருங்கைமரத்தில் ஏறிக்கொண்டார். பெரும்பான்மையான தமிழ் மக்கள் 13வது திருத்தத்தையும் மாகாணசபையையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்ட பொன்னம்பலம் கஜேந்திரகுமார், தமிழ் மக்கள் கௌசல்யாவுக்கு கொடுத்த அங்கீகாரத்தைக் கூட தனக்கு அளிக்கவில்லை என்பதை உணரமறுக்கின்றார். 13வது திருத்தத்தையும் மாகாணசபையையும் ஏற்றுக்கொள்ளாத தமிழ் தேசிய மக்கள் முன்னணி 2025 முற்பகுதியில் நடைபெறும் உள்ளுராட்சித் தேர்தலில் அதனைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழ் தேசியக் கட்சிகள், இந்திய அரசு ஜனாதிபதி அனுரவுக்கு அதீத முக்கியத்துவம் அளிக்கப்பட்டதில் அதிருப்தியடைந்துள்ளனர். 13வது திருத்தத்தைப் பற்றியே மோடி பேசவில்லை என்பதில் தமிழ் தேசியவாதக் கட்சிகள் சற்று மனமுடைந்துவிட்டன. பொன்னம்பலம் கஜேந்திரகுமாருக்கு முற்றிலும் முரணாக, 13வது திருத்தம் மாகாணசபை பற்றி கருத்து வெளியிட்ட வடக்கு – கிழக்கு இணைந்த மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள், தமிழகக் கட்சிகள் 13வது திருத்தத்தை அழுல்படுத்த பிரதமர் மோடிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரியிருக்கின்றார். பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அமெரிக்க முகவராகவும் வரதராஜப் பெருமாள் இந்திய முகவராகவும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

“தேசிய மக்கள் சக்தி இலங்கையின் அனைத்து மக்களதும் துணையோடு, மிகப்பெரும்பான்மைப் பலத்தோடு, ஆட்சி அமைத்துள்ளது எங்களுடைய ஆட்சியை கவிழக்கலாம் என கனவிலும் எண்ண வேண்டாம்” என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்து இருக்கின்றார். ஜனாதிபதி அனுர ஒருபடி மேலே சென்று, “மக்களுக்கான ஆட்சி அடுத்த பத்தாண்டுகளுக்குத் தொடரும்” எனத் தெரிவித்திருக்கின்றார். மேலும் “இந்தியாவில், ஜனாதிபதி அனுரவுக்கு எதிரான எவ்வித ஆர்ப்பாட்டங்களும் எழவில்லை. தவிர்க்க முடியாமல் ஜனாதிபதி அனுரா இலங்கையின் அனைத்து மக்களினதும் பிரதிநிதி என்பதை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையை, தேசிய மக்கள் சக்தி உருவாக்கி உள்ளது. எங்களுடைய சக இனத்தவர்களை எப்படி நடத்த வேண்டும் என்று இந்தியா, இலங்கைக்கு கற்பிக்க வேண்டிய அவசியமில்லை” என்பதை தேசிய மக்கள் சகத்தி தெளிவாக உணர்த்தியுள்ளது என ஆய்வாளர் மயில்வாகனம் சூரியசேகரம் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

“கிழக்கில் சிங்கள மயப்படுத்தும் திட்டத்திற்கு தமிழ் பிரதேசத்தின் ஒரு அங்குலம்  நிலம் கூட வழங்க முடியாது.” – பொன்னம்பலம் கஜேந்திரகுமார்

“சிங்கள மயப்படுத்தலுக்காக திட்டமிடப்பட்ட மாதுறு ஓயா வலதுகரை திட்டத்திற்கு தமிழ் பிரதேசத்தின் ஒரு அங்குலம்  நிலம் கூட வழங்க முடியாது.” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் மற்றும் கட்சி ஆதரவாளர்களுடன் மயிலந்தனை மாதந்தனை மேச்சல் தரை பகுதிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) விஜயம் மேற்கொண்டு பண்ணையாளர்களை சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளை கேட்டறிந்த பின்னர் கட்சி தலைவர் ஊடகங்களக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லைப் பிரதேசமான மயிலந்தனைமடு பெரிய மாதந்தனை பிரதேசத்தில் மேச்சல்தரை பகுதியில் கால்நடை பண்ணையாளர்களை அச்சுறுத்தி மாடுகளை வெட்டி அவர்களை பரம்பரையான மேச்சல்தரையில் இருந்து ஓடவைப்பதற்காக முழுமூச்சிலான திட்டம் கடந்த இரண்டு வாரத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பண்னையாளர்களின்  இந்த பிரச்சனைகளை அவர்கள் பல இடங்களில் முறையிட்டனர். ஆனால் எந்த ஒரு இடத்திலும் அவர்களுக்கு முடிவு இல்லாமல் தொடர்ச்சியாக அவர்களின் வாழ்வே கேள்விக்குறியாகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. மாதுறு ஓயா வலதுகரையை சிங்களமயமாக்குதலுக்கான நோக்கத்தோடு இந்த பண்ணையாளருக்கு எதிராக நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்பது நன்றாக விளங்குகின்றது.

இதேவேளை கிழக்கு மாகாண ஆளுநர், வனவளதிணைக்களம்,  மகாவலி அபிவிருத்தி சபை போன்ற அனைத்து கட்டமைப்புக்களும் இங்குள்ள மேச்சல்தரை காணிகளை அபகிப்பதற்கான நடவடிக்கையை உறுதியாக இருக்கின்றனர்.

நீதிமன்ற உத்தரவு இருக்கின்றது. இந்த பிரதேசத்தில் தமிழ் விரோத நடவடிக்கை சிங்கள விரோதிகளால் முன்னெடுப்பதை தடுக்க ஒருவருடத்துக்கு மேலாக இருக்கின்றது கிழக்கு மாகாண ஆளுநருடைய முழு ஒத்துழைப்புடன் கண்ணுக்கு முன்னால் அவருடைய வழிகாட்டலில் நடக்கின்றது என்றால் எந்தளவுக்கு இந்த இனவாத சட்டத்தையும் நீதியையும் மதிக்கின்றார்கள் ?

எனவே தமிழ் பிரதேசத்தை இன சுத்திகரிப்பு நடாத்துவதற்கும் சிங்கள குடியேற்றத்தை நடாத்தி இங்குள்ள மக்களை பட்டினியில் சாவடிக்கின்ற நடவடிக்கையான மதுறு ஓயா அபிவிருத்திக்கு நிதி உதவி வழங்குகின்ற சர்வதேச நிறுவனங்களே  நீங்களும் தமிழ் இன சுத்திகரிப்பிற்கு உடந்தையாக இருக்கின்றீர்கள்.

எனவே உங்களுக்கு இருக்கின்ற நிதியை எந்தவிதமான நிபந்தனையும் போடாமல் சிங்கள இனவாத சித்தாந்தத்திற்கு விலைபோகின்றதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படுகின்றது என தெரிந்துவைத்திருக்க வேண்டும். இதை தடுத்து நிறுத்த முன்வரவேண்டும் அல்லது உங்கள் அலுவலகங்களுக்கு முன்னால் நாங்கள் போராட்டங்களை செய்வதை தவிர வேறு வழியில்லை.  கோட்டாபாய ராஜபக்ஷ காலத்தில் சந்தித்து இந்த விடையங்களை கூறி பாராளுமன்றத்தில் பெரிதுபடுத்தி பேசிய போது தற்காலிகமாக நிறுத்துவதாக உத்தரவாதம் தந்தாலும் கூட இன்று முன்னரைவிட தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று ரணில் விக்கிரம சிங்கவை செல்லப்பிள்ளையாக நீங்கள் கருதி காப்பாற்றுகின்ற வேளையில் அவரின் ஆட்சி காலத்தில் இந்த இனவாத தமிழ்விரோத செயற்பாடுகள் அனைத்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்பது இன்று யதார்த்தம்.

எனவே நிதி உதவி செய்யும் சர்வதேச நிறுவனங்கள் உடனடியாக கொடுக்க கூடிய நிதி உதவிகளை நிபந்தனைகளை போட்டு இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துகின்றதை உறுதி செய்யவேண்டும்.

இந்த திட்டம் மக்களுக்குரிய அபிவிருத்தி வேலைத்திட்டமாக இருக்கவேண்டுமே தவிர இந்த மக்களை அப்புறப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை இல்லாமல் செய்து ஒரு இனழிப்பிற்கு வழிவகுக்கின்ற முறையில் அமையகூடாது. இதையும் அம்பலப்படுத்துவோம் எனவே இந்த விடயங்களை கருத்தில் கொண்டு  சரியான வகையில் இங்கே பரம்பரையாக இருக்ககூடிய தமிழர் தாயத்தில் இருக்ககூடிய உண்மையான சொhந்தகாரர்களுக்கு நீதிகிடைக்கவேண்டும்.

அதேவேளை எங்களுடைய உள்ளூராட்சி சபைகள் தவிசாளர் பதவிகளை வைத்துக் கொண்டு ஆட்சி அதிகாரங்களை வைத்துக் கொள்பவர்கள் இந்த சொந்த மக்களுக்கு இந்த நிலத்துக்குரிய உரிமையாளர்களுக்கு  வந்து தொழிலை செய்வதற்கான போக்குவரத்துக்கு இந்த பாதைகளை சீர் செய்ய முடியாமல் இவ்வளவு காலமும் பாத்துக் கொண்டிருப்பது என்பது மிக மோசமான ஒரு அநியாயம்.

இந்த மக்கள் தங்களுக்கு பல அச்சுறுத்தல் மத்தியில் இந்த பிரதேசத்தில் தங்களுடைய உயிர்களை வைத்துக் கொண்டு பண்ணைகளை பராமரிப்பதென்பது ஒரு இலகுவான விடையமல்ல.

ஒரு பக்கம் சிங்கள இனவாத அச்சுறுத்தல், இன்னொரு பக்கம் யாணையால் அச்சுறுத்தல் மத்தியில் மரத்தில் ஏறி இருந்து கொண்டு இருப்பது என்பது இந்த மண்ணைபறிகொடுக்காமல் இருப்பதற்காக அவர்கள் பரம்பரை பரம்பரையாக தாங்கள் செய்து கொண்டுவருகின்ற இந்த மேச்சல்தரை நிலத்தை பாதுகாக் வேண்டும் என்ற அடிப்படையில் இருக்கின்ற இந்த மக்களின் தேவைப்படுகின்ற உத்தரவாதங்களையும் உதவிகளையும் வசதிகளையும் செய்யாமல் இருக்கும் தமிழ் பிரதேச சபைகள் இயங்குவது என்பது மன்னிக்கு முடியாத ஒரு செயலாகும் என்றார்.