ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் கூட்டாக பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.
இதனுடன், பலஸ்தீனத்தை தனி அரசாக அங்கீகரிப்பதில் தமக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை என பிரான்ஸும் அறிவித்துள்ளது.
அதன்படி, தகுந்த நேரத்தில், பலஸ்தீனத்தை தனி அரசாக அங்கீகரிக்க தான் தயாராக இருப்பதாக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் காசா குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இதனை தெரிவித்தார்.
பலஸ்தீனத்துக்கான அங்கீகாரம் சரியான தருணத்தில் கொடுக்கப்பட வேண்டும் என தான் கருதுவதாகவும், உணர்ச்சிவசப்பட்டு இந்த முடிவை தான் உடனடியாக எடுப்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன்” என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நோர்வே அயர்லாந்து ஸ்பெயின் ஆகிய நாடுகள் பாலஸ்தீன தேசத்தை அடுத்தவாரம் அங்கீகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் இந்த நாடுகளிற்கான தங்கள் தூதுவர்களை இஸ்ரேல் உடனடியாக மீள அழைத்துள்ளது.
பாலஸ்தீன தேசம் என்ற ஒன்று இல்லாமல் மத்தியகிழக்கில் அமைதிநிலவாது என நோர்வேயின் பிரதமர் ஜொனஸ் கர் ஸ்டோர் தெரிவித்துள்ளார்.
மே 28ம் திகதி நோர்வே பாலஸ்தீன தேசத்தை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கும் எனஅவர் தெரிவித்துள்ளார்.
இரண்டுதேசம் தீர்வே மத்தியகிழக்கில் அமைதிக்கு அவசியமான விடயம் என தெரிவித்துள்ள பல ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினரால்லாத நோர்வே இரண்டு தேசம் தீர்விற்கு உறுதியான ஆதரவை வெளியிட்டு வந்துள்ளது.
இரண்டு தேசம் கொள்கையை ஆதரிக்காத ஹமாஸ் அமைப்பும் ஏனைய பயங்கரவாத குழுக்களும் இஸ்ரேலுமே பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன என நோர்வே பிரதமர் தெரிவித்துள்ளார்.
ரஃபாவிலிருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேறவேண்டும் என உத்தரவுபிறப்பித்துள்ளதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் அங்கிருந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றனர்.
ரஃபாவின் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
எதிர்காலத்தில் ரஃபாவில் இஸ்ரேல் தனது இராணுவநடவடிக்கைகளை தீவிரப்படுத்தலாம் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அறிவித்த மறுநாள் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உங்களின் பாதுகாப்பிற்காக சோதனைசாவடிகளிற்கு அருகில் உள்ள மனிதாபிமான பகுதிக்கு உடனடியாக செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என இஸ்ரேலிய இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அல்ரபாவின் அல்சவ்கா மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மட்டுப்படுத்த அளவிலான நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இஸ்ரேலிய இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் இடம் பெயர்ந்த மில்லியன் கணக்காண மக்கள் எகிப்து எல்லையில் உள்ள ரபாவில் தஞ்சமடைந்துள்ளனர்.
அச்சமடைந்த மக்கள் கால்நடையாகவும் அல்லது கழுதைகளின் மீதும் அல்லது தங்களின் உடமைகளை வாகனங்களில் ஏற்றியபடி வாகனங்களிலும் ரபாவிலிருந்து வெளியேறுகின்றனர்.
நேற்றிரவு இஸ்ரேல் மேற்கொண்ட விமானக்குண்டுவீச்சுகள் மக்களின் அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஃபாவிலிருந்து நகரத்தின் மேற்கு பகுதி உட்பட நகரத்தில் கடும் பதற்றநிலை காணப்படுகின்றது பலர் வெளியேறுவதற்கு தீர்மானித்துள்ளனர் பலர் ஏற்கனவே வெளியேற ஆரம்பித்துள்ளனர் என நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார் என கார்டியன் தெரிவித்துள்ளது. மேலும் ரஃபா மனிதாபிமான நடவடிக்கைகளிற்கான பிரதான தளமாகவும் காணப்படுகின்றது.
அவர்கள்ரஃபாவின் கிழக்கில் உள்ளவர்களை வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்ரஃபா எல்லையில் மேற்கில் உள்ளவர்களையும் வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளனர் எனக்கு என்ன செய்வது என தெரியவில்iலை நான் அறிவிக்கப்பட்ட இடத்தில் இல்லாவிட்டாலும் எனது குடும்பத்தை டெய்ர் எல் பலாவிற்கு கொண்டு செல்லப்போகின்றேன் எனரஃபாவின் வடக்கில் தனது குடும்பத்துடன் தஞ்சமடைந்துள்ள அபுமுகே தெரிவித்துள்ளார்.
தற்போது கடும் மழை பெய்கின்றது எங்கு போவது என எங்களிற்கு தெரியவில்லை இந்த நாள் வரும் என நான் கவலையுடன் இருந்தேன் எனது குடும்பத்தவர்களை எங்கு கொண்டு செல்வது என சிந்திக்கவேண்டும் என ரஃபாவில் அகதியாக உள்ள அபுரயீட் தெரிவித்துள்ளார்.
காசா நகரின் தென்மேற்கில் உணவு உதவிக்காக காத்திருந்த நூற்றுக்கணக்கான பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் சுமார் 700 பேர் காயமடைந்துள்ளனர் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காசா சுகாதார அமைச்சகம் வியாழனன்று, குறைந்தது 104 பேர் கொல்லப்பட்டதாகவும், 750 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறியது.
பாலஸ்தீனிய வெளியுறவு அமைச்சகம் குளிர் இரத்தம் கொண்ட “படுகொலை” என்று தெரிவித்து இந்த சம்பவத்தை கண்டித்துள்ளது.
இந்த தாக்குதல் இஸ்ரேலின் தற்போதைய “இனப்படுகொலை போரின்” ஒரு பகுதியாகும் என்று அமைச்சகம் கூறியது.
“பொதுமக்களை பதுகாப்பதற்கான ஒரே வழி” போர்நிறுத்தத்தை உருவாக்க “அவசரமாக தலையிட” சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்தது.
துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு, இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேறி இறந்த மற்றும் காயமடைந்த உடல்கள் மீது ஏறியது. காசாவில் பட்டினியின் விளிம்பில் உள்ள மக்களை அச்சுறுத்துவதற்கான”இது ஒரு படுகொலை, ,” என்று அல்ஜசீரா செய்தியாளர் கூறினார்.
அல்-ஷிஃபா, கமால் அத்வான், அஹ்லி மற்றும் ஜோர்டானிய மருத்துவமனைகளுக்கு இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் கொண்டு செல்லப்பட்டனர் சாலைகள் “முற்றிலும் அழிக்கப்பட்டதால்” அம்புலன்ஸ்கள் அப்பகுதியை அடைய முடியவில்லை, என தெரிவிக்கப்படுகிறது.
நாளை டிசம்பர் 10, சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பாலஸ்தீனப் போராட்டமும் ஈழப் போராட்டமும் எனும் தலைப்பிலான கருத்துப் பகிர்வும் கலந்துரையாடலும் தேசம் ஊடகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
ஐநா செயலாளார் நாயகம் அன்ரனியோ பூட்ரஸ் அவர்களின் ‘யுத்த நிறுத்தம்’ வேண்டும் என்ற அவசர தீர்மானத்தை அமெரிக்கா மீண்டும் நிராகரித்துள்ளது. பிரித்தானியா வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தது. அமெரிக்கா பிரித்தானியா மற்றும் அவற்றின் நேசநாடுகள் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு முழுமையான ஆதரவை மீண்டும் வழங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் தன்னை ‘Genocide Joe’ என்று மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த சர்வதேசப் பின்னணியிலேயே இக்கருத்துப் பகிர்வு நடைபெறுகின்றது.
எதிர்வரும் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 தொடக்கம் இரவு 7மணி வரை 10th village way, Rayners Lane, Pinner இல் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில், முரண்பட்ட அரசியல் பின்புலத்திலிருந்து தங்கள் அனுபவங்களை வளவாளர்கள் பகிரவுள்ளனர்.
நிகழ்வுக்கு தேசம் எழுத்தாளர் த. ஜெயபாலன் தலைமைதாங்கவுள்ளார். ஒடுக்குமுறைகளும் மக்கள் எழுச்சிகளும் எனும் தலைப்பில் எழுத்தாளரும் Committee for Workers International கட்சியின் International Secretariat ட்டருமான சேனன் உரை நிகழ்த்தவுள்ளார்.
யூடாயிசம் – சியோனிசம் – சர்வதேசம் எனும் தலைப்பில் அரசியல் ஆய்வாளரும் சட்ட வல்லுனருமான சையத் பஷீர் உரை நிகழ்த்தவுள்ளார்.
ஹொலக்கோஸ்ட் முதல் காசா வரை : ஜேர்மனியின் அரசியல் போக்கு எனும் தலைப்பில் சமூக செயற்பாட்டாளர் கங்கா ஜெயபாலன் உரை நிகழ்த்தவுள்ளார்.
பாலஸ்தீன – ஈழ மக்களின் எதிர்காலமும் சர்வதேசத்தின் அணுகுமுறைகளும் எனும் தலைப்பில் Asatic.org இன் Academic Secretriatரும் முன்னாள் ஈரோஸ் உறுப்பினருமான ரவி சுந்தரலிங்கம் உரை நிகழ்த்தவுள்ளார்.
வளவாளர்களின் உரைகளைத் தொடர்ந்து கருத்துப் பகிர்வும் கலந்துரையாடலும் இடம்பெறும். தமிழ் மக்களின் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்துக்கும் நெருக்கமான உறவுகள் காணப்பட்டது. பாலஸ்தீன விடுதலை இயக்கம் தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு பயிற்சிகளை அழித்தது. அவ்வாறு பயிற்சி பெற்ற பலர் இன்னமும் எம்மத்தியில் வாழ்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியில் இவ்வாறானதொரு கலந்துரையாடல் இடம்பெறுவது இதுவே முதற்தடவை. அந்த வகையில் இந்தக் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கெடுத்து ஆக்கபூர்வமாக கருத்துப் பகிர்வில் ஈடுபடுமாறு ஆர்வலர்கள் அனைவருக்கும் தேசம் அழைப்புவிடுத்துள்ளது.
தமிழ் மக்களும் ஒரு நீண்ட போராட்டத்துக்கூடாக வாழ்ந்துவரும் ஒடுக்கப்பட்ட சமூகம் என்ற வகையில் மேற்குநாடுகள் அனைத்தும் இஸ்ரேல் உடன் ஒன்றிணைந்து பாலத்தீனமக்களை கொண்றொழிக்கும் இந்த இனப்படுகொலையைக் கண்டிப்பது ஒவ்வொரு மனிதாபிமான மிக்க மனிதனதும் கடமையும் பொறுப்பும். இவ்வாறான இனப்படுகொலைகளை கண்டிக்கத் தவறுவது இவ்வாறான படுகொலைகள் தொடருவதற்கும் மோசமடைவதற்கும் வழிவகுக்கும்.
‘ஞாபகார்த்த தின’ நாளான நவம்பர் 11இல் லண்டனில் நடைபெற்ற மாபெரும் ஊர்வலத்தில் மக்கள் சாரை சாரயாக மிகுந்த ஆக்கிரோசத்துடன் பங்கேற்றனர். ஈராக் ஆக்கிரமிப்பு யுத்தத்தை எதிர்த்து பிரித்தானிய மக்கள் வீதியில் இறங்கியதற்கு ஒப்பாக பெருவரியான மக்கள் நேற்றைய போராட்டத்தில் குதித்திருந்தனர். இன, மத, மொழி பேதமற்று போராட்த்தில் ஈடுபட்டவர்கள் பிரித்தானியப் பிரதமர் ரிசிசுனாக் மற்றும் அவரின் நம்பிக்கைக்குரிய உள்துறை அமைச்சர் சுவலா பிரவர்மன் ஆகியோருக்கு எதிராகவும் மேற்கத்தைய தலைவர்களுக்கு எதிராகவும் கோசங்களை எழுப்பினர்.
ரிஸி சுனாக்கை குப்பைப்பை என்று கோசமெழுப்பியவர்கள் இந்த அமைதிப் போராட்டத்தை வஞ்சகப் போராட்டம் என வர்ணித்த உள்துறை அமைச்சர் சுவலா பிரவர்மன்னை இனவாதி என அழைத்தனர். இப்போராட்டத்துக்கு லூட்டனில் இருந்து வந்திருந்த பல்கலைக்கழக மாணவி அலிசா சௌத்திரி, “தான் சுவலா பிரவர்மனுக்கு நன்றி சொல்வதாகவும் அவருடைய இனவாதப் பேச்சுத் தான் என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியது” என தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
இந்த அமைதிப் போராட்டம் லண்டனில் வாரம் தோறும் நடைபெற்று வருவதுடன் உலகின் பல்வேறு நகரங்களிலும் நடைபெற்று வருகின்றது. மேற்கு நாடுகளினதும் ஏனைய நாடுகளினதும் தலைவர்களும் அரசியல் தலைமைகளும் எவ்வாறு இரட்டைவேடம் கட்டி நடிக்கின்றனர் என்பதை குறைமாதத்தில் பிறந்த இன்குபேற்றர் பேழையில் பேணப்படும் குழந்தைகள் உலகிற்கு அம்பலப்படுத்தி வருகின்றனர்.
“நாங்கள் மனிதத்துவம் இல்லாமல் போய்விட்டது” என்று சொல்ல முடியாது என்று குறிப்பிட்ட கொமிற்றி போர் வேர்கஸ் இன்ரநஷனல் இன் இன்ராநெஷனல் செக்கிரிற்றியற்றும் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின் ஸ்தாபகருமான சேனன், “ஆம் மேற்குத் தலைமைகளிடமும் ஏனைய அரசியல் தலைமைகளிமும் மனிதத்துவம் செத்துவிட்டது, ஆனால் மக்களிடம் மனிதத்துவம் இன்னும் உயிப்புடன் தான் இருக்கிறது. அதனால் தான் அவர்கள் வெகுண்டு எழுந்து இங்கு வந்து, அதிகாரத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.
போராட்டத்தில் வந்தவர்களைக் களைப்படையச் செய்யும் வகையிலும் அவர்களைத் தேவைப்படும் பட்சத்தில் முடக்கும் வகையிலும் அமெரிக்க தூதரலாயத்தை நோக்கிச் செல்வதற்கு நீண்ட பாதையொன்றை மெற்றோபொலிட்டன் பொலிஸார் திட்டமிட்டு இருந்தனர். மாலை ஐந்து மணியளவில் போராடும் மக்களோடு மக்களாக தமிழ் சொலிடாரிட்டி குழவின் ஊர்வலம் வொக்சோல் பிறிட்ஜ்சை எட்டிய போது ஏற்கனவே அங்கு அசையாது நிலைகொண்டிருந்த போராட்டக்காரர்களால் அசைய முடியாத நிலையில் மாலை 5:30 மணியளவில் போராட்டம் அவ்விடத்தில் முற்றுப் பெற்றது.
காலை பத்து மணி முதலே தொகையாகத் திரள ஆரம்பித்த மக்கள் கூட்டம் பதினொரு மணியை எட்டியதும் லண்டனின் இதயப் பகுதியைச் சுற்றியுள்ள ரியூப் ஸ்ரேசன்களில் சன நெருக்குவாரத்தை ஏற்படுத்தி சில பிரதான ரியூப் ஸ்ரேசன்களை மூடிவைக்க வேண்டிய நிலைக்கு கொண்டுவந்தது. மாபிளாச் ரியூப் ஸ்ரேசனில் தங்களை ஒழுங்குபடுத்திய தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின் உறுப்பினர் ராஜன், இவ்வாறு தொகையான மக்கள் கூட்டம் இரண்டுமணி நேரமாக வந்து குவிந்து கொண்டிருப்பதை தான் காணவில்லை எனத் தெரிவித்தார். மாபிளாச்சில் இருந்து நகர்ந்து கொண்டிருந்த ஊர்வலத்தோடு 11:30 மணி அளவில் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினரும் கலந்துகொண்டனர். ராஜன் மற்றும் கஜன் தமிழ் சொலிடாரிட்டி பனரைத் தாங்கிச் செல்ல ஏனையவர்கள் பின் தொடர்ந்தனர்.
மிக உயர்த்திப் பிடிக்கப்பட்ட பாலஸ்தீனக் கொடிகளில் ஒன்றாக தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின் கொடியும் உயரப் பறந்தது. பாலஸ்தீனியர்கள் முஸ்லீம்கள் அல்லாதவர்களும் போராட்டத்தில் தோள்கொடுப்பதை உணர்ந்து தமிழ் சொலிடாரிட்டிக் குழுவை பலரும் புகைப்படம் எடுப்பதை காணக்கூடியதாக இருந்தது.
இப்போராட்டம் உலகத் தலைவர்களை அம்பலப்படுத்தியதோடு பிரித்தானிய உள்துறை அமைச்சர் போராட்டகாரர்களை வஞ்சம் கொண்டவர்கள் என்று இனவாத்தோடு கூறிய கருத்துக்கு முகத்தில் அறைந்தாற் போல் அமைந்தது. மூன்று லட்சம் பேர் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டதாக உத்தியோகபுர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் உண்மையில் இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை பத்து லட்சமாக இருந்திருக்க வேண்டும் என்ற மதிப்பீடுகளும் உள்ளது. அன்றைய தினம் உள்துறை அமைச்சரின் இனவாதக் கருத்துக்களால் தூண்டப்பட்ட சில நூறு வலதுசாரித் தீவிரவாதிகள் எதிர்ப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களே வஞ்சகத்தோடும் வன்மத்தோடும் காடைத்தனத்தில் ஈடுபட்டு பொலிஸாருடன் மோதி ஞாபகார்த்த நிகழ்வை இழிவு செய்து குழப்பம் விளைவித்தனர். இதற்காக 90 வரையானோர் கைது செய்யப்பட்டனர். பிரதமர் ரிசி சுனக் மற்றும் சுவலா பிரவர்மனின் நேசக்கரங்களே ஞாபகார்த்த நிகழ்வை இழிவுபடுத்தியது அனைத்து ஊடகங்களிலும் பதிவாகியது. போலிஸாரும் அதனை உறுதிப்படுத்தினர். இவற்றைத் தொடர்ந்து சுவலா பிரவர்மன் பதிவியில் இருந்து இறக்கப்பட வேண்டும் என்ற கோஷங்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளது.
அமெரிக்க – பிரித்தானிய ஆளும் குழுமம் பாலஸ்தீனியர்களையும் அவர்களின் குழந்தைகளையும் கொல்வதன் மூலம் லாபம் ஈட்டுகின்றனர் என்பதற்காக யுத்தங்களை நெய்யூற்றி வளர்க்கின்றனர். அரபு நாடுகளின் கூட்டமைப்புக் கூட வெறும் கண்டனத்தை தெரிவித்து நேற்று நவம்பர் 11 தனது கூட்டத்தை முடித்துக்கொண்டது. இஸ்ரேலுக்கு எதிராகவோ இஸ்ரேலின் இன அழிப்புக்கு ஆதரவாகச் செயற்படும் அமெரிக்க – பிரித்தானிய அரசுகளுக்கு எதிராகவோ காத்திரமான பொருளாதார எண்ணைத் தடைகள் எதனையும் அறிவிக்கவில்லை. தொடர்ச்சியான மக்கள் போராட்டங்கள் சர்வதேச அரசியலில் காத்திரமான மாற்றங்களைக் கொண்டு வரும். அதனால் அமெரிக்க – பிரித்தானிய அரசுகளின் ஆசீர்வாதத்தோடு இஸ்ரேல் மேற்கொள்ளும் பாலஸ்தீனியர்கள் மீதான இனப்படுகொலையை, குழந்தைகளைக் கொல்வதன் மூலம் பாலஸ்தீனவம்சத்தை அழிக்கும் இஸ்ரேலின் மிகக் கொடிய திட்டத்தை சமூக வலைத்தளங்கள் மூலம் அனைவரும் அம்பலப்படுத்த வேண்டும் அவற்றை பகிர வேண்டும்.
இந்திய அரசு குறிப்பாக குஜராத் படுகொலைகளை முன்நின்று நடத்திய நரேந்திர மோடியும் அவரது பாரதிய ஜனதாக் கட்சியும் இஸ்ரேலுக்கு ஆதரவான பொய்ப் பிரச்சாரங்களை முன்றின்று நடத்துகின்றனர். அத்தோடு தங்களுக்குள்ள முஸ்லீம் எதிர்ப்பின் காரணமாக பாலஸ்தீனியர்கள் முஸ்லீம்கள் என்பதால் பாலஸ்தீனப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வாதந்திகளையும் பரப்பி வருகின்றனர். இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு ஆதரவாகவும் பாலஸ்தீனியர்களின் போராட்டத்துக்கு எதிராகவும் வரும் சமூக வலைத்தளச் செய்திகள் இந்தியாவில் இருந்தே வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் எழுபது, எண்பதுக்களில் இந்திய, இலங்கை அரசுகள் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்தனர். இஸ்ரேலோடு உறவாடுவது என்பது ‘கள்ளத்தொடர்பு’ என்பது போன்றே பார்க்கப்பட்டது. ஆனால் அதனை நரேந்திர மோடி வெளிப்படையாகவே செய்யத் துணிந்துவிட்டார்.
தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினரைத் தவிரவும் வேறு சில தமிழர்களும் தனியாகவும், விரல்விட்டும் எண்ணிக்கையில் குழுவாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். இப்போராட்டத்தில் இலங்கைக் கொடியோடு சிங்கள மக்கள் சிலரும் கலந்துகொண்டனர்.
கீழைத்தேச ஆசிய நாடுகள் இஸ்ரேலை ஒரு நேச அணியாக பொதுத்தளத்தில் கருதுவதில்லை. மாறாக ஒரு தீண்டத் தகாத அரசாகவே கணித்து வந்தனர். அண்மைய மோடி அரசு அதற்கு விதிவிலக்காக இஸ்ரேலுடன் உறவை வலுப்படுத்தி வருகின்றது.
இந்த மோடி இந்திய அலையில் தங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் என்று கூறிக்கொள்ளும் ஆர்வக்கோளாறுகள் சிலரும் அள்ளுப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் மத்தியில் பாலஸ்தீனப் போராட்;டத்தை கொச்சைப்படுத்தும் நடவடிக்கைகளை இவர்கள் மேற்கொள்கின்றனர். “வே பிரபாகரனுக்குப் பின் மோடியை தலைவராக்கிக் கொண்டுள்ள இந்தக் கொசுக்கள் தொல்லை பெரும் தொல்லையாக இருக்கின்றது” என்கிறார் போராட்டத்தில் பங்கேற்ற ஹரோவைச் சேர்ந்த பற்குணன் தவராஜா.
தமிழ் மக்களிடம் இயல்பாகவே உள்ள சான்றிதழ்க் கல்வி பற்றிய அதீதி உணர்வும் செல்வந்தராவது மற்றும் சாகச உணர்வும் மேல் மட்டத்துக்கு நகரும் எண்ணமும் உள்ளது. ஆனால் அதை அடையும் வழிகள் பற்றிய பண்புகளை கண்டும் காணமல் தவிர்த்துவிடுகின்றனர். அதனால் கல்வியில் செல்வத்தில் வீரத்தில் முன்நிற்கின்ற இஸ்ரேலை அவர்கள் முன்ணுதாரணமாக பார்க்கின்றனர். இஸ்ரேலிய அரசு கல்வியை, செல்வத்தை, வீரத்தை தனக்கு நாடு அமைக்க இடம்விட்ட பாலஸ்தீனியர்களையே கொன்றொழிப்பதை கண்டும் காணாமல் உள்ளனர். இஸ்ரேலியர்களின் மொசாட் அமைப்பு உலகெங்கும் அதிகாரத்தில் உள்ள கொடுங்கோலர்களுக்கு பயிற்சி வழங்குவதையும் இவர்கள் கண்டுகொள்விதில்லை.
நிறையப் சான்றிதழ் வைத்திருப்பவன், நிறைய செல்வம் வைத்திருப்பவன், பலமானவன் பின்னால் தமிழர்கள் அணிதிரளாமல் ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்களுக்கு, அடிப்படை நேர்மையுடையவர்களுக்கு, மனிதாபிமானம் கொண்டவர்களுக்கு தோளோடு தோள் கொடுக்க வேண்டும். அந்த வகையில் தமிழர்களுடைய ஆதரவு பாலஸ்தீனியர்களுக்காக இருக்க வேண்டும். நவம்பர் 11 போராட்டத்தை தமிழர்கள் பலரும் கண்டுகொள்ளவில்லை எனபது மிகவும் வேதனையானது.
நாளை பிரித்தானிய நாட்காட்டியில் மிக முக்கியமான நாள். ‘Rememberance Day’ – ‘ஞாபகார்த்த தினம்’ உலக மாகா யுத்தம் நவம்பர் 11ம் திகதி 11 மணிக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டநாள். அதையொட்டி அந்த யுத்தத்தில் உயிரிழந்த வீரர்களை கௌரவிக்கின்ற தினம். தற்போது முதலாம் இரண்டாம் உலகப் போர்களில் மட்டுமல்ல அதன் பின்னான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் அதில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களையும் நினைவு கூருகின்ற மிக முக்கிய சடங்காக 11 / 11 மாறியுள்ளது.
இவ்வருடம் இஸ்ரேலிய இராணுவத்தின் கட்டவழித்து விடப்பட்ட பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான இன அழிப்பு, குழந்தைகள் அழிப்பு யுத்தத்திற்கு அமெரிக்க, பிரித்தானிய அரசுகளும் இராணுவ பொருளாதார பங்களிப்புகளை வழங்கி இந்த இன அழிப்பு குழந்தைகள் அழிப்பு யுத்தத்தின் பங்காளிகளாகி உள்ளனர்.இவற்றைக் கண்டித்து: குண்டு வீசுவதை நிறுத்துங்கள்! குழந்தைகளைக் கொல்வதை நிறுத்துங்கள்!! என்று கோரி பாலஸ்தீனியர்களின் சுதந்திரத்திற்காக் குரல்கொடுக்கின்ற மாபெரும் மக்கள் போராட்டம் ஹைப்பாக்கில் இருந்து சனிக்கிழமை காலை 11 மணிக்கு ஆரம்பிக்க உள்ளது.
ஒடுக்குமுறையை எதிர்க்கின்ற மனிதத்தை நேசிக்கின்ற ஒவ்வொருவரும் இப்போராட்டத்தில் பங்கேற்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவது அவசியம். பாலஸ்தீனியர்கள் மீதான இனப்படுகொலையை, பாலஸ்தீனிய குழந்தைகள் படுகொலை செய்யப்படுவதை கண்டிக்கத் தவறினால், அதனைத் தடுக்கத் தவறினால், அதிகாரமும் இராணுவ பலமும் உடையவர்கள் தாம் விரும்பியதை எந்த விலையைக் கொடுத்தும் அடைய முடியும் என்பது உறுதிப்படுத்தப்படுவதுடன் நாளைய எதிர்காலம் மிக மோசமானதாக்கப்பட வாய்ப்பாக அமையும்.
இனவெறிக் கருத்துக்களை விதைத்து ஏழை, நலிந்த மக்களை தரக்குறைவாக மதிப்பிடும் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சர் சுவலா பிரவர்மன் Rmemberance Dayயைக் காரணம் காட்டி இந்த போராட்டத்தை நிறுத்தவும் பெரு முயற்சியில் இறங்கியிருந்தார். அதனையும் மீறி மெற்றோபொலிட்டன் பொலிஸார் ஊர்வலத்தை தடை செய்ய மறுத்திருந்தனர்.
இந்த போராட்ட நாளில் ‘தமிழ் சொலிடாரிட்டி’ அமைப்பு பாலஸ்தீனியர்களின் சுதந்திரத்திற்காகக் குரல்கொடுத்து இப்போராட்டத்தில் தமிழர்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்ததுள்ளனர்.
48 மணி நேரங்களைக் கடந்து நடக்கின்ற பாலஸ்தீன – இஸ்ரேல் யுத்தத்தில் இரு தரப்பிலும் 2000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. 5000 பேர் வரை காயப்பட்டுள்ளனர். ஒக்ரோபர் 7 சனிக்கிழமை காலை ஆறரை மணி அளவில் பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடிவரும் ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள தென் பகுதியை தரை, கடல், ஆகாய மார்க்கமாக தாக்க ஆரம்பித்தனர். எவரும் எதிர்பாத்திராத வகையில் மிகத்திட்டமிட்ட முறையில் இத்தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.
அல் அக்சா ப்ளட் – Al Aqsa Flood என்று பெயரிலியே ஹமாஸ் இத்தாக்குதலை நடத்தியது. காஸா மக்களின் புனிதத்தலமான அல் அக்சா மசூதிக்குள் இஸ்ரேலிய இராணுவப் பொலிஸார் நுழைந்து சோதணை நடத்திய அத்துமீறலுக்காகவே இத்தாக்குதல் நடத்தப்படுவதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இந்தியாவில் சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோவிலுக்குள் நுழைந்து இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியதற்காகவே அன்றைய பிரதர் இந்திராகாந்தி சீக்கிய மெய்பாதுகாப்பாளரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அல் அக்சா மசூதி மட்டுமல்ல தொடர்ச்சியான மிக மோசமான அடக்குமுறை இத்தாக்குதலுக்கு காரணமாய் அமைந்துள்ளது.
1948 மே 14இல் அமெரிக்காவின் உதவியுடன் செயற்கையாக உருவாக்கப்பட்ட இஸ்ரேல் என்ற நாட்டின் வரலாற்றில் நடந்த மிகப் பாரிய தாக்குதல் இதுவாகும். இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களை உள்ளடக்கி மதில்களை எழுப்பி இருந்தது. இம்மதில்கள் உடைக்கப்பட்டு தரையாலும் பறக்கும் மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தியும் கடலாலும் ஹமாஸ் தாக்குதலை நடத்தி இருந்தது. இத்தாக்குதல்களில் 25க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய இராணுவத்தினர், பொலிஸார் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். இன்னும் பல நூறுபேருக்கு என்ன நடந்தது என்பது உறுதிப்படுத்தப்படாமல் உள்ளது. இஸ்ரேலின் வரலாற்றில் இவ்வாறான பெரும் தொகை இழப்பு அந்நாட்டுக்கு முன்எப்போதும் ஏற்பட்டதில்லை. உலகின் பாதுகாப்பு மிக நவீனமயமாக்கப்பட்டு, மிகப் பலமான, மிக வலுவான புலனாய்வு கட்டமைப்பைக் கொண்ட நாடாக இருக்கும் இஸ்ரேல் முற்றிலும் எதிர்பாராத தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இது இஸ்ரேல் மற்றும் மேற்கு நாடுகளின் புலனாய்வுப் பிரிவுகளுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம். அவர்கள் புலனாய்வுக்கும் பாதுகாப்புக்கும் கொட்டிய பில்லியன் டொலர்கள் எவ்வித பயனுமற்றதாக்கப்பட்டுள்ளது.
மக்கள் ஆதரவையும் ஈரானின் ஆதரவையும் தவிர தொழில்நுட்பமோ பணபலமோ இல்லாமல் மிக இரகசியமாக இவ்வளவு பெரிய தாக்குதலை உலகின் மிகப் பலமான பாதுகாப்பான நாட்டுக்கு எதிராக ஹமாஸ் நடத்திய தாக்குதல் இஸ்ரேலையும் அதன் ஆதரவு சக்திகளான அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளையும் உலுப்பியுள்ளது என்றால் மிகையல்ல. மனித உரிமைகள் பற்றி நீலிக் கண்ணீர் வடிக்கும் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் இஸ்ரேலின் பாலஸ்தினியர்கள் மீதான இனச்சுத்திகரிப்பை கண்டிப்பதில்லை. ஹமாஸ் றொக்கட் தாக்குதலை நடத்தி ஓரிரு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டால் இஸ்ரேல் பதில் தாக்குதலை நடாத்தி பல நூறு பலஸ்தீனியர்களை படுகொலை செய்வர். இப்பலஸ்தீனியர்கள் கொல்லப்படுவது பற்றி மேற்கு நாடுகள் அலட்டிக்கொள்வதில்லை. இப்பலஸ்தினியர்களுக்கு மனித உரிமைகள் இருப்பதாகவே மேற்கு நாடுகள் கருதுவதில்லை.
தற்போதைய தாக்குதல் தொடர்பில்: இஸ்ரேல் மிக மோசமான பதில் தாக்குதலை நடத்தும் என்றும் தங்கள் பதிலடியில் ஹமாஸின் இடங்களை சுக்குநூறாக்குவோம் என்றும் ஆட்சியில் உள்ள வலதுசாரி இனவாதத் தலைவரான பிரதமர் நெத்தன்யாகு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் காஸாவில் உள்ள மக்களை வெளியேறும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் காஸா உலகின் சனத்தொகை அடர்த்தி மிகக் கூடிய இடம் மட்டுமல்ல கடந்த 17 ஆண்டுகளாக இஸ்ரேலின் முற்றுகைக்குட்பட்ட திறந்தவெளி சிறைச்சாலையாகவும் சர்வதேசத்தினால் உணரப்படுகிறது. இஸ்ரேலிய இனவாதப் பிரதமர் காஸாவை முற்றுகைக்குள் வைத்துக்கொண்டு அவர்களை வெளியேறும்படி கோரியதை எந்த மேற்கு நாடுகளும் கண்டிக்கவில்லை. இனவாதப் பிரதமர் நெத்தன்யாகு காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களை இனச்சுத்திகரிப்பு செய்வதற்கு தயாராகுனிறார் என்கின்ற அச்சம் அரபுலக மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
அண்மைய தாக்குதலில் ஹமாஸ் படையினர் தாங்கள் இஸ்ரேலிய பொதுமக்களைத் தாக்கவில்லை என்றும் பாலஸ்தீன மண்ணை ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்பாளர்களையே தாக்கியதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த ஆக்கிரமிப்பாளர்கள் பொதுமக்கள் அல்ல என்றும் ஆயதம் தாங்கிய ஆக்கிரமிப்பாளர்கள் என்றும் அவர்கள் சர்வதேச வரையறுப்புகளின் படி பொதுமக்களாக கருதப்பட மாட்டார்கள் என்றும் ஹமாஸ் தனது தாக்குதலையும் படுகொலைகளையும் நியாயப்படுத்தி உள்ளது. இத்தனை வருடங்களாக இஸரேலிய படைகள் பாலஸ்தினியர்களை வகைதொகையில்லாமல் படுகொலை செய்து வருகின்றது. அதற்கு இவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்றும் ஹமாஸ் கேள்வி எழுப்புகின்றது.
பாலஸ்தினிய – இஸ்ரேல் யுத்தத்தின் பின்னணி:
யுதர்களுக்கு என்றொரு நாடு இல்லாத நிலையில் உலகின் பல்வேறு பாகங்களிலும் வாழ்ந்த யுதர்களுக்கு பாலஸதீனத்தில் ஒரு நாட்டை உருவாக்க சியோனிச இயக்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அன்றைய காலகட்டத்தில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலேயே பாலஸ்தீனமும் இருந்தது. காலனித்துவ நாடுகள் அனைத்தும் கூறுபடுத்தப்பட்டு சூறையாடப்பட்டும் தங்கள் கால்களில் நிற்க முடியாமல் பலவீனப்படுத்தப்பட்டும் காலனித்துவ ஆட்சியாளர்களால் ஆக்கப்பட்டமை வரலாறு. இந்த காலனித்துவ சுரண்டலின் தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் இன்றும் மூன்றாம் உலக நாடுகள் யுத்தம், வறுமை போன்றவற்றினால் சீரழிந்து கொண்டிருக்கின்றது. ஆபிரிக்க கவிஞனொருவன் சுட்டிக்காட்டியது: அவர்கள் வரும்போது எங்களிடம் எல்லாம் இருந்தது. அவர்கள் பைபிளைக் கொண்டு வந்து தந்துவிட்டு எங்களிடம் இருந்த எல்லாவற்றையும் எடுத்துச் சென்றுவிட்டனர். இப்போது எங்களிடம் பைபிள் மட்டும் தான் இருக்கின்றது. வேறு எதுவும் இல்லை.
இரண்டாம் உலகப்போருக்குப் பின் அவ்வாறு பாதிக்கப்பட்ட பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த பாலஸ்தினத்தில், அமெரிக்காவின் உதவியுடன் 1948 மே 14 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. பாலஸ்தின மண் பறிக்கப்பட்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்டதில் மத்திய கிழக்கு நாடுகள் மிகுந்த அதிருப்தியடைந்திருந்தன. அன்று முதல் மதிய கிழக்கு மிகப் பதட்டமான யுத்தப் பிரதேசமாகவே இருந்து வருகின்றது. இப்பகுதி பல யுத்தங்களைக் கண்டுள்ளது. ஆனால் இந்த யுத்தங்கள் எதிலுமே இஸ்ரேலியர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் 24 மணி நேரத்தில் இவ்வளவு பெரும் இழப்பையோ தாக்குதலையோ சந்தித்து இருக்கவில்லை. இஸ்ரேலின் எல்லைக்கு வெளியே நடந்த யுத்தத்தை ஹமாஸ் தற்போது இஸ்ரேலுக்கு உள்ளேயே கொண்டு சென்றுள்ளது.
பாலஸ்தீனிய மண்ணில் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது முதல் அம்மண்ணில் வாழ்ந்த பாலஸ்தினிய மக்களை இஸ்ரேல் இரண்டாம் தரப் பிரஜைகளாகவே நடத்தி வந்தனர். அப்பகுதியில் வாழ்ந்த பாலஸ்தினியர்கள் வேறுநாடுகளுக்கு கல்வி மற்றும் நோக்கங்களுக்காகச் சென்ற போது அவர்கள் மீண்டும் தங்கள் பிரதேசங்களுக்கு வரும் உரிமை மறுக்கப்பட்டது. இஸ்ரேல் கடந்த 75 ஆண்டுகளாக பலஸ்தினியர்களை இனச்சுத்திகரிப்புச் செய்வதிலேயே குறியாக இருந்தது. இன்றும் தொடர்கின்றது.
இஸ்ரேலினுடைய புலனாய்வுப் படை மொசாட் அதன் படுமோசமான கொலைத் திட்டமிடல்களுக்கு மிகப் பெயர்பெற்றது. அவர்களையே ஹமாஸ் உச்சிக்கொண்டு இத்தாக்குதலை ஏற்படுத்தியதுடன் தொடர்ந்தும் ஆயுத தளபாடங்களை மீள் விநியோகம் செய்து புதிய ஆக்கிரப்பு நகரம் ஒன்றைக் கைப்பற்றி உள்ளனர்.
ஐந்து தசாப்தங்களுக்கு முன் இஸ்ரேலின் யொம் கிப்பூர் பகுதியில் எகிப்தின் அன்வர் சதாத் யுத்தத்தைத் தொடுத்த அதே பாணியில் ஹமாஸ் அதே தினத்தில் யுத்தத்தைத் தொடுத்தனர். முன்னைய யுத்தத்தில் எகிப்து தோல்வியடைந்தது. இந்த யுத்தத்தில் ஹமாஸினால் ஒரு போதும் யுத்தத்தை வெல்ல முடியாது. ஹமாஸ் ஒரு ஆயத அமைப்பு மட்டுமே. ஆனால் ஹமாஸ் பாலஸ்தினிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்திவிட்டது. மத்திய கிழக்கு நாடுகள் இஸ்ரேல் உடனும் மேற்கு நாடுகளுடனும் நல்லுறவைக் கொண்டிருந்த போதும் மத்திய கிழக்கு அராபிய மக்கள் பாலஸ்தினியர்கள் அனைவருமே ஹமாஸின் தாக்குதலைக் கொண்டாடுகின்றனர். பாலஸ்தின மக்களை தொடர்ந்தும் அடக்கி ஒடுக்கினால் இவ்வாறான தாக்குதல் தவிர்க்க முடியாது என்றும் இந்தப் பிரச்சினையின் காரணத்தைக் கண்டறிந்து அதனைத் தீர்க்க வேண்டும் என்ற குரல்கள் எழும்ப ஆரம்பித்துள்ளது.
மூனிச் ஒலிம்பிக் தாக்குதல்:
இஸ்ரேலின் கறுப்பு சனி ஆன தாக்குதலை ஹமாஸ் மிக நிதானமாக பதிவு செய்து உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் பரவவிட்டது. தற்போது உலகின் அனைத்து ஊடகங்களின் கவனமும் திசை திருப்பப்பட்டுள்ளது. உக்ரைன் யுத்தத்தைப் பற்றியோ, அப்கானிஸதான் நிலநடுக்கத்தில் இரண்டாயிரம் பேருக்கு அதிகமானோர் கொல்லப்பட்டது பற்றியோ ஊடகங்கள் அலட்டிக்கொள்ளவில்லை. ஹமாஸ் உலகத்தை பாலஸ்தீனியர்களின் ஒடுக்குமறை மீது மிகத் திட்டமிட்டு திருப்பியுள்ளது. இவ்வாறான செயலை பாலஸ்தீன விடுதலை அமைப்பு சார்ந்த குழவொன்று 1972இல் மேற்கொண்டது. 8 கறுப்பு செப்ரம்பர் படையணி ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற்ற மூனிச் நகர விளையாட்டுத் திடலுக்குள் புகந்து இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை படுகொலை செய்து 11 வீரர்களை பணயக்கைதிகளாக கைப்பற்றினர். இறுதியில் பணயக் கைதிகளை விடுவிக்கும் முயற்சி தோல்வியடைய பணயக்கைதிகள் கொல்லப்பட்டனர். கறுப்பு செப்ரம்பர் படையினர் ஐவரும் கொல்லப்பட்டனர். மூவர் கைது செய்யப்பட்டனர். அதன் சில வாரங்களில் பாலஸ்தினிய படைகள் ஜேர்மனியின் லுப்தான்ஸா எயர்லைனைக் கடத்தி வைத்து தங்கள் வீரர்களை மீட்டனர்.
இவ்வாறு ஒரு இஸ்ரேலிய இராணுவ வீரரைக் கடத்தி சில நூறு தங்கள் வீரர்களை ஹமாஸ் மீட்டிருந்தது. தற்போது பிந்திக் கிடைக்கும் செய்திகளின் படி ஹமாஸ் 50 இராணுவ வீரர்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமானவர்களை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளனர். இது இஸ்ரேலிய இராணுவத்துக்கும் மொசாட்டுக்கும் மிகப்பெரும் தலையிடியாக அமைய உள்ளது.
பாலஸ்தீனப் போராட்டமும் ஈழப் போராட்டமும்:
அன்றைய இலங்கை ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஜே ஆர் ஜெயவர்த்தன மிகுந்த இனவாதி என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை. ஐக்கிய தேசியக் கட்சி ஒரு இனவாதக் கட்சியாகவே தன்னை கட்டமைத்திருந்தது. ஜே ஆருக்கும் அவரது படைக்கும் ஆலோசனையும் உதவியும் நல்கியது மொசாட். அன்றும் இன்றும் ஐக்கிய தேசியக் கட்சி மேற்கு நாடுகளின் சார்பையே எடுத்து வருகின்றது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இவர்களின் நெருங்கிய நட்புகள். நூறு தமிழர்களைக் கொன்றால் அதில் ஒரு ஈழப் போராளியும் கொல்லப்படுவான் என்ற மொசாட்டின் ஆலோசனை எண்பதுக்களில் அன்றைய பத்திரிகைகளில் இடம்பிடித்திருந்தது. இந்தத் தந்திரத்தைத் தான் மொசாட் பாலஸ்தினியர்கள் மீது இன்றும் மேற்கொள்கின்றது. ஜே ஆர் ஜெயவர்த்தனவின் காலத்திலேயே மிக மோசமான இனப்படுகொலைகளும் இனச் சுத்திகரிப்பும் இடம்பெற்றது.
மாறாக இடதுசாரி நிலைப்பாட்டோடு செயற்பட்ட ஈரோஸ் (ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை அமைப்பு) அமைப்பின் லண்டனில் வாழ்ந்த ஸ்தாபகர் இரத்தினசபாபதி மற்றும் புளொட் (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்) செயற்பாட்டாளர் மகா உத்தமன் ஆகியோர் பாலஸ்தீன விடுதலை அமைப்போடு தொடர்பைப் பெற்று தங்களுடைய வீரர்களை பயிற்சிகளுக்காக பாலஸ்தீனம் அனுப்பி வைத்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒரு சிலரும் பாலஸ்தீன விடுதலை அமைப்போடு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். ஈரோஸ் அமைப்பில் அன்றைய நாட்களில் கணிசமான எண்ணிக்கையானவர்கள் இல்லாததால் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமே கூடுதலாக இப்பயிற்சிகளைப் பெற்றனர். இரண்டுக்கும் மேற்பட்ட அணிகள் பிஎல்ஓ பயிற்சி எடுத்தனர். அவர்களில் சிலர் இன்னமும் மேற்குநாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்கின்றனர். இவர்களுடைய பெயர்களுக்கு முன் பிஎல்ஓ என்ற அடைமொழியும் இருக்கும். பாலஸ்தீனத்தில் முதலாவது இஸ்ரேலிய ராங்கை குண்டு வைத்து தகர்த்தது பயிற்சிக்குச் சென்ற புளொட் வீரர் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் உறுதிப்படுத்த முடியவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ விடுதலை இயக்கும் (ரெலோ) தவிர்ந்த ஏனைய இடதுசார்புடைய போராளிக்குழக்கள் மத்தியில் பாலஸ்தீன விடுதலைக்கு சார்பான நிலைப்பாடு இருந்தது. தமிழீழ விடுதலைப் போராட்டமும் பாலஸ்தீன விடுதலைப் போராட்டமும் சமாந்தரமாகப் பயணித்த காலம் அது. பாலஸ்தின விடுதலை அமைப்பின் அப்போதைய தலைவர் யஸீர் அரபாத் ஈழப்போராளிகள் மத்தியில் மதிக்கப்பட்ட ஒரு தலைவராக இருந்த காலம்.
ஈழப் போராளி அமைப்புகள் மத்தியில் இருந்த பிளவுகள் போன்ற பாலஸ்தீனப் போராளிகள் மத்தியிலும் பல பிரிவுகள் காணப்பட்டது. அவர்களிடையே முரண்பாடுகள் பகை முரண்பாடுகளும் இருந்தது. சில படுகொலைகளும் இடம்பெற்றுள்ளது. ஆனால் தமிழீ விடுதலைப் புலிகள் போன்று ஏனைய அமைப்புகளை முற்று முழுதாக துடைத்து அழிக்கின்ற அதிகார வெறி பாலஸ்தின விடுதலை போராட்டத்தில் இருக்கவில்லை. மேலும் அங்கு விடுதலைப் போராட்டம் மக்கள் மயப்படுத்தப்பட்ட அளவுக்கு ஈழவிடுதலைப் போராட்டம் மக்கள் மயப்படுத்தப்படவில்லை. மக்கள் வேறு விடுதலைப் போராளிகள் வேறு என்ற நிலை எப்போதும் இருந்தது. சர்வதேசச் சூழல் அதனைக் கையாள்கின்ற அறிவுநிலை ஈழ விடுதலைப் போராட்டத்தை புலிகள் ஏகபோகமாக்கிய பின் இருக்கவில்லை. 1991ற்கு முன் புலிகள் அனைத்து ஈழ விடுதலை அமைப்புகளையும் இல்லாதொழித்து முஸ்லீம்களையும் விரட்டியடித்து இனச்சுத்திகரிப்புச் செய்தனர். அதனால் 2009இல் புலிகளைக் காப்பாற்ற எவரும் இருக்கவில்லை.
தற்போது ஹமாஸ் உடைய தாக்குதலை வரவேற்று இஸ்ரேலையும் அமெரிக்காவையும் ஐரோப்பிய நாடுகளையும் முட்டாள்கள் என்று குறிப்பிட்ட ஹிஸ்புல்லா லெபனானின் எல்லையில் இருந்த இஸ்ரேலிய படையினர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். தாங்கள் இந்த யுத்தத்தில் நடுநிலை வகிக்கவில்லை என்றும் ஹமாஸின் தாக்குதலை வரவேற்பதாகவும் அறிவித்துள்ளனர். பாலஸ்தீன விடுதலை இயக்கமும் ஏனை பாலஸ்தீன விடுதலை குழுக்களும் இத்தாக்குதலை கொண்டாடுகின்றனர். இத்தாக்குதல்களின் பின்னணியில் இஸ்ரேலின் மிக முக்கிய எதிரியான ஈரான் இருப்பது பரகசியமானது. ஈரான் இத்தாக்குதல்களைக் கொண்டாடுகின்றது.
மொசாட் புலிகள் இலங்கை இராணுவம்:
இஸ்ரேல் என்ன தான் பாலஸ்தினியர்களை அழித்து அவர்கள் மண்ணில் நாட்டை உருவாக்கி அவர்களை அகதிகளாக வாழ நிர்ப்பந்தித்த போதும் அதே அடக்குமுறைக்கு உள்ளான கணிசமான தமிழர்கள் மத்தியில் யுதர்களுக்கும் இஸ்ரேலுக்கும் ஆதரவான நிலை எப்போதும் இருந்து வந்தது. இஸ்ரேலினுடைய அறிவு, வளம், பலம், எதிரியை அழிக்கும் கைங்கரியங்கள் பற்றி அவர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தத் தவறுவதில்லை. உலகில் தங்களை விடுதலைப் போராளிகளாகக் காட்டிக்கொண்ட புலிகள் மொசாட் இடமும் பயிற்சிகள் பெற்றனர். அதில் ஆச்சரியம் என்னவென்றால் இலங்கை இராணுவத்துக்கும் புலிகளுக்கு ஒரே காலகட்டத்தில் ஒரே இடத்தில் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இத்தகவல் ஆதாரபூர்வமாக நூலில் பதிவு செய்யப்பட்டும் உள்ளது.
உலகின் பல பாகங்களிலிருந்தும் நாடற்ற யூதர்கள் கப்பலில் கொண்டு வந்து பாலஸ்தீனத்தில் இறக்கப்பட்ட பாணியில் இதனையொத்த ஒரு முயற்சியை லண்டனில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும் மேற்கொண்டனர். அதுவே ‘வணங்கா மண்’ கப்பல் பயணம். இதனை ஆரம்பித்தவர்களில் காலாநிதி நித்தியானந்தனும் ஒருவர். இவர்களின் முட்டாள்தனம் கப்பல் ஏற்பாடு செய்யப்பட்ட தினங்களிலேயே கைவிடப்பட்டு நபர்கள் பயணிப்பதில்லை என்றும் பொருட்களை ஏற்றிச் செல்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இக்கப்பல் பல மாத இழுபறியின் பின் கொழும்புத் துறைமுகத்தையடைந்து கொண்டு சென்ற பொருட்கள் பழுதடைந்த நிலையில் குப்பையாகக் கொட்டப்பட்டது வரலாறு.
பாலஸ்தின – இஸ்ரேல் யுத்தத்தின் உயிரிழப்புகளும் காயப்பட்டவர்களும் கடத்திச் செல்லப்பட்டவர்களும் இச்செய்தி எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் போதே அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இரும்புக் கரம் கொண்டு இராணுவ தாங்கிகளைக் கொண்டு அடக்கி, நவீன தொழில்நுட்பத்தையும், புலனாய்வையும் கொண்டு ஒடுக்கி ஆள முடியாது என்பதை பாலஸ்தினிய விடுதலை போராளிகள் நிரூபித்துள்ளனர். பாலஸ்தினியர்களுடைய பிரச்சினையின் வேரை அறிந்து அவர்களுடைய சுயாட்சியை உறுதிப்படுத்துவதைத் தவிர இஸ்ரேல் சுமூகமாக வாழ்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை இஸ்ரேலியர்களும் இஸ்ரேலும் உணர்ந்து கொள்வது தவிர்க்க முடியாது. இத்தாக்குதல்களுக்கு பழிவாங்க இஸ்ரேல் பல ஆயிரம் பாலஸ்தீனியர்களைப் படுகொலை செய்யலாம். ஆனால் அவை இப்பிரச்சினைக்கு தீர்வு அல்ல. இஸ்ரேலின் சமாதானத்துக்கு பாலஸ்தினியர்களின் சுயாட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும். பாலஸ்தீனம் தனிநாடாக வேண்டும்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் உள்ள பாலஸ்தீன பள்ளியை இடித்துத் தரைமட்டமாக்கிய இஸ்ரேலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. பெத்தலகேமில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அந்த பள்ளி கட்டிடமானது ஸதா விரோதமாக கட்டப்பட்டதாகவும் அங்கு படிக்கும் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் கூறி அப்பள்ளியை இடிக்க இஸ்ரேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் பேரில் இஸ்ரேல் அதிகாரிகள் அப்பள்ளியை இடித்து தரைமட்டமாக்கினர். இதனால் அங்கு கல்வி பயின்று வந்த குழந்தைகளின் படிப்பு கேள்விக்குறி ஆகியுள்ளது. இது சர்வதேச சட்டத்திற்கு எதிரானது என தெரிவித்துள்ளது. பள்ளி இருந்ததற்கான தடையாமே இல்லாமல் இடித்து அளிக்கப்பட்ட சம்பவத்தால் பாலஸ்தீனியர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.