இலங்கை தமிழரசுக் கட்சி
இலங்கை தமிழரசுக் கட்சி
தமிழரசுக் கட்சியும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியும் ஒப்பந்தம் !
தேசிய மக்கள் சக்தியை தனித்து நின்று வென்றுவிட முடியாது என்பதில் நாட்டின் அனைத்துப் பகுதியில் உள்ள எதிர்க்கட்சிகளும் ஒரு தெளிவான முடிவுக்கு வந்துள்ளன. அதனால் பல்வேறு கூட்டணிகளையும் அமைப்பதில் அவர்கள் மிகத் தீவிரமாக உள்ளனர். ஆனால் கூட்டணி அமைத்தாலும் மக்கள் இவர்களை நம்புவார்களா என்ற சந்தேகத்தை பலரும் எழுப்பி வருகின்றனர்.
இப்பின்னணியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும், சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியும் ஒரு புரிந்தணர்வு உடன்பாட்டை எட்டியுள்ளனர். ஜனாதிபதி சட்டத்தரணிகளான கட்சியின் செயலாளர்கள் எம் ஏ சுமந்திரனும் நிசான் காரியப்பரும் இவ்வுடன்படிக்கையில் கைச்சாத்திடுள்ளனர். வடக்கில் முஸ்லீம் காங்கிரஸ் வெற்றிபெறும் பிரிவுகளில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்திலும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
போட்டியிடாமலேயே மண் கவ்விய ஊசி, சங்கு , மான் குறூப் – யாழ் உட்பட வடக்கு கிழக்கில் வீடா ? திசைகாட்டியா ?
உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிவுக்கு வந்துள்ள நிலையில் பல முன்னணி தமிழ்தேசிய மற்றும் அரசியல்வாதிகளின் கட்சிகள் தேர்தலில் போட்டியிடாமலேயே மண் கவ்வியுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் ஊசி கட்சி சார்பாக களமிறங்கிய சுயேட்சைக்குழுவின் வேட்பு மனுக்கள் பருத்தித்துறை நகரசபை தவிர்ந்த யாழ்ப்பாணத்தின் அனைத்து சபைகளிலும் நிராகரிக்கப்பட்டுள்ளன. யாழ் மாநகர சபையில் முதல்வர் வேட்பாளர் கௌசல்யா நரேன் வேட்புமனுவில் கையெழுத்திடாமையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்த பணம் அனுப்புமாறு அர்ச்சுனா கோரியதையடுத்து புலம்பெயர் தமிழர்கள் பலர் அவருக்கு பணம் அனுப்பியிருந்தனர். வேட்புமனு நிராகரிக்கப்பட்டவர்களின் கட்டுப்பணம் மீள அவர்களிடம் கையளிக்கப்படவுள்ள நிலையில் அர்சுனா அவற்றை புலம்பெயர் தமிழர்களுக்கு திருப்பி அனுப்புவாரா எனவும் பலர் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முன்னாள் யாழ்ப்பாண மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்புமனு யாழ்.மாநகர சபையில் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மணிவண்ணனின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது. வலிகாமம் தெற்கு, பருத்தித்துறை பிரதேச சபையிலும் அவர்களுடைய வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
சங்குச் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் வேட்புமனுக்கள் யாழ் மாநகர சபை உட்பட பெருமளவான இடங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளன. சாவகச்சேரி நகர சபை, காரைநகர் பிரதேச சபை, ஊர்காவற்றுறை பிரதேச சபை, நெடுந்தீவு பிரதேச சபை, வலி.மேற்கு பிரதேச சபை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை, வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை, நல்லூர் பிரதேச சபை ஆகிய இடங்களிலும் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனிடையே நிராகரிப்பு தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி உயர் நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்யும் என சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிவித்துள்ள அதேவேளை தமிழ்க் கட்சிகள் சார்பாக நான் நீதிமன்றில் ஆஜராக மாட்டேன் என சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்புமனுக்கள் பருத்தித்துறை பிரதேச சபை மற்றும் நல்லூர் பிரதேச சபையில் நிராகரிக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் களமிறக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பு மனுக்கள் வலிகாமம் கிழக்கு மற்றும் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் நிராகரிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் தேசிய மக்கள் சக்தி, தமிழரசு கட்சி ஆகிய இரு கட்சிகளினது வேட்பு மனுக்கள் மட்டுமே அனைத்து இடங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. எனவே யாழில் திசைக்காட்டியா..? வீடா என்ற போட்டியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜிதாவின் மரணத்துக்கு பின் நின்றவர்! பாலியல் லஞ்சம் கோருவோர்! விபச்சாரி என்று பட்டம் வழங்குபவர்! இவர்கள் தான் தமிழ் தேசியத்தின் தலைவர்கள் !
தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர் சுகிர்தனின் வீட்டில் தீயில் எரிந்த விஜிதா மரணத்தில் இதுவரை துலங்காத நீதி. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக் கிளை தலைவருமான சோ. சுகிர்தன் வீட்டிற்குள் தீ மூட்டி இளம் குடும்பப் பெண் ஒருவர் 16 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2023 ஆம் ஆண்டு உயிரிழந்திருந்தார். இறந்தவர் யாழ் குப்பிளானைச் சேர்ந்த 36 வயதுடைய விஜிதா என்றழைக்கப்படும் 10 வயது பெண் குழந்தையின் தாயார் ஆவார். விஜிதா யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் மல்லாகம் உப அலுவலகத்தில் கடமையாற்றி வந்தவர் என்றும் கூறப்பட்டது.
சம்பவம் நடந்த அன்று. தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர் சுகிர்தனின் வீட்டுக் சென்று விஜிதா சுகிர்தனோடு வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் தன்னைத் தானே தீ மூட்டிக் கொண்டு எரிந்ததாகவும். தீயை அணைத்த பின்னர், அவர் கிணற்றினுள் குதித்ததாகவும் கூறப்பட்டது. தீக் காயங்களுடன் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விஜிதா, சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார்.
விஜிதா, சுகிர்தன் வீட்டில் தீ மூட்டிய போது சுகிர்தன் தனது வீட்டிற்குள் சென்று பூட்டிக் கொண்டதாகவும் கூறப்பட்டது. விஜிதா மரணத்திற்கான காரணம் இன்று வரை துலங்கவில்லை. குடும்பத்தைப் பிரிந்த தனியே வாழும் சுகிர்தன் , விஜிதா குடும்பத்துடன் நெருங்கிப் பழகியதாகவும் கூறப்பட்டது. விஜிதாவும் கணவரைப் பிரிந்து மகளுடன் பெற்றோர் வீட்டில் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சுகிர்தன் விஜிதா இருவரும் நெருங்கிப் பழகியதாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் விஜிதா சுகிர்தனை தன்னை திருமணம் முடிக்கும்படி வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. சுகிர்தன் வழமையாகவே விஜிதா வீட்டிலேயே உணவருந்தி வந்ததாகவும் கூறப்பட்டது. சுகிர்தன் திடீரென விஜிதாவுடனான தொடர்பை குறைக்கவும் விடையம் பெரிதானதாகவும் கூறப்பட்டது.
அதேநேரம் சுகிர்தாவின் மரணத்தில் சுகிர்தனின் 21 வயதான பொலிஸ் பயிற்சியில் இருக்கும் மகன் சம்பந்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. விஜிதாவின் பெற்றோர் தங்களுடைய மகள் சுகிர்தனின் வீட்டில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குற்றம் சாட்டினர். விஜிதாவின் தற்கொலை அல்லது கொலை சுகிர்தன் வீட்டில் இடம்பெற்றதால் சுகிர்தன் பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். பின்னர் விஜிதாவின் மரணம் தற்கொலை எனத் தீர்மானிக்கப்பட்டு சுகிர்தன் வெளியில் வந்துவிட்டார்.
இந்தவிடயத்தில் தமிழரசுக் கட்சி எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. தமிழரசுக் கட்சியில் இன்று வரை செயற்படும் சோ. சுகிர்தன் இந்தவிடயத்தில் விளக்கங்கள் எதுவும் மக்களுக்கு வழங்கவில்லை. சோ. சுகிர்தன் நடக்கவிருக்கிற உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனின் வலதுகரமாக செயற்படுகிறார்.
இந்த விடயம் தொடர்பில் 2013 மேமாதம் 13 ஆம் திகதி ”பெண்கள் சந்திப்பு” என்ற சூம் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘ மரணங்களாலும் அவதூறுகளாலும் மறைக்கப்படும் பெண்கள் மீதான சுரண்டல்கள் – உரத்துப்பேசுவோம்’ என்ற தலைப்பில் விஜிதாவிற்கு பணியிடத்தில் சுரண்டல் தொடர்பிலும் விஜிதாவின் மரணத்தின் பின்னணியில் குற்றவாளி அல்லது குற்றம் சாட்டப்பட வேண்டிய ஆண் தப்பிக்கவிடப்பட்டமை தொடர்பிலும் பேசப்பட்டது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளரும் உள்ளூராட்சிசபை அலுவலகருமான சுரேகா பரமநாதன் விஜிதாவை மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு குரல் கொடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதே சுரேகா பின்னர் எம். ஏ. சுமந்திரனின் சிபாரிசில் பாராளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார்.
ஒருபக்கம் வீட்டு வன்முறைகளால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இன்னொரு பக்கம் சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் மற்றும் குற்றங்கள் அதிகரித்திரிக்கின்றன. யாழ் வேளாள ஆண்மைய அரசியலை முன்னெடுக்கும் தமிழ் அரசியல் கட்சிகளாலும் கூட பெண்கள் வன்முறைகளை எதிர்கொள்கின்றனர்.
இதன் உச்சகட்டமாகத் தான் எம்பி இராமநாதன் அர்ச்சுனா கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் சாளினியை, விபச்சாரி’ என பாராளுமன்ற ஹன்சார்ட்டில் பதிந்தமையை குறிப்பிடலாம். எம்பி அர்ச்சுனா அத்தோடு நிற்கவில்லை தன்னை விமர்சித்த சங்கவி என்னும் பெண் ஊடகவியலாளரையும் அரசியல்வாதியும் சட்டத்தரணியுமான ஸ்வதிகா அருளிங்கம் என்ற இன்னுமொரு பெண்ணையும் மிகக் கீழ்த்தரமான முறையில் விமர்சித்திருந்தார். இந்த விடயங்களுக்காக எம்பி அர்ச்சுனா இராமநாதன் பாராளுமன்ற சாபாநாயகரின் கண்டனைங்களையும் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது.
இந்த விடயத்தில் எம்பி அர்ச்சுனாவை கண்டித்து பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண்களுக்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் குரல் கொடுக்கவில்லை. அதேநேரம் எம்பி சிவஞானம் சிறிதரன் கூட தனது சொந்த ஊர்ப் பெண்ணான வட்டக்கச்சி சாளினியின் பக்கம் நிற்கவில்லை. மாறாக பாராளுமன்றத்தில் எம்பி அர்ச்சுனா இராமநாதனை சபாநாயகர் மன்னித்து, அர்ச்சுனா மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளை வாபஸ் பெற கோரிக்கை விடுத்தார்.
தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவக்கு போட்டியிடும் இருவரில் ஒருவரான எம். ஏ சுமந்திரன் விஜிதாவின் மரணத்திற்கு காரணமான சோ. சுகிர்தனை தனது வலதுகரமாக வைத்துள்ளார். மற்றையவர் சி. சிறிதரன் உதவி கேட்டு கட்சி அலுவலகத்திற்கு வரும் பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரும் வேழமாலிகிதனை வலதுகரமாக வைத்துள்ளார். அப்படியிருக்க எம்பி சிறிதரன் எம்பி அர்ச்சுனாவிற்கு வக்கலாத்துக்கு போனதில் ஆச்சரியமில்லை.
இதெல்லாம் ஒருபுறம்மிருக்க உள்ளூராட்ச்சித் தேர்தலில் எம்பி அர்ச்சுனாவின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன. எம்பி அர்ச்சுனாவோ தங்களுடைய வாக்குகளை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசியமக்கள் முன்னணிக்கு அளிக்கும்படி கேட்டுள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அர்ச்சுனாவோடு கூட்டணிக்கு தயார் என சமிக்ஞை காட்டுகிறார். கஜேந்திரகுமாருக்கு மட்டும் ஏன் தமிழ்ப் பெண்கள் விடயத்தில் அக்கறை இருக்கப் போகிறது. எல்லோரும் ”யாழ்ப்பாண வெள்ளாள ஆண்மைய “குட்டையில் ஊறிய மட்டைகளே” ஆகும்.
உள்ளூராட்சித் தேர்தலில் குறைந்தபட்சம் 25 % பெண்களுக்கு வேட்புமனுக்களில் இடம் அளிக்க வேண்டும் சட்டம் அமுலில் உள்ளது. ஆனால் வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்த பிரதான தமிழ்க்கட்சிகள் பெண்கள் யாரையும் கூட்டிவந்ததாகத் தெரியவில்லை.
உள்ளூராட்சித் தேர்தலைப் பொறுத்தவரை பெண்கள் அரசியலில் காலடி எடுத்து வைக்கவும் , பயிற்சி பெறவும் சிறந்த சந்தர்ப்பம். தமிழ்த் தேசியம் பேசுகின்ற ஆண்மைய அரசியல் கட்சிகள் பெண்களுக்கு உரிய இடம் கொடுப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. இவ்வாறான பெண்களை இழிவுசெய்யும் இசைப்பிரியா போன்ற இராணுவத்தால் பாலியல் வன்முறைக்குள்ளாகி கொலை செய்யப்பட்ட பெண்களுக்கு எப்படி நீதி பெற்றுக் கொடுப்பார்கள்?
அந்த வகையில் பெண் வாக்காளர்கள் தமக்காக குரல் கொடுக்க கூடிய கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என பெண்கள் உரிமைச் செயற்பாட்டாளர்கள் கோருகின்றார்கள். அதேநேரம் பாலியல் சுரண்டலில் ஈடுபடும் ஆண்களுடன் சமரச அரசியலில் ஈடுபடும் மற்றும் துணை போகும் ஐக்கிய மக்கள் சக்தி உமாசந்திரப் பிரகாஷ் போன்ற பெண் அரசியல்வாதிகளையும் ஆதரிக்க கூடாது.
பழைய கள்ளை புதிய மொந்தையில் பரிமாறும் விந்தன் !
ஜனாதிபதி தேர்தலில் சங்கு சின்னம் தென்னிலங்கைக்காக காசு பெற்று களமிறங்கியது என்கிறார் கட்சி தாவிய விந்தன். இவர் ஊரறிந்த இரகசியத்தை பரகசியமாக்கினார். இந்த விடயம் ஏற்கனவே தேசம்நெற்றில் பலதடவை வெளிவந்துள்ளது.
ரெலோ அமைப்பிலிருந்து வெளியேறிய, வெளியேற்றப்பட்ட விந்தன் கனகரட்ணம் என்பவர் அண்மையில் தமிழரசுக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிலையில், தமிழீழம் கேட்ட அரசியல்வாதிகள் வடக்கிற்கு நிதி ஒதுக்கியமைக்கு கை தட்டுவது மக்களுக்கு துரோகம் இழைக்கும் அரசியலாக பார்க்கப்படுகிறது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.
ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு கை தூக்கி ஆதரவு கொடுத்ததை விந்தன் கடுமையாக விமர்சிக்கின்றார். என்பிபி அரசாங்கம் தமிழர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இன்னும் முழுமையாக நிறைவேற்றவில்லை. அப்படியிருக்க வெறுமனே வடக்குக்கு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்தமைக்கு கை தூக்கிய செல்வம் எம்பி தமிழ் மக்களுக்கு தூரோகம் இழைத்துவிட்டதாகவும் விந்தன் குற்றம் சாட்டினார்.
மேலும் விந்தன் செல்வம் அடைக்கலநாதன் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சங்கு சின்னத்தை பயன்படுத்தி தேர்தல் அரசியலுக்காக பத்து கோடி வரை பிரபல தென்னிந்திய பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா சுபாஸ்கரனிடமிருந்து பெற்றதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார். ரெலோவால் வெளியேற்றப்பட்ட விந்தன் கோபத்தில் கட்சியின் உள் இரகசியங்களை எல்லாம் பகிரங்கப்படுத்துகிறார் என ரெலோ வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
தமிழ் தேசியக் கட்சிகளின் இருத்தலுக்கான அச்சுறுத்தலாக மாறியுள்ள உள்ளுராட்சி தேர்தல் !
வரும் உள்ளுராட்சித் தேர்தல் தமிழ் தேசியக் கட்சிகளின் வேர்களையே பிடுங்கிவிடுமா ? என்ற அச்சத்தில் தமிழ் தேசியம் தனது இருத்தலுக்கான அச்சுறுத்தலை உணர ஆரம்பித்துள்ளது. மக்களோடு அந்நியப்பட்டுள்ள தமிழ் தேசியக் கட்சிகளுக்கு தாங்கள் மக்கள் மத்தியிலிருந்து எவ்வளவு தூரம் அந்நியப்பட்டுள்ளனர் என்பதைக் கூட அறிந்து கொள்ள முடியவில்லை.
தங்களுடைய பலத்தையும் பலவீனத்தையும் அறிந்துகொள்ளாத தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் ஆட்சிமாற்றம் நிகழும் தங்களுக்கொரு எதிர்காலம் அமையும் என்று முட்டாள்தனமாக நம்பி மிக மோசமான முடிவைச் சந்தித்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலில் இருந்து எதனையும் கற்றுக்கொள்ளாத தமிழ் தேசியம் அவர்களின் பிணங்களில் ஒட்டுண்ணிகளாக வளர்ந்தது. கடந்த 15 வருடங்களாக புலித்தோலைப் போர்த்துக் கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு முந்திய மிதவாதத் தமிழ் தேசிய அரசியல் தலைவர்கள் எவ்வாறு குறும்தமிழ் தேசியவாத அரசியல் பேசினார்களோ அதேபோல் இன்றைய அரசியல் தலைவர்களும் அதனையே பேசினார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் அன்றைக்கு எதற்காக அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களைச் சுட்டுக்கொன்றார்களோ அதனையே தான் அல்லது அதற்கும் மேல் மோசமான அரசியலையே தமிழீழ விடுதலைப் புலிகளினதும் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் பெயரிலும் இன்றைய தமிழ் தேசிய அரசியல்வாதிகள் செய்கின்றனர். இன்று விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் அன்றைய சிந்தனையோடு இருந்திருந்தால் பா உறுப்பினர்கள் பொன்னம்பலம் கஜேந்திரகுமார், சிவஞானம் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும்.
தமிழ் மக்களை வாயால் வடைசுட்டு தொடர்ந்தும் ஏமாற்றலாம் என்ற கருதும் வலதுசாரி குறும் தமிழ் தேசியவாதம் கடந்த காலத்திலிருந்து எதனையும் கற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்கு தமிழ் மக்களின் அபிலாசைகள் என்ன என்பதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. தமிழ் மக்கள் கிளிநொச்சியில் விவசாய இரசாயணங்கள் கலந்த தண்ணீரை குடிக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் மலசலம் கலந்த கிணற்றுத் தண்ணீரைக் குடிக்கின்றனர். அவர்களுக்கு குழாய்நீர் வழங்க நிதி; ஒதுக்கப்பட்டது. பா உ சிறிதரனுக்கு வாக்களித்தவர்களுக்கு சுத்தமான குடிநீர் கூட இல்லை. ஆனால் பா உ சிறிதரனுக்கு யாழ் நகரில் ஒரு வீடு கொழும்பில் ஒரு வீடு வாங்கியுள்ளார். தமிழ் மக்கள் வலதுசாரி குறும் தமிழ் தேசியவாதிகளின் ஏமாற்று வித்தைகளை நன்கு படித்துவிட்டார்கள்.
2024 ஜனாதிபதித் தேர்தலின் போது தாங்கள் கைகாட்டுபவர்களுக்கு மக்கள் வாக்களிப்பர் என்று கனவு கண்டனர். அதற்குப் பின் நடந்த பொதுத் தேர்தலின் போது கூட தாங்கள் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்பதைக் கூட அவர்களால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. 10 ஆசனங்கள் தருவார்கள் தாங்கள் தான் தமிழ் பெரும் தேசியக் கட்சி என்று கற்பனைக் கோட்டையில் மிதந்தனர்.
இவர்கள் மீதான நம்பிக்கையீனம் தேசிய மக்கள் சக்தியின் பெரும் முதலீடானது. தேர்தலுக்கு முன்பிருந்தே தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தியது. தமிழ் தேசியம் அவழ்த்துவிட்ட வலதுவாரி குறும் தேசியவாத கருத்துகளுக்கு மக்கள் செவிசாயக்கவில்லை. அவர்களின் பாரம்பரிய ஊடகங்களையும், சமூக ஊடகங்களையும் தமிழ் மக்கள் நிராகரித்தனர். தேசம்நெற் எதிர்வு கூறியது போல் தேசிய மக்கள் சக்தி இறுதிப் பெரும்பான்மையைப் பெற்றதுடன் வடக்கு கிழக்கில் ஏழுஆசனங்களைப் பெற்றது. தற்போது தேசிய மக்கள் சக்தி வடக்கு கிழக்கின் பட்டி தொட்டி எங்கும் தன்னுடைய கிளைகளைப் பரப்பியுள்ளது.
ஒன்பது கட்சிக் கூட்டணி ஆரம்பத்திலேயே சில்லு சகதிக்குள் சிக்குண்ட நிலையில் நின்ற இடத்திலேயே சில்லுச் சுற்றுகின்றது. அதனைத் தூக்கிவிடக் கூடியவர்கள் யாரும் இல்லை. மக்களால் நிராகரிக்கப்பட்ட, தோற்கடிக்கப்பட்ட, முகவரியற்ற ஆய்வாளர் வி சிவலிங்கத்தின் மொழியில் சொன்னால் உதிரிகள் ஒன்று சேர்ந்துள்ளனர். இந்த ஒன்பது கட்சிக் கூட்டமைப்பில் தனித்துவமும் வாங்கு வங்கியும் உள்ள ஒரே கட்சி சமத்துவக் கட்சி. ஒற்றுமைக்காக அழைக்கும் போது தனித்து நிற்கமுடியாததால் வேறு வழியில்லாமல் இணைந்துள்ளனர். ஏனைய எட்டுக் கட்சிகளின் பாவ மூட்டைகள் கடந்த அரசியல் காலத்தில் செய்த ஊழல் மோசடிகளால் நிறைந்துள்ளது. இதனைத் தனித் தனியாக எழுதினால் அதற்கு தனிக்கட்டுரை எழுத வேண்டும். அதனால் ஏற்கனவே சங்கு களவாடப்பட்டு விட்டது, லைக்கா சுபாஸ்கரன் சங்கூதுகின்றார் என்றெல்லாம் பல விமர்சனங்கள் உண்டு. இந்த நிலையில் கொள்கையற்ற உதிரிகள் தேர்தல் வெற்றிக்காக மட்டும் உள்ளுராட்சித் தேர்தலில் ஊதுகின்ற சங்கிங்கு மக்கள் காதுகொடுப்பார்களா?
போகின்ற போக்கி உள்ளுராட்சித் தேர்தல் வலதுசாரி குறும்தேசியவாதிகளாகிப் போன தமிழ் தேசியவாதிகளுக்கு ஊதப்படும் கடைச்சிச் சங்காக அமையப் போகின்றது. தேசிய மக்கள் சக்தி தென்பகுதியில் உள்ளுராட்சி சபைகளை வென்றெடுப்பதைக் காட்டிலும் வடக்கில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. மக்கள் மத்தியில் அதிக பிரசன்னத்தைக் கொண்டிராத தமிழ் தேசியவாதம் ஊடகங்களிலும் சமூக வலைத் தளங்களிலும் அதீத பிரசன்னத்தை கொண்டிருக்கின்றது. அதனால் ஒரு மாயை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி தமிழ் ஊடகப் பரப்பிலும் சமூக வலைத்தளத்திலும் குறிப்பிடத்தக்க பிரசன்னத்தை கொண்டிருக்கவில்லை.தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களிலும் சமூகவலைத் தளங்களிலும் இருந்து தூரமாகவே உள்ளனர். அவர்ளை மக்கள் அணுகக் கூடிய அளவுக்கு ஊடகங்களால் அணுக முடியாத நிலையொன்றுள்ளது. துரதிஸ்டவசமாக தற்போது பாரம்பரிய ஊடகங்களும் சமூகவலைத் தளங்களும் சொல்லிக் கேட்கும் நிலையில் தமிழ் மக்கள் இல்லை. அதனால் உள்ளுராட்சி சபையில் தேசிய மக்கள் சக்தி அலை வாக்குகளை அள்ளிச் செல்லவே வாய்ப்புள்ளது.
ஆனால் அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள். நீண்டகாலத்தில் தேசிய மக்கள் சக்தி மக்கள் மட்டுமல்ல ஊடகங்களும் அணுகவும் கேள்வி கேட்கவும் வழிகளைத் திறந்து வைத்திருக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பிராந்திய ஊடகங்களும் அணுகும் வழிகளைக் கொண்டிருக்க வேண்டும்.
பா உ அர்ச்சுனா போல் கஜேந்திரகுமார், செல்வம், சிறிதரன் எல்லோரும் உதிரிகள் ! இவர்கள் யாழில் சில ஊர்களின் பிரதிநிதிகள் ! வடக்கு – கிழக்கு பிரதிநிதிகள் அல்ல !
ஆய்வாளர் வி சிவலிங்கம் அவர்களோடு ஒரு உரையாடல்
சி.வி.கே.சிவஞானம் – மார்ச்சில் ஏப்பிரல் பூல் (April Fool) ‘எமது கட்சிக்குள் எந்த பிரிவுகளும் இல்லை !
சி.வி.கே.சிவஞானம் – மார்ச்சில் ஏப்பிரல் பூல் (April Fool) ‘எமது கட்சிக்குள் எந்த பிரிவுகளும் இல்லை !’
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி அமைக்கப்பட்டது தமக்கு எந்த ஏமாற்றத்தை தரவில்லையெனவும் தமிழரசுக் கட்சியை கீழ்நிலைக்கு கொண்டுச் செல்ல எவராலும் முடியாது எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அனுப்பிய பதில் கடிதம் தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதைக் குறிப்பிட்டார்.
தமிழரசுக் கட்சியின் நலன் குறித்து சிந்திக்க வேண்டுமென தாம் ஏற்கனவே தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வெளியில் கூறப்படுவது போல தமது கட்சிக்குள் எவ்வித பிரச்சினையும் இல்லையெனவும் தாம் ஒற்றுமையாகவே உள்ளதாகவும் சி.வி.கே.சிவஞானம் கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யாதது மட்டும் தான் குறை என ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியில் பா உ சிறிதரன் வெளியேற வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும் – ஆய்வாளர்கள் கணிப்பு !
தமிழரசுக் கட்சிக்குள் பா உ சிறிதரனும் எம் ஏ சுமந்திரனும் இருக்கும்வரை கட்சி வளர்ச்சியடையாது என தமிழ் தேசியத்தின் ஆய்வாளர்கள் என தங்களை முன்நிறுத்தும் ஊடகவியலாளர் நிலாந்தன் மற்றும் பொங்கு தமிழ் கணேசலிங்கம் ஆகியோர் டான் தமிழ் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஆய்வாளர் வி சிவலிங்கம் பா உ எஸ் சிறிதரன் தமிழரசுக் கட்சியின் முடிவுகளுக்கு கட்டுப்பட முடியாவிட்டால் அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் அல்லது தானாக கட்சியிலிருந்து வெளியேற வேண்டும் எனத் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியிலிருந்து இவ்விருவரில் ஒருவர் வெளியேற்றப்படுவது தவிர்க்க முடியாதது. கட்சி தற்போது எம் ஏ சுமந்திரனின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதாலும் மத்திய குழுவில் சுமந்திரனுக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாலும் பா உ சிறிதரன் கட்சியிலிருந்து வெளியேறுவதற்கு அல்லது வெளியேற்றப்படுவதற்கே வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பா உ சிறிதரன் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாராளுமன்றத்தில் அவர் ஆசனத்தை வென்று எம் ஏ சுமந்திரன் ஆசனத்தை இழந்தார்.
இருந்த போது பா உ சிறிதரனால் கட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. தற்போது உள்ளுராட்சி மாகாணசபைத் தேர்தலில் வேட்ப்புமனு தாக்கல் செய்வதில் இன்னுமொரு நெருக்கடிநிலை உருவாகும்.
ஆனால் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். பா.உ சிறிதரன் இது தொடர்பில் மேலும் தெரிவித்த போது, மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதாக இருந்தால், முதலில் பாராளுமன்றத்தில் மாகாணசபைத் தேர்தல் சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும். ஆனால் 50 சதவீத தொகுதி மற்றும் விகிதாசார தேர்தல் முறைமைக்கு தென்னிலங்கையிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. நாமும் அதனை எதிர்க்கிறோம். மாகாணசபைத் தேர்தல் இவ்வாறானதொரு இழுபறி நிலையில் தான் இருக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால், முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்கு நான் தயாரில்லை. அதேபோன்று எமது கட்சி வழக்கு நிலுவையில் இருக்கிறது. கட்சி உறுப்பினர்களே வழக்கினைத் தாக்கல் செய்திருக்கின்றனர். இது தாயை நீதிமன்றத்தில் நிறுத்திவிட்டு, தாயிடம் உணவு கேட்பதுபோல் உள்ளது. நாங்கள் செய்வது பதவிகளுக்கான அரசியல் அல்ல. மாறாக இனவிடுதலையை இலக்காகக்கொண்ட அரசியலாகும். பதவிகளுக்காக அரசியல் செய்வது தவிர்க்கப்படவேண்டும். இவ்வாறானதொரு சூழ்நிலையில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.
தங்களை தமிழ் தேசியத்தின் ஆய்வாளர்களாக முன்நிறுத்தும் நிலாந்தனும் பொங்குதமிழ் கணேசலிங்கமும் தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகளுக்கிடையே உள்ள தனிப்பட்ட முரண்பாடுகளே தமிழ் தேசியம் பலவீனப்படுவதற்கு முக்கிய காரணம் எனத் தெரிவிக்கின்றனர். அவர்கள் மேலும் குறிப்பிடுகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தன்னை வளர்த்துக்கொள்ளத் தவறிவிட்டது எனச் சுட்டிக்காட்டினர்.
தேசிய மக்கள் சக்திக்கும் பா உ அர்ச்சுனாவுக்கும் அச்சமடைந்து தான் தமிழ் தேசியக் கட்சிகள் புதிய கூட்டணிகளை உருவாக்குவதாக நிலாந்தனும் கணேசலிங்கமும் தெரிவிக்கின்றனர்.
கஜாவின் அழைப்பை புறக்கணிக்கின்றது தமிழரசுக்கட்சி !
தமிழ் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் சிவிகெ சிவஞானத்திடம் வழங்கிய அழைப்பை தமிழரசுக் கட்சி புறக்கணிக்கின்றது. கடந்த 27ஆம் திகதி, ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரிடையே இடம்பெறவிருந்த புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான கலந்துரையாடல் தமிழரசுக்கட்சியினர் கலந்து கொள்ளாததால் கைவிடப்பட்டிருந்தது. தாங்கள் அடுத்த பெப்ரவரி 8 வரை தமிழரசுக்கட்சியின் முடிவுக்காக காத்திருப்பதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கொள்கை ரீதியான இணக்கப்பாடு இல்லாமல் தமிழ் கட்சிகள் ஒன்றிணைவது தொடர்பில் சிந்திக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் தெரிவித்தார். ‘நாங்கள் முயற்சிகள் எடுத்தோம் தமிழரசுக் கட்சி ஐக்கியத்திற்குத் தயாரில்லை. எம் ஏ சுமந்திரன் ஐக்கியப்பட விடுகிறார் இல்லை’ என்று ஒரு கதையாடலை இதன் மூலம் அவிழ்த்துள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, அரசியலமைப்பு ஒற்றையாட்சி முறைமையாக அமைய போகிறது. அந்த நிலையில் தமிழர் தரப்பில் நாடாளுமன்றில் உள்ள 19 உறுப்பினர்களில் குறைந்த பட்சம் 10 உறுப்பினர்களாவது ஒன்றிணைந்து வரவுள்ள ஒற்றையாட்சியை எதிர்க்க வேண்டும். கட்சிகள், உறுப்பினர்கள் மற்றும் கொள்கைகள் மீது பலருக்கும் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களின் இருப்பை இல்லாதாக்கும் அரசியலமைப்பை தமிழ் மக்களாக நாம் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். ஒற்றையாட்சி சிந்தனையோடு வரும் எந்த அரசியலமைப்பை ஏற்க முடியாது. சமஷ்டி தீர்வை மாத்திரமே ஏற்றுக்கொள்வோம். சமஷ்டி என்பதில் எந்த ஒளிவுமறைவும் இன்றி நேரடியாக சமஷ்டி தீர்வாகவே தீர்வுத்திட்டம் முன் வைக்கப்பட வேண்டும் என்றார்.
நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் ஊடகங்களிடம் பேசியிருந்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், சமஷ்டி தொடர்பில் பெரிதாக நாம் அலட்டிக்கொள்ள போவதில்லை என்றும் மாறாக தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தொடர்பில் தான் நாம் அதிக கவனம் செலுத்த முயற்சிக்கிறோம் என தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது










