ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

பாராளுமன்றத்தில் மற்றுமொரு பல்டி அடித்த பா உ அர்ச்சுனா: உள்ளுராட்சி மாகாணசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பித்தார் !

பாராளுமன்றத்தில் மற்றுமொரு பல்டி அடித்த பா உ அர்ச்சுனா: உள்ளுராட்சி மாகாணசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பித்தார் !

 

“தமிழர்களுக்கு அனுர குமார பிச்சை போடத் தேவையில்லை. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள் நாங்கள் பிச்சை தருகிறோம் உங்களுக்கு” தனது உள்ளுராட்சி மாகாணசபைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட விவாத்திலேயே ஆரம்பித்து விட்டார் பா. உ அர்ச்சுனா. வடக்குக்குகான நிதி ஒதுக்கீட்டை வரவேற்றுப் பேசிய அர்ச்சுனா நேற்றைய பாராளுமன்ற விவாதத்தில் தடாலடியாக பல்டி அடித்து எங்களுக்கு பிச்சை வேண்டாம், உங்களுக்கு நாங்கள் பிச்சை போடுகிறோம் என்றார்.

பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்கினால் நாட்டிற்கு பில்லியன் கணக்கான முதலீடுகளை எமது சகோதரர்கள் கொண்டு வருவார்கள் என நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வில் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். அர்ச்சுனா மேலும் தெரிவித்துள்ளதாவது, “மொத்த மூலதனச் செலவில் வடக்கு கிழக்கிற்கு ஒதுக்கப்பட்ட நிதி 0.1 வீதம் மட்டுமே ஆகும். இது அநுர அரசாங்கம் தமிழர்களுக்கு போட்ட பிச்சை. 45,000 தமிழர்களை கொன்றுவிட்டு இதுவே எங்களுக்கு போடும் பிச்சை.

இதேவேளை, சுகாதாரத் துறையில் வடக்கிற்கு 0.6 வீதமும் கிழக்கிற்கு 0.8 வீதமும் ஒதுக்கியுள்ளீர்கள். முடிந்தால் பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்குங்கள். பில்லியன் கணக்கான பணத்தை நாம் நாட்டிற்குள் கொண்டு வருகின்றோம். நான் இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு வைத்திருந்தேன். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது” என்றார்.

அடிக்கடி நிறம்மாறும் அர்ச்சுனா விழுகின்ற பக்கம் குறிவைக்கிறார் என்கிறார் அரசியல் ஆய்வாளர் வி சிவலிங்கம். பா உ அர்ச்சுனா வெளியிடும் புள்ளிவிபரங்கள் அவர்களுக்கு ஏற்றவகையில் திரிபுபடுத்தப்பட்டுள்ளது. அதில் உள்ளடக்கம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை எனத் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் 2009 மே 17 வரை சர்வதேச அளவில் புலி உறுப்பினர்களிடம் 300 பில்லியன் டொலர் அசையும் அசையாச் சொத்துக்கள் இருந்தது. அதிலிருந்து ஆண்டுதோறும் 300 மில்லியன் வருமானம் வந்தகொண்டிருந்தது. அனால் 2009 மே18 இல் தலைவர் வந்து கேட்டால் தான் தருவோம் என்று பா உ அர்ச்சுனா குறிப்பிடும் சகோதரர்கள் அறிவித்துவிட்டார்கள்.

புலம்பெயர் தமிழர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு வழங்கிய அத்தனை பில்லியன் சொத்துக்களும் ஒரே இரவில் காணாமல் போனது என்கிறார் அரசியல் செயற்பாட்டாளர் ஆய்வாளர் சோலையூரான். முடிந்தால் அர்ச்சுனா வேறு யாருக்கும் பிச்சை போட வேண்டாம் அவர் நேசிக்கும் தலைவனுடைய பாசறையில் வழந்தவர்கள் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு 15 வருடங்கள் துன்பத்தில் உளல்கின்றார்கள் அவர்களுக் உதவட்டும். அர்ச்சுனா தன்னுடைய சகோதரர்களைக் கேட்டு உதவச் சொல்வாரா? எனக் கேள்வி எழுப்புகின்றார் பாரிஸில் வாழும் சோலையூரான்.

துப்பாக்கிகளின் தாக்குதல்களை விட சைபர் தாக்குதல்கள் அச்சமளிக்கின்றன – சர்வதேச அரச உச்சிமாநாட்டில் ஜனாதிபதி அனுர !

துப்பாக்கிகளின் தாக்குதல்களை விட சைபர் தாக்குதல்கள் அச்சமளிக்கின்றன – சர்வதேச அரச உச்சிமாநாட்டில் ஜனாதிபதி அனுர !

 

துப்பாக்கிகளின் தாக்குதல்களை விட சைபர் தாக்குதல்கள் அச்சமளிக்கின்றன. சைபர் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க புதிய சட்டம் அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்தில்  நடைபெற்று வரும் சர்வதேச அரச உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் உரையாற்றிய ஜனாதிபதி,

உலகில் எந்த நாட்டில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பான அக்கரையும் அதன் மீதான தாக்கமும் எமது நாட்டு மக்களுக்கு என்றும் இருக்கும்.  எமது மக்கள் பண்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதோடு, மாற்றத்தை விரும்பும் ஒரு சமூக அமைப்பாகவும் காணப்படுகிறார்கள்.  உலகிலேயே அதிக கண் தானம் செய்யும் நாடு என்ன என்று இணையத்தில் நீங்கள் தேடினால், இலங்கையின் பெயர்தான் பதிலாக வரும்.

வறுமையான நாடுகளில் 60 வீதமான நாடுகள் இன்று கடன் சுமைக்கு உள்ளாகியுள்ளன.  சர்வதேச நாடுகளுடன் செய்து கொள்ளப்படும் ஒப்பந்தங்களுடன், வளர்ந்துவரும் உலகுக்கு ஏற்ற வகையில், முதலீடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.  இலஞ்ச – ஊழல் இல்லாத ஒரு ஆட்சியை நோக்கி நாம்  பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.  எமது நாட்டுக்கு சுற்றுலா மேற்கொண்டால், எமது நாட்டை சூழவுள்ள கடலை பார்த்து நீங்கள் ஆச்சரியப்படக்கூடும்.

,துப்பாக்கித் தோட்டா மற்றும் விமானத்தில் வெடிக்கும் வெடி குண்டைவிடவும் சமகாலத்தில் சைபர் தாக்குதலால் அதிக அழிவுகள் நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றன. ஆயுதம் தாங்கிய யுத்தங்களிலிருந்து மக்களை பாதுகாக்க சர்வதேச ரீதியாக சட்டத்திட்டங்கள் காணப்பட்டாலும், சைபர் யுத்தங்களிலிருந்து மக்களை காக்க எந்தவொரு சட்டமும் கிடையாது. இதனால், சைபர் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பலம் வாய்ந்த சட்டக்கட்டமைப்பு ஒன்று அவசியமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஹெலிகாப்டர் இருக்குது எதற்காக ஆறு மணி நேரத்தை வீதியில் செலவழிக்க வேண்டும்? – எம்.பி ரவி கருணாநாயக்க

ஹெலிகாப்டர் இருக்குது எதற்காக ஆறு மணி நேரத்தை வீதியில் செலவழிக்க வேண்டும்? – எம்.பி ரவி கருணாநாயக்க

யாழ்ப்பாண விஜயத்தின்போது எதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க 12 மணிநேரத்தை வீதியில் வீணாக்கினார் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (07.02.25) கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி என்பவர் ஒட்டுமொத்த நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். ஹெலிகாப்டர் இருக்கும்போது எதற்காக அவர் ஆறு மணி நேரத்தை வீதியில் செலவழிக்க வேண்டும்? இது நவீன உலகம். நான் பிரதமருக்கும் அதையே பரிந்துரைக்கின்றேன். தனிப்பட்ட ரீதியில் ஹரிணி அமரசூரிய என்று இல்லாமல் நாட்டின் பிரதமர் என்ற பதவியில் இருக்கும் போது ஏன் நீங்கள் இதை பாவிக்கின்றீர்கள் இல்லை? இது ஒரு இழப்பு இல்லை. நீங்கள் ஆறு மணி நேரத்தை வீதியில் செலவழித்து இழக்கும் பணமே நாட்டுக்கு வீண்விரயமானது. எதிர்க்கட்சியாக நான் இதை முன்மொழிகிறேன். இவ்வாறானவை தேவையற்ற செலவீனங்கள் இல்லை. இதுதான் நீங்கள் நாட்டை முன்னேற்றும் வழி” என்றார்.

ரவி கருணாநாயக்கவின் கருத்தை பலரும் சமூகவலைத்தளங்களில் வரவேற்றுள்ளனர். ஜனாதிபதி உட்பட்ட முக்கியமான பொறுப்பில் உள்ளவர்கள் தம்முடைய நேரம் தொடர்பில் அதீத கவனம் எடுக்க வேண்டும் என அவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதேவேளை இன்னொரு சாரார் வான்வழியால் பயணித்தால் நாட்டின் தலைவரால் மக்களின் நிறைகுறைகளை அறியமுடியாது என்றும், இவ்வாறான பயணங்களின் ஊடாக அனுர சாமான்ய மக்களின் நிலையை அவதானிக்க முடியும் என்றும் தெரிவிக்கின்றனர்.

 ‘நல்லமா நல்லமா’ – ட்ரெட்ன்டிங்கில் சாமர சம்பத் 

‘நல்லமா நல்லமா’ – ட்ரெட்ன்டிங்கில் சாமர சம்பத்

 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் வைத்து, மக்களிடம் ‘நல்லமா, நல்லமா’ எனக் கூறியதை நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பாராளுமன்றத்தில் கிண்டலடித்த காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில், “நீங்கள் சம்பந்தப்பட்டுள்ள மோசடிகள் குறித்த கோப்புகள் எங்களிடம் உள்ளன, நாங்கள் அனைத்தையும் விசாரிப்போம்” என்று அமைச்சர் வித்யாரத்ன கூறினார்.

“சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது நீங்களும் அரசாங்க அமைச்சர்களும் பொது நிதியை வீணடித்து முந்திரி பருப்பை சாப்பிட்டது பற்றி தான் இப்போது மக்கள் பேசுகின்றனர். நீங்கள் என் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம். நான் பயப்படவில்லை” என்று எம்.பி. சாமர சம்பத் கூறினார்.

மேலும் , வடக்கு மக்களின் நல்வாழ்வு குறித்து விசாரிக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு எப்படி தைரியம் வந்தது… ?

“அரிசி இல்லை, உப்பு இல்லை, இப்படி அரசாங்கம் அடிப்படைத் தேவைகளை வழங்கத் தவறியபோது, வடக்கு மக்களிடம் எல்லாம் நன்றாக இருக்கிறதா என்று ஜனாதிபதி எப்படிக் கேட்க முடியும்..? இந்த அரசாங்கத்தின் உறுப்பினர்கள் எவ்வளவு அதிகமாகப் பேசுகிறார்களோ, அவ்வளவு அதிகமாக வாக்குகளை இழக்க நேரிடும் என்று தசநாயக்க கூறினார்.

நல்லமா நல்லமா என நளினத்துடன் சாமர சம்பத் தசநாயக்க கூறியது தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.

சாமான்யன் முப்படைகளின் தலைவனாக நின்று தேசிய கொடியை ஏற்றிய போது நான் கண்கலங்கிட்டேன் – பிரதியமைச்சர் அருண் நெகிழ்ச்சி !

சாமான்யன் முப்படைகளின் தலைவனாக நின்று தேசிய கொடியை ஏற்றிய போது நான் கண்கலங்கிட்டேன் – பிரதியமைச்சர் அருண் நெகிழ்ச்சி !

 

ஓர் சாமான்ய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஓர் குடிமகன் முப்படைகளின் தலைவராக சுதந்திர தினத்தில் தேசிய கொடியை ஏற்றிய போது அவரின் பின் வரிசையில் நின்ற நான் கண் கலங்கிவிட்டேன் என நெகிழ்ச்சியான பேஸ்புக் பதிவொன்றை திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா பகிர்ந்துள்ளார்.

குறித்த பேஸ்புக் பதிவில், நான் சரியாக அந்த கொடிக் கம்பத்துக்குப் பின்னால் இருந்த தொகுதியில் நின்றிருந்தேன். அவர் தேசியக் கொடியை ஏற்றிய பொழுது என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. காரணம் வேறு ஒன்றும் இல்லை.

ஒரு சாமானியன் இன்று முப்படைகளினதும் தளபதி என்ற அந்தஸ்துடன் ஜனாதிபதியாகத் திகழ்கின்றார். எத்தனையோ சவால்கள், ஏமாற்றங்கள், தோல்விகள், படுகொலைகளையும் தாண்டி இன்று அரியாசனம் இருக்க வேண்டிய இடத்தில் சாமான்ய ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார். இரவு பகல் பாராது அயராது நாட்டிற்காக உழைக்கின்றார்.

அவரைப் பற்றி மிகவும் நெருக்கமாக அறிந்தவர்களுக்கு மாத்திரமே தெரியும் அவர் எவ்வளவு சாமான்யமானவர் என்று. இன்று அவர் மீது சிலர் கொண்டுள்ள வஞ்சம் ஒரு சாதாரண விடயம் அல்ல. அது ஏழை எளிய அடித்தட்டு வர்க்கத்தின் மீது கொண்டுள்ள வஞ்சம். வர்க்க வஞ்சம். இதனை நாம் சாதாரணமாக கடந்து செல்லவும் முடியாது, கணக்கெடுத்துக் கொண்டு நேரத்தை வீணடிக்கவும் முடியாது. நாம் நமது பயணத்தை மேற்கொள்வோம். இதுவொரு நீண்ட பயணம்.

என்னமோ இதுவரைக்கும் அரிசி இறக்குமதி செய்யாத நாடு போல. உப்பில் தன் நிறைவு கண்ட நாடு போல. எப்படியோ எல்லாம் வசை பாட நினைத்தவர்கள் இன்று இதில் வந்து நிற்பதே யதார்த்தம். அனுபவம் இல்லை என்றார்கள், அனுபவசாலிகள் பதுக்கிய பல விடயங்கள் வெளியே வருகின்றன.

உலக நாடுகள் உதவாது என்றார்கள். நிறுத்தி வைத்த செயல் திட்டங்கள் எல்லாம் மீள ஆரம்பிக்கின்றன. வரிசை யுகம் வரும் என்றார்கள். வரிசையில் உதவ பலர் முன் வருகின்றார்கள்.

 

இந்த சாமானியனின் ஆட்சியில், இந்த நாடு எழும், மக்கள் வெல்வார்கள் என குறிப்பிட்டுள்ளார் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா.

“தனிநாடு தருகிறோம் என கூறிய தலைவர்களை ஒதுக்கி விட்டு தமிழ் மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.” ஜனாதிபதி அனுர

“தனிநாடு தருகிறோம் என கூறிய தலைவர்களை ஒதுக்கி விட்டு தமிழ் மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.” ஜனாதிபதி அனுர

 

“தனிநாடு தருகிறோம் என கூறிய தலைவர்களை ஒதுக்கி விட்டு தமிழ் மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.” என ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க குருநாகலில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது, நான் யாழ்ப்பாணம் சென்றிருந்தேன். யாழ். மக்கள் முதன்முறையாக தெற்கு அரசு மீது, தெற்குத் தலைவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளதைக் காணமுடிந்தது. இது மிக முக்கியமாகும். வடக்கில் உள்ள சில தலைவர்கள் தனிநாடு தருகின்றோம் எனக் கூறியபோதும், அப்படி கூறியவர்களின் அரசியல் பரம்பரையில் வந்தவர்கள் இருக்கின்றபோதிலும் மக்கள் எம்மை தேர்வு செய்தனர்.

அவர்களுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அவற்றை நாம் நிறைவேற்ற வேண்டும். எம்மிடையே மீண்டும் பிரிவினைவாதம், போர், நம்பிக்கையீனம் என்பன இல்லாத, அனைவரும் ஒன்றியைணக்கூடிய நாடொன்றைக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்குரிய ஆசிர்வாதம் வடக்கு மக்களிடமிருந்து கிடைத்துள்ளது.

30 வருடகால போர் மற்றும் அரசியல் காரணங்களால் வடக்கு பகுதிக்கு அபிவிருத்திகள் சென்றடையவில்லை. அந்தப் பகுதி மக்களின் பிரச்சினைகளை வேகமாகத் தீர்க்க வேண்டும் என்றார்.

இந்தக் கடற்பரப்பு உங்களுடையது. மீன் பிடிக்கும் உரிமையிருப்பது உங்களுக்கு!” வல்வையில் ஜனாதிபதி

இந்தக் கடற்பரப்பு உங்களுடையது. மீன் பிடிக்கும் உரிமையிருப்பது உங்களுக்கு!” வல்வையில் ஜனாதிபதி

இந்தக் கடற்பரப்பு உங்களுடையது. மீன் பிடிக்கும் உரிமையிருப்பது உங்களுக்கு. அந்த உரிமையை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு எங்களுக்கு சில காலம் வழங்குங்கள். சட்டவிரோத ரோலர்களைப் பயன்படுத்தி எங்களது மீனர்களை அச்சுறுத்துவதை கட்டாயம் நிறுத்தப்படும் என்றார் ஜனாதிபதி அனுர. வல்லையில் நடந்த தேசிய மக்கள் சக்தியின் கட்சிக் கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

வடக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் படிப்படியாக தீர்க்கப்படும் எனவும் அதற்குரிய கால அவகாசத்தை வழங்குமாறும் அனுரகுமார திசநாயக்க கோரியுள்ளார். வல்வெட்டித்துறையில் நேற்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் ஒன்றுகூடலில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்இ நீண்ட காலமாக வடமாகாணத்தில் மீனவர்களுக்கு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவை தீர்க்கப்பட வேண்டும். நாங்கள் இந்திய அரசாங்கத்திடம் பல தடவைகள் பேச்சுவார்த்தை நடாத்தினோம். கடற்பரப்பின் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு கடற்படைக்கு கட்டளையிட்டுள்ளோம். படிப்படியாக மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்போம் எனவும் ஜனாதிபதி அனுரா உறுதியளித்தார்.

ஜனாதிபதி அனுரவின் யாழ் விஜயம் மக்கள் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்ய முயற்சி !

ஜனாதிபதி அனுரவின் யாழ் விஜயம் மக்கள் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்ய முயற்சி !

ஜனாதிபதி அனுராவின் யாழ் விஜயத்தின்போது யாழ் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான விடயங்கள் கேட்டறியப்பட்டு அதற்கான செயற்திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களுடைய போக்குவரத்தப் பிரச்சினைக்கு பஸ்களை வழங்குவது, தெருக்களைப் புனரமைப்பது, மருத்துவமனை வெற்றிடங்களை நிரப்புவது, யாழ் மக்களுடைய குடிநீர் பிரச்சினை, பொலிஸாரின் குற்றச்செயல்களுக்குத் துணைபோகும் நடவடிக்கை எனப் பல்வேறு விடயங்களும் பேசப்பட்டது. தீர்வுகளும் முன்வைக்கப்பட்டது.

ஜனாதிபதி அநுரவின் தலைமைத்துவத்தின் மீது வடக்கு மக்கள் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் வைத்திருக்கின்றார்கள் என வடக்கு மாகாண ஆளுநர் ஆளுநர் நா.வேதநாயகன் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.

வடக்கு மக்கள் சார்பாக ஜனாதிபதியை வரவேற்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர்,  ஜனாதிபதியின் தலைமைத்துவத்தில் இந்தப் பிரதேசத்தில் மிகப் பெரிய மாற்றம் நடைபெறும் என எதிர்பார்ப்பதாகவும்,  இந்தப் பகுதி மக்கள் அவர் மீது அதற்காக நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

புலம்பெயர்ந்த தமிழருக்காக அநுர வீட்டைப் பறித்துவிட்டார் – மகிந்த ராஜபக்ச புலம்பல்

புலம்பெயர்ந்த தமிழருக்காக அநுர வீட்டைப் பறித்துவிட்டார் – மகிந்த ராஜபக்ச புலம்பல்

 

இல்லம் பறிக்கப்படுமென்றும் எனது பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் நீக்கப்படுவார்களென்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியது, தேர்தலில் அவர்களுக்கு உதவிய தமிழ் புலம்பெயர்ந்தோரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் உட்பட ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தடுத்தது எனது அரசாங்கம்தான் என்று கூறிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த , நாட்டின் அச்சுறுத்தலை எதிர்கொண்ட அரச தலைவரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் பாதுகாப்பை இழந்ததற்கு பொதுமக்களின் எதிர்வினையை வரவிருக்கும் தேர்தல்களில் அரசாங்கம் அறிய முடியும் என்றும் பாதுகாப்பு அல்லது உத்தியோகபூர்வ இல்லம் குறித்து ஒருபோதும் புகார் செய்ய மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போது செய்வதற்கு எதுவுமறியாது முன்னுக்குப் பின் முரணாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். கடைசியில் இனவாதச் சீட்டையும் வைத்து ஆட்டத்தை ஆட நினைக்கின்றார். சிங்கள, தமிழ் அரசியல் தலைமைகள் இனவாதத்தை கக்கி உணர்ச்சி பொங்கப் பேசி வாக்கு வங்கியைத் தக்க வைக்க முடியும் என்ற பழைய சமன்பாட்டை கைவிட்டு மக்களோடு நின்றால் மட்டும் தான் மக்கள் ஆதரிப்பார்கள் என்ற உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்.

படிப்பிக்க மாட்டோம்’ யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ! ‘வேலையில்லாமல் இருக்க இவர்களும் தான் காரணம்’ வேலையற்ற பட்டதாரிகள் 

படிப்பிக்க மாட்டோம்’ யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ! ‘வேலையில்லாமல் இருக்க இவர்களும் தான் காரணம்’ வேலையற்ற பட்டதாரிகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நேற்று முன்தினம் முதல் காலவரையின்றி விரிவுரைகளை புறக்கணித்து மாணவர்களுக்கு எதிரான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பேராசிரியர் ரகுராம் மீள கலைப்பீடாதிபதி பதவியை ஏற்க வேண்டும், விதிமுறை மீறல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் கடந்த காலத்திலே உறுதியான நடவடிக்கைகளை எடுக்க தவறியமை குறித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பெருமளவான வேலையில்லா பட்டதாரிகளை தொழில் உலகிற்கு ஏற்ற திறன்கள் இல்லாமைக்கு பொறுப்புகூற வேண்டியவர்கள் இந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பேராசிரியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அண்மையில் வடக்கு கிழக்கில் உள்ள பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புக்களை வழங்குமாறு கோரிய போராட்டங்களில் ஈடுபட்ட பட்டதாரி ஒருவர் தேசம்நெட்க்கு தெரிவிக்கையில், இறுதியாக வழங்கப்பட்ட அரச நியமனங்களில் எமது வயது ஒத்த – பிரிவை சேர்ந்த ஏனைய பல்கலைக்கழகங்களில் கற்றவர்களுக்கு நியமனம் கிடைத்த போதும் என்னுடன் கிட்டத்தட்ட 400ற்கும் அதிகமானோருக்கு நியமனம் வழங்கப்படவில்லை. காரணம் பல்கலைக்கழக கல்வியை முடிக்க காலதாமதமானதே காரணம். இதற்கான காரணம் விரிவுரையாளர்களின் சம்பள உயர்வு கோரிய போராட்டங்கள், வினாத்தாள் திருத்தங்களுக்காக மூன்று அல்லது நான்கு மாதங்கள் எடுக்கும் விரிவுரையாளர்களின் சோம்பேறித்தனம், தேவையற்ற வகுப்புத் தடைகள் போன்றனவே காரணம் என விசனம் வெளியிட்டிருந்தார்.

விரிவுரையாளர்கள் ஆடம்பரமான வாழ்க்கை கவர்ச்சிகரமான சம்பளம் என திளைக்கிறார்கள். ஆனால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு கற்க வரும் பெரும்பாலான மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள். போரால் பாதிக்கப்பட்ட பகுதிகள் – வறுமையான குடும்பங்கள் ஆகியவற்றை சேர்ந்தவர்கள். இவர்களுக்கான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் தமது இஷ்டத்துக்கு போராட்டங்கள் செய்து மாணவர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் விரிவுரையாளர்களுக்கு எதிராக பல மாணவர்களும் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

அதே நேரம் ஜனாதிபதி அனுரா யாழ் வருகையை மேற்கொள்கையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொள்ள யாழ் வேலையற்ற பெரும்பாலும் கலைப்பீடப் பட்டதாரிகள் ஈடுபடவுள்ளதாக அவர்களின் சார்பில் பேசவல்ல கெ டெனீஸன் தெரிவித்துள்ளார். இச்சங்கத்தினர் அரசாங்கம் எவ்வித போட்டிப் பரீட்சைகளும் இன்றி திறமைகள் பற்றிய நேர்காணல்களுமின்றி தங்களுடைய பட்டப்படிப்பு சான்றிதழுக்கு வேலை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். கடந்த கால அரசுகள் காலத்துக்கு காலம் தங்கள் வாக்கு வங்கியை நிரப்புவதற்கு அரச பணிகளில் லட்சக்கணக்காணோரை நியமித்து நாடு அவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கே தள்ளாடும் நிலையை ஏற்படுத்தி உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான ஒரு வேண்டுகோளை கிழக்கு மாகாண வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கம் கிழக்கு ஆளுநரிடம் முன்வைத்த போது அவர் அதனை ஏற்க மறுத்துவிட்டார். புதிய ஆட்சேர்ப்புக்கள் வருகின்ற பட்சத்தில் துறைசார்ந்தே முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தற்போது முன்வைத்துள்ள கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்தார். வரப்போகும் வேலை வாய்ப்புகளுக்கு பலரும் ஆர்வம் காட்டுவதால் அரசு நியாயமான முறையில் நடந்துகொள்ளும் மற்றவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படும் எனவும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.