யாழில் குடும்பஸ்தர் மீது கொலைவெறித்தாக்குதல் – இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே தாக்கியதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு !

யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் வெள்ளாந்தெருவில் குடும்பஸ்தர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் வீட்டிலிருந்த உடைமைகளும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே தாக்குதலை நடத்தினர் என்று வீட்டார் குற்றம் சுமத்துகின்றனர். இந்தத் தாக்குதல் தொடர்பில் யாழ். காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யவில்லை என்று தெரிவித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியக் கிளையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீட்டின் ஒழுங்கையில் மதுபோதையில் இருவர் நின்றிருந்தனர். அவர்கள் தகாத வார்த்தைகளைப் பிரயோகித்ததாகத் தெரிவித்து வீதியால் சென்ற இருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது தாக்குதலை விலக்குப் பிடிப்பதற்கு சென்றதாகவும், தாக்குதல் நடத்தியவர்களுக்கு நீங்கள் யார் என்று கேட்டதாகவும் தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் தெரிவித்தார்.

“அவர்கள் தாங்கள் புலனாய்வுப் பிரிவினர் என்று தெரிவித்து அடையாள அட்டையை எடுத்துக் காண்பித்தனர். அதனை நான் படம் எடுத்தேன். அவர்களது மோட்டார் சைக்கிளையும் படம் எடுத்தேன். இந்தநிலையில், அன்றைய தினம் இரவு 7 மணியளவில் 7 – 8 மோட்டார் சைக்கிளில் வந்த 15 – 20 பேர் என் மீது தாக்குதல் நடத்தினர். எனது கைப்பேசி எங்கே என்று கேட்டனர். நான் கொடுக்க மறுத்தபோது அதனைப் பறித்து எடுத்துச் சென்றனர். எனது சங்கிலியையும் பறித்துச் சென்றனர். வீட்டிலிருந்த பொருட்களால், போத்தல்களால் என் மீது மிகக் கடுமையாக தாக்குதல் நடத்தினர்” என்று குடும்பஸ்தர் குறிப்பிட்டார்.

“கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதல் நடைபெற்ற உடனேயே யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யச் சென்றேன். அவர்கள் காலையில் (மறுநாள் திங்கட்கிழமை) வருவதாகத் தெரிவித்தனர்” என்று தாக்குதலுக்கு உள்ளானவரின் மனைவி தெரிவித்தார்.

மறுநாள் காலையில் சிவில் உடையில் வந்த காவல்துறையினர், வீட்டில் பொருட்கள் உடைந்திருந்ததைப் படம் எடுத்தனர் என்றும், அதன் பின்னர் அந்தப் பொருட்களை வாங்கித் தந்தால் போதுமானது என்ற கோணத்திலேயே கதைத்தனர் என்றும், முறைப்பாடை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் மனைவி குறிப்பிட்டார்.

இந்த விடயங்கள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் அவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கையை ஆரம்பித்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலக இணைப்பாளர் த.கனகராஜ், யாழ்ப்பாண காவல் நிலையப் பொறுப்பதிகாரி, வடக்கு மாகாண பிரதிப் காவல்துறை மா அதிபர் ஆகியோருக்கு விளக்கம் கோரி கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *