யாழ்ப்பாண நகரப் பகுதியில் குடும்பஸ்தர் மீது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுடன் ஆராய்வதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
யாழ். நகரில் குடும்பஸ்தர் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே அதனை மேற்கொண்டனர் என்று அவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர். இது தொடர்பில் இராணுவத் தளபதியிடம் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“மக்களைப் பாதுகாக்க வேண்டியது முப்படையினரின் பொறுப்பு. இவ்வாறான தாக்குதல் தொடர்பில் எனது கவனத்துக்குக் கொண்டு வரப்படவில்லை. இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுடன் ஆராய்கின்றேன்” – என்று பதிலளித்தார்.