இந்தியாவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக 3 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் 3,645 பேர் பலியாகி உள்ளனர்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2-வது அலையை பிரதமர் மோடி சரிவர கையாளவில்லை, ஆக்கப் பூர்வமான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்ற விமர்சனங்கள் பொதுவெளியில் வைக்கப்படுகின்றன.
இதனால் பிரதமர் மோடி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. பல்வேறு எதிர்க்கட்சிகளும் இந்த கோரிக்கையை பிரதமர் மோடிமுன்வைத்துள்ளன.
இதையொட்டி பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் ‘ரிசைன் மோடி’(‘மோடியே பதவி விலக வேண்டும்’) என்ற ‘ஹாஷ்டேக்’ நேற்று முன்தினம் வைரலானது.
ஆனால் திடுதிப்பென்று இந்த ‘ஹாஷ்டேக்’ முடக்கப்பட்டது. அதில் தங்கள் கருத்துக்களை பதிவிட முயன்றவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. “தற்காலிகமாக இங்கு மறைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த பதிவுகளில் சில உள்ளடக்கங்கள் எங்கள் சமூக தரத்துக்கு எதிரானது” என அறிவிப்பு வந்தது. இது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்தது.
பொதுவாக பேஸ்புக் சமூக வலைத்தளம், ஹாஷ்டேக்குகளையும், பதிவுகளையும் பல்வேறு காரணங்களைக் கூறி முடக்குவது வழக்கமான நடவடிக்கைதான்.
பின்னர் அந்த முடக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இது தொடர்பாக, பேஸ்புக் நேற்று விளக்கம் அளித்தது. இதுபற்றி அந்த சமூக வலைத்தள நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், நாங்கள் தவறுதலாக அந்த ‘ஹாஷ்டேக்’கை முடக்கி விட்டோம். இந்திய அரசு எங்களை கேட்டுக்கொண்டதால் நாங்கள் அதைச் செய்யவில்லை. இப்போது அதை மீண்டும் மீட்டெடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளது.