“மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகள் என்று தரமுயர்த்துவதாகக் கூறி அவற்றை மத்திய அரசு கையகப்படுத்துவது அதிகாரப்பகிர்வுக்கு முரணானதாகும்” – சீ.வி.கே.சிவஞானம்

“மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகள் என்று தரமுயர்த்துவதாகக் கூறி அவற்றை மத்திய அரசு கையகப்படுத்துவது அதிகாரப்பகிர்வுக்கு முரணானதாகும்” என்று வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸுக்கு எடுத்துரைத்துள்ளார்.

இதுதொடர்பில் வடமாகாண ஆளுநருக்கு அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

யாழ்ப்பாண மாவட்டத்தின் பத்து பிரதான பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டுள்ளன எனவும் அவை வடக்கு மாகாண சபை நிர்வாகத்தில் இருந்து மத்திய கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவரப்படுவதாகவும் கடந்த வாரம் ஊடகச் செய்திகளின் மூலமாக அறிய வந்துள்ளது.

குறித்துரைக்கப்பட்ட பாடசாலைகள் அல்லாத அரச பாடசாலைகள் அரசியலமைப்பு ரீதியாக மாகாண சபைகளுக்கு கையளிக்கப்பட்ட விடயம் என்ற ரீதியில் இந்தப் பத்துப் பாடசாலைகளும் இதுவரை மாகாண கல்வி அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வந்தவையாகும். அவற்றை மத்திய அரசு கையகப்படுத்துவது அதிகாரப்பகிர்வுக்கு முரணானதாகும்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட வட மாகாண சபை இயங்கிய காலத்தில் இவ்வாறான முயற்சிகள் யாவும் இங்கே மறுதலிக்கப்பட்டமை சுட்டிக்காட்டப்பட வேண்டும். இந்த நிர்வாக அதிகார மாற்றத்தின் தர்க்கவியல் புரிந்து கொள்ளக் கூடியதாக இல்லை. அதாவது நிர்வாக குறைபாடுகள் காரணமாக இருப்பினும் அவை மாகாண சபையினால் சீர்திருத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்வது ஒரு பிரச்சினை அல்ல.

அவற்றை விட தேசியப் பாடசாலைகளுக்கு ஏதாவது மேலதிக வசதி வாய்ப்புக்கள் வழங்கப்படுவதாயின் அவற்றை மாகாண நிர்வாகத்தின் மூலம் வழங்க முடியும். அவற்றுக்காக ஏற்கனவே நடைமுறையில் இருந்த மாகாண சபை அதிகாரத்தை பிடுங்கி மத்திக்கு கொண்டு செல்லுதல் அதிகாரப்பகிர்வை முழுமையாக மீறும் செயற்பாடாகும்.

இந்நச் செயற்பாடு சமூகத்தில் தேசியப் பாடசாலைகள் ஏதோ தரமுயர்ந்தவை எனவும் ஏனையவை தரம் குறைந்தவை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி தேசியப் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் மாணவர்களிடையே ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும் என்பது மறுக்க முடியாது. இவ்வாறான பாகுபாடு ஆரோக்கியமானதல்ல.

மேலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு சபை இல்லாத சூழ் நிலையில் இவ்வாறு செய்வது ஜனநாயக விரோதமானது என்பதையும் இச் செயற்பாடு நிறுத்தப்படவேண்டும் என்பதையும் எமது தீர்க்கமான வேண்டுகோளாக பதிவு செய்து கொள்கிறேன்.

தற்போது வடக்கு மாகாண சபையின் சட்டரீதியான நிறைவேற்று அதிகாரி என்ற வகையில் இந்த விடயத்தில் பொருத்தமான நடவடிக்கை எடுக்கும்படி தங்களை வேண்டிக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *