“கொரோனா தாக்கத்தால் ஆண்மை குறைவு ஏற்படும்“ – ஜேர்மனிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் !

இதுவரை காலமும் கொரோனா தாக்கினால் நுரையீரல் பாதிக்கும், சுவாச பிரச்சனை ஏற்படும். ரத்த நாளங்களில் ரத்தம் உறையும். இதனால் இதயம் செயலிழக்கும் என்று அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் “கொரோனா வைரஸ் தாக்கிய ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படும் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

உலகம் முழுவதும் பரவி உள்ள கொரோனா வைரஸ் மனித உடலில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பது பற்றி மருத்துவ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெர்மனியில் உள்ள ஜஸ்டஸ்லைபிக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பெக்சாத் மாலோகி மற்றும் பக்தியார் டார்டிபியன் ஆகிய இருவரும் கொரோனா கருவுறுதலில் நிகழ்த்தும் எதிர்மறையான தாக்கம் தொடர்பாக ஆய்வு நடத்தி இருக்கிறார்கள்.

கொரோனா தாக்கிய 84 ஆண்களை 60 நாட்களுக்கு 10 நாட்கள் இடைவெளியில் விந்தணுவை பகுப்பாய்வு செய்து 105 ஆரோக்கியமான ஆண்களுக்கான தரவுகளுடன் ஒப்பிட்டு ஆய்வு நடத்தி இருக்கிறார்கள்.

கொரோனா பாதித்த ஆண்களின் விந்து செல்களில் வீக்கம் மற்றும் ஆக்சிஜனேற்ற அழுத்தம் அதிகரித்து காணப்பட்டுள்ளது. இந்த வேதியியல் ஏற்றத்தாழ்வு உடலில் உள்ள டி.என்.ஏ. மற்றும் புரதங்களை சேதப்படுத்தும்.

விந்தணுக்களில் ஏற்பட்டுள்ள இந்த விளைவுகள் அதன் தரம் மற்றும் கருவுறுதல் திறனுடன் தொடர்புடையவை. இது விந்தணு உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆணின் இனப்பெருக்க அமைப்பானது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் பாதையாக கருதப்பட வேண்டும். ஆபத்தான உறுப்பு என்று உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

கொரோனா வைரசின் தாக்கம் உடலின் முக்கிய உறுப்புகளை பாதிப்பது மட்டுமல்ல நுரையீரல் திசுக்களை அணுகுவதற்கு வைரஸ் பயன்படுத்தும் அதே ஏற்பிகள் விந்தணுக்களிலும் காணப்படுகின்றன. இது ஆணின் இனப்பெருக்க உறுப்புகளையும் பாதிக்கும். விந்து உயிரணுவின் வளர்ச்சியையும் குறைக்கும். இனப்பெருக்க ஹார்மோன்களையும் சீர்குலைக்கலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்கள்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *