மலையகம்

மலையகம்

மலையக மக்கள் தனித்துவம் பேண ஐ.ம.சு.முக்கு வாக்களிக்க வேண்டும் – அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்

sri-lankas.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களை பலப்படுத்த இந்த பொதுத் தேர்தலில், வெற்றிலை சின்னத்தை வெற்றி பெற செய்வதுடன் மலையக மக்கள் தமது தனித்துவத்தை பேணுவதுடன் அவர்களின் உரிமைகளையும் அபிவிருத்திகளையும், அரச நியமனங்களை பெற்றுக் கொள்வதற்கும் இ. தொ. கா. வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டுமென்று, இ. தொ. கா. பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் கூறினார்.

தேர்தல் தொடர்பாக அவரிடம் கருத்துக்களை கேட்டபோதே இதனைத் தெரிவித்தார். இத் தேர்தலில் இ. தொ. கா. வின் ஆதரவுடன் அரசாங்கம் அமோக வெற்றி பெறும் என்று தெரிவித்த அவர், தொடர்ந்து கூறியதாவது:-தேர்தலின் பின்னர் அரசியலமைப்பில் அரசாங்கம் மாற்றம் கொண்டு வரும் பட்சத்தில் எமது உறுப்பினர்களின் எண்ணிக்கையை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

நாமும் எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்பட்டிருந்தால் 3179 ஆசிரியர்களும் 500 தபாற்காரர்களும் நியமனம் பெற்றிருக்க மாட்டார்கள். மாறாக இவர்கள் தொழில் தேடி வெளி மாவட்டங்களுக்கு அலைய வேண்டி ஏற்பட்டிருக்கும்.

லைன்’ வரிசை வீட்டு முறையை ஒழிக்கும் திட்டம்: 7 பேர்ச் காணியில் தனி வீடுகள் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை

sri-lankas.jpgமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் ‘லைன்’ வரிசை வீட்டு முறையை இல்லாதொழித்து ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 7 பேர்ச் காணியில் சகல வசதிகளையும் கொண்ட தனி வீடுகளை அமைத்துக் கொடுக்க தேச நிர்மாண, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

தேசிய அபிவிருத்தியில் மலையகத் தோட்டப் புறங்கள் உள்வாங்கப்பட்டதன் பின்னர் முதலில் வீடமைப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட் டிருப்பதாகவும் அவ்வாறு கடந்த நான்கு ஆண்டுகளில் 12,231 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் தேச நிர்மாண அமைச்சின் தோட்ட உட்கட்டமைப்பு விடயங்களுக்கான மேலதிகச் செய லாளர் திருமதி சந்திரா விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு 900 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், மலையகத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் முன்னெடுப்பதாகவும் ஆனால், ஊடகங்களில் பெரிதாகத் தகவல்கள் வெளிவருவதில்லை எனத் தெரிவித்தார்.

குடிநீர், சுகாதாரம், மலசல கூட வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வளங்களைப் பெற்றுக் கொடுத்து வருவதாகக் கூறிய திருமதி விக்கிரமசிங்க, நீண்ட காலமாக எந்தத் திட்டமும் இல்லாதிருந்த நிலை இனியும் நீடிக்க அரசாங்கம் இடமளிக்காது என்றுக் கூறினார். தோட்ட வீதிகளைச் செப்பனிடு வதற்கென 828 மில்லியன் செலவி டப்பட்டுள்ளது. 139 மில்லியன் செலவில் 700 கிலோ மீற்றர் வீதிகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

87 நீர்விநியோகத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு 235 கோயில்களை அபிவிருத்தி செய்ய வும் நிதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தேச நிர்மாண அமைச்சின் மூலம் மலையகத்தில் 4614 செயற்றி ட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்ட தேர்தல் களத்தில்…

parliament.jpgநுவரெலியா மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக தேசியத் தொழிலாளர் சங்கம், தொழிலாளர் விடுதலை முன்னணி ஆகிய தொழிற்சங்க அரசியல் கட்சிகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து 5 சிறுபான்மையினரும் 5 பெரும்பான்மையினரும் போட்டியிடுகின்றனர்.

தொழிலாளர் தேசிய சங்கம் , தொழிலாளர் ஐக்கிய முன்னணி, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகிய தொழிற்சங்க அரசியல் கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து 5 சிறுபான்மையினரும் 5 பெரும்பான்மையினரும் போட்டியிடுகின்றனர்.

7 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் இம்மாவட்டத்தில் கடந்த 6 ஆவது பொதுத் தேர்தலில் 4 சிறுபான்மையினரும் 3 பெரும்பான்மையினரும் தெரிவானார்கள். கடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் ஆறுமுகன் தொண்டமானும் சீ.பீ.இரட்ணாயக்க மாத்திரம் மீண்டும் இம்முறை தேர்தலில் இம்மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகளாக அதன் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நுவரெலியா ரோட்டரிக் கழகத் தலைவரும் சட்டத்தரணியுமான பி.இராஜதுரை , தொழிலாளர் விடுதலை முன்னணிப் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.அருள்சாமி , மலையகத் தேசியத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் முன்னாள் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சருமான வீ.புத்திரசிகாமணி ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடுகின்றனர். இவர்களுடன் முன்னாள் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் சீ.பீ.இரட்ணாயக்க, முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்புப் பிரதியமைச்சர் நவீன் திஸாநாயக்க, மத்திய மாகாணசபை உறுப்பினர்களான நிமால் பியதிஸ்ஸ , குமார் திஸநாயக்க மற்றும் ஜே.எம்.சி.குணசேகர ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.திகாம்பரம், இச்சங்கத்தின் பிரதித் தலைவரும் மாகாணசபை உறுப்பினருமான உதயகுமார், தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் தலவாக்கலை லிந்துலை நகர சபை உபதலைவர் எல்.பாரதிதாசன் , இ.தொ.கா. முன்னாள் அமைப்பாளர் ஆர்.யோகராஜன் ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர். இவர்களுடன் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த நுவரெலியா மாநகர முதல்வரும் ஐக்கிய தேசியக்கட்சி நுவரெலியா அமைப்பாளருமான சந்தனலால் கருணாரட்ன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய மத்திய மாகாணசபை உறுப்பினருமான கே.கே.பியதாஸ , முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் ஜி.எம்.எம்.பியசிறி, முன்னாள் நுவரெலியா மாநகர முதல்வரும் ஐக்கிய தேசியக் கட்சி வலப்பனை அமைப்பாளருமான சட்டத்தரணி திருமதி நளின் திலக ஹேரத் மற்றும் முத்துபண்டா ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

மலையக மக்கள் முன்னணி அதன் தலைவி திருமதி சாந்தனிதேவி சந்திரசேகரன் தலைமையில் தனித்து மண்வெட்டி சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

இ.தொ.கா சார்பில் 9 வேட்பாளர்கள்

பொதுத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் ஒன்பது வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளதாக காங்கிரஸின் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் காங்கிரஸ் போட்டியிடவுள்ள நிலையில் ஒன்பது இடங்கள் தமக்காக ஒதுக்கப்பட்டிருப்பதாக பிரதியமைச்சர் கூறினார். இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதியமைச்சர்கள் முத்து சிவலிங்கம், எஸ். ஜெகதீஸ்வரன் ஆகியோர் போட்டி யிடுகின்றனர்.

இதன்படி காங்கிரஸ¤க்கு நுவரெலியா மாவட்டத்தில் மூன்று இடங்களும் பதுளையில் இரண்டு இடங்களும் மாத்தளை, இரத்தினபுரி, கண்டி, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் தலா ஓர் இடமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் சிவலிங்கம் கூறினார்.

ஐ.ம.சு முவுடன் இணைந்து போட்டியிட இ.தொ.கா முடிவு

பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. மலையக மக்களின் எதிர்கால நலன்கருதியும் அபிவிருத்தியைக் கருத்திற் கொண்டும் அரச தரப்புடன் இணைந்து போட்டியிடுவதெனத் தீர்மானித்துள்ளதாக காங்கிரஸின் தலைவரும் தேச நிர்மாண, தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் இருந்தபோதிலும், மக்களின் எதிர்கால நன்மை கருதி அரசாங்கத்துடன் இணைந்து களமிறங்குவதாகப் பிரதி அமைச்சர் கூறினார். இந்தத் தேர்தலில் பழையவர்களுடன் பல புதிய முகங்களும் அறிமுகமாகவுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்பே போட்டியிடுவது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் எஸ். விஜேகுமாரன் தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கட்சி முக்கியஸ்தர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருவதால் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக விஜேகுமாரன் குறிப்பிட்டார். மேலும், மலையகத்தில் கட்சி தாவியவர்கள் போட்டியிட்டு வெல்வதா, தேசியப் பட்டியலில் இடம் கோருவதா என்பதைச் சிந்தித்து வருவதாகத் தெரியவருகிறது.

கொழும்பு – பதுளை ரயில் சேவை நானுஓயா வரையே : ஒஹிய – ஹிதல்கஸ் ஹின்னவுக்கு இடையில் சுரங்கப்பாதையில் மண் சரிவு

up-country-sri.jpgகொழும்பு-  பதுளை ரயில் பாதையில் ஒஹியவுக்கும் ஹிதல்கஸ்ஹின்னவுக்கு மிடையிலுள்ள சுரங்கப் பாதை நேற்று முன்தினமிரவு ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட இணைப்பாளர் எச். எம். என். பி. பண்டார நேற்றுத் தெரிவித்தார்.

இதனால் கொழும்புக்கும் பதுளைக்குமிடையிலான ரயில் சேவை நானுஓயா வரையே இடம்பெறுவதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட இணைப்பாளர் மேலும் கூறுகையில், பதுளை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் மழை காரணமாகவே இம்மண்சரிவு நேற்று முன்தினமிரவு ஏற்பட்டுள்ளது என்றார்.

இதனால் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று முன்தினம் புறப்பட்ட தபால் ரயில் அப்புத்தளை ரயில் நிலையத்தில் தரித்து நிற்கிறது. கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் நானுஓயாவில் நிறுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரியொருவர் கூறினார். கொழும்பு- பதுளை ரயில் போக்குவரத்து சேவையை மீண்டும் வழமை நிலைக்குக் கொண்டுவர சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

மலையகப் பெருந்தோட்டங்களில் முகவர் தபால் நிலையங்கள் உப தபாலகங்களாக மாற்றம்

மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் முகவர் தபால் நிலையங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களை அர சாங்கத்தின் உப தபாலகங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைகளுக்கமைய, இது தொடர்பில் விசேட குழுவொன்று ஆராய்ந்து வருவதாகத் தபால், தொலைத் தொடர்புகள் பிரதியமைச்சர் எம். எஸ். செல்லச்சாமி தெரிவித்தார். மலையகத் தோட்டங்களில் முகவர் தபால் நிலையங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 126 கட்டடங்கள் பல வருடங்களாகத் திறக்கப்படாமல் உள்ளன. எனவே, இவற்றை உப தபாலகங்களாக மாற்றியமைத்துத் திறந்து வைப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவதாகப் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே மலையகத் தோட்டப்புறங்களில் 150 வருடகாலத்திற்குப் பின்னர் நேரடித் தபால் விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறிய பிரதி அமைச்சர் செல்லச்சாமி, தபால் துறையில் புதிய பரிமாணம் தோற்றுவிக் கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் மலையகப் பெருந்தோட்டங்களில் மேலும் 100 தபால் ஊழியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதியமைச்சர் கூறினார்.

தபால் ஊழியர்களாக 500 பேருக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுத்தபோது 400 பேர் மாத்திரமே கடமைகளைப் பொறுப்பேற்றனர். சில தோட்டங்கள் விடுபட்டதால், 100 பேருக்கு நியமனம் கிடைக்கப்பெறவில்லை. இவர்களுக்குத் தேர்தலுக்குப் பின்னர் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும், மலையகத்திலுள்ள அனைத்துத் தபாலகங்களையும் சகல வளங்களையும் கொண்டதாக அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கைகள் முன்னெடு க்கப்பட்டு வருவதாகவும் பிரதியமைச்சர் கூறினார்.

ஆசிரிய நியமனத்தில் முறைகேடு: 4 கல்விப் பணிப்பாளர்கள் சப்ரகமுவயில் பணி நீக்கம்

மலையக ஆசிரிய நியமனத்தின் போது சப்ரகமுவ மாகாணத்தில் முறைகேடுகளில் சம்பந்தப்பட்ட தாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு கல்விப் பணிப்பாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சப்ரகமுவ மாகாணத்தின் மேலதிகக் கல்விப் பணிப்பாளர் ஒரு மாதத்திற்கு முன்பு பணிநீக்கம் செய்யப்பட்டதுடன் ஒரு பிரதிப் பணிப்பாளரும், இரண்டு வலய உதவிப் பணிப்பாளர்களும் சில தினங்களுக்கு முன்னர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாகாண கல்வித் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

நல்லமலை ஸ்பிரிங்வெலி தோட்டத்தில் பாரிய மண்சரிவு; 150 பேர் இடம்பெயர்வு

பதுளை நமுனுகுல பிரதேசத்திலுள்ள நல்ல மலை கிராம சேவகர் பிரிவிலிருக்கும் ஸ்பிரிங்வெலி தோட்டத்தில் நேற்று முன்தினம் மாலை பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இம்மண்சரிவு காரணமாக 35 தோட்டக் குடியிருப்புக்களில் வசித்து வந்த 150 பேர் இடம்பெயர்ந்து நல்லமலை வித்தியாலயத்தில் தங்கி இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட இணைப்பாளர் நிமல் பியசிறி பண்டார நேற்றுத் தெரிவித்தார். கடந்த சில தினங்களாக இப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாகவே இம்மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. என்றாலும் இரண்டு தோட்டக் குடி யிருப்புக்கள் முழுமையாக சேதமடைந்தி ருப்பதாகவும், ஏனையவற்றில் வெடிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இம்மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உடனடி நிவாரணத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார். சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்டுள்ள இம்மண்சரிவு சுமார் அரை கிலோமீட்டர் தூரம் வரை இடம்பெற் றுள்ளது என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதிக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க இ.தொ.கா. முடிவு

mu-siva.jpgஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க இ.தொ.கா. முடிவு செய்துள்ளதென அதன் தலைவர் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் நேற்றுத் தெரிவித்தார். இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்தே இ. தொ. கா. தலைவரும் பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் இ. தொ. கா.வின் நிலைப்பாட்டை தெரிவிப்பதற்காகவே இவ் ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றது.  அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு பல அபிவிருத்தித் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் இ. தொ. காங்கிரஸின் நிலைப்பாட்டை பற்றி பல விதமான ஊகங்களை பலர் தெரிவித்து வந்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியிலேயே பெருந்தோட்டப் பகுதி வைத்தியசாலைகள் அரச வைத்திய சாலைகளாக மாற்றம்பெற்றன.

3179 பேருக்கு ஆசிரியர் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. 500 பேருக்கு தொடர்பாடல் உத்தியோகமும் 300 பேருக்கு தபால் துறையில் வேலை வாய்ப்பும் பெருந்தோட்ட இளைஞர், யுவதிகளுக்கு இந்த அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. மற்றும் கல்வித் துறையிலும் பாரிய வெற்றியை பெற உதவியுள்ளது. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் பத்து வருட வேலைத்திட்டம் ஒன்றை பெருந்தோட்டப் பகுதியில் அமுல்படுத்த உள்ளோம். இதற்கு வெளிநாட்டு நிதி உதவி பயன்படுத்தப்படும். இதற்கான தனது முழு ஆதரவையும் ஜனாதிபதி வழங்கி, அனுமதி வழங்கி உள்ளார்.

200 வருட பின்புல சரித்திரத்தைக் கொண்ட பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றம் நிகழ வேண்டும் என்பதில் இ. தொ கா. பெரும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. இன்று இந்த அரசாங்கத்தில் இணைந்தமையின் பயனாகவே லயன்முறை அழிக்கப்பட்டு தனி வீடுகள் பெருந்தோட்டத்தில் நிருமாணிக்கப்பட்டு வருகின்றன.

பாதைகள் திருத்தப்பட்டு காபட் போடப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் பல திட்டங்களை எதிர்காலத்தில் ஜனாதிபதி மலையக பகுதியில் செயல்படுத்த உள்ளார். எமது மக்களின் தொழில் வாய்ப்பு, கல்வி, சுகாதாரம், வீடமைப்பு திட்டம் என அவர்களின் எதிர்காலத்தை முன்னேற்றம் பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மலையகத்தில் பெரும் வாக்குகளால் வெற்றிபெற அனைவரும் கடுமையாக உழைப்போம் என்றார்.