பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. மலையக மக்களின் எதிர்கால நலன்கருதியும் அபிவிருத்தியைக் கருத்திற் கொண்டும் அரச தரப்புடன் இணைந்து போட்டியிடுவதெனத் தீர்மானித்துள்ளதாக காங்கிரஸின் தலைவரும் தேச நிர்மாண, தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.
பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் இருந்தபோதிலும், மக்களின் எதிர்கால நன்மை கருதி அரசாங்கத்துடன் இணைந்து களமிறங்குவதாகப் பிரதி அமைச்சர் கூறினார். இந்தத் தேர்தலில் பழையவர்களுடன் பல புதிய முகங்களும் அறிமுகமாகவுள்ளதாக அவர் கூறினார்.
இதேவேளை, தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்பே போட்டியிடுவது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் எஸ். விஜேகுமாரன் தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கட்சி முக்கியஸ்தர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருவதால் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக விஜேகுமாரன் குறிப்பிட்டார். மேலும், மலையகத்தில் கட்சி தாவியவர்கள் போட்டியிட்டு வெல்வதா, தேசியப் பட்டியலில் இடம் கோருவதா என்பதைச் சிந்தித்து வருவதாகத் தெரியவருகிறது.