நுவரெலியா மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக தேசியத் தொழிலாளர் சங்கம், தொழிலாளர் விடுதலை முன்னணி ஆகிய தொழிற்சங்க அரசியல் கட்சிகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து 5 சிறுபான்மையினரும் 5 பெரும்பான்மையினரும் போட்டியிடுகின்றனர்.
தொழிலாளர் தேசிய சங்கம் , தொழிலாளர் ஐக்கிய முன்னணி, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகிய தொழிற்சங்க அரசியல் கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து 5 சிறுபான்மையினரும் 5 பெரும்பான்மையினரும் போட்டியிடுகின்றனர்.
7 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் இம்மாவட்டத்தில் கடந்த 6 ஆவது பொதுத் தேர்தலில் 4 சிறுபான்மையினரும் 3 பெரும்பான்மையினரும் தெரிவானார்கள். கடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் ஆறுமுகன் தொண்டமானும் சீ.பீ.இரட்ணாயக்க மாத்திரம் மீண்டும் இம்முறை தேர்தலில் இம்மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகளாக அதன் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நுவரெலியா ரோட்டரிக் கழகத் தலைவரும் சட்டத்தரணியுமான பி.இராஜதுரை , தொழிலாளர் விடுதலை முன்னணிப் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.அருள்சாமி , மலையகத் தேசியத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் முன்னாள் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சருமான வீ.புத்திரசிகாமணி ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடுகின்றனர். இவர்களுடன் முன்னாள் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் சீ.பீ.இரட்ணாயக்க, முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்புப் பிரதியமைச்சர் நவீன் திஸாநாயக்க, மத்திய மாகாணசபை உறுப்பினர்களான நிமால் பியதிஸ்ஸ , குமார் திஸநாயக்க மற்றும் ஜே.எம்.சி.குணசேகர ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.திகாம்பரம், இச்சங்கத்தின் பிரதித் தலைவரும் மாகாணசபை உறுப்பினருமான உதயகுமார், தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் தலவாக்கலை லிந்துலை நகர சபை உபதலைவர் எல்.பாரதிதாசன் , இ.தொ.கா. முன்னாள் அமைப்பாளர் ஆர்.யோகராஜன் ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர். இவர்களுடன் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த நுவரெலியா மாநகர முதல்வரும் ஐக்கிய தேசியக்கட்சி நுவரெலியா அமைப்பாளருமான சந்தனலால் கருணாரட்ன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய மத்திய மாகாணசபை உறுப்பினருமான கே.கே.பியதாஸ , முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் ஜி.எம்.எம்.பியசிறி, முன்னாள் நுவரெலியா மாநகர முதல்வரும் ஐக்கிய தேசியக் கட்சி வலப்பனை அமைப்பாளருமான சட்டத்தரணி திருமதி நளின் திலக ஹேரத் மற்றும் முத்துபண்டா ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
மலையக மக்கள் முன்னணி அதன் தலைவி திருமதி சாந்தனிதேவி சந்திரசேகரன் தலைமையில் தனித்து மண்வெட்டி சின்னத்தில் போட்டியிடவுள்ளது.