மிகக் கொடிய மனித அவலத்தில் இருந்து மீண்டு தொடர்ந்தும் துயர்மிகு வாழ்வை எதிர்நோக்கியுள்ள வன்னி மக்களுக்கு முடிந்த அளவு உதவிகளை மேற்கொள்வதற்கான சந்திப்பு ஒன்றினை தேசம்நெற்றும் ஈழ நண்பர்கள் திரைக்கலை அமைப்பும் ஏற்பாடு செய்துள்ளனர். இச்சந்திப்பில் முக்கிய அம்சமாக வன்னியில் ஏற்பட்ட மனித அவலத்தில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான உதவித் திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட உள்ளது. ஏற்கனவே ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியமும் தேசம்நெற்றும் தனித்தனியாக முன்னெடுக்க முற்பட்ட உதவி நடவடிக்கைகளை இணைந்து மேற்கொள்ளவும் எவ்வாறு உதவி நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் கலந்துரையாடப்பட உள்ளது.
கடந்த ஆண்டு முதல் ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியமும் தேசம்நெற்றும் இணைந்து நடாத்தும் குறும்படக் காட்சிப்படுத்தலின் 5வது காட்சிப்படுத்தலைத் தொடர்ந்து இச்சந்திப்பு சறேயில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கலந்துரையாடலில் முக்கியமாக உடனடி மற்றும் நீண்டகால உதவி நடவடிக்கைகள், உதவ முன்வருபவர்களை நேரடியாக உதவித் திட்டங்களில் இணைப்பது, அனைத்து உதவி நடவடிக்கைகளிலும் வெளிப்படையான தன்மையைக் கொண்டிருப்பது இதன் மூலம் நம்பகத் தன்மையை ஏற்படுத்துவது என்பன பற்றியும் ஆராயப்பட உள்ளது. குறிப்பாக அப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் இச்சந்திப்பில் கலந்துகொள்வதால் காத்திரமான உதவித் திட்டங்களை செயற்படுத்த முடியும்.
மே 2 குறும்படக் காட்சி நிகழ்வில் சந்திரியின் கதை மெமறிஸ் ஒப் பாஸ்ற் ஆகிய இரு குறும்படங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. ஜானகி விஸ்வநாதனின் சந்திரியின் கதை சாதிய ரீதியான சமூக ஒடுக்குமுறையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட குறும்படம். மெமறிஸ் ஒப் பாஸ்ற் தேம்ஸ்வலி பல்கழைக்கழக மாணவர்களின் தயாரிப்பு. இவற்றுடன் ஏற்கனவே காட்சிப்படுத்தப்பட்ட துறூத வின்டோ – யன்னலினூடாக என்ற ஆர் புதியவனின் குறும்படமும் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
சந்திப்பு விபரங்கள்:
6.30 pm on 2nd of May 2009.
The Corner house
116 Douglas Road
Surbiton