அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இலங்கையின் அபிவிருத்திக்கு ஜப்பான் தொடர்ந்தும் ஒத்துழைப்பு

acasi.jpgயுத்தத் திற்குப் பின்னரான நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஜப்பானிய அரசாங்கம் தொடர்ச்சியாக ஒத்துழைப்புகளை வழங்குமென்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாஷி தெரிவித்தார்.

இதற்கமைய இந்த வருடத்தில் மொத்தமாக 39 பில்லியன் யென்களை நிதியாக வழங்குவதாக அவர் குறிப்பிட்டார். அரசாங்கத்துடன் முழு அளவில் ஆலோசனைகளை நடத்தியே இந்த நிதியை வழங்குவதாகவும், தனிப்பட்ட குழுவுக்கோ, சமூகத்துக்கோ அன்றி நாட்டின் தேசிய நலனையும் தேவைகளையும் கருத்திற்கொண்டே உதவுவதாகவும் அகாஷி கூறினார்.

வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு மாத்திரமன்றி தென்பகுதி தேவைகளைப் பூர்த்தி செய்யவும் ஜப்பான் ஒத்துழைக்குமென்றும் ஜப்பானிய விசேட தூதுவர் குறிப்பிட்டார். ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள யசூசி அகாஷி நேற்றுக் காலை (16) வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் வெளிவிவகார அமைச்சில் அவருடன் கூட்டாக செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டார்.

சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கை நீண்டதூரம் பயணித் துள்ளதாகக் கூறிய அகாஷி, நல்லிணக்கக் குழு அமைத்துள்ள மையை வரவேற்பதாகக் கூறினார். தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத் துவதற்கான செயற்பாடுகளுக்கு ஐக் கிய நாடுகள் சபையின் பங்களிப் பினைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக வெளிவிகார அமைச்சர் பீரிஸ¤டன் கலந்துரையாடியதாகவும் அகாஷி குறிப்பிட்டார்.

சுகாதாரம், கல்வி, உட்கட்ட மைப்பு துறைகளை மேம்படுத்தி ஜப்பானிய அரசு தொடர்ச்சியாக ஒத்துழைப்புகளை நல்குமென்று தெரி வித்த அவர், சந்திப்புகள், விஜயங் களை முடித்துக்கொண்டு எதிர்வரும் 20ஆம் திகதி இறுதி செய்தியாளர் மாநாட்டை நடத்தி மேலதிக விபரங்களை வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.

20ஆவது தடவையாக இலங்கைக்கு வந்துள்ள யசூஷி அகாஷியுடன் ஜப்பானிய தூதுக் குழுவினரும் வருகை தந்துள்ளனர்.
 

இடம்பெயர்ந்த 585 பேர் இன்று ஒட்டு சுட்டானில் மீள்குடியேற்றம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மூன்று கிராமசேவகர் பிரிவுகளில் இன்று (17) 178 குடும்பங்களைச் சேர்ந்த 585 பேர் மீள்குடியேற்றப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் கூறியது.

மாங்குளம் ஏ-9 வீதிக்கு மேற்கே இன்றுபுரம் மற்றும் திருமுருகண்டி ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலேயே இவர்கள் மீள்குடியேற்றப்படுவதாக மாவட்ட திட்டப் பணிப்பாளர் எஸ். ஸ்ரீரங்கன் கூறினார். இவர்கள் மெனிக்பாம் நிவாரணக் கிராமங்களில் இருந்து விசேட பஸ்கள் மூலம் அழைத்து வரப்பட உள்ளனர். இதேவேளை இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டவாளி பிரதேச செயலகப் பிரிவில் 35 பேர் மீள்குடியேற்றப்பட உள்ளனர்.

இதேவேளை அடுத்தவாரம் சுமார் 3500 பேர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங் களில் மீள்குடியேற்றப்பட உள்ளனர். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிலுள்ள பனிச்சன்குளம் மற்றும் அம்பகாமம் கிராமசேவகர் பிரிவுகளில் எதிர் வரும் 21ஆம் திகதி 175 குடும்பங்களைச் சேர்ந்த 550 பேர் மீள்குடியேற்றப்பட உள்ளதாக முல்லைத்தீவு திட்டப்பணிப்பாளர் ஸ்ரீரங்கன் கூறினார்.

இது தவிர எதிர்வரும் 21ஆம், 22ஆம் திகதிகளில் கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 16 கிராமசேவகர் பிரிவுகளிலும் மீள்குடியேற்றப் பணிகள் இடம் பெற உள்ளதாக கிளிநொச்சி அரச அதிபர் கேதீஸ்வரன் ரூபாவதி கூறினார்.

உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ள சுமார் 500 குடும்பங்களைச் சேர்ந்த 1500 பேர் இங்கு மீள் குடியேற்றப்பட உள்ளனர்.

இது தவிர கரச்சி கிழக்கு, வட்டக்கச்சி, மாவடியம்மன், ராம நாதபுரம் உட்பட 6 கிராம சேவகர் பிரிவுகளில் எதிர்வரும் 22 ஆம் திகதி சுமார் 1500 பேர் மீள்குடியேற்றப்பட உள்ளதாகவும் அரச அதிபர் கூறினார். இவர்கள் மெனிக்பாம் நலன்புரி முகாம்களில் இருந்து விசேட பஸ்கள் மூலம் அழைத்து வரப்பட உள்ளனர்.

வெளிநாட்டு பிரமுகர் வருகை: அரசின் திட்டங்களை நேரில் பார்வையிட சந்தர்ப்பம்

kahiliya.jpgவெளி நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் இலங்கைக்கு வருகை தருவதன் மூலம் அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களை நேரில் காண்பதற்கு ஒரு சந்தர்ப்பமாக அமையும் என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை தொடர்பில் உலக நாடுகளில் பல்வேறு விதமான மாற்று கருத்துக்களும் கூறப்படுகின்றன. அது தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்தி வருகின்றது.  இந்நிலையில் நாங்கள் கூறும் விடயங்கள் தொடர்பான உண்மை நிலைமைகளை காண முடியும். தமிழக எம்.பிக்கள் குழுவை சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை வரும் படியும், வடக்குக்குச் சென்று அங்கு அரசினால் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை பார்வையிடும்படியும் கேட்டுக் கொள்ளப் பட்டதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக் வெல்ல சுட்டிக்காட்டினார்.

நோர்வே இலங்கைத் தூதரக அலுவலர்களும் புலிகள் ஆதரவாளர்களும் மோதிக் கொண்டனர்

நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரக அலுவலரும் புலிகளின் ஆதரவாளர்கள் சிலரும் யூன் 10 அன்று மோதிக்கொண்டதாக நேர்வேயில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மோதலை தனிநபர்களுக்கு இடையேயான மோதலாக நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம் அங்குள்ள இணைய ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்து உள்ளது.

இலங்கைத் தூதரக அலுவலர்கள் இருவர் புலிகளின் ஆதரவாளர் ஒருவரின் உணவகத்திற்குச் சென்று மது அருந்திக் கொண்டிருக்கையில் அங்கு வந்து இன்னும் சில புலி ஆதரவாளர்கள் தூதரக அலுவர்களைத் தாக்கி உள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக நோர்வே பொலிசார் உணவக உரிமையாளரை விசாரித்துள்ளனர். ஆயினும் யாரும் கைது செய்யப்படவில்லை.

இத்தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களே 2009 நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகத்தையும் தாக்கியதாக மற்றுமொரு செய்தி தெரிவிக்கின்றது. இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

இருபது வருடங்களின் பின்னர் முல்லை. அபிவிருத்தி குழுக் கூட்டம் மாவட்ட துரித அபிவிருத்திக்கு 6 குழுக்கள் நியமனம்

cha.jpgமுல்லைத் தீவு மாவட்டத்தில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு தலா ஐவர் அடங்கிய ஆறு முக்கிய குழுக்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளன.
 
இதேவேளை, செப்டெம்பர் மாதத்தில் முன்னெடுக்கவுள்ள அடுத்த போகத்தின்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் பயிர் செய்கைகளை மேற்கொள்ளவும், 9620 ஏக்கர் நிலப்பரப்பில் உப உணவு பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக் குழு கூட்டம் வன்னி மாவட்ட எம்.பி.யும், கைத்தொழில் வாணிபத் துறை அமைச்சருமான ரிஷாத் பதியுத்தீன், வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி ஆகியோரின் கூட்டுத் தலைமையில் நேற்றுக் காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

சுமார் 20 வருடங்களுக்கு பிறகு முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுக்கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றதாக தெரிவித்த அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன், பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

நேற்று நடைபெற்ற இந்த முதலாவது அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், ஹுனைஸ் பாரூக் எம்.பி., வட மாகாண பிரதம செயலாளர், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், இராணுவ உயர் அதிகாரிகள் உட்பட அரசாங்க அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி இந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக மேலும் தகவல் தருகையில், திட்டமிடல், வீடமைப்பு, மீன்பிடி, உள்ளூராட்சி, நீர், மின்சாரம், உட்கட்டமைப்பு, வீதி அபிவிருத்தி மற்றும் விவசாயம் ஆகிய துறைகள் உள்ளடங்கலாகவே ஆறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இது தவிர, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, பனை அபிவிருத்தி மற்றும் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் பிரதேச செயலாளர்கள் உள்ளடங்கியதாக மாவட்ட திட்டமிடல் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

துரிதமாக மீளப்பெறல் திட்டம், நீண்டகால அவிவிருத்தி திட்டம், வருடாந்த அபிவிருத்தி திட்டம் தொடர்பாக ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகளை இந்தக் குழு சமர்ப்பிக்கவுள்ளது என்று குறிப்பிட்டார்.

விவசாய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது 5000 ஏக்கர் காணியில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள என்றார்.

விவசாய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2 ஏக்கர் நிலப்பரப்பை அபிவிருத்தி செய்ய தலா பத்தாயிரம் ரூபா வீதம் அரசாங்கம் வழங்க தீர்மானித்துள்ளதுடன், தலா ஒரு ஏக்கர் நிலப்பரப்பிற்கு உலக உணவுத் திட்டத்தின் கீழ் மூன்று புசல் நெல்கதிர் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இந்த மாவட்டத்திலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு 35 ஆயிரம் கோழிக் குஞ்சுகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார். இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டு வரும் மக்களின் நலனை கருத்திற்கொண்டு 3277 வீடுகள் அரசாங்கத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் 2100 வீடுகள் மீள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்தார்.

முல்லை மாவட்டத்திலுள்ள அதிகமான பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் 60 வீதமான மாணவர்களின் வருகையும், 80 வீதமான ஆசிரியர்களின் வருகையும் காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதேவேளை வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று மாலை இடம்பெற்றது.

பராக் ஒபாமாவின் விசேட தூதுவர் ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் சந்திப்பு

samantha_mahinda.jpgஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் விசேட தூதுவர் சமந்தா பவர் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது போருக்குப் பின்னரான இலங்கையின் நிலைவரம் குறித்து கலந்துரையாடியதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒபாமாவின் விசேட ஆலோசகரான சமந்தாபவர், அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபையின் பல்தரப்பு விவகாரங்கள் மற்றும் மனித உரிமைகளுக்கான சிரேஷ்ட பணிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். ஜனாதிபதி ராஜபக்ஷவுடனான பவரின் சந்திப்பின்போது அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபையின் போர்க் குற்ற விவகாரங்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புத் தொடர்பான விடயங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் டேவிட் பிரஸ்மன், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா பட்டனீஸ்,வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பரஸ்பர நலன்கள் தொடர்பான பேச்சுவார்த்தையை இருதரப்பும் நடத்தியதாகவும் சந்திப்பு சுமுகமாகவும் நட்புறவுடனும் இடம்பெற்றதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இனப்படுகொலை மற்றும் மனித உரிமை துஷ்பிரயோகங்கள் தொடர்பாக குறிப்பாக டார்பர் மோதல் தொடர்பாக விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான முயற்சிகளை சிறப்பாக மேற்கொண்டவர் என்ற வகையில் சமந்தா பவர் நன்கறியப்பட்டவராகும்.

பொன்சேகாவை பகிரங்கமாக சுட்டுக் கொல்ல வேண்டும் – மேர்வின் சில்வா

தேசத் துரோகியான சரத் பொன்சேகாவை பகிரங்கமாக சுட்டுக் கொல்ல வேண்டுமெனத் தெரிவித்துள்ள நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா, சிங்கள மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் ராஜத் துரோகிகளுக்கு இவ்வாறுதான் தண்டனை வழங்கப்பட்டதாகவும் கூறினார்.

மாத்தளை மாவட்ட அபிவிருத்தி ஒன்றிணைப்புக் குழுக்களின் கூட்டம் புதிய தலைவரும் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் வசந்த பெரேரா தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றபோது அங்கு திடீரென வருகை தந்து உரையாற்றுகையிலேயே மேர்வின் சில்வா இவ்வாறு தெரிவித்தார். அவர் இங்கு பேசுகையில் மேலும் கூறியதாவது;

பிரபாகரனை எவ்வாறாயினும் கொன்றொழிக்க வேண்டும் என முதலில் கூறியவன் நான். அதேபோல் சரத் பொன்சேகாவின் பிரசாரக் கூட்டம் களனியில் நடைபெற்றபோது கூக்குரல் இட்டவனும் நானே.தேசத் துரோகியான சரத் பொன்சேகாவை பகிரங்கமாக சுட்டுக் கொல்ல வேண்டும்.

பிரித்தானிய அரசாங்கம் இலங்கை இராணுவம் தொடர்பாக விவாதம் ஒன்று நடத்த வேண்டுமென்று கோரியுள்ளது. இதற்குக் காரணகர்த்தா யார்? சரத் பொன்சேகாதான். நாட்டில் ஜனநாயகம் இருக்க வேண்டும். எமது நாட்டிலிருப்பது ஐந்து நட்சத்திர ஜனநாயகம். சரத் பொன்சேகாவை சுட்டுக் கொல்ல வேண்டும். இல்லாவிட்டால் அலவாங்கில் ஏற்றிக் கொல்ல வேண்டும் என்று பகிரங்கமாகவே கூறுகிறேன்.

ராஜத் துரோகிகளுக்கு அளிக்கப்பட வேண்டிய தண்டனைதான் இது.சிங்கள மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இவ்வாறுதான் மரணதண்டனைகள் வழங்கப்பட்டன.

காலை வாரிவிடுவது, சதிநாசம் செய்வது, நாட்டைக் காட்டிக் கொடுப்பது என்பது மிகவும் மோசமான துரோகமாகும். இத்தகையோருக்கும் உரிய தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாட்டை வெற்றிகரமாக அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல முடியும்.

நமது நாட்டை ஆட்சி செய்த வலகம்பா அரசன் உட்பட மகா பராக்கிரம பாகு அரசர்கள் உள்ளிட்ட பல சிங்கள அரசர்கள் இவ்வாறு உரிய தண்டனைகள் விதித்துத்தான் நட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் சென்றமையை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பொதுநலவாய பாராளுமன்ற கூட்டத் தொடர்: சரத் பொன்சேகா பங்குபற்ற சட்டரீதியான அங்கீகாரம் வேண்டும்

sa-pon.jpgகென்யாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய பாராளுமன்ற அமைப்பின் கூட்டத் தொடரில் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா பங்குபற்றுவதாயின் சட்ட ரீதியான அங்கீகாரத்தை பெறவேண்டும் என்று தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளர், தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக்காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்:- பொதுநலவாய பாராளுமன்ற அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சரத் பொன்சேகா எம்.பியின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அது அவருக்குரிய வரப்பிரசாதமாகும்.

எனினும், பொன்சேகா பல்வேறு குற்றச்சாட்டு தொடர்பில் பிணையில் செல்ல அனுமதிக்கப்படாது, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபராவார். அந்த அடிப்படையில் அவர் நீதிமன்ற அங்கீகாரம் பெற்றே செல்ல முடியும் என்றார்.

பாராளுமன்ற வரப்பிரசாதத்திற்கு அமைய அங்கீகாரம் அவருக்கு வழங்கப்பட்டாலும் நாட்டின் சட்ட விதிமுறைகளை ஒருபோதும் மீற முடியாது. அவ்வாறு செல்ல தேவையாயின் சட்ட விதிமுறைகளை பயன்படுத்த வேண்டும். அதற்கான சுதந்திரம் அவருக்கு உண்டு என்றும் தெரிவித்தார்.

போர்க்குற்றம் புரிந்தமைக்கான ஆதாரம் இருந்தால் சமர்ப்பியுங்கள்: கோத்தபாய சவால்!

உள்நாட்டு யுத்தத்தின் இறுதி மாதங்களின்போது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் போர்க் குற்றங்களுக்கான ஆதாரத்தை சமர்ப்பிக்குமாறு பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ சர்வதேச உரிமைகள் குழுக்களுக்கு சவால் விடுத்திருக்கிறார்.

இந்த விடயங்கள் தொடர்பாக சர்வதேச ஊடகங்களுடன் கதைப்பதற்குப் பதிலாகக் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரத்தை இலங்கை நீதிமன்றங்களில் சமர்ப்பிக்க வேண்டுமென கோதாபய ராஜபக்ஷ தெரிவித்ததாக ஏ.எவ்.பி. செய்திச்சேவை நேற்று செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டுள்ளது.

ஆதாரம் இருந்தால் இலங்கையின் நீதி முறைமையின் கவனத்திற்கு அதனைக் கொண்டுவர முடியும். வழக்கறிஞர்களூடாகச் செல்ல முடியும். அத்துடன்,பொலிஸாருக்கும் அறிவிக்க முடியும் என்று பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஆதாரத்தைச் சமர்ப்பிக்குமாறு நான் அவர்களுக்குச் சவால் விடுக்கிறேன். ஊடகங்களுக்கு புகைப்படங்களையும் ஒளிநாடாக்களையும் கொடுப்பதில் அர்த்தமில்லை. எம்மிடம் சட்ட முறைமை உண்டு. அதனைப் பயன்படுத்துங்கள் என்று கோதாபய ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளார்.

ஐ.நா.வின் அரசியல் விவகாரத்திற்குப் பொறுப்பான உதவி செயலாளர் நாயகம் லின் பாஸ்கோ, ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷி ஆகியோர் வருகைதரும் நிலையில், அதற்கு முன்னராக பாதுகாப்புச் செயலாளரிடமிருந்து இக்கருத்து வெளிவந்திருப்பதாக ஏ.எவ்.பி. செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது. இன நல்லிணக்கத்தை துரிதமாக முன்னெடுக்குமாறு இரு தூதுவர்களும் இலங்கையை வலியுறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தன்னிச்சையாக அரசியலமைப்பில் மாற்றத்தை திணிக்க அரசு முயற்சி ; ரணில் கண்டனம்

ranil.jpgஜனநாயக நடைமுறைக்கு மாற்றமாக தன்னிச்சையாக அரசியலமைப்பு மாற்றத்தைக் கொண்டு வர அரசாங்கம் முயற்சிப்பதாக கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மக்களின் எதிர்பார்ப்புகளைப் புறந்தள்ளி அதிகாரப் பசியைத் தீர்த்துக் கொள்வதற்கு அரசு முனைப்புக்காட்டி வருவதாகவும் குற்றம் சுமத்தினார்.

அரசியலமைப்பு மாற்றம் அல்லது திருத்தம் தொடர்பில் உரிய நடைமுறை பின்பற்றப்படாமல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை பாராளுமன்றத்திலும் வெளியேயும் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் வலியுறுத்திக் கூறினார்.நேற்று செவ்வாய்க்கிழமை மாலை எதிர்க்கட்சித் தலைவரின் கேம்பிரிட்ஜ் ரெறஸ் இல்லத்தில் ஊடகவியலாளர்கள் சிலரைச் சந்தித்துக் கலந்துரையாடும் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டு மக்கள் இன்று எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுப்பதைக் கவனத்தில் கொள்ளாமல் தங்களது அதிகாரத்தைப் பலப்படுத்தவும் நீடித்துக் கொள்வதற்குமாகவே அரசியலமைப்பை மாற்றுவதற்கான முயற்சிகளை அரசு துரிதப்படுத்தி வருகிறது. இந்த அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக அமைச்சர்களுக்கோ, ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ எதுவுமே தெரிவிக்கப்படவில்லை. பாராளுமன்றத்துக்கு விளக்கமளிக்காமல் இரகசியமான முறையில் அரசியலமைப்பைத் திருத்தி அதனை மக்கள் மீது திணிப்பதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் முயற்சிப்பதாகக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்த பிரேரணை முற்று முழுதாக நடைமுறைக்குப் புறம்பானதொன்றாகவே காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.