அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இக்பால் அத்தாஸுக்கு கொலை அச்சுறுத்தல் – வெளிநாடு சென்றதற்கு இதுவே காரணம் – ரவிகருணாநாயக்கா எம்.பி.

igpalaththas.jpgபாதுகாப்பு செய்தி ஆய்வாளர் இக்பால் அத்தாஸுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாலேயே அவர் தனது உயிரை பாதுகாப்பதற்காக வெளிநாடு சென்றுள்ளதாக ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்கா தெரிவித்தார்.  பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

எதிர்க்கட்சியினரை தேசத்துரோகிகளாக பிரசாரப்படுத்திக் கொண்டு தாம் தான் வீரர்களென அரச தரப்பினர் கூறிவருகின்றனர். எல்லா விடயத்தாலும் போரை முதன்மைப்படுத்தியே செயற்படுகின்றார்கள். இந்தச் சபையில் சில உறுப்பினர்கள் நடந்து கொள்ளும் முறையைப் பார்த்து பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு நான் வெட்கப்பட்ட சம்பவங்கள் உண்டு. அதிகாரம் என்பது காலத்துக்கு காலம் மாறுபடக்கூடியது. இன்று உங்களிடம் இருக்கலாம். அது நாளை எம்மிடம் வரலாம்.

பயங்கரவாதத்தை அழிக்கவேண்டுமென்பதே ஐ.தே.க.வின் நிலைப்பாடு. ஆனால், எம்மை பயங்கரவாதிகளுக்கு ஆதரவானவர்கள் போலவும் தேசத் துரோகிகளாகவும் காட்ட அரசு முயற்சிக்கின்றது. அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ஒபாமா, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷை பாராட்டியே தனது முதல் உரையை ஆரம்பித்தார். இதுதான் அமெரிக்காவின் முதிர்ச்சி. நாம் அவர்களின் பாடத்தில் முதல் வகுப்பைக்கூட தாண்டவில்லை.

அமைச்சர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் வீட்டு வாடகையை நிறுத்த வேண்டும் – தயாசிறி ஜயசேகர

srilanka-parlimant.jpgநாட்டின் நிதி நிர்வாகத்திற்கு பொறுப்பான நிறுவனம் என்ற வகையில் பாராளுமன்றத்தின் அனுமதியின்றி அமைச்சர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் வீட்டு வாடகை நிறுத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட எம்.பி.யான தயாசிறி ஜயசேகர  செவ்வாய்க்கிழமை சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை விவாதத்துக்கென சமர்ப்பித்து பேசும் போதே ஜயசேகர எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்; “2007 ஆம் ஆண்டு முதல் அமைச்சர்கள் பலருக்கும் வீட்டு வாடகையாக மாதாந்தம் தலா ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டு வந்ததுடன், இந்தக் கொடுப்பனவு இம் மாதம் தொடக்கம் மாதமொன்றுக்கு தலா 50 ஆயிரம் ரூபாவாக குறைக்கப் பட்டுள்ளது. அரசியலமைப்பின் 68 ஆவது உறுப்புரையின் பிரகாரம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வேதனம் அல்லது கொடுப்பனவை வழங்குவது பாராளுமன்றத்தின் அதிகாரத்திற்குட்பட்டதாகும். அரசியலமைப்பின் பிரகராம் பொது மக்களின் நிதி அலுவல்கள் தொடர்பான முழு அதிகாரமும் பாராளுமன்றத்திற்கே உரியது.

இதுவரை அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபா வீட்டு வாடகைக்கும் சரி, தற்போது வழங்கப்பட்டு வரும் 50 ஆயிரம் ரூபா வீட்டு வாடகைக்கும் சரி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தாலுமே, பாராளுமன்றத்தினால் இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.  எனவே, இந்த கொடுப்பனவுகளை இடைநிறுத்த அரசாங்கம் உரிய உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் ‘ என்றார்.

இதன் பின்னர் நடைபெற்ற இந்த பிரேரணை மீதான விவாதத்தில் ஐ.தே.க.வின் எட்வட் குணசேகர எம்.பி.யும், ஜே.வி.பி.யின் விஜித ரணவீர எம்.பி.யும் பேசியதை அடுத்து, இறுதியாக பதிலளித்து பேசிய போது, நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சரான கலாநிதி சரத் அமுனுகம தெரிவிக்கையில்; “அமைச்சர்களுக்கு அரசினால் வீடுகள் வழங்கப்படுவது சம்பிரதாயம். இருப்பினும் அமைச்சர்கள் எவரும் பணம் கேட்கவில்லை. ஒரு இலட்சம் ரூபாவையும் கோரவில்லை. எனினும் பாதுகாப்பு என்ற முக்கிய பிரச்சினையொன்று உள்ளது. எனவே, அமைச்சர்கள் அரச வீடுகளை கேட்டார்களே தவிர, பணம் கோரவில்லை, வீட்டிலிருந்து வரும் போது ரஞ்சன் விஜேரட்ன ,த.மு.தஸாநாயக்க போன்ற எத்தனை அரசியல் தலைவர்கள் படுகெலை செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதை இங்கு சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்’ என்றார்.

கிழக்கு மாகாண முதல்வர் தலைமையில் வடக்கு மக்களுக்கு நிவாரணம் சேகரிப்பு

cm.jpgகிழக்கு மாகாண முதலமைச்சரின் மட்டக்களப்பு வாசஸ்தலத்தில் வன்னியிலிருந்து இடம்பெயரும் மக்களுக்கென ஒரு தொகுதி நிவாரணப் பொருட்கள் த.ம.வி.பு கட்சியின் முக்கியஸ்த்தர்கள் உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் உதவி உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண முதல்வர் சந்திரகாந்தன்.

மனிதாபிமான அடிப்படையில் எமது கட்சி பல்வேறு சமூக உதவிகளை வழங்கி வருகின்றது. அதன் அடிப்படையில் எமது உறவுகள் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து தப்பித்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகின்றார்கள். இவர்களுக்குரிய அத்தியாவசியத் தேவையாக உள்ள உதவிகளை நாம் வழங்குவதற்கு எமது கிழக்கு மாகாண சபை அமைச்சர் வாரியம் முடிவெடுத்தது. அதனடிப்படையில் கிழக்கில் இருக்கின்ற யாராக இருந்தாலும் தங்களது உதவிகளை வடபகுதி மக்களுக்கு வழங்க வேண்டும் என நினைப்பவர்கள் எமது மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் பிரதேசசபை செயலாளர்களிடம் ஒப்படைத்து பற்றுச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந் நிகழ்வில் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களான திரவியம் (ஜெயம்) மற்றும் பிரதீப் மாஸ்டர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அரசியலமைப்பு சபை ஸ்தாபிக்கப்படாமைக்கு ஜனாதிபதி காரணமல்ல – அமைச்சர் டியூ குணசேகர

dew.jpgஅரசிய லமைப்புச் சபை ஸ்தாபிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றமை ஜனாதிபதியின் தவறு அல்ல. இது பாராளுமன்றத்தின் இயலாமையே என்று அரசியலமைப்பு விவகார தேசிய நல்லிணக்க அமைச்சர் டியூ குணசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சுயாதீன ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களுக்குச் சம்பள உயர்வு வழங்குவது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அமைச்சர் குணசேகர இதனைத் தெரிவித்தார்.

“அரசியலமைப்பின் 17 வது திருத்தத்தின்படி முதலில் 2002 மார்ச் மாதம் 22 ஆம் திகதி அரசியலமைப்புச் சபை ஸ்தாபிக்கப்பட்டது. இரண்டாவது சபை மூன்றாண்டுகளுக்குப் பின்னர் நியமிக்கப்பட வேண்டும். அதன்படி 2005 மார்ச் மாதம் 21 ஆம் திகதி புதிய சபை நியமிக்கப்பட வேண்டியிருந்தும், அது நடைபெறவில்லை. இது ஜனாதிபதியின் தவறு அல்ல. பாராளுமன்றத்தின் பலவீனமாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005 நவம்பர் 19 ஆம் திகதிதான் பதவியேற்றார். அரசியலமைப்புச் சபை நெருக்கடி அவர் பிரதமராக இருந்த காலத்தில் நிகழ்ந்தது.

அப்போது சிறுபான்மைக் கட்சிகளின் சார்பில் தெரிவுசெய்யப்பட வேண்டிய 10 வது உறுப்பினரைத் தெரிவு செய்வதில் தமிழத் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளால் முடியவில்லை. இரண்டு வருடம் இழுபறிபட்டார்கள். இதற்கிடையில் சுயாதீன ஆணைக்குழுக்களின் காலம் நிறைவடைந்து பணிகள் ஸ்தம்பிதமடைந்தன. அதனால் நாட்டின் தலைவர் என்ற வகையில் அவற்றுக்குத் தலைவர்களை ஜனாதிபதி நியமித்தார். இதில் தவறு என்ன இருக்கிறது? என்ற அமைச்சர் குணசேகர, “அரசியலமைப்புக்கு முரணான ஆணைக் குழுக்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதாக சிலர் கூறுகிறார்கள்.

இப்போதும் இந்தச் சபையின் அங்கீகாரத்தின்படி ஆணைக்குக்களின் உறுப்பினர்களுக்குச் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது!” என்று மேலும் தெரிவித்தார்.

திருமலை மட்டக்களப்புக்கு இடையே “ரயில் பஸ்’ சேவை மார்ச் மாதம் ஆரம்பம்

lanka-map-02.jpgதிரு கோணமலைக்கும் மட்டக்களப்புக்கும் இடையேயான “ரயில் பஸ்’ சேவை மார்ச் மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் வேண்டுகோளையடுத்து இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 14 பஸ்கள் கொழும்பை வந்தடைந்துள்ளதாகவும் அவற்றை ரயில் தண்டவாளப் பாதை மீது ஓடக் கூடியதாக அவற்றின் ரயர்களை மாற்றி இரும்புச் சக்கரங்களையும் மற்றும் ரயில் பெட்டிகளுக்குரிய உபகரணங்களையும் பொருத்தும் வேலைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முதலமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகர் டாக்டர் கே. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

குறித்த பஸ்களை ரயில் பெட்டிகளாக மாற்றியமைக்கும் செலவு அனைத்தையும் இந்திய அரசாங்கமே பொறுப்பேற்கவுள்ளது. 14 பஸ்களும் ஏழு ரயில் பஸ் யூனிட்டுகளாக மாற்றப்படுகின்றன. ஒவ்வொரு யூனிட்டும் இரண்டு பஸ்கள், என்ஜின்கள் முன்,பின்புறம் வரக்கூடியதாக அமைக்கப்படுகின்றன. ஒரு யூனிட்டும்80 பயணிகள் இருந்தும் 100 பயணிகள் நின்றும் பயணிக்கக் கூடியதாக இருக்கும்.

மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு காலை 5 மணி, காலை 7 மணி, காலை 9 மணிக்கென்று மூன்று சேவைகளில் மூன்று ரயில் பஸ் யூனிட்கள் ஈடுபடும். இவை நண்பகலுக்குப் பின்னர் திருகோணமலையிலிருந்து மட்டக்களப்புக்குத் திரும்பும். இதேபோன்று மூன்று “ரயில் பஸ்’ யூனிட்கள் திருகோணமலையிலிருந்து காலை 6, காலை 8, காலை 10 மணி ஆகிய நேரங்களில் மட்டக்களப்பு நோக்கிச் செல்லும். பிற்பகலில் இவை மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு வெவ்வேறு நேரங்களில் திரும்பும். மூன்று யூனிட் ‘ரயில் பஸ்கள்’ மட்டக்களப்பில் தரித்து நிற்கும். இதேபோன்று மூன்று ரயில் பஸ் யூனிட்கள் திருமலையில் தரித்து நிற்கும் ஒரு “ரயில் பஸ்’ யூனிட் ரிசர்வாக இருக்கும். மட்டக்களப்பு திருகோணமலைக்கு இடையேயான 200 கிலோ மீற்றர் தூரத்தை 4 மணி நேரத்தில் கடக்கக் கூடியதாக ரயில் பஸ் சேவை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பஸ்களை ரயில் பஸ்களாக மாற்ற 75 மில்லியன் ரூபா செலவாகும். இந்த பஸ்களுக்கு இறக்குமதித் தீர்வை அறவிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பிரபாகரன் மலேஷியாவில்?

Pirabakaran_Vதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மலேஷியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்று பரவியுள்ள தகவலைத் தொடர்ந்து, அவரைத் தேடும் பணியில் தீவிரமாக மலேஷிய போலீஸ் மற்றும் கமாண்டோ படை இறங்கியுள்ளனர் என சில செய்திகள் குறிப்பிடுகின்றன. வன்னிப் பகுதியில் பெரும் நிலப்பரப்பை சிங்கள ராணுவம் ஆக்கிரமித்துவிட்ட நிலையில் புலிகள் எந்தவித எதிர் தாக்குதலும் நடத்தாமல் உள்ளனர்.

இன்னும் சில கிலோ மீட்டர்கள் மட்டுமே புலிகளின் வசம் உள்ளதாம். இந்நிலையில், பிரபாகரன் மற்றும் முக்கிய தளபதிகள் அனைவரும் ஈழப்பகுதியிலிருந்து தப்பி மலேஷியா அல்லது தாய்லாந்துக்கு தப்பிச் சென்றுவிட்டிருக்கக் கூடும் என்று உளவு அமைப்புகள் தெரிவித்ததாக  தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்தத் தகவல் வெளியானதும் மலேஷிய போலீஸ் மற்றும் ராணுவம் ஊஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘பிரபாகரன் மலேஷியாவுக்குள் நுழைய வாய்ப்பில்லை. ஆனால் நாங்கள் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. எனவே நாடு முழுக்க தேடுதல் வேட்டையைத் தொடங்கிவிட்டோம்’ என அந்நாட்டின் காவல்துறை உயர் அதிகாரி மூசா ஹூஸைன் கூறியுள்ளார். ஆனால் இதுகுறித்து தாய்லாந்து அரசு எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

‘பிரபாகரன் ஒருபோதும் ஈழத்தைவிட்டு வெளியேற மாட்டார். இது திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம். உண்மை என்னவென்று நாளை தெரியும்’, என்று புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.—–

ஒபாமாவின் 2வது பதவிப்பிரமாணம்

us_obama-003.jpgசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் செய்த பிழையால், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மீண்டும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அமெரிக்க நேரப்படி புதன்கிழமை இரவு 7.35 மணிக்கு ஜான் வெள்ளை மாளிகையின் மேப் அறையில் பதவிப்பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை நடந்த பதவியேற்பு விழாவின்போது ‘faithfully’ என்ற வார்த்தை தவறான இடத்தில் உச்சரிக்கப்பட்டு விட்டதால், மறுபடியும் பதவிப்பிரமாணம் எடுத்த நிகழ்ச்சி நடந்துள்ளது. நீதிபதியின் இந்த பிழையால் ஒபாமாவின் அதிபர் பதவி சட்டப்பூர்வமானதா என்ற பிரச்சினை பின்னாளில் வந்து விடக் கூடாது என்பதற்காக இந்த 2வது பதவிப்பிரமாணம் நடந்துள்ளது.

ஆனால், உண்மையில், பதவிப்பிரமாணம் எடுக்காமலேயே அன்றைய தினம் ஒபாமா அதிபராகி விட்டார் (அமெரிக்க சட்டப்படி, பதவியேற்பு தினத்தன்று, பிற்பகல் 12 மணி முதல், அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் தானாகவே அதிபராகி விடுவார்) என்பது குறிப்பிடத்தக்கது.

ஒபாமாவின் 2வது பதவிப்பிரமாணம் குறித்து வெள்ளை மாளிகை வழக்கறிஞர் கிரேக் கிரேக் வெளியிட்ட அறிக்கையில், பதவி்ப்பிரமாண நிகழ்ச்சி எந்தவித பிரச்சினையும் இன்றி முடிந்தது. பொருத்தமான முறையில் அதிபர் ஒபாமா பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

அரசியல் சட்டத்திலேயே பதவிப்பிரமாணம் குறித்து தெளிவாக உள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், குழப்பம் ஏதும் இருக்கக் கூடாது என்பதற்காகவும் இந்த 2வது பதவிப்பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது. 2வது முறை நடந்த பதவிப்பிரமாணத்தையும் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸே செய்து வைத்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிலாரி அமைச்சரானார்:

இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவு அமைச்சராகியுள்ளார் ஹில்லாரி கிளிண்டன். ஒபாமா அதிபராகி விட்டதைத் தொடர்ந்து அவரது அமைச்சரவையில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிக்கு ஹில்லாரி கிளிண்டனின் பெயரை செனட் சபைக்கு முன்மொழிந்தனர். அதில், 94 – 2 என்ற வாக்குகள் அடிப்படையில்,ஹில்லாரியின் நியமனம் ஏற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹில்லாரி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

அவரது கணவரும், முன்னாள் அதிபருமான பில் கிளிண்டன் கைகளில் பைபிளைப் பிடித்துக் கொள்ள அதன் மேல் கை வைத்தபடி ஹில்லாரி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

வைகோ – உண்ணாவிரதப் போராட்டம்

22-vaiko.jpgஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்யும் துரோகத்தைக் கண்டித்தும், ராணுவ உதவிகளைத் தடுப்பதற்கும் பிப்ரவரி 12ம் தேதி நாடாளுமன்றம் கூடும் நாளில் டெல்லியில் நாடாளுமன்றம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக மதிமுக பொதுச் செயலாளர்  வைகோ கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

முல்லைத் தீவில் 6 லட்சம் ஈழத் தமிழர்கள், சிங்கள ராணுவத்தின் கோரத் தாக்குதலால் மரணத்தின் பிடியில் சிக்கி உள்ளனர். இடைவிடாத பீரங்கித் தாக்குதல் வேறு. இரவு பகலாக விமானக் குண்டு வீச்சு, அதிலும் உலக நாடுகள் தடை செய்துள்ள கொத்துக் குண்டுகளை வீசுகிறது. நேற்று மட்டும் 37 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றுள்ளனர். ஜனவரி 7ம் தேதி காஸா பகுதியில் ஒரு கட்டிடத்தின் மேல் இஸ்ரேல் குண்டு வீசியதில் 45 பேர் கொல்லப்பட்டபோது, உலக நாடுகள் அதற்கு எதிர்ப்பாக கடும் கண்டனத்தை தெரிவித்தன. ஆனால் 6 கோடித் தமிழ் மக்களாகிய நாம், 20 கல் தொலைவில் கடலுக்கு அப்பால் படுகொலைக்கு உள்ளாகும் ஈழத் தமிழர்களைக் காக்கக் கதியற்றுப் போனோம்.

தற்போது நடைபெறும் தமிழ் இன அழிப்பு யுத்தத்தை, இந்தியாவின் மத்திய அரசு கொடிய நோக்கத்தோடு திட்டமிட்டு ஊக்குவித்து உதவுகிற மன்னிக்க முடியாத துரோகத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உலகெங்கும் உள்ள தமிழர்களின் உள்ளங்கள் பதறுகின்றன. அங்கமெல்லாம் நடுங்குகிறது. ராஜபக்சே அரசு மூர்க்கத்தனமான இனக் கொலையில் ஈடுபட்டுள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்யும் துரோகத்தைக் கண்டித்தும், ராணுவ உதவிகளைத் தடுப்பதற்கும், ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுந்துயரத்தைப் போக்க அனைத்து மட்டங்களிலும் ஆதரவைத் திரட்டவும் பிப்ரவரி 12ம் தேதி இந்திய நாடாளுமன்றம் கூடும் நாளில் டெல்லியில் நாடாளுமன்றத்துக்கு அருகே மதிமுக சார்பில் என் தலைமையில் உண்ணாநிலை அறப்போர் நடைபெறும் என்று கூறியுள்ளார் வைகோ.

மீண்டும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை

sl-parlimant.jpgஅரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை, செயலிழந்துள்ளதாக சபாநாயகர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.  ஐக்கியதேசியகட்சியின் முன்வைத்த நம்பிக்கையில்லாப்பிரேரணையை தாம் விவாதத்திற்கு எடுத்துக்கொண்ட வேளையில், ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை என சபாநாயகர் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்ற நீதிமுறைகளையும் பொதுநலவாய நாடுகளின் சட்டமுறைகளையும் கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை தாம் மேற்கொண்டதாக தெரிவித்தார்.

எனினும் தேவையேற்படின் ஐக்கிய தேசியக்கட்சி, அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணையை மீண்டும் முன்வைக்கலாம் என அவர் தெரிவித்தார். இதன் போது தமது இருக்கையில் இருந்து எழுந்த எதிர்க்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இன்றைய(21) தினத்திற்குள் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணையை முன்வைக்க தமது கட்சி நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார்.

இதன் படி அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐ.தே.கட்சி நேற்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் டம்மிக்கே கித்துல்கொடவிடம் கையளித்தது. இந்தப் பிரேரணையில் எம்.பிக்கள் ஜோசப் மைக்கல் பெரேரா, அகிலவிராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க, ஆர்.குணசேகர, ஜயலத் ஜயவர்த்தன ஆகியோர் கையெழுத்திட்டனர்.

தமிழ் மக்களின் பேரவலங்கள் தொடர்பில் பார்வையிடுவதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இரா. சம்பந்தன்

sampthan.jpgவன்னியில் உள்ள தமிழ் மக்கள் அனுபவிக்கும் பேரவலங்களை நேரில் சென்று பார்ப்பதற்காக சுயாதீனக்குழுவொன்றை அங்கு அனுப்புமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனே இந்த வேண்டுகோளை விடுத்தார்.அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு :-

வன்னியில் தொடரும் யுத்தம் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பட்டினியுடன் மரநிழல்களின் கீழ் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.யுத்தம் ஒன்று இடம்பெறும்போது மக்கள் இடம்பெயர்வது மக்களின் விருப்பம். ஆனால், அவர்களைப் பலவந்தமாக வெளியேற்ற முடியாது. ஆனால், இப்போது நடப்பது என்ன? வன்னி மக்களின் வீடுகள் மீது குண்டுகள் போடப்படுகின்றன. அவர்களின் வீடுகள் அழிக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே மக்கள் வீடுகளை இழந்து இடம்பெயர்கின்றனர்.

தமிழ் மக்களை இந்த அரசு கால்களின் கீழ் போட்டு நசுக்குகின்றது. தமிழர்களை இந்த அரசு கண்ணியப்படுத்தவேயில்லை. இந்த நாட்டில் உள்ள அனைத்து இன மக்களும் சமமானவர்கள். அவர்கள் சுதந்திரமாக சந்தோசமான வாழ்வை அனுபவிக்க இடம் வழங்கப்பட வேண்டும். ஆனால், இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு அப்படியானதொரு சுதந்திர வாழ்வை வழங்கவில்லை. அடக்குமுறைகள்தான் அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளன. இந்த அரசு பெரியவர்களை மாத்திரமன்றி சிறிய குழந்தைகளைக்கூட கொன்றொழிக்கின்றது.  காயப்படும் மக்களுக்கு மருத்துவ வசதிகள்கூட வழங்கப்படுவதில்லை. இதைத்தான் தமிழர்களின் விடுதலை என்று அரசு சொல்கிறது.

தமிழர்களின் உரிமைகள் முற்றாக மறுக்கப்படுகின்றன. அவர்கள் மதிக்கப்படுவதேயில்லை. இதுவொரு பாரிய இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை. இந்த நிலைமை மோசமாவதற்கு ஜே.வி.பியும் ஒரு காரணம். ஆழிப்பேரலை பொதுக்கட்டமைப்பு மற்றும் போர் நிறுத்த உடன்படிக்கை போன்றவற்றை ஜே.வி.பியினர் எதிர்த்தனர். அந்த எதிர்ப்புகள்தான் இந்த நிலைமைக்குக் காரணம். தற்போதைய யுத்தத்தின் உண்மை நிலையை அறியும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால், அந்த உரிமையை அரசு தடுத்து வருகிறது. இதனால், உண்மைகள் வெளிவராமல் போகின்றன.

காசாவில் யுத்தம் நடைபெறும் பகுதிகளுக்குள் ஊடகவியலாளர்கள் சென்று வருகின்றனர். அங்கு ஊடகவியலாளர்கள் செல்வதை யாரும் தடுக்கவில்லை. தாக்குதல்கள், இழப்புகள் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் வெளிவந்தன. இங்கு அந்த நிலைமை இல்லை. அங்கு செல்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்குவதில்லை. இதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் பத்திரிகைகள் மூலம் பேசப்பட்டாலும் வன்னிப் பகுதியை தனிமைப்படுத்திவிட்டு அரசாங்கத்தினால் முன் செல்ல முடியாது. இவ்விடயத்தில் சர்வதேசத்தை தலையிடுமாறு வேண்டுகின்றோம்.  வன்னியில் உள்ள மக்களின் நிலைமையை இப்போது எம்மால் தெளிவாக அறிய முடியாதுள்ளது. அங்கு அரசசார்பற்ற நிறுவனங்களும் இல்லை. இந்த நிலையில் சர்வதேச சமூகத்தின் சுயாதீன குழுவொன்று அங்கு செல்வது மிக அவசியம் – என்றார்.