பாதுகாப்பு செய்தி ஆய்வாளர் இக்பால் அத்தாஸுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாலேயே அவர் தனது உயிரை பாதுகாப்பதற்காக வெளிநாடு சென்றுள்ளதாக ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்கா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
எதிர்க்கட்சியினரை தேசத்துரோகிகளாக பிரசாரப்படுத்திக் கொண்டு தாம் தான் வீரர்களென அரச தரப்பினர் கூறிவருகின்றனர். எல்லா விடயத்தாலும் போரை முதன்மைப்படுத்தியே செயற்படுகின்றார்கள். இந்தச் சபையில் சில உறுப்பினர்கள் நடந்து கொள்ளும் முறையைப் பார்த்து பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு நான் வெட்கப்பட்ட சம்பவங்கள் உண்டு. அதிகாரம் என்பது காலத்துக்கு காலம் மாறுபடக்கூடியது. இன்று உங்களிடம் இருக்கலாம். அது நாளை எம்மிடம் வரலாம்.
பயங்கரவாதத்தை அழிக்கவேண்டுமென்பதே ஐ.தே.க.வின் நிலைப்பாடு. ஆனால், எம்மை பயங்கரவாதிகளுக்கு ஆதரவானவர்கள் போலவும் தேசத் துரோகிகளாகவும் காட்ட அரசு முயற்சிக்கின்றது. அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ஒபாமா, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷை பாராட்டியே தனது முதல் உரையை ஆரம்பித்தார். இதுதான் அமெரிக்காவின் முதிர்ச்சி. நாம் அவர்களின் பாடத்தில் முதல் வகுப்பைக்கூட தாண்டவில்லை.