அமைச்சர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் வீட்டு வாடகையை நிறுத்த வேண்டும் – தயாசிறி ஜயசேகர

srilanka-parlimant.jpgநாட்டின் நிதி நிர்வாகத்திற்கு பொறுப்பான நிறுவனம் என்ற வகையில் பாராளுமன்றத்தின் அனுமதியின்றி அமைச்சர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் வீட்டு வாடகை நிறுத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட எம்.பி.யான தயாசிறி ஜயசேகர  செவ்வாய்க்கிழமை சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை விவாதத்துக்கென சமர்ப்பித்து பேசும் போதே ஜயசேகர எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்; “2007 ஆம் ஆண்டு முதல் அமைச்சர்கள் பலருக்கும் வீட்டு வாடகையாக மாதாந்தம் தலா ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டு வந்ததுடன், இந்தக் கொடுப்பனவு இம் மாதம் தொடக்கம் மாதமொன்றுக்கு தலா 50 ஆயிரம் ரூபாவாக குறைக்கப் பட்டுள்ளது. அரசியலமைப்பின் 68 ஆவது உறுப்புரையின் பிரகாரம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வேதனம் அல்லது கொடுப்பனவை வழங்குவது பாராளுமன்றத்தின் அதிகாரத்திற்குட்பட்டதாகும். அரசியலமைப்பின் பிரகராம் பொது மக்களின் நிதி அலுவல்கள் தொடர்பான முழு அதிகாரமும் பாராளுமன்றத்திற்கே உரியது.

இதுவரை அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபா வீட்டு வாடகைக்கும் சரி, தற்போது வழங்கப்பட்டு வரும் 50 ஆயிரம் ரூபா வீட்டு வாடகைக்கும் சரி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தாலுமே, பாராளுமன்றத்தினால் இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.  எனவே, இந்த கொடுப்பனவுகளை இடைநிறுத்த அரசாங்கம் உரிய உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் ‘ என்றார்.

இதன் பின்னர் நடைபெற்ற இந்த பிரேரணை மீதான விவாதத்தில் ஐ.தே.க.வின் எட்வட் குணசேகர எம்.பி.யும், ஜே.வி.பி.யின் விஜித ரணவீர எம்.பி.யும் பேசியதை அடுத்து, இறுதியாக பதிலளித்து பேசிய போது, நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சரான கலாநிதி சரத் அமுனுகம தெரிவிக்கையில்; “அமைச்சர்களுக்கு அரசினால் வீடுகள் வழங்கப்படுவது சம்பிரதாயம். இருப்பினும் அமைச்சர்கள் எவரும் பணம் கேட்கவில்லை. ஒரு இலட்சம் ரூபாவையும் கோரவில்லை. எனினும் பாதுகாப்பு என்ற முக்கிய பிரச்சினையொன்று உள்ளது. எனவே, அமைச்சர்கள் அரச வீடுகளை கேட்டார்களே தவிர, பணம் கோரவில்லை, வீட்டிலிருந்து வரும் போது ரஞ்சன் விஜேரட்ன ,த.மு.தஸாநாயக்க போன்ற எத்தனை அரசியல் தலைவர்கள் படுகெலை செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதை இங்கு சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்’ என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *