திரு கோணமலைக்கும் மட்டக்களப்புக்கும் இடையேயான “ரயில் பஸ்’ சேவை மார்ச் மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் வேண்டுகோளையடுத்து இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 14 பஸ்கள் கொழும்பை வந்தடைந்துள்ளதாகவும் அவற்றை ரயில் தண்டவாளப் பாதை மீது ஓடக் கூடியதாக அவற்றின் ரயர்களை மாற்றி இரும்புச் சக்கரங்களையும் மற்றும் ரயில் பெட்டிகளுக்குரிய உபகரணங்களையும் பொருத்தும் வேலைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முதலமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகர் டாக்டர் கே. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
குறித்த பஸ்களை ரயில் பெட்டிகளாக மாற்றியமைக்கும் செலவு அனைத்தையும் இந்திய அரசாங்கமே பொறுப்பேற்கவுள்ளது. 14 பஸ்களும் ஏழு ரயில் பஸ் யூனிட்டுகளாக மாற்றப்படுகின்றன. ஒவ்வொரு யூனிட்டும் இரண்டு பஸ்கள், என்ஜின்கள் முன்,பின்புறம் வரக்கூடியதாக அமைக்கப்படுகின்றன. ஒரு யூனிட்டும்80 பயணிகள் இருந்தும் 100 பயணிகள் நின்றும் பயணிக்கக் கூடியதாக இருக்கும்.
மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு காலை 5 மணி, காலை 7 மணி, காலை 9 மணிக்கென்று மூன்று சேவைகளில் மூன்று ரயில் பஸ் யூனிட்கள் ஈடுபடும். இவை நண்பகலுக்குப் பின்னர் திருகோணமலையிலிருந்து மட்டக்களப்புக்குத் திரும்பும். இதேபோன்று மூன்று “ரயில் பஸ்’ யூனிட்கள் திருகோணமலையிலிருந்து காலை 6, காலை 8, காலை 10 மணி ஆகிய நேரங்களில் மட்டக்களப்பு நோக்கிச் செல்லும். பிற்பகலில் இவை மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு வெவ்வேறு நேரங்களில் திரும்பும். மூன்று யூனிட் ‘ரயில் பஸ்கள்’ மட்டக்களப்பில் தரித்து நிற்கும். இதேபோன்று மூன்று ரயில் பஸ் யூனிட்கள் திருமலையில் தரித்து நிற்கும் ஒரு “ரயில் பஸ்’ யூனிட் ரிசர்வாக இருக்கும். மட்டக்களப்பு திருகோணமலைக்கு இடையேயான 200 கிலோ மீற்றர் தூரத்தை 4 மணி நேரத்தில் கடக்கக் கூடியதாக ரயில் பஸ் சேவை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பஸ்களை ரயில் பஸ்களாக மாற்ற 75 மில்லியன் ரூபா செலவாகும். இந்த பஸ்களுக்கு இறக்குமதித் தீர்வை அறவிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.