அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் சிறார்கள் பாடசாலை செல்ல முடியாத நிலையில்

college1.jpgஉலகில் ஒவ்வொரு மணித்தியாலத்திலும் உண்ண உணவின்றி 1500 சிறுவர்கள் பட்டினியால் மரணமடைகின்றனர் என்று விரிவுரையாளர் திருமதி சாரினா மாரசிங்க கூறினார்.

தென் மாகாண சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக கரிட்டாஸ் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். காலி கரிட்டாஸ் அமைப்பின் கேட்போர் கூடத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பேசிய விரிவுரையாளர் மாரசிங்க;

“இலங்கையில் வறுமைக்கும் செல்வத்துக்கும் இடையில் மிக வேகமாக ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துவருவதால் இலங்கையும் பாதிக்கப்பட்டு வருகிறது. வடக்கு, கிழக்கில் போர் காரணமாக 65 ஆயிரம் சிறார்கள் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். எனினும் வடக்கு, கிழக்கில் 5000 ஆசிரியர்களுக்கு வெற்றிடங்கள் உள்ளன என கல்விப்பகுதி தெரிவித்துள்ளது.

ஆனால், தென் பகுதிகளில் 11 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் மேலதிகமாக பணிபுரிவதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டில் 58,528 அங்கவீனச் சிறுவர்கள் உள்ளனர். அவர்களில் 12 ஆயிரம் சிறார்களே பாடசாலைக்கு செல்கின்றனர். சுமார் 20 ஆயிரம் சிறுவர்கள் அநாதைகளாக உள்ளனர். அவர்களில் பலர் அநாதை இல்லங்களில் தங்கியுள்ளனர். அநாதை இல்லங்களின் அதிகாரிகள் அங்குள்ள சிறார்களின் பாதுகாப்பு மற்றும் விடயங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

சிறுவர்களை அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்தக் கூடாது. அது நிறுத்தப்படவேண்டும். சிறுவர்களுக்கான சிறந்த சூழலை ஏற்படுத்த வேண்டியது ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும். நாட்டில் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்கள் 72 இலட்சம் பேர் உள்ளனர்’ என்றார். வேறு சிலரும் உரையாற்றினார்கள்.

முல்லை கடலேரியில் தற்கொலை படகுகள் மீது விமானத் தாக்குதல்

boats-1002-2.jpgமுல்லைத் தீவு கடற்பிரதேசத்தில் நேற்றுக்காலை புலிகளின் தற்கொலைப் படகுகள் மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

முல்லைத்தீவு ஏரிக்கு வடக்கே புலிகளின் தற்கொலைப் படகுகள் மூன்றினை அவதானித்த விமானப் படையினர் கிபிர் விமானத்தின் மூலம் தாக்குதல் நடத்தியதாக பேச்சாளர் தெரிவித்தார். நேற்றுக் காலை 10.35 மணியளவில் புலிகளின் இலக்குகளைத் துல்லியமாக அவதானித்ததன் பின்னர் விமானப் படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, முல்லைத்தீவு விசுவமடுவில் இராணுவத்தின் 58 ஆம் படைப் பிரிவினரிடம் நேற்று முன்தினம் மாலை 541 சிவிலியன்கள் தஞ்சமடைந்துள்ளதாக பேச்சாளர் தெரிவித்தார். மேலும், படகில் வந்த ஏழு சிவிலியன்கள் யாழ்ப்பாணம் முனை கடற்படை முகாமில் தஞ்சமடைந்ததாகவும் ஊடக மத்திய நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்

வவுனியா நிவாரண கிராமங்களில் அரசாங்க வங்கிகளின் கிளைகள். தங்கியுள்ளோர் விபரங்களை இணையத்தில் வெளியிட முடிவு

vanni.jpgகிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்து நிவாரணக்கிராமங்களில் தங்கியுள்ள மக்களின் முழுமையான விபரங்களை உறவினர்கள் அறிந்து கொள்ளும் விதத்தில், மீள் குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு இணையத்தளத்தில் விசேட ஹொட் மெயில் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வவுனியா கதிர்காமர், அருணாச்சலம், ஆனந்த குமாரசுவாமி, இராமநாதன் ஆகிய நிவாரணக் கிராமங்களில் தற்காலிக, நிரந்தர வீடுகளில் தங்க வைக்கப்படும் மக்களின் முழுமையான விபரங்களை அமைச்சு எடுத்து வருகிறது.

விபரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்ட பின்னர் அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்படும். புலம் பெயர்ந்துள்ளவர்கள் தமது உறவுகள் எங்குள்ளார்கள் எனபதை அறிந்து கொள்ள இது ஏதுவாக அமையுமென மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

கடந்த 13 ஆம் திகதி மாலை வரை 34,430 பேர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளனர் எனக் குறிப்பிட்ட அமைச்சர், நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள தமது உறவினர்களுக்கு புலம் பெயர்ந்துள்ளவர்கள் உதவிகள் செய்வதற்கு ஏதுவாக மேற்படி கிராமங்களில் அரச வங்கிகளான மக்கள் வங்கி, இலங்கை வங்கிக் கிளைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் கூறினர்.

17ல் தமிழகமெங்கும் மனிதசங்கிலி போராட்டம்: பழ.நெடுமாறன்

nedumaran.jpgஇலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், இலங்கை தமிழர் பிரச்சினைக்காக பிப்ரவரி 17-ந் தேதி தமிழகம் எங்கும் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும், ’’தமிழ்நாட்டின் வடக்கே தாம்பரம் தொடங்கி செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திருச்சி, திண்டுக்கல், வாடிப்பட்டி, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில், குமரி வரையிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும்.

மேற்கே கோவையில் தொடங்கி திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம், நாகப்பட்டினம் வரையிலும் கிழக்கு கடற்கரையோரமாக புதுச்சேரியில் தொடங்கி கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, தரங்கம்பாடி, காரைக்கால், நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், கடலாடி, தூத்துக்குடி வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெறும். மனித சங்கிலி போராட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’’ தெரிவித்துள்ளார்.

ஓமந்தை முதல் ஆணையிறவு வரை 20 பொலிஸ் நிலையங்களை அமைப்பதற்கு தீர்மானம்.

srilanka-police.jpgவடக்கில் படையினரால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு 20 புதிய பொலிஸ் நிலையங்களை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக வவுனியா மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் நந்தன முனசிங்க தெரிவித்துள்ளார்.

வவுனியா ஓமந்தை முதல் ஆணையிறவு வரையான பிரதேசங்களில் இந்த புதிய பொலிஸ் நிலையங்கள் அமையவுள்ளதாகவும் கிழக்கு வன்னி என்ற பெயரில் பிரதான பொலிஸ் தொழில்பாட்டுப் பிரிவொன்றை அமைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கு பொறுப்பாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் தீபால் தல்பதாதுவை நியமிக்க ஆலோசித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

புலிகள் ஊடுருவலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு பணி

india-police.jpgஇலங்கை யில் ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையே நடந்து வரும் போர், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், விடுதலைப்புலிகள் தமிழகத்துக்குள் ஊடுருவக் கூடும் என்றும், தமிழகத்தில் இருந்து பல்வேறு வகையான பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்படலாம் என்றும் உளவுத்துறைக்கு தகவல்கள் வந்துள்ளன. இதையடுத்து, தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சேதுபாவாசத்திரம், புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல், கன்னியாகுமாரி, ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம், மண்டபம் உள்பட 12 இடங்களில் கடலோர காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில் தமிழக கடலோர காவல்படை எஸ்.பி. பாஸ்கரன் சமீபத்தில் ஆய்வு செய்தார்.கண்காணிப்பு பணிக்காக 15 க்யூ பிராஞ்ச் போலீசாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், க்யூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், வேதாளை, புதுமடம், கீழக்கரை, தேவிபட்டினம் ஆகிய பகுதிகளில் வாரம் ஒருமுறை சுழற்சி முறையில் கடலோரப்பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலோரப் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களை கஸ்டம்ஸ் அதிகாரிகளும் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக கல்வியாண்டு 2008/ 2009 மாணவர் அனுமதிக்கான தகுதிகாண் பரீட்சை

sri-lanka-university.jpgஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழத்தின் கல்வியாண்டு 2008/2009 மாணவர் அனுமதிக்கான தகுதிகாண் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இலங்கைப் பல்கலைக் கழங்களில் 2008/2009 கல்வியாண்டில் பட்டப்படிப்பை மேற்கொள்வது தொடர்பில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு வெளியிட்ட கையேட்டில் 3.2 பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச அனுமதித்தகுதி கொண்டவர்கள் இத்தகுதிகாண் பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் தொழில் முயற்சியும் முகாமைத்துவமும் கணினி விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், விலங்கு விஞ்ஞானமும் ஏற்றுமதி விவசாயம், தேயிலை தொழில்நுட்பமும் பெறுமதி சேர்ப்பும், கைத்தொழில் தகவல் தொழில்நுட்பம், நீர்வாழ் வளங்கள் தொழில்நுட்பம், விருந்தோம்பல் சுற்றுலா மற்றும் நிகழ்ச்சிகள் முகாமைத்துவம், கனியப்பொருள் வளங்களும் தொழில்நுட்பமும் பனை இனத்தாவரம் மற்றும் இறப்பர் பால்தொழில்நுட்பமும் பெறுமதி சேர்ப்பும் ஆகிய துறைகளில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காகவே இத்தகுதிகாண் பரீட்சை விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பப்படிவம் மற்றும் தகுதிகாண் பரீட்சைத் திகதி போன்றவை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளமுடியும். விண்ணப்பதாரிகள் ஏ4 தாளின் ஒரு பக்கத்தில் மட்டும் தயார் செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களுடன் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இலங்கை வங்கி பதுளை கிளையின் கணக்கு இலக்கம் 3114820 இற்கு 250 ரூபாவை வைப்புச்செய்த காசோலையையும் இணைத்து அனுப்பவேண்டும்.

இத்தகுதிகாண் பரீட்சையில் தகுதி காண்பதற்கான வினாத்தாள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பாடநெறி தொடர்பான அறிவை பரிசோதிக்கும் வகையிலான வினாத்தாள் என இரண்டு வினாத்தாள்கள் வழங்கப்படும்.இப்பரீட்சை ஆங்கில மொழி மூலம் மட்டுமே நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விண்ணப்பங்களை 25.02.2009 இற்கு முன்னர் கிடைக்குமாறு பதிவாளர் ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகம், பசறைவீதி பதுளை என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். கடிதவுரையின் இடதுபக்க மேல் மூலையில் தகுதி காண் பரீட்சை 2008/2009, என குறிப்பிடல்வேண்டும்.

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் 2008/2009 கல்வியாண்டில் மேற்குறிப்பிடப்பட்ட பட்டப்படிப்புகளை மேற்கொள்ளவுள்ளோர் ஏனைய தகுதிகளுடன் இத்தகுதிகாண் பரீட்சையிலும் தகுதி பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த யாழ்., மன்னார் மக்களை சொந்த இடங்களில் குடியேற்ற வேண்டும்

thomas-sawndaranayakam.jpgஜனாதி பதியிடம் யாழ்.ஆயர் வேண்டுகோள் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து வன்னியில் தங்கியிருந்த மக்கள் மீண்டும் இடம்பெயர்ந்துள்ள நிலையில், அவர்களை வவுனியாவுக்கு கொண்டு செல்லாது சொந்த இடங்களில் குடியேற்ற நடவடிக்கையெடுக்குமாறு யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இது தொடர்பாக யாழ்.ஆயரால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

வன்னியில் விடுவிக்கப்படாத பிரதேசங்களிலிருந்து இதுவரை 35 ஆயிரம் மக்கள் வெளியேறியுள்ளனர்.

இவ்வாறு வெளியேறும் மக்களை அந்தந்த மாவட்டங்களில் மீள குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்து வன்னியில் இருந்த மக்கள் மீண்டும் இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்தவர்களை அவர்களது சொந்த மாவட்டங்களில் மீளக்குடியேற்ற வேண்டும்.

யாழ்ப்பாண மக்களை தென்மராட்சியின் மிருசுவில் மற்றும் அதை அண்டிய பிரதேசங்களில் உள்ள காணிகளில் தற்காலிக வதிவிடங்களை அமைத்து மீளக்குடியேற்றலாம்.

எனவே, இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களை வவுனியாவுக்குக் கொண்டு செல்லாது அவர்களது சொந்த இடங்களில் குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இக்கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலர் கோதாபய ராஜபக்ஷ, புனர்வாழ்வு அமைச்சர் ரிச்சோட் பௌடின் மற்றும் வவுனியா, யாழ்ப்பாண மாவட்டங்களின் அரச அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 5 வயதுக்கும் குறைவான சிறுவர்களில் 22 வீதத்தினர் போஷாக்கின்மையால் பாதிப்பு – உலகவங்கி அறிக்கை

world-bank-01.jpgஇலங்கை யில் ஐந்து வயதுக்குக் குறைவாக உள்ள சிறுவர்களில் 22 சதவீதத்தினர் நிறைகுறைவான பிள்ளைகளாக காணப்படும் நிலையில், இச் சிறுவர்களின் போஷாக்கை கணிசமான அளவுக்கு மேம்படுத்த வேண்டுமென உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

மிலேனியம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், இச்சிறுவர்களின் போஷாக்கை மேம்படுத்தவுள்ளதுடன், அதே அளவுக்கு போஷாக்கின்மையால் அவதியுறும் மக்களின் போஷாக்கின் நிலையை மேம்படுத்த வேண்டியுள்ளதையும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

ஐந்து வயதுக்கும் குறைவான சிறுவர்களில், 18 வீதத்தினர் குறைந்த வளர்ச்சி நிலையைக் கொண்டுள்ளதுடன், 15 வீதத்தினர் மிக மெலிந்த உடலமைப்பை கொண்டுள்ளதாகவும் உலக வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“இலங்கையில் உள்ள உள்ளூர் நிறுவனங்களுக்கு அபிவிருத்திக்கான கூட்டான முயற்சிகளை முன்னெடுக்க வாய்ப்புகள் காணப்படுவதுடன், அரசசார்பற்ற நிறுவனங்கள், பொது சுகாதார சேவைகள் ஊடாக, சத்துணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிவகைகள் பற்றியும் ஆராய்ந்து வருவதாக, உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர், நாகோ இஸ்கீ தெரிவித்தார்.

போஷாக்கை மேம்படுத்துவதற்கான, புதிய வழிமுறைகள் வெற்றியளிக்குமாயின், சத்துணவுக்கான நன்கொடை வழங்கலை மேலும் அதிகரிக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

போட்டியடிப்படையில், போஷாக்கை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் இனங்காணப்பட்டுள்ளதோடு, இதன்மூலம் தெற்காசியாவில் வாழும் சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கை மேம்படுத்தும் புதிய அணுகுமுறையிலான திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க முடியுமென உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்துக்கான உபதலைவர், இஸ்ஸாபெல் கியூறேறோ குறிப்பிட்டார்.

போஷாக்கின்மையின் பாதிப்பால், தெற்காசியாவில் இளம் சிறுவர்கள், குழந்தைகள் மரணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதல் வழக்கு சி.ஐ.டி. பொறுப்பதிகாரிக்கு அழைப்பாணை

sri-lanka-airport.jpgகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காத குற்றப்புலனாய்வுப்பிரிவு விசேட விசாரணைப்பகுதி பொறுப்பதிகாரிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.ஏ.ரி. ரட்னாயக்க முன்னிலையில் நடைபெற்ற போது இந்த அழைப்பாணையை நீதிபதி பிறப்பித்தார்.

முக்கியமான வழக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து எந்த ஒரு அதிகாரியும் நீதிமன்றத்திற்கு வருவதில்லை என நீதிபதியின் கவனத்திற்கு சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி பொறுப்பதிகாரியை மன்றில் ஆஜராகுமாறு நீதிபதி அழைப்பாணை பிறப்பித்தார்.

2001 ஜூலை 24 ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன். இரத்தின சிங்கம் புஷ்பகுமரன், விக்டர் அல்பிறட் டொமினி, சுப்பிரமணியம் தவராஜசிங்கம், நாகேந்திரம் நாகலஷ்மன் மற்றும் தனபாலசிங்கம் ஜெயலக்ஷ்மி ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எதிரிகளில் சுப்பிரமணியம் தவராஜசிங்கம் என்பவர் சிலரால் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக எதிரிகளின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வழக்கில் 422 சாட்சிகள் உள்ளன. அவர்களில் அதிகமானோர்கள் பொலிஸார். கட்டு நாயக்க விமான நிலையத்தாக்குதலில் பதினொரு விமானங்கள் அழிக்கப்பட்டன. இருபத்தைந்து விமானங்கள் சேதமடைந்தன.

அத்துடன் விமானப்படையைச் சேர்ந்தவர்கள் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட பலர் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.