அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

மக்களின் தகவலறியும் உரிமையை இந்த அரசு பறித்துள்ளதாக ஊடக அமைப்புகள் கண்டனம்

tamil_news_bulletin_.jpgபி.பி.சி. தமிழோசை ஒலிபரப்பு நிறுத்தப்பட்டதன் மூலம் இலங்கை அரசு மக்களின் தகவலறியும் உரிமையை பறித்துள்ளதாக ஊடக அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. இது தொடர்பாக சுதந்திர ஊடக இயக்கம் உட்பட ஐந்து ஊடக அமைப்புகள் விடுத்துள்ள அறிக்கையில்; பி.பி.சி. தனது நாளாந்த தமிழ், சிங்கள, ஆங்கில நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக ஒலிபரப்புவதை இடை நிறுத்தியுள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலுள்ள அரச அதிகாரிகளால் இந்த நிகழ்ச்சி தொடர்ந்தும் தணிக்கை செய்யப்பட்டு வந்ததால் பி.பி.சி. இந்த முடிவை எடுத்துள்ளது.

பி.பி.சி. நிகழ்ச்சியை தணிக்கை செய்தது மக்களின் தகவல் அறிந்து கொள்ளும் உரிமையைப் பறிப்பதாகும். பி.பி.சி. நிறுவனம் இணையத்தளம் மூலம் உலகெங்கும் வாழும் எந்தவொருவருக்கும் நேரடியாக செவிமடுக்கக் கூடிய இந்த பி.பி.சி. நிகழ்ச்சி ஒப்பந்தத்தின் படி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சேவைகளிலும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த சிலரால் நிகழ்ச்சியின் சில பகுதிகளை தணிக்கை செய்து ஒலிபரப்பாக்குவது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலுள்ள அரச “கோமாளிகளின்’ கோமாளித்தனமான செயற்பாடாகும்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூலம் பி.பி.சி. நிகழ்ச்சியை ஒலிபரப்ப இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கும் பி.பி.சி. நிறுவனத்துக்குமிடையிலான ஒப்பந்தத்தின் படி அந்த நிகழ்ச்சி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூலம் உள்ளபடியே ஒலிபரப்பப்பட வேண்டும். பி.பி.சி. இலங்கை அரசின் வானொலிச் சேவையின் வளர்ச்சிக்கு நிதியுதவி மற்றும் தொழில்நுட்பம் போன்ற அம்சங்களில் பங்களிப்புச் செய்வதென்பதே ஒப்பந்தத்தின் மூலம் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாடாகும். அந்த நிகழ்ச்சியை தணிக்கை செய்து ஒலிபரப்புவது ஒப்பந்தத்தை மீறுவதாகும். மக்களது தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையைப் பறிக்கும் ஜனநாயக விரோத செயற்பாடாகும்.

பி.பி.சி. நிகழ்ச்சி குறித்து ஏதாவது பிரச்சினை அரசுக்கு இருந்தால் இவ்வாறான ஜனநாயக விரோத செயற்பாட்டை மேற்கொள்ளாது பி.பி.சி.க்கும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் படி பேச்சுவார்த்தை மூலம் இணக்கப்பாட்டுக்கு வந்து இலங்கை மக்களுக்கு இலங்கை ஒலிபரப்புச் சேவையின் மூலம் முன்னரைப் போல் செவிமடுக்க வசதி செய்யும் படி இலங்கை மக்களுக்கு தகவல் அறிந்து கொள்வதற்கு அரசமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள உரிமையை வழங்கும் படி கேட்டுக் கொள்கின்றோம்.

வவுனியாவில் நலன்புரி நிலையங்களுக்கு சமைத்த உணவு வழங்குவோருக்கு கடும் நிபந்தனைகள்

children-srilanka-02.jpgஇடம் பெயர்ந்து வந்துள்ள வன்னிப்பகுதி மக்கள் வவுனியாவில் தங்கியுள்ள நலன்புரிநிலையங்களுக்கு சமைத்த உணவு வழங்குபவர்களுக்கு சில நிபந்தனைகள் விடுக்கப்பட்டுள்ளது. தரமற்ற, அளவு குறைந்த, பழுதடைந்த உணவு வகைகள் நலன்புரிநிலையங்களுக்கு விநியோகித்தால் கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது.

உணவுப்பொதிகளில் ஈரம் வெளியே கசியாதவாறு கடுதாசியினால் பொதியிடப்படவேண்டும். விநியோகத்திற்கு முன்னர் உணவுப் பார்சலுடன் கச்சேரிக்கு தினமும் குறித்த நேரத்தில் சமூகமளித்து பரிசோதனையின் பின்னரே அவை விநியோகத்திற்கு அனுமதிக்கப்படும் என மாவட்ட செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தந்தப் பிரிவு கிராமசேவையாளருடைய சிபார்சுடனேயே உணவு விநியோக ஒப்பந்தம் வழங்கப்படுகின்றது. காலை உணவாக கௌப்பி, பாண், நூடில்ஸ் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. இரவு உணவுப் பொதி 250 கிராம் கொண்டதாகவும் மதிய உணவுப் பொதி (சோறு) 600 கிராம் கொண்டதாகவும் இருக்கவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது

வன்னியில் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் அதிரடிப்படையின் 25 முகாம்கள் – பிரதிப் பொலிஸ்மா அதிபர் சரத்சந்திர தெரிவிப்பு

sri-lanka-police.jpgவன்னியில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் விசேட அதிரடிப் படையின் 25 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரியும் பிரதிப்பொலிஸ்மா அதிபருமான கே.எம்.எல். சரத்சந்திர கூறுகையில்;

தற்போது வன்னியில் 24 பிரதான முகாம்கள் உட்பட 25 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. “ஏ9′ வீதியில் ஓமந்தை முதல் மாங்குளம் வரை முகாம்களும், ஓமந்தை முதல் மணலாறு வரை 8 முகாம்களும், வவுனியா பூந்தோட்டப் பகுதியில் 8 முகாம்களும் , கனகராஜன் குளம் நெடுங்கேணி வீதியில் உப முகாமொன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்தப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடும் இவர்கள் இங்கு இராணுவத்தினரின் நடவடிக்கைகளுக்கும் உதவி வருவதாகவும் தெரிவித்தார்.

நாயக்கர்சேனை வாக்களிப்பு நிலைய அதிகாரிக்கு எதிராக தேர்தல் திணைக்களம் நடவடிக்கை

sri-lanka-election.jpgவடமேல் மாகாண சபைத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் நாயக்கர்சேனை பாடசாலையின் வாக்களிப்பு நிலையத்தில் பணிபுரிந்த தலைமை அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேர்தல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புத்தளம் கச்சேரியில் இந்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்குப் பெட்டியை திறந்து வாக்குச் சீட்டுகளை எண்ண ஏற்பாடு செய்யப்பட்ட போது 16 வாக்குச் சீட்டுகள் இரண்டாக மடிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன.

இது தொடர்பாக புத்தளம் தெரிவத்தாட்சி அதிகாரி தேர்தல் ஆணையாளருக்கு முறையிட்டிருந்தார்.  இதனையடுத்து தேர்தல் ஆணையாளர் இந்த வாக்களிப்பு நிலையத்தில் இடம்பெற்ற வாக்களிப்பு மோசடியால் அதன் வாக்களிப்பை இரத்துச் செய்வதாக அறிவித்திருந்ததுடன், புத்தளம் மாவட்ட முடிவுகளும் வெளியிடப்படவில்லை.

இந்த வாக்களிப்பு நிலைய வாக்குப் பெட்டிக்குள் மோசடியான முறையில் வாக்குச் சீட்டுகள் காணப்பட்டதையடுத்து அந்த நிலைய தலைமை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இவர் மதுரங்குளிப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆழ்ந்த கவலை தரும் ஐ.நா.வின் போக்கு – புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர்

p_nadesan.jpgமனிதத்துவத்தின் அதி உன்னத நிறுவனமான ஐ.நா.வின் போக்கு ஆழ்ந்த கவலையையும் புதிரையும் ஏற்படுத்தியிருப்பதாகவும் அப்பாவித் தமிழ் மக்களின் நலன்களையும் உயிரையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை அந்த அமைப்பு மேற்கொள்ளவில்லையெனவும் விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.  என்ன நடக்கின்றது என்று நேரில் வந்து பார்க்காமல் தவறான பக்கத்தை குற்றம் சாட்டும் பிரயோசனமற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக நடேசன் கூறியுள்ளதாக “தமிழ் நெற்’ இணையத்தளம் தெரிவித்தது.

யுத்தத்தை நிறுத்துவதே இந்த நேரத்தில் தேவைப்படுவதாகும். அதற்கு இடமளித்துக் கொண்டு பொதுமக்கள் துன்பங்களுக்காக கவலை தெரிவிப்பது தவறான கொள்கையாகும் என்றும் நடேசன் கூறியுள்ளார். ஐ.நா.வின் கொழும்பு அலுவலகம் மற்றும் யுனிசெப் விடுத்த அறிக்கைகள் தொடர்பாக தமிழ் நெற்றுக்கு நடேசன் தெரிவித்திருப்பதாவது;

இடம்பெறும் யுத்தம் பொதுமக்களுக்கு சகல விதமான துன்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஆதலால் உடனடியாக யுத்தம் நிறுத்தப்பட வேண்டும். பேச்சுவார்த்தைக்கு இடமளிக்கப்பட வேண்டும். புலிகள் யுத்தத்தை ஆரம்பிக்கவில்லை. அவர்கள் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு ஆயத்தமாக உள்ளார்கள். ஆதலால் பொதுமக்களின் துன்பம் தொடர்பாக கரிசனையுடைய உலக அரசாங்கங்களும் சர்வதேச அமைப்புகளும் யுத்தத்தை நிறுத்துமாறு இலங்கை அரசைக் கோர வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக யுத்தத்துக்கு இடமளிக்கும் கடுமையான நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் உள்வாங்கிக் கொண்டுள்ளது. புலிகளுக்கு எதிரான யுத்தம் என்று இலங்கை அரசாங்கம் கூறுகிறது. ஆனால், முழுமையாக தமிழருக்கு எதிராகவே மேற்கொள்ளப்படுகின்றது உண்மையாகும்.

கொழும்பின் யுத்தத்தை நியாயப்படுத்துவதும் பொதுமக்கள் இழப்புகள் தொடர்பாக கவலைப்படுவதுமான இரட்டைத் தனமான கொள்கை அடிப்படையில் தவறானதாகும். இந்தத் தவறான நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள ஐ.நா. கடுமையாக உழைக்க வேண்டும். மனித உயிர் , கௌரவம், மனித உரிமைகளை உறுதிப்படுத்துதல் என்பவற்றை மோதல் வலயத்தில் மட்டுமல்லாது முழுத்தீவிலும் உறுதிப்படுத்த பணியாற்ற வேண்டும்.

வன்னியிலுள்ள பொதுமக்களின் உடனடிக்கவலைகள், தாக்குதல் பயத்திலிருந்தும் விடுபடுவதும் மருந்து , உணவு, நீர் மற்றும் தமது கிராமங்கள் வீடுகளுக்கு அச்சமின்றி திரும்பிச் செல்வதுமாகும். இந்தக் கவலைகளுக்கு எதிராக புலிகள் செயற்படவில்லை. தற்காலிக மோதல் நிறுத்தக் கோரிக்கையைக் கூட கொழும்பு செவிமடுக்கவில்லை என்பதை ஐ.நா. நன்கறியும். உணவு, மருந்து விநியோகத்திற்கும் அனுமதியில்லை. ஆதலால் பொதுமக்களின் கவலைகளுக்கு பரிகாரம் காணும் விடயத்தில் ஐ.நா. தவறான விதத்தில் குற்றம் சாட்டுகிறது.

அத்துடன் 18 வயதுக்கு குறைந்த எவரையும் அமைப்பில் புலிகள் இணைத்துக்கொள்ளவில்லை. பொதுமக்கள் தமது சொந்த விருப்பத்திலேயே எமது பகுதிக்குள் இருக்கின்றனர்

உலகில் திறமை மிக்கவர்கள் படையினர் என்றால் ஏமாற்றுவதில் அரசு திறமை மிகுந்தது- கபீர் ஹாசிம் கூறுகிறார்

sri-lanka-parliment.jpgஅரச படையினர் பயங்கரவாதிகளை தோற்கடித்த உலகின் திறமை மிகு படையினர் என்றால், அரசாங்கமோ மக்களை ஏமாற்றுவதில் திறமை மிக்கதாக இருப்பதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கபீர் ஹாசிம் நாட்டு மக்கள் தொடர்பான பல பிரச்சினைகள் இருக்கும் நிலையில் அரசாங்கமோ யுத்த வெற்றியில் மூழ்கிக் கிடப்பதாகவும் சுட்டிக் காட்டினார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற, சுங்கக் கட்டளை சட்டத்தின் கீழான இறக்குமதி தீர்வைகள் சம்பந்தமான தீர்மானம் மற்றும் 2007 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க ஒதுக்கீட்டு சட்டத்தின் பிரகாரமான கட்டளை மீதான விவாதத்தில் பேசும் போதே கபீர் ஹாசிம் எம்.பி.இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்; அரசாங்கம் புகழின் உச்சத்தில் இருக்கும் சந்தர்ப்பத்திலேயே இந்த மத்திய மற்றும் வட மேல் மாகாண சபை, தேர்தல் நடைபெற்றிருக்கிறது. இதற்கும் அரசாங்கம் பல உபாயங்களை கையாண்டது. எமது படையினர் பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடிந்த உலகின் சிறந்த படையினர் என்றால், அரசாங்கமோ, மக்களை ஏமாற்றுவதில் திறமை மிக்கதாக இருக்கிறது.

பயங்கரவாதிகளுக்கு எதிராக எமது படையினர் பல வெற்றிகளை பெற்ற போதிலும், அரசியல் வாதிகளே மலர் மாலைகளை அணிந்து கொள்கின்றனர். இதேநேரம், காயமடைந்தவர்களுக்கு சத்திர சிகிச்சை செய்வதற்கான மருந்துகள் காலாவதியாகி விட்டமையால், தற்போது, அந்த மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. நாட்டின் சுகாதார அமைச்சர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவராக இருக்கும் போதே நாட்டில் இந்த நிலைமை நிலவுகிறது.

நாட்டு மக்கள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் இருக்கும் நிலையில், அரசாங்கமோ யுத்த வெற்றியில் மூழ்கிக் கிடக்கிறது. நாட்டின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.கிராமிய அபிவிருத்தி மற்றும் பொருளாதார எழுச்சிக்கான சிறந்த சந்தர்ப்பம் இது. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்குரியதே என்றார்.

இடம்பெயரும் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளுக்கு நிதி தேவைப்படுவதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிப்பு

red-cross.jpgமோதல் நடைபெறும் பகுதிகளில் இருந்து இடம்பெயரும் மக்களின் மனிதாபிமான பணிகளை முன்னெடுக்க நிதி உதவி தேவைப்படுவதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இப் பணிகளுக்காக நிதி உதவி வழங்க விருப்புவோர் கொழும்பு 10, ஹைட் பார்க், இலங்கை வங்கிக் கிளையின் 8860012 என்ற கணக்கிலக்கத்துக்கு பணத்தை அனுப்பி வைக்க முடியுமென சங்கம் அறிவித்துள்ளது.

இடம்பெயரும் மக்களுக்காக தேவைப்படும் மனிதாபிமான உதவிகள் தொடர்பாக செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ள தகவல் மேலும்; பொருள் உதவிகளை வழங்க விரும்புவோர் பால்மா, பிஸ்கட், குடிநீர், போத்தல்கள், துணிகள், சுத்திகரிக்கப்பட்ட ஆடைகள், படுக்கை விரிப்புக்கள், துவாய், சவர்க்காரம், பற்பசை மற்றும் தேவையான பொருட்களையும் வழங்கி உதவ முடியும்.

நீர்தாங்கி மூலமாக குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மக்களின் வசதி கருதி ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்ட 50 நவீன மலசலகூடங்களுடன் புதிதாக 50 மலசலகூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மக்களுக்கு தேவைப்படும் மருத்துவ உதவிகள் மூன்று அம்புலன்ஸ் வண்டிகள் மற்றும் தொண்டர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வவுனியாவை நோக்கி இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து வவுனியா செஞ்சிலுவைச் சங்கக்கிளை மனிதாபிமான பணிகளை முன்னெடுப்பதற்கு வசதியாக 25 தொண்டர்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. வவுனியா வைத்தியசாலையில், சிகிச்சைப்பணிகளுக்காக 60 ஆண், பெண் பணியாளர்கள் சுழற்சி முறையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான சேவைகள் அநுராதபுரம் வைத்தியசாலையிலும் வழங்கப்படுகின்றன.

திருகோணமலை வைத்தியசாலைக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் கொண்டு வரப்பட்ட நோயாளிகளுக்கு திருகோணமலை செஞ்சிலுவைச் சங்கமும் உதவிகளை வழங்கிவருவதாகவும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது

புலிகளின் விமானத்தின் பகுதிகள் படையினரால் வட்டக்கச்சியில் மீட்பு!

ltte_aircraft.pngமுல்லைத்தீவு வட்டக்கச்சி பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் புலிகளினது விமானங்களின்; சில பகுதிகளைக் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. விமானத்துக்குரிய சில உதிரிப்பாகங்கள் தப்பியோடிய புலிகளால் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானங்கள் தொடர்பான கைநூலொன்றும் அவற்றை இயக்கும் முறைகள் அடங்கிய வரைபடங்களும் இப்பிரதேசத்திலிருந்து படையினரால் மீட்கப்பட்டுள்ளன. இங்கு விமானங்களை உருவாக்கும் முயற்சியிலும் அவற்றை இயக்கும் பயிற்சியிலும் புலிகள் ஈடுபட்டுள்ளனர் என படையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இப்பிரதேசத்திலிருந்து மோட்டார் இயந்திரங்களின் பாகங்கள் அலுமினியத் தகடுகள்,  ஆணிகள் தயாரிக்கும் இயந்திரங்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் அறிவித்துள்ளது. 

மதுரையிலும் போலீஸ்-வக்கீல்கள் மோதல்

சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும்  இடையே நடந்த வரலாறு காணாத மோதலை அடுத்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை உயர்நீதிமன்ற வளாகத்தில் காவலுக்கு நின்றிருந்த போலீசார்களை தாக்கி தங்களது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டனர்.பதிலுக்கு போலீசாரும் திருப்பி தடியடி கொடுத்தனர். நிலைமை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதனால் மதுரையில் பெரும் பதட்டம் நிலவுகிறது.

ஏ 35 வீதி படையினர் வசம்!

udaya_nanayakkara_.jpgமுல்லைத் தீவு மாவட்டத்திலுள்ள ஏ 35 வீதியை படையினர் இன்று முழுமையாக கைப்பற்றியுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்

இந்த வீதியை மீட்பதற்காக இடம்பெற்ற மோதலில் புலி உறுப்பினர்கள் 23 பேர் கொல்லப்பட்டனர் எனவும்   கைப்பற்றப்பட்ட பகுதியில் தொடர்ந்தும் தேடுதல் மெற்கொள்ளப்பட்டு வருவதோடு படையினர் அங்கு நிலை கொண்டுள்ளனர் எனவும் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.