அரச படையினர் பயங்கரவாதிகளை தோற்கடித்த உலகின் திறமை மிகு படையினர் என்றால், அரசாங்கமோ மக்களை ஏமாற்றுவதில் திறமை மிக்கதாக இருப்பதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கபீர் ஹாசிம் நாட்டு மக்கள் தொடர்பான பல பிரச்சினைகள் இருக்கும் நிலையில் அரசாங்கமோ யுத்த வெற்றியில் மூழ்கிக் கிடப்பதாகவும் சுட்டிக் காட்டினார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற, சுங்கக் கட்டளை சட்டத்தின் கீழான இறக்குமதி தீர்வைகள் சம்பந்தமான தீர்மானம் மற்றும் 2007 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க ஒதுக்கீட்டு சட்டத்தின் பிரகாரமான கட்டளை மீதான விவாதத்தில் பேசும் போதே கபீர் ஹாசிம் எம்.பி.இவ்வாறு கூறினார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்; அரசாங்கம் புகழின் உச்சத்தில் இருக்கும் சந்தர்ப்பத்திலேயே இந்த மத்திய மற்றும் வட மேல் மாகாண சபை, தேர்தல் நடைபெற்றிருக்கிறது. இதற்கும் அரசாங்கம் பல உபாயங்களை கையாண்டது. எமது படையினர் பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடிந்த உலகின் சிறந்த படையினர் என்றால், அரசாங்கமோ, மக்களை ஏமாற்றுவதில் திறமை மிக்கதாக இருக்கிறது.
பயங்கரவாதிகளுக்கு எதிராக எமது படையினர் பல வெற்றிகளை பெற்ற போதிலும், அரசியல் வாதிகளே மலர் மாலைகளை அணிந்து கொள்கின்றனர். இதேநேரம், காயமடைந்தவர்களுக்கு சத்திர சிகிச்சை செய்வதற்கான மருந்துகள் காலாவதியாகி விட்டமையால், தற்போது, அந்த மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. நாட்டின் சுகாதார அமைச்சர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவராக இருக்கும் போதே நாட்டில் இந்த நிலைமை நிலவுகிறது.
நாட்டு மக்கள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் இருக்கும் நிலையில், அரசாங்கமோ யுத்த வெற்றியில் மூழ்கிக் கிடக்கிறது. நாட்டின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.கிராமிய அபிவிருத்தி மற்றும் பொருளாதார எழுச்சிக்கான சிறந்த சந்தர்ப்பம் இது. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்குரியதே என்றார்.