மோதல் நடைபெறும் பகுதிகளில் இருந்து இடம்பெயரும் மக்களின் மனிதாபிமான பணிகளை முன்னெடுக்க நிதி உதவி தேவைப்படுவதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இப் பணிகளுக்காக நிதி உதவி வழங்க விருப்புவோர் கொழும்பு 10, ஹைட் பார்க், இலங்கை வங்கிக் கிளையின் 8860012 என்ற கணக்கிலக்கத்துக்கு பணத்தை அனுப்பி வைக்க முடியுமென சங்கம் அறிவித்துள்ளது.
இடம்பெயரும் மக்களுக்காக தேவைப்படும் மனிதாபிமான உதவிகள் தொடர்பாக செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ள தகவல் மேலும்; பொருள் உதவிகளை வழங்க விரும்புவோர் பால்மா, பிஸ்கட், குடிநீர், போத்தல்கள், துணிகள், சுத்திகரிக்கப்பட்ட ஆடைகள், படுக்கை விரிப்புக்கள், துவாய், சவர்க்காரம், பற்பசை மற்றும் தேவையான பொருட்களையும் வழங்கி உதவ முடியும்.
நீர்தாங்கி மூலமாக குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மக்களின் வசதி கருதி ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்ட 50 நவீன மலசலகூடங்களுடன் புதிதாக 50 மலசலகூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மக்களுக்கு தேவைப்படும் மருத்துவ உதவிகள் மூன்று அம்புலன்ஸ் வண்டிகள் மற்றும் தொண்டர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வவுனியாவை நோக்கி இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து வவுனியா செஞ்சிலுவைச் சங்கக்கிளை மனிதாபிமான பணிகளை முன்னெடுப்பதற்கு வசதியாக 25 தொண்டர்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. வவுனியா வைத்தியசாலையில், சிகிச்சைப்பணிகளுக்காக 60 ஆண், பெண் பணியாளர்கள் சுழற்சி முறையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான சேவைகள் அநுராதபுரம் வைத்தியசாலையிலும் வழங்கப்படுகின்றன.
திருகோணமலை வைத்தியசாலைக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் கொண்டு வரப்பட்ட நோயாளிகளுக்கு திருகோணமலை செஞ்சிலுவைச் சங்கமும் உதவிகளை வழங்கிவருவதாகவும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது