அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

சர்வகட்சிக்குழு இவ்வாரம் முக்கிய தீர்மானம்; ஐ.தே.கவுடன் பேசவும் முடிவு

Minister Tissa Vitharanaஇனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் தொடர்பில், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு இவ்வாரம் தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

இவ்வாரத்துடன் குழுவின் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகக் கூறிய அமைச்சர் விதாரண, அதன் பின்னர் ஐ. தே. க. வின் கருத்தை அறிய, அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவுள்ளதாகக் கூறினார்.  சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கூட்டம் கடந்த இரு வாரங்களாக நடைபெறவில்லை. எனவே, இந்த வார இறுதிக்குள் கூடி கட்சிகளிடையே இணக்கப்பாடொன்றை ஏற்படுத்த எதிர் பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

தீர்வுத் திட்டம் தொடர்பில் ஐ. தே. க. வுடன் பேச்சு நடத்தப்பட்டதன் பின்னர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை அழைத்துப் பேச உள்ளதாக அமைச்சர் கூறினார். அதனைத் தொடர்ந்து தீர்வு யோசனைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படுமென்று அமைச்சர் தெரிவித்தார்.

வன்னியிலிருந்து பொதுமக்களை வெளியேற்ற பொருத்தமான ஏற்பாடு வேண்டும்; உதவத்தயார் – டில்லி கொழும்புக்குத் தெரிவிப்பு

navy_rg.jpgஇலங்கையில் மோதல் பகுதியிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்குப் பொருத்தமானதும் நம்பிக்கையூட்டுவதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பைக் கேட்டிருக்கும் இந்திய அரசாங்கம் இதற்கு உதவியளிக்கத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது. மோதல் பகுதியில் அகப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதியளிக்க வேண்டுமென்று சர்வதேச ரீதியாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலந்துரையாடுவதற்கான விருப்பத்தைப் புலிகள் தெரிவித்திருப்பதாக செய்திகளில் நாம் பார்த்தோம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர் விஷ்ணு பிரகாஷ் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கிறார்.

இதனடிப்படையிலேயே இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்குப் பொருத்தமானதும் நம்பிக்கையானதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கையையும் அக்கறையுடைய ஏனையவர்களையும் இந்தியா கேட்டுக் கொள்கின்றது என்றும் விஷ்ணு பிரகாஷ் கூறியுள்ளார்.

அதேசமயம் இடம்பெயர்ந்தவர்கள் வெளியேற்றப்படுவதை சர்வதேச நிறுவனங்களும் மேற்பார்வை செய்யும் ஏற்பாடுகளும் உள்ளடக்கப்படக் கூடியதாக இருக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, பாதுகாப்பு வலயங்களுக்கு இருதரப்பும் மதிப்பளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் சிறிய தொகையினர் கடல் மார்க்கமாக வெளியேற்றப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டியிருப்பதுடன் தரை, கடல்மார்க்கமாக அதிக எண்ணிக்கையானோரை வெளியே கொண்டு வரும் நடவடிக்கையை சாத்தியமானதாக மாற்றுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் புதுடில்லி வேண்டுகோள் விடுத்திருக்கிறது. அதேவேளை, அப்பாவிப் பொதுமக்களை வெளியே கொண்டு வரும் நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவிகளை வழங்க இந்தியா ஆயத்தமாக இருப்பதாகவும் அத்துடன், அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்கள், மருந்துகள், மருத்துவ உதவிகளை வழங்கத் தயாரெனவும் வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர் கூறியுள்ளார். மேலும், காயமடைந்த மற்றும் நோயாளிகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் ஏற்பாடுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் பொருளாதார நிலைகள் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தக் கூடும் -இராணுவத் தளபதி சரத் பொன்சேகா

sarath_f_jaffna.pngவிடுதலைப் புலிகள் தென்னிந்தியாவின் பொருளாதார மற்றும் பொதுமக்கள் இலக்குகள் மீது விமானத்தாக்குதல்களை நடத்தக் கூடுமென இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா எச்சரித்துள்ளார். படையினரின் தாக்குதல்களால் ஏற்பட்டிருக்கும் விரக்தி நிலை காரணமாகவே விடுதலைப்புலிகள் இந்தியாவை இலக்காகக் கொள்ளக் கூடுமென இந்திய தினசரி பத்திரிகையொன்றுக்கு வழங்கியிருக்கும் பேட்டியில் லெப். ஜெனரல் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அண்மையில் கொழும்பு மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல் முயற்சியின் போது விடுதலைப்புலிகளின் இரு விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதையடுத்து, புலிகளின் வான் பலம் அதிகளவில் குறைக்கப்பட்டுள்ள போதிலும் இந்திய இலக்குகளைத் தாக்கும் திறன் இன்னும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்திய மத்திய அரசாங்கம் விடுதலைப்புலிகளின் வழியில் நீண்டு இழுபட்டுக் கொண்டிராமல் தற்போது பொதுமக்களின் நிலைமைகள் பற்றி மட்டுமே பேசுவதால் விடுதலைப் புலிகளும் தென்னிந்தியாவிலுள்ள அவர்களது அனுதாபிகளும் ஆத்திரமடைந்துள்ளனர் என்று இலங்கை இராணுவத் தளபதி தெரிவித்திருப்பதாகவும் அந்தப் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

அவர்கள் (புலிகள்) இலங்கையின் வடக்கு, கிழக்கு முழுவதுமாக பறந்து வந்து கொழும்பிலுள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு மீண்டும் திரும்பிச் செல்லும் திறனைக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் இந்தியாவிலும் இதையே செய்ய முடியும் என்றும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியிருக்கிறார். இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல் நடவடிக்கை மூலம் விடுதலைப் புலிகளின் 7 விமான ஓடுபாதைகளும் கைப்பற்றப்பட்டுவிட்ட போதிலும் கூட அவர்களால் கொழும்பு மீது விமானத் தாக்குதல் நடத்த முடிந்தமையானது இந்தியாவுக்கான அச்சுறுத்தல் நம்பக் கூடியதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விடுதலைப் புலிகளின் தாழப் பறக்கும் விமானத்தைக் கண்டறிவது கடினமென்பதுடன் அதற்கு இந்தியாவினுள் 150170 கிலோ மீற்றரை விட அதிகமான தூரம் சென்று இலகுவாகத் தாக்குதல்களை நடத்த முடியுமென்று சரத் பொன்சேகா கூறியிருக்கிறார். இதேநேரம் அது தற்கொலைத் தாக்குதல் நடவடிக்கையாக இருந்தால் விமானத்துக்கு மேலும் நீண்ட தூரம் உள்ளே பயணிக்க முடிவதுடன் விமானம் திரும்பியும் வராது என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.

இதேவேளை, இடம்பெயர்ந்த தமிழ்ப் பொதுமக்களை மோதல்கள் நடைபெறும் பிரதேசத்திலிருந்து வெளியேற அனுமதிப்பதில்லையென குற்றஞ்சாட்டி விமர்சனங்கள் அதிகரித்திருக்கும் நிலையில், இந்தியாவை இலக்கு வைப்பதால் விடுதலைப் புலிகளுக்கு ஏதேனும் பயன் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கும் லெப். ஜெனரல் பொன்சேகா; ராஜீவ் காந்தியை (இந்திய முன்னாள் பிரதமர்) இந்திய மண்ணிலேயே படுகொலை செய்யுமளவிற்கு போதுமானளவு துணிச்சலோ அல்லது முட்டாள்த்தனமோ புலிகளுக்கு இருந்தது. அவர்கள் சமாதானத்தையோ அல்லது பேச்சுகளையோ நம்பவில்லை. தற்போது, அவர்கள் முல்லைத்தீவில் வெறும் சுமார் 35 சது கிலோமீற்றர் பரப்புடைய நிலப்பரப்பிற்குள்ளும் 20 சதுர கிலோமீற்றர் பரப்புடைய கடற்கரை பிரதேசத்திற்குள்ளும் முடக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரக்தியடைந்துள்ளனர் என்று கூறியிருக்கிறார்.

பிரணாப் முகர்ஜீ கலந்து கொள்ள மாட்டார்

Pranab_Mukherjeeஇலங்கையில் நடைபெறவுள்ள சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜீ கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைமைகளின் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என அவர் இறுதி நேரத்தில் முகர்ஜீ அறிவித்துள்ளார். பிரணாப் முகர்ஜீக்கு பதிலாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஈ.அஹமட் கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தனிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

sampanthan.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 5 மணி நேரமாக  விசாரணைகளை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும், ஈழப் போராட்டம் நிறைவடையாதென நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
 

நிவாரணக் கிராமங்களில் தொற்று நோய்களை தடுக்க சுகாதார அமைச்சு தீவிர நடவடிக்கை

navy_rg.jpgவவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரணக் கிராமங்களில் பொக்களிப்பான் மற்றும் தொற்று நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் பொது சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹீபால நேற்றுத் தெரிவித்தார்.

பொக்களிப்பான் மற்றும் தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சகல மருந்துப் பொருட்களும் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்ப தாகவும் அவர் குறிப்பிட்டார். புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ள மக்கள் வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் 14 நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இக்கிராமங்களில் பொக்களிப்பான் பரவும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பது குறித்து தெரிவிக்கப்படும் ஐயப்பாடு தொடர்பாகக் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்; நிவாரணக் கிராமங்களில் தங்கி இருப்பவர்கள் எவராவது தொற்று நோய்க்கு உள்ளானால் அவர்களைத் தங்க வைக்கவென தனியான வார்ட்டு தொகுதியும் வவுனியாவில் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.

ஆகவே, தொற்று நோய்கள் பரவுமென எவரும் அச்சப்படத் தேவையில்லை. புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து தப்பி வந்த ஒரு சிலர் மத்தியில் பொக்களிப்பான் தொற்று காணப்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டன. இந்நோய்களின் பரவுகை வவுனியா நிவாரணக் கிராமங்களில் கிடையாது என்றார்.

சிவிலியன்களை விடுவிக்க சம்மதித்தால் உரிய நடவடிக்கைக்கு அரசாங்கம் தயார்

mahinda_samarasinghe.jpgசிவிலியன்களைத் தமது பிடியில் இருந்து விடுவிப்பதாக புலிகள் ஒரு தெளிவான அறிவிப்பைச் செய்வார்களாயின் அதற்காக அரசாங்கம் எவ்வகையான நடவடிக்கையையும் மேற்கொள்ளத் தயாரென மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். அரசாங்கமும், சர்வதேச சமூகமும் விடுக்கும் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து புலிகள் ஒரு தெளிவான பதிலை அறிவித்தால், சிவிலியன்கள் எவ்வகையிலும் பாதிப்படையாதிருப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியுமென அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.

சிவிலியன்களின் பாதுகாப்பான வெளியேற்றத்துக்காக இருதரப்பும் மோதல்களை இடைநிறுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி விவகார அமைச்சர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டுமென்றும், வன்முறைகளையும், பயங்கரவாதத்தையும் கைவிடுமாறும் அறிக்கையொன்றின் மூலம் இயக்கத்தைக் கோரியுள்ளன.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சரமசிங்க, ‘இந்தத் தருணத்திலாவது புலிகள் சாதகமாகப் பதில் அளிக்க வேண்டும். சர்வதேச சமூகத்தின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புலிகள் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால், அவர்கள் பிடித்த பிடியாய்த் தடுத்து வைத்திருக்கிறார்கள். தற்போது படையினர் புதுக்குடியிருப்பை நெருங்கிவிட்டார்கள். அதனால், சிவிலியன்கள் இனி வந்துவிடுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சிவிலியன்கள் வெளியேறினாலும் புலிகள் இயக்கத்தினரை எதிர்கொண்டாக வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் சமரசிங்க, அவ்வாறான நிலைமையில் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு படையினரிடம் சரணடைய வேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்தார். நாம் மோதல்களை இடைநிறுத்துவதற்குத் தயாராக இருக்கின்றோம். புலிகள் அமைப்பு இதற்கு இணக்கம் தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் தான் எதனையும் செய்ய முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், நியுயோர்க்கில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில், இலங்கைப் பிரச்சினை தொடர்பில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்குப் பதில் அளித்த அவர் :-

‘ஐ. நா. மனிதாபிமானப் பணிகளுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் அண்மையில் மிகச் சிறப்பான ஒரு விஜயத்தை இலங்கைக்கு மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதி உள்ளிட்ட சிரேஷ்ட தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். அரசாங்கத்திற்கும், புலிகள் இயக்கத்துக்குமிடையில் மோதல்கள் தீவிரமாக உள்ள பகுதிகளில் சிவிலியன்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனைத் தவிர்ப்பதற்கும் சிவிலியன்கள் பாதுகாப்பாக வெளியேறி விடுவிப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் மோதலை இடைநிறுத்த வேண்டும். இது மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், மேலும் சிவிலியன் உயிரிழப்பைத் தடுப்பதற்கும் மிக அத்தியாவசியமானது என்று ஐ. நா. செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அரசியல் பேச்சுவார்த்தை மூலமான நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு சகல தரப்பினரும் பங்காற்ற வேண்டுமென்றும் பான் கீ மூன் கேட்டுக்கொண்டுள்ளார்.

நலன்புரி முகாம்களிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோரை உறவினர்களுடன் சென்று வசிக்க அனுமதி

red-cr.jpgஇடம் பெயர்ந்து வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களில் தங்கியிருக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோரை முகாமுக்கு வெளியே உறவினர்களுடன் சென்று வசிக்க அனுமதிப்பதென்று அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முகாமுக்கு வெளியே தமது உறவினர்களுடன் சுதந்திரமாக வசிப்பதற்கு 60 வயதுக்கு மேற்பட்டோரை அனுமதிக்க முடியுமென்று வவுனியா அரச அதிபர் திருமதி பி.எஸ்.எப் சாள்ஸ் தெரிவித்துள்ளார். வவுனியாவிலுள்ள 15 இடைத்தங்கல் முகாம்களில் தற்போது வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த 31,504 பேர் உள்ளனர். இடம் பெயர்ந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டோர் தமது உறவினர்களின் உதவியின்றி தமது வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாத நிலையில் உள்ளனர். இதனை கவனத்தில் கொண்டு அவர்களது உறவினர்களுடன் சென்று வசிப்பதற்கு அனுமதித்துள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார்.

ஏற்கனவே 60 வயதுக்கு மேற்பட்டவர்களை விடுவித்துள்ளோம். இனங்காணப்பட்ட மேலும் 73 பேர் ஒரு முகாமில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பெற்றோரை தவறவிட்ட 4 சிறுவர்கள் மீண்டும் தமது உறவினரை கண்டுபிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு தற்போது அவர்கள் தமது பெற்றோருடன் இணைந்துள்ளனர்.

இன்னும் சில சிறுவர்களின் பெற்றோரை தேடிவருகிறோம். இவ்வாறு உறவுகளை தவறவிட்டவர்களுக்கும் உதவும் வகையில் தேவையான தகவல்களை வழங்கவென நேரடித் தகவல் தொடர்பாடல் வசதியொன்றை அரசாங்கம் நடைமுறைப் படுத்தவுள்ளதாகவும் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

ஜனநாயக நாடு என்ற வகையில் எத்தகைய சக்திகளுக்கும் நாம் அடிபணிய தேவையில்லை – பிரதமர்

pm-srianka.jpgஇலங்கை இறைமையும் சுயாதிபத்தியமும் கொண்ட தனித்துவமான நாடு. எந்த வெளிநாட்டு சக்திகளும் இதில் தலையிட இடமளிக்க முடியாதென பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.  சர்வதேச நாடுகள் சில யுத்த நிறுத்தம் ஒன்றுக்கான அழுத்தம் கொடுத்து வருகின்றன. இலங்கை ஏகாதிபத்தியத்திடமிருந்து சுதந்திரம் பெற்று நீண்டகாலங்களாயிற்று.  தற்போது இந்நாடு ஜனநாயகம், கெளரவமிக்க சுதந்திரமான நாடு. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசொன்றைக் கொண்ட நாடு என்ற வகையில் எத்தகைய சக்திகளுக்கும் நாம் அடிபணியத் தேவையில்லை யெனவும் பிரதமர் தெரிவித்தார்.

ஹொரணை மக்கள் இராணுவத்தினருக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துவ உபகரணங்களை அன்பளிப்புச் செய்யும் முக்கிய நிகழ்வொன்று நேற்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.  இந்நிகழ்வில் பிரதமர் மேலும் தெரிவித்ததாவது,

பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் நாம் ஏணியின் இறுதிப்படியில் தற்போது இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் நாம் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டிய காலம் இது.  யுத்த நிறுத்தம் பற்றி பேசப்படுகிறது. புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்தால் மட்டுமே அதுபற்றி யோசிக்க முடியும். ஆயுதங்களைக் கையில் ஏந்திக்கொண்டு யுத்த நிறுத்தம் என்பது முடியாதது. பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டியுள்ளது.

ஜனநாயகமும் பயங்கரவாதமும் ஒரே கட்டிலில் உறங்க முடியாது. இதனை நான் பிரதமராகப் பதவியேற்று முதல் தடவையாகப் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது குறிப்பிட்டிருந்தேன். இன்றைய அரசாங்கம் மட்டுமல்ல எந்த அரசாங்கத்துக்கும் இது பொருந்தும். பால் பொங்கி வரும்போது அதில் சாணத்தை இடுவது போன்று பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கும் இறுதித் தருணத்தில் சிலர் யுத்த நிறுத்தம் பற்றி அழுத்தம் கொடுக்கிறார்கள். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு உதவாமல் அதற்கு ஆசீர்வாதம் வழங்க முற்படுபவர்கள் தேசத் துரோகிகாளவர்.

பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதே அரசாங்கத்தின் நோக்கம். இதில் பெருமளவு புலிகள் பலியாவதைப் போன்றே இராணுவத்தினரும் பலியாகின்றனர். அதனை எவரும் மறுக்க முடியாது. பயங்கரவாதத்தை ஒழிக்கும் இலக்குக்கான அர்ப்பணிப்பே இது. இந்த வகையில் நாம் படையினருக்கு தற்போது செய்வது போதாது. அவர்களுக்கு முழுமையாக உதவவும் ஆதரவு வழங்கவும் நாம் தயாராக வேண்டும். அவர்களைப் பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எமக்குள்ளது இலங்கை மட்டுமே. எமக்கு வேறு நாடு கிடையாது. நாம் வேறு எந்த நாட்டுக்குப் போவது? அதனால் தாய்நாட்டை பாதுகாக்க வேண்டியது முக்கியம். அதனைப் படையினர் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளும்போது படையினரை நாம் பாதுகாப்பது மிகவும் முக்கியம். அதற்காக எம்மை நாம் அர்ப்பணித்துச் செயற்பட வேண்டும்.  அபிவிருத்தியிலும் பொருளாதாரத்திலும் நாம் நாட்டைக் கட்டியெழுப்புவதுடன் ஒழுக்கம், பண்பாடு, தொழில்வாய்ப்புகள் நிறைந்த நாடாகவும் இலங்கையைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இராணுவப் பதவி நிலை உயரதிகாரி மேஜர் ஜெனரல் என். விஜேசிங்க உட்பட உயரதிகாரிகள் பலரும், ஹொரணை இங்கிரிய பிரதேச மக்களும் கலந்துகொண்டனர்.

கலைஞர் உண்ணாவிரதம் இருக்க வேண்டாம்: மருத்துவர்கள்

karunanithy.jpgமுதல்வர் கருணாநிதி அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் தற்போது உண்ணாவிரதம் இருக்கக் கூடாது என்றும், அவரோடு சேர்ந்த அரசியல் தொண்டாற்றுகிற அவரது நெருங்கிய நண்பர்கள் தான் பொறுப்பேற்று அவரை நல்ல முடிவெடுக்கத் தூண்ட வேண்டும் என்றும் முதல்வரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மாதம் 26ஆம் தேதியன்று சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தாங்க முடியாத முதுகு வலியுடன் உள்நோயாளியாக சேர்ந்த முதல்வர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு பரிசோதனைகளை செய்து பார்த்து, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்ற சோதனைகளை நடத்திப் பார்த்து, அவரது முதுகுத் தண்டில் எல்.2 – எல்.3 இவற்றுக்கிடையே தசைப் பிடிப்பு இருப்பதை அறிந்து அதற்கு அறுவை சிகிச்சை செய்வது ஒன்றுதான் சரியான வழி என்பதை மருத்துவக் குழுவினர் முடிவு செய்தனர்.

டெல்லியில் இருந்து டாக்டர் அரவிந்த் ஜெயஸ்வால் அவர்களையும் வரவழைத்து கலைஞரைப் பரிசோதிக்கச் செய்தோம். ராமச்சந்திரா மருத்துவ மனையில் எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் மார்த்தாண்டம் அவர்களை தலைமையில் 14 மருத்துவர்களை கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. அனைவரும் இணைந்து எடுத்த முடிவின்படி அறுவை சிகிச்சை செய்யலாம் என்று முடிவு செய்தபோது, முதல்வர் கருணாநிதி அவர்களின் இந்த வயதில் இவ்வளவு அபாயகரமானதும், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதுமான அறுவை சிகிச்சையை மேற்கொள்வது பற்றி அய்யப்பாடுகள் தோன்றிய போதிலும், வேறு வழியில்லாத நிலையில் அறுவை சிகிச்சையை கடந்த 11ஆம் தேதி மேற்கொண்டோம்.

சுமார் மூன்றரை மணிநேரம் அறுவை சிகிச்சை நடைபெற்று அனைவரும் மகிழத் தக்க வண்ணம் முதல்வர் கலைஞரின் முதுகு வலி நீங்கியது. இதுபற்றி அன்றையதினமே செய்தியாளர்களைச் சந்தித்து விவரங்களைக் கூறினோம்.

அறுவை சிகிச்சைக்கு பின் செய்யப்பட வேண்டிய சிகிச்சைகள் அனைத்தும் முழுமையாக நடைபெற்று அவரது உடல்நிலை தேறி வந்தது. அறுவை சிகிச்சையின்போது போடப்பட்ட ஐந்து தையல்களில் (23.02.09) இரண்டு தையல்கள் பிரிக்கப்பட்டு விட்டன. இன்னும் மூன்று தையல்கள் பிரிக்கப்பட வேண்டும். (25.02.09) டெல்லியில் இருந்து டாக்டர் ஜெயஸ்வால் அவர்கள் மீண்டும் சென்னைக்கு வரவிருக்கிறார்.

அப்போது எஞ்சிய மூன்று தையல்களும் பிரிக்கப்பட உள்ளன. அதன் பின்னரே முதல்வர் இல்லம் திரும்புவது பற்றி முடிவு செய்ய வேண்டும். இதற்கிடையே வெளியே நடைபெறும் அரசியல் சூழ்நிலைகள் முதல்வர் கருணாநிதியை, மனோரீதியாகப் பெரிதும் பாதிப்பதும், அந்தப் பிரச்சினைகளிலே அவர் அதிக அக்கறை செலுத்துவதும், ஓய்வெடுக்காமல் அதைப்பற்றியே அதிகாரிகளையும், கட்சித் தலைவர்களையும் அழைத்துப் பேசுவதும, திடீரென்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருப்பதும் நன்றாக தேறி வருகின்ற அவரது உடல்நிலையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தை எங்களிடையே தோற்றுவித்துள்ளது.

எனவே அவர் மேலும் சில நாட்கள் ஓய்வெடுத்துக்கொண்டு, உடல்நலம் முழுவதுமாக தேறிய பின்னர் உண்ணாவிரதம் பற்றி யோசித்து முடிவெடுப்பது உசிதமாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். இது அவருடைய உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் முடிவெடுக்க வேண்டிய பிரச்சனை என்பதால், இதில் அவரோடு சேர்ந்த அரசியல் தொண்டாற்றுகிற அவரது நெருங்கிய நண்பர்கள் தான் பொறுப்பேற்று அவரை நல்ல முடிவெடுக்கத் தூண்ட வேண்டும். எங்களுக்கும் மேலாக, எங்களையும் கடந்து தரப்படக் கூடிய நல்ல மருந்தாக அதுதான் இருக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.