வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரணக் கிராமங்களில் பொக்களிப்பான் மற்றும் தொற்று நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் பொது சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹீபால நேற்றுத் தெரிவித்தார்.
பொக்களிப்பான் மற்றும் தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சகல மருந்துப் பொருட்களும் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்ப தாகவும் அவர் குறிப்பிட்டார். புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ள மக்கள் வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் 14 நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இக்கிராமங்களில் பொக்களிப்பான் பரவும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பது குறித்து தெரிவிக்கப்படும் ஐயப்பாடு தொடர்பாகக் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்; நிவாரணக் கிராமங்களில் தங்கி இருப்பவர்கள் எவராவது தொற்று நோய்க்கு உள்ளானால் அவர்களைத் தங்க வைக்கவென தனியான வார்ட்டு தொகுதியும் வவுனியாவில் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.
ஆகவே, தொற்று நோய்கள் பரவுமென எவரும் அச்சப்படத் தேவையில்லை. புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து தப்பி வந்த ஒரு சிலர் மத்தியில் பொக்களிப்பான் தொற்று காணப்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டன. இந்நோய்களின் பரவுகை வவுனியா நிவாரணக் கிராமங்களில் கிடையாது என்றார்.