தீவிர வாதத்துக்கு எதிராக தேசிய அளவில் அனைவரும் ஒன்றிணைந்து பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தெரிவித்தார். மங்களூரில் பள்ளி மாணவர்களிடையே நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலாம் கலந்து கொண்டார். அப்போது “நானும் எனது இந்தியாவும்” என்ற தலைப்பில் கலாம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது :
தீவிரவாதம் நமது நாட்டுக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அதை வேருடன் அழிக்க வேண்டும். இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும். அப்போது மட்டுமே தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க முடியும். தீவிரவாதத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து தேசிய அளவில் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும். தீவிரவாதம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். தீவிரவாதத்தில் சில இளைஞர்கள் ஈடுபட வறுமை, வேலையின்மையும் ஒரு காரணமாகும். அதே நேரத்தில் குறிப்பிட்ட சில நாடுகள் அரசியல் நோக்கத்தோடு தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றன.
இதைக் கருத்தில் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை தீவிரவாதத்துக்கு எதிராக தனிப்படையை ஏற்படுத்த வேண்டும். எங்கு தீவிரவாதம் தலைதூக்கினாலும் அங்கு ஐ.நா. சபை அனுப்பிவைக்கப்பட்டு தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக ஆக்க வேண்டும் என்பது எனது குறிக்கோள். இதற்கு இளைஞர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். அப்போது மட்டுமே இந்த இலக்கை அடைய முடியும். விவசாயம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், அடிப்படைக் கட்டமைப்பு பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றார் கலாம்.