அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

வன்னி மக்களைக் காப்பாற்றுமாறு தமிழ்க்கூட்டமைப்பு வேண்டுகோள் – உலக நாடுகளிடம் 4 கோரிக்கைகள் முன்வைப்பு

gajenthiran.jpg
தாக்குதல்களில் இருந்து உடனடியாக வன்னி மக்களை காப்பாற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு அனைத்துலக நாடுகளிடம் நான்கு கோரிக்கைகளை பகிரங்கமாக முன்வைத்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கடந்த இரண்டரை மாதங்களில் மட்டும் 2,150 பேர் படையினரின் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். 5,000 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் ஒவ்வொரு நாளும் 40 முதல் 50 பேர் வரை கொல்லப்படுவதாகவும் கூட்டமைப்பின் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், பிரதித் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா, யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கையெழுத்திட்டு ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

வன்னிப் பெருநிலப் பரப்பில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1015 தடவை இடம்பெயர்ந்து இருப்பிடம் இன்றி மரநிழல்களிலும் காடுகளுக்குள்ளும் வாழ்ந்து வருகின்றனர்.

இடைவிடாத தாக்குதல்களுக்கு அஞ்சி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். 3,30,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஆனால், அரசாங்கம் 70 ஆயிரம் மக்கள் மாத்திரமே வன்னிக்குள் இடம்பெயர்ந்திருப்பதாக கூறுகின்றது.

அரசாங்கம் பொய்ப் பிரசாரங்களை செய்துவருகின்றது.உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும் அமைச்சர்கள் கூறுகின்றனர். இங்கு அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் எதுவும் இல்லாத நிலையில் அரசாங்கம் உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறுகின்றது.

வன்னிப் பிரதேசங்களுக்கு அரசாங்கம் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அனுப்பியுள்ளதாகக் கூறியபோதும் மிகவும் குறைந்தளவிலான பொருட்களே இங்கு அனுப்பப்படுகின்றன.

வன்னியிலுள்ள மருத்துவமனைகள் எல்லாம் படையினரின் தாக்குதல்களில் சேதமடைந்துள்ளன. மாத்தளன் மருத்துவமனை இயங்குகின்றது. அதுவும் சத்திர சிகிச்சை வசதிகள், வெளிநோயாளர் வசதிகள் எதுவும், மருந்துகள், மருத்துவர்கள் இல்லாத நிலையில் இயங்குகின்றது.

எந்தவித வசதிகளும் இன்றி தற்காலிகமாக புதுமாத்தளன் பகுதியில் மருத்துவமனை ஒன்று இயங்குகின்றது. அதனை நம்பித்தான் 3,30,000 மக்கள் வன்னியில் வாழ்கின்றனர்.

ஆகவே நான்கு கோரிக்கைகளை அனைத்துலக நாடுகளின் கவனத்திற்கு உடனடியாக முன்வைக்கின்றோம். மனித அவலங்களைத் தடுத்து மக்களைக் காப்பாற்றுவதற்கு அனைத்துலக நாடுகள் போரை நிறுத்த உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

வன்னியில் உள்ள 3,30,000 மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் மருந்துப் பொருட்கள், உணவுகள் ஆகியவற்றை உடனடியாக அனுப்பிவைக்க வேண்டும். அத்துடன் மக்கள் தங்கியிருப்பதற்கான கூடாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பாளர் குழுவும் மற்றும் அனைத்துலக மனித நேய அமைப்புகளும் மக்களுடன் தங்கியிருப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

பாதிப்புக்குள்ளான இடங்களுக்கு உள்ளூர், அனைத்துலக ஊடகங்கள் சென்று உண்மை நிலைமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் இடமளிக்கப்படவேண்டும்.

அனைத்துலக நாடுகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லையானால் பெரும் மனித அவலங்களில் இருந்து தமிழ் மக்களை பாதுகாக்க தவறிவிட்டீர்கள் என்றுதான் கருதவேண்டிய நிலை ஏற்படும் என அந்த அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் உணவு பொருட்கள் 142 தொன் இறக்கப்பட்ட நிலையில் கப்பல் திருகோணமலை திரும்பியது

ltte_attack.pngவன்னிப் பகுதிக்கு கப்பல் மூலமாக  நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்ட உணவுப் பொருட்களில் ஒருபகுதி அன்று மாலையே இறக்கி கரை சேர்க்கப்பட்ட நிலையில், மீதமுள்ள உணவுப் பொருட்கள் இறக்கப்படாமலே அந்த கப்பல் நேற்று திங்கட்கிழமை திருகோணமலைக்கு திரும்பியது.

அந்த கப்பல் மீது விடுதலைப் புலிகள் ஆட்லறி தாக்குதல் நடத்தியதாகவும், அதனாலேயே அந்த கப்பல் உணவுப்பொருட்களை தரையில் இறக்காமல் திருகோணமலைக்கு திரும்பியதாகவும் இலங்கை இராணுவத்தின் இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது.
 

வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் சொந்த மண்ணில் குடியேறும் நாள் வெகு தொலைவில் இல்லை – மீலாத் செய்தியில் ஜனாதிபதி

mahinda.jpgஇலங்கை வாழ் முஸ்லிம்கள் உலகெங்கிலுமுள்ள தமது முஸ்லிம் சகோதரர்களுடன் இணைந்து இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை நினைவுகூருவதை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

முஸ்லிம்களிடம் மிக முக்கியமான நாளாகக் கருதப்படும் இத்தினம், ஐக்கியத்தையும் சமாதானத்தையும் வலியுறுத்தி மிக முக்கியமான ஒரு சிறந்த சமய கலாசார பாரம் பரியத்தைக் கட்டியெழுப்பி ஆய்வு மற்றும் அறிவியல் சிந்தனைகளின் அபிவி ருத்திக்கு வித்திட்ட முஹம்மது (ஸல்) அவர்களுடைய போதனைகளைக் கவனத்திற்குக் கொண்டுவருகின்றது.

முஹம்மது (ஸல்) அவர்களின் போதனைகளின் வழி யில், இஸ்லாம் மனித சமூகத்தை சகோதரத்துவம், பரஸ்பர புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை என்பவற்றின்பால் வழி காட்டி அழைத்துச் செல்வதுடன் இன்று உலகெங்கிலும் பல்வேறு சமூகங்கள் மத்தியிலும் பெரும் அச்சுறுத்தலாக இருந்துவரும் பயங்கரவாதத்தையும் வன்முறையையும் நிராகரித்து அமைதியும் அகிம்சையும் நிறைந்ததொரு சிறந்த வழியைக் காட்டுகின்றது.

இலங்கையில் மீலாதுன் நபி விழா ஒரு தேசிய விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்வருட மீலாதுன் நபி விழாவை மாத்தறை மாவட்டத்தில் நடத்தி அங்குள்ள முஸ்லிம்களின் சமய, கலாசார நடவடிக்கை களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் எனது அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் சனநாயகத்தை ஏற்படுத்தி வட மாகாணத்தையும் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடு விப்பதற்காக மிக வேகமாக நடவடிக்கைகள் முனனெடுக் கப்பட்டுவரும் ஒரு சூழலில் இலங்கை முஸ்லிம்கள் இவ்வருட மீலாத் விழாவை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்றனர்.

இவ்விரண்டு மாகாணங்களில் இருந்தும் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்து அங்கு ஒரு தனியான இன ஆட்சியை ஏற்படுத்துவதையே பயங்கரவாதம் தனது இலக்காகக் கொண்டிருந்தது.

கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தங்களது சொந்த மண்ணில் திரும்பிச் சென்று ஏலவே இருந்த அன்பும் அமைதியும் நிறைந்த வாழ்க்கையை மீள ஆரம்பிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இந்த விசேட தினத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலவி எமது மக்கள் மத்தியில் புரிந்துணர்வும் சகிப்புத் தன்மையும் ஏற்பட வேண்டும் என்று அவர்களது பிரார்த்தனைகளில் நானும் இணைந்து கொள்கிறேன்.

அகதிகளுக்கு அடிப்படை வசதிகள்: அமைச்சர் ரிசாட் பதியுதீன் தகவல்

risard.jpgஇலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் பிரதேசத்தில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் வந்து, வவுனியா மாவட்டத்தில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான தங்குமிடம், உணவு, வைத்தியம் மற்றும் மாணவர்களுக்கு கல்வி வசதிகள் என்பன செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

வவனியா மாவட்டத்தில் தற்போது 3 நிவாரண கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்கள் தாங்கள் சமைத்து உண்பதற்குரிய வகையில் உணவுப்பொருட்கள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன், இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களுக்கு கூட்டு சமையல் முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியா அரச செயலகத்தில் இன்று நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் சர்வதேச தொண்டு நிறுவனங்களினதும், உள்ளுர் தொண்டு நிறுவனங்களினதும் பிரதிநிதிகளும், வவுனியா மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டார்கள்.

இலங்கை கடற்பரப்புக்குள் அரசாங்கத்தின் அனுமதியின்றி எந்த கப்பலும் வர முடியாது

rohitha_bogollagama.jpgஇலங்கைக் குச் சொந்தமான கடற்பரப்புக்குள் எந்தவொரு வெளிநாட்டு யுத்தக் கப்பலோ சரக்குக் கப்பலோ அரசாங்கத்தின் அனுமதியின்றி வரமுடியாதென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

அமெரிக்க இராஜதந்திரிகளின் உயர் மட்டக் குழுவொன்று வன்னியில் இடம் பெற்றுவரும் மோதல்களில் தமது யுத்தக் கப்பல்களை ஈடுபடுத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளை அமைச்சர் போகொல்லாகம முழுமையாக மறுத்தார்.

வெளிநாட்டு யுத்தக் கப்பல்களோ சரக்குக் கப்பல்களோ எமது கடல் எல்லைக்குள் வரவில்லையெனவும் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லையெனவும் அமைச்சர் அழுத்தமாக கூறினார். வெளி விவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கில் புலிப் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காகவும் புலிகளின் பிடியில் சிக்கியிருக்கும் சிவிலியன்களை விடுவி ப்பதற்காகவும் தாம் பல்வேறு நாடுகளு டன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி வருவதுடன் உதவிகளையும் நாடியுள் ளோம். தவிர வெளிநாடுகளின் இராணுவ உதவிகள் எமக்கு அவசிப்படாதெனவும் அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார்.

மோதல்களை மேலும் தீவிரமடையச் செய்து புலிப் பயங்கரவாதிகளை ஒரேயடியாக அழித்துவிட முடியும். ஆனால் நாம் அப்படிச் செய்யாததற்குக் காரணம் சிவிலியன்களே என்றும் அமைச்சர் தெரிவித்தார். சிவிலியன்களை பாதுகாப்பான முறயில் வெளிக்கொணர்வதற்கு அரசாங்கம் தம்மாலான முயற்சிகளை மேற்கொள்வ துடன் சர்வதேசத்தின் உதவிகளை நாடியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இம்மாநாட்டில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அத்துலத் கஹன லியனகே கருத்துத் தெரி விக்கையில், இதுவரையில் அரச கட்டு ப்பாட்டு பகுதிக்கு 30 ஆயிரத்து 579 சிவிலியன்கள் வருகை தந்திருப்பதாகவும் ஐ.சி.ஆர்.சி. யின் உதவியுடன் இறுதியாக 3 ஆயிரத்து 240 பேர் திருமலை வைத்திய சாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர்களுள் 2 ஆயிரத்து 806 பேர் திருமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

வடக்கிலுள்ள ஆஸ்பத்திரிகளுக்கு சகல நவீன மருத்துவ வசதிகளையும் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.இடம்பெயர்ந்துள்ள சிவிலியன்களின் மருத்துவ வசதிகளுக்காக வவுனியா, மன்னார் மற்றும் செட்டிக்குளம் ஆஸ்பத்திரிக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்டில்களை வழங்க இலங்கையிலுள்ள ஐ.நா. அமைப்பு இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் அமைச்சர் போகொல்லாகம கூறினார்.

இதேவேளை நேற்றுக் காலை திருகோ ணமலையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் மீது புலிகள் மேற் கொண்டுள்ள ஆட்டிலறி தாக்குதலை அரசாங்கம் சார்பாக தான் வன்மையாக கண்டிப்பதாகவும் அமைச்சர் போகொல் லாகம இச் செய்தியாளர் மாநாட்டின் போது குறிப்பிட்டார். இம்மாநாட்டில் நீதியமைச்சின் செயலாளர் சுகந்த கம்லத், அத்தியாவசிய சேவைகள் பிரதி ஆணையாளர் எ. லியனகே ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஏ-9 வீதி ஊடாக 12ம் திகதி யாழ் குடாவுக்கு மீண்டும் உணவுப் பொருட்கள்

lorries.jpgயாழ் குடாநாட்டுக்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு மேலும் 45 லொறிகள் நாளை மறுதினம் 12ம் திகதி கொழும்பிலிருந்து புறப்படவுள்ளதாக மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு நேற்று தெரிவித்தது.

‘ஏ-9’ வீதியூடாக இப்பொருட்கள் கொண்டு செல்லப் படவுள்ளதுடன், மாதாந்தம் 150 லொறிகளில் யாழ் குடாநாட்டுக்கு அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்லவும் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் யு. எல். எம். ஹால்தீன் தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் லொறிகள், அங்கிருந்து யாழ் குடா நாட்டு விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை இங்கு ஏற்றிவந்து சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

யாழ் குடாநாட்டுக்கு 350 மெற்றிக் தொன் உணவுகளை ஏற்றிக்கொண்டு 35 லொறிகள் நேற்றுக் கொழும்பு வெலிசறை உணவுக் களஞ்சியசாலையிலிருந்து புறப்பட் டுள்ளன.

இதனைத் தொடர்ந்து வாராவாரம் தொடர்ச்சியாக அத்தியாவசியப் பொருட்கள் யாழ் குடாநாட்டுக்கு அனுப்பப்படும். தெற்கில் போன்றே குறைந்த விலையில் யாழ் குடாநாட்டு மக்களுக்கு அத்தியாவசியப் பொருட் களைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் 115 சிவிலியன்கள் வருகை

navy_rg.jpgபாதுகாப்புப் பிரதேசத்துக்கு 115 பொது மக்கள் நேற்று வருகை தந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்திலிருந்து கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கியே 115 பொதுமக்களும் வருகை தந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய இம்மாதம் முதலாம் திகதி முதல் 1800 பொது மக்கள் வருகை தந்துள்ளதாக குறிப்பிட்ட பிரிகேடியர், கடல் மற்றும் தரை வழிகளைப் பயன்படுத்தி யாழ்., வவுனியா, திருகோணமலையை நோக்கி ஜனவரி முதல் இதுவரை 38, 477 பொது மக்கள் வருகை தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

படையினரிடம் தஞ்சமடைந்த 115 பொதுமக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் இராணுவத்தினர் செய்து கொடுத்துள்ளதாகத் தெரிவித்த அவர், வழக்கமான நடவடிக்கைகளுக்குப் பின்னர் அவர்களை நிவாரணக் கிராமங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் 2008இல் வீழ்ச்சி; பால்நிலைசார் அமைப்பு தகவல்

thinking.jpgபெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், 2007 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கடந்த வருடத்தில் வெகுவாக குறைவடைந்துள்ளதாக பால் நிலைசார் அமைப்பு தெரிவித்துள்ளது. உலகரீதியாக மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை ஆகக் கூடுதலாக தனமல்வில பிரதேசத்தில் காணப்பட்டதோடு, 2007 இல் இந்த எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் “மதட்ட தித்த’ செயற்திட்டத்தின் மூலமும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை மட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் காரணமாகவும் இந்த வன்முறைகள் வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைப்பின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டின் கீழ், பெண்கள் பங்கு கொள்ளும் தேசிய மட்டக் குழுவினால் நடத்தப்பட்ட மிதிப்பீட்டில், பால் நிலைசார் அமைப்புக்கு கடந்த வருடத்தில் வீட்டு வன்முறைகள் தொடர்பாக 103 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

வீட்டு வன்முறை தொடர்பாக கிடைத்துள்ள முறைப்பாடுகளில், மிக மோசமாக இடம்பெற்ற வெவ்வேறு தரத்திலான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 2008 ஜனவரி முதலாம் திகதிக்கும் 2008 டிசம்பர் 15 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில், பால் நிலை சார் அமைப்புக்கு மொத்தமாக 328 முறைப்பாடுகள் கிடைத்ததாகவும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனை அடுத்து ஆகக் கூடுதலாக, விவாகரத்து மற்றும் தாபரிப்பு தொடர்பாக 58 முறைப்பாடுகள் அமைச்சுக்கு கிடைத்துள்ளன. மேலும் பாலியல் தொந்தரவுக்குள்ளானமை தொடர்பாக 15 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதோடு, இதே காலப்பகுதியில் குடும்ப வன்முறைகள் தொடர்பாக 37 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பால் நிலைசார் அமைப்பு தெரிவித்துள்ளது.

கொலை, மற்றும் காயங்களை ஏற்படுத்தியமை தொடர்பாக 11 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதோடு, தொழில்வாய்ப்பு மற்றும் பதவிஉயர்வு தொடர்பாக மேலும் 11 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பாலியல் வல்லுறவு தொடர்பாக 8 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மு.கா. தலைவரின் தற்போதைய செயற்பாடுகளுக்கு முஸ்லிம் சமூகம் ஒருபோதும் துணைபோகக் கூடாது -அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

risard-badi.jpgமுஸ்லிம் சமூகம் தற்போதைய ஜனாதிபதிக்கும் அரசுக்கும் எதிரானவர்கள். இதன் மூலம் இச்சமூகம் எதனையும் பெற்றுக் கொள்ளக் கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் செயற்படுவதை அங்கீகரிக்க முடியாது என மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். புத்தளம் வேப்பமடு றஹ்மத் நகரில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஜும் ஆப் பள்ளிவாசலின் தலைவர் அஷ்ஷேய்க் பீ. நிஹ்மத்துல்லா தலைமையில் இவ்வைபவம் இடம்பெற்றது. இங்கு தொடர்ந்து அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உரையாற்றுகையில்; முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் தமது நேர்த்தியான சிந்தனையினாலும், அரசியல் ஞானத்தினாலும் இக்கட்சியின் பலத்தைக் கொண்டு ஆட்சியாளர்களையும் அரசாங்கங்களையும் தீர்மானிக்கும் வலிமையைக் கொண்டிருந்தார்.

பதவியே வாழ்க்கையென எண்ணி மமதையுடன் வாழும் மனிதர்களின் வரலாறுகளைக் காண சமூகம் அங்கீகரித்ததில்லை என்பதை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமை தெரிந்தும் தெரியாதது போல் செயற்படுகின்றது. இன்றைய முஸ்லிம் சமூகத்தினை படுகுழியில் தள்ளிவிடும் துயர்மிகு செயற்பாட்டை செய்துவரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைமையிடத்திலிருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் எம்மிடமுள்ளது.

எனது அரசியல் பிரவேசமானது பாதிக்கப்பட்டு நலிவுற்று காணப்படும் மக்களின் ஈடேற்றமும் விமோசனத்திற்காகவுமே ஆகும். இக்குறுகிய காலத்துக்குள் எனது முழுப் பலத்தையும் பயன்படுத்தி முடியுமான பணிகளை செய்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். எம். அபூபக்கர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மோசமான இடிமின்னல் அபாயம் உள்ளதாக மக்களுக்கு எச்சரிக்கை

climate.jpgநாட்டில் கடுமையான வரட்சிக்குப் பின்னர் மழை பெய்யத் தொடங்கியுள்ள இதே வேளை இடி, மின்னல் அபாயம் மிக மோசமாக இருக்கும் என்று வானிலை அவதான நிலையம் நேற்று எச்சரிக்கை விடுத்தது.

இடி, மின்னல் அபாயத்திலிருந்து பாது காப்புபெற்றுக் கொள்வதற்கு ஏற்ற வகையில் முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வரட்சியின் பின்னர் நாடெங்கிலும் மழை பெய்யக் கூடிய காலநிலை ஏற்பட்டிருப்பதாக வானிலை அவதான நிலைய அதிகாரியான சமிந்த டி சில்வா நேற்றுத் தெரிவித்தார். இதே நேரம் தென் கிழக்கு கடலில் உருவான தாழமுக்கம் இன்று வட கிழக்கு கடல் பரப்பின் ஊடாக இந்நாட்டின் கடற்பரப்பை விட்டு தூரமாகிச் செல்லும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தாழ முக்கம் காரணமாகவே யாழ்ப்பாணம், திருமலை, மட்டக்களப்பு உட்பட நாடெங்கிலும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. தாழமுக்க நிலை இன்று இந்நாட்டை விட்டு அகன்று விடும் என்றாலும் மாலை வேளையிலும், இரவிலும் அடுத்து சில தினங்களுக்கு இடி மின்னலுடன் நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கிறோம். இந்த நாட்களில் இடி, மின்னல் ஆபத்திலிருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்ளவென மக்கள் முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்வது மிக அவசியம்.

இதேநேரம் இந்நாட்டின் கடற்பரப்பிலும் இடியுடன் கூடிய மழை அடிக்கடி பெய்ய முடியும். வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் வடகிழக்காகவும், ஏனைய கடற்பரப்பில் வட மேற்காகவும் காற்று வீசும், இப்பகுதியில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 30 கிலோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வரை இருக்கும். ஆனால் வட பகுதி கடலில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு சுமார் 60 கிலோ மீட்டர் வரை இருக்கும். கடலில் சாதாரண கொந்தளிப்பு நிலை காணப்படும்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர த்தில் திருமலையில் 65.5 மி.மீ. மட்டக்களப்பில் 42.7 மி.மீ, மிஹிந்தலையில் 63.5 மி.மீ, களுத்துறையில் 58.5 மி.மீ, நீரேந்து பிரதேசங்களான போவத்தனவில்35.3 மி.மீ, லக்ஷபானவில் 13.8 மி.மீ, சமனலவெவவில் 12.6 ம.மி.மீ. உட் பட நாடு பூராவும் மழை பெய்துள்ளது என்றார்.