வடக்கு தெற்குக்கிடையிலான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் கலா நிலையமொன்று அமைக்கப்படவுள்ளது. தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் அனுசரணையில் சகல கலைஞர்களின் பங்களிப்புடன் யாழ்நகரில் இக்கலா நிலையம் அமையவுள்ளது.
இக்கலா நிலையம் திரையரங்கு, சன சமூக நிலையம், கலையரங்கு ஒத்திகை மேடை ஆகியவற்றை உள்ளடக்கியதாகவும் யாழ்ப்பாணத்துக் கட்டிடக் கலை சிறப்பம்சங்களைக் கொண்டதாகவும் நிர்மாணிக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கலா நிலையத்தை அமைப்பது தொடர்பாகக் கலந்துரையாடும் விசேட நிகழ்வும் பத்திரிகையாளர் மாநாடும் கொழும்பு திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றது.
திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜயந்த தர்மதாச தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் மாலினி பொன்சேகா, ரவீந்ர ரந்தெனிய உட்பட தெற்கின் முன்னணிக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர். இத் தேசியப் பணிக்கு அரசாங்கம் உதவ முன்வந்துள்ளதுடன் சகல கலைஞர்களும் தமது முழுமையான பங்களிப்பினை வழங்க முன்வந்துள்ளனர். அத்துடன் நாடளாவிய சகல சினிமாத் திரையரங்குகளினதும் ஒரு நாள் வருமானம் (மார்ச் 22 ஆம் திகதி) இதற்காக பெறப்பட வுள்ளதுடன் சகல திரையரங்குகளின் உரிமையாளர்களும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேற்படி கலாநிலையத்திற்கு பங்களிப்புச் செய்யும் வகையில் தெற்கில் கலை நிகழ்ச்சிகள் இசை நிகழ்ச்சிகளையும் நடாத்தி நிதி சேகரிக்கவும் கலைஞர்கள் முன்வந்துள்ளனர். கலா நிலையம் அமைப்பதற்கான காணியை அரசாங்கம் வழங்க முன்வந்துள்ளதுடன் மினி திரையரங்கை அமைப்பதற்கான நிதியை திரைப்படக் கூட்டுத்தாபனம் வழங்கவுள்ளது.
வடக்கு தெற்கிற்கான உறவின் கலைப்பாலமாக அமையும், இந் நடவடிக்கையில் எந்தவொரு அரசியலும் கலக்கப்படமாட்டாது. 30 வருட கால கசப்பான அனுபவங்களை ஒருபுறம் வைத்து விட்டு கலைஞர்களுக்கிடையில் சகோதரத்துவத்தைக் கட்டியெழுப்புவதே இதன் நோக்கமென நடிகை மாலினி பொன்சேகா தெரிவித்தார்.
சிங்களத் திரைப்பட வளர்ச்சிக்கு தமிழ்க் கலைஞர்கள் வழங்கிய பாரிய பங்களிப்பும் இந் நிகழ்வில் நினைவு கூரப்பட்டதுடன் மேற்படி பணிக்கு தமிழ் கலைஞர்களின் பங்களிப்புக்களும் பெறப்படுமென அவர் தெரிவித்தார்.