அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

1704 சிவிலியன்கள் கட்டுப்பாட்டு பகுதி வருகை

Wanni_Warமுல்லைத் தீவில் புலிகளின் பிடியிலிருந்து 1704 சிவிலியன்கள் நேற்றும் நேற்று முன்தினமும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.பாதுகாப்புப் பிரதேசத்தை நோக்கி நேற்று மாத்திரம் 1565 சிவிலியன்கள் வருகை தந்திருப்பதாக படையினர் தெரிவித்தனர்.

இதேவேளை நேற்று முன்தினம் புதுமாத்தளனிலிருந்து 139 சிவிலியன்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்துள்ளனர். இவர்களுள் 47 ஆண்களும், 38 பெண்களும், 27 இளைஞர்களும் 27 யுவதிகளும் அடங்குவதாகவும் படையினர் தெரிவித்தனர். இவர்கள் பாதுகாப்பான முறையில் பருத்தித்துறை மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள நிவாரணக் கிராமங்களுக்கு கடல் மார்க்கமாக அழைத்துச் செல்லப் பட்டதாகவும் ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

ஸ்ரீகொத்தா கூட்டத்திற்கு செல்லாது ரணில் பகிஷ்கரிப்பு

ranil-wickramasinghe.jpgஎதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை கட்சியின் தலைமைத்துவ பதவியிலிருந்து நீக்குவதற்கென ஸ்ரீகொத்தாவில் நேற்று மாலை நடத்தப்படவிருந்த இரகசிய வாக்கெடுப்புக்கு ரணில் விக்கிரமசிங்க சமுகமளிக்கவில்லை.

இதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மாலை இடம்பெற்ற கூட்டத்தில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்காது கூட்டத்தை ஒத்தி வைத்தனர். ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை சம்பந்தமாக இன்று (18) நடைபெறவுள்ள அரசியல் அதியுயர்பீட கூட்டத்தில் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நேற்று மாலை ஸ்ரீகொத்தாவில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவருக்கு அறிவித்தும் கூட அவர் மேற்படி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

 ஸ்ரீகொத்தாவுக்கு சமுகமளித்த ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர்கள் வேறு பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர். இதேவேளை கட்சி உறுப்பினர்கள் தமக்கு எதிர்ப்பு தெரிவிக்குமிடத்து தலைமைத்துவப் பதவியிலிருந்து தாம் விலகத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரிடம் தெரிவித்தி ருப்பதாகவும் தெரிய வருகிறது.

சிறுமி வர்ஷாவின் படுகொலை சந்தேக நபர்கள் ஆட்கடத்தல், கப்பம் கோரல், கொலைகள் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள்.

varsa.jpgதிருகோண மலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 6 வயது சிறுமியான ஜூட் ரெஜி வர்ஷாவின் படுகொலை தொடர்பாக கைதான சந்தேக நபர்கள் 5 பேரும் அவசரகால சட்ட விதிகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுத் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தேக நபர்களில் இருவர் பயன்படுத்திய தொலைபேசி இலக்கங்கள் தொடர்பாகவும் தமது விசாரணைகளில் விசேட கவனம் செலுத்தி வருவதாகப் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

அதேவேளை, சந்தேக நபர்கள் ஏற்கனவே இப்பிரதேசத்தில் இடம் பெற்ற 30இற்கும் மேற்பட்ட ஆட்கொலைகள், கப்பம், ஆட்கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வருகின்றது.

வர்த்தகர்கள் ,சினிமா திரையங்கு உரிமையாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கப்பம் பெற்றுள்ளமையும் தெரிய வந்துள்ளதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நபர்கள் கொலை செய்தவர்களின் சடலங்கள் கடந்த காலங்களில் நடுக்கடலில் வீசப்பட்டுள்ளன. சிறுமியின் சடலத்தையும் இதே பாணியில் கடலில் போடுவதற்கே இவர்கள் திட்டமிட்டிருந்த போதிலும் அன்றைய தினம் கடற்படையினரால் விதிக்கப்படடிருந்த மீன் பிடித்தடை காரணமாக அது சாத்தியப்படவில்லை என்றும் தமது விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாகப் பொலிஸார் கூறுகின்றனர்

உயிர் நீத்த படை வீரர்களின் குடும்பத்தினரை பாதூகாப்புச் செயலாளர் சந்தித்தார்

defence_sec.jpgஉயிர்நீத்த மற்றும் படுகாயமுற்ற இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்களை பாதூகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ (17) சந்தித்து உரையாடினார். அநுராதபுரம் சாலியபுரவில் அமைந்துள்ள கஜபா படைப்பிரிவின் முகாமில் இச்சந்திப்பு இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அதிகாரிகளும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

படை வீரர்களின் குடும்பத்தினரின் துயரங்களைக் கேட்டறிந்த பாதுகாப்புச் செயலாளர் அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
 
இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து வைபவத்தில் உரையாற்றிய அவர், தாய் நாட்டை மீட்பதற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்கள் எக்காலத்திலும் நினைவுகூரப்படுவர் என்றும் நாட்டுக்காக உயிர்நீத்த தேசிய வீரர்களின் பட்டியலில் அவர்கள் பெயர்கள் சேர்க்கப்படும் என்றும் கூறினார்.

இந்திய டாக்டர்கள் இராணுவத்தினர் அல்லர் பாராளுமன்றில் அமைச்சர் நிமல் தெரிவிப்பு

nimal.jpgஇந்தியாவிலிருந்து புல்மோட்டைக்கு வருகை தந்திருப்பவர்கள் இராணுவ டாக்டர்கள் அல்லர் என்று சபை முதல்வரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தியா தொடர்ந்தும் வழங்கி வருகின்ற முழுமையான ஒத்துழைப்பு காரணமாகவே பயங்கரவாதத்தை இந்தளவுக்கு ஒழிக்க முடிந்தது எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கைக்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்கி வருகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம ஆகியோர் இந்தியாவுடன் மேற்கொண்ட இராஜதந்திர மட்டத்திலான உறவுகளின் அடிப்படையில் இந்தியா மனிதாபிமான உதவிகளை இலங்கைக்கு வழங்கி வருகிறது.

புல்மோட்டைக்கு டாக்டர்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் இராணுவ டாக்டர்கள் அல்லர். இந்த விடயத்தை பிரதானமாக்கிக் கொண்டு ஜே. வி. பியினர் தங்களது போஸ்டர் பிரசாரத்துக்கான புதிய தொணியொன்றை ஏற்படுத்த முயற்சிக்கிறது எனவும் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இந்திய டாக்டர்கள் குழுவினர் இலங்கை வந்துள்ளமை தொடர்பாகவும், அவர்கள் புல்மோட்டையில் மருத்துவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை தொடர்பாகவும் ஜே. வி. பி. எம்.பி. அனுரகுமார திஸாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை சமர்ப்பித்துப் பேசினார்.

இலங்கை வந்துள்ள மருத்துவக் குழு இராணுவ மருத்துவக் குழு என்றும் அவர் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசும் போதே அமைச்சர் நிமல் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். புல்மோட்டை பொருளாதார ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அங்கு கனியப் பொருட்கள் உள்ளன. எனவே இந்த இந்திய டாக்டர்களின் புல்மோட்டை வருகையை ஜே. வி. பியினர் விமர்சனத்திற் குள்ளாக்குகின்றனர். ஜே. வி. பியினர் தேவையில்லாத கற்பனையை செய்து கொண்டு உச்சந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

மேலும் சுனாமி நேரத்தில் இந்தியா உதவி வழங்கிய போது ஏன் இந்தியாவின் உதவியை ஏற்கவில்லை என கேட்டனர். இப்போது ஏன் உதவியை பெறுகிaர்கள் என கேட்கிறார்கள் ஜே. வி. பி. இரட்டை வேடம் போட்டுக்கொண்டிருக்கிறது. புல்மோட்டையில் 45 கட்டில்களைக் கொண்ட நடமாடும் ஆஸ்பத்திரியே அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அடிப்படை சிகிச்சையை பெறுபவர்கள் பதவிய, கந்தளாய், திருமலை ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பப்படுவார்கள். உடனடியாக கழற்றி வேறு இடத்திற்கு கொண்டு செல்லக்கூடியவாறுதான் இந்த ஆஸ்பத்திரி இயங்குகிறது. இதனாலேயே இதனை நடமாடும் ஆஸ்பத்திரி என்று கூறுகிறோம். இது கூட தெரியாமல் நடமாடும் ஆஸ்பத்திரி என்றால் என்ன? என ஜே. வி. பி. கேள்வி கேட்கிறது.

இந்தியா பெருந்தொகையான மருத்துவப் பொருட்களை எமக்கு வழங்கியிருக்கிறது. அவர்களுக்கு தேவையான மருந்து வகைகள் அல்ல. எமது நாட்டிற்கு ஏற்ற எம்மால் வழங்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் மருந்துப் பொருட்களை வழங்கியிருக்கிறது. இந்தியா மட்டுமல்ல வெளிநாடுகள் பலவும் உதவி வழங்க முன்வந்துள்ளன. எவரையும் நாம் நிராகரிக்கவில்லை.

இந்திய டாக்டர்கள் இலங்கைக்கு வந்துவிட்டார்கள் என்பதற்காக இலங்கையின் இறைமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடாது. முப்படைகளுக்கும் நிரந்தர டாக்டர்கள் நியமனத்திற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. எனினும் ஒரு விண்ணப்பம் கூட வரவில்லை. நாட்டுப் பற்றாளர்கள் என கூறிக்கொள்பவர்களின் விண்ணப்பங்கள் கூட கிடைக்கவில்லை.

இந்த நிலையில் 50 டாக்டர்களை கட்டாயமாக முப்படையின் மருத்துவ பிரிவுக்கு அனுப்ப வேண்டி வந்தது என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

போரில் சிக்கியுள்ள பொதுமக்கள் நிலை குறித்து டில்லியில் ஆலோசனை

icrc-mp.gifஇலங்கையில் நடைபெற்று வரும் மோதல்களில் பெருமளவிலான பொதுமக்கள் இடையில் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து செவ்வாய்க்கிழமை புதுடெல்லியில் ஆலோசனை நடைபெற்றது.

மனித உரிமைகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் இந்தியத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான சுதர்சன நாச்சியப்பன் அவர்கள், கொழும்பில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் பால் கேஸ்டெல்லா மற்றும் புதுடெல்லியில் இருக்கும் பிராந்திய தலைவர் ஃபிராங்காய்ஸ் ஸ்டேம் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, இலங்கையில் நடைபெற்று வரும் போரில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்தும், அவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்தும் செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு புதிய வீடுகள் நிர்மாணித்து வழங்கப்படும்

house-in-srilanka.jpgவடக்கிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்காலத்தில் வீடமைப்பு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல தேசிய வீடமைப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்து வருவதாக தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளர் எல்.எஸ். பலன்சூரிய தெரிவித்தார்.

ஜேர்மன் தொழில்நுட்ப ஒத்துழைப்பு நிறுவனத்தின் நிதியுதவியுடன் 60 இலட்சம் ரூபா செலவில் மட்டக்களப்பு கல்லடியில் நிர்மாணிக்கப்பட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் புதிய அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்; யுத்தம் மற்றும் கடல்கோள் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு கடந்த இரண்டு வருடகாலத்தில் புதிய வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

யுத்தம் மற்றும் கடல்கோளினால் வீடுகளை இழந்த 15 ஆயிரம் குடும்பங்கள் இதனால், நன்மையடைந்தன. சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், மற்றும் சில அமைப்புகளின் நிதி உதவிகளுடன் இந்த வீடுகள் கட்டப்பட்டன.

கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த வீடமைப்பு நிர்மாண நடவடிக்கைகளைப் போலவே வட மாகாணத்திலும் வீடுகளை நிர்மாணிக்க ஆவண செய்யுமாறு வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

யுத்த சூழல் மாறி வடக்கில் சிவில் நிர்வாகம் ஏற்பட்ட பகுதிகளில் மக்கள் சென்று குடியேறும்போது அவர்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிக்க தேசிய வீடமைப்பு அதிகாரசபை உதவும்.

இதன்படி வடபகுதியில் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ளவும், இந்த வேலைத்திட்டத்தை வீடுகளைப் பெறுபவர்களின் பங்களிப்புடன் குறைந்த செலவில் செயற்படுத்தவும் வீடமைப்பு அதிகாரசபை திட்டமிட்டுள்ளது என்றார்.

“பொலிஸ் சோதனை நிலையங்கள் அமைத்தால் பல்கலைக்கழகங்களில் ஆர்ப்பாட்டம்’

kelaniya-sri-lanka.jpgபல்கலைக் கழகங்களினுள் பொலிஸ் சோதனை நிலையங்கள் அமைக்கப்படுமாயின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் இணைத்து ஆர்ப்பாட்டங்களை நடத்தப் போவதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ரஜரட்ட மற்றும் களனி பல்கலைக்கழகங்களில் பொலிஸ் சோதனை நிலையங்களை அமைப்பதற்கு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று திங்கட்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஒன்றியத்தின் இணைப்பாளர் உதேவ பிரேமரட்ன இதனைத் தெரிவித்தார்.

இவ்விரு பல்கலைக்கழகங்களிலும் சோதனை நிலையங்கள் அமைக்கப்படுவது தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த செயற்பாட்டை கைவிடுமாறு நாம் கோருகின்றோம். எமது வேண்டுகோளையும் மீறும் பட்சத்தில் இதற்குத் எதிர்ப்புத் தெரிவித்து அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் இணைத்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென்றார்.

கொழும்பு – யாழ்ப்பாண பஸ் சேவைகள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது

bus.jpgஏ9  பாதையூடாக கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் பஸ் போக்குவரத்தை ஆரம்பிக்க தனியார் பஸ் உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்து தன்னிடம் அது தொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ன தெரிவித்துள்ளார்.  இதன்படி சாதாரண தனியார் பஸ்களும் சொகுசு பஸ்களும் சேவையிலீடுபடவுள்ளன.

சுமார் 500 தனியார் பஸ்கள் ஏ9 பாதையூடாக சேவையிலீடுபடுவதற்கு தயாராகவுள்ளதாகவும் அவர் கூறினார். தெற்கில் இருந்து பௌத்த யாத்திரிகர்கள் நயீனாதீவுக்கு போய்வர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடமும் ஆலோசனை நடத்தியுள்ளோம். இதேபோல இ.போ.ச.பஸ்களும் இச் சேவையில் ஈடுபடவுள்ளன. இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சு அதிகாரிகள் பாதுகாப்புத் தரப்பினர்களுடன் பேச்சு நடத்தியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

“ஏ 9 வீதியூடாக வந்த உணவுப்பொருட்கள் தனியார் வர்த்தகர்களுக்கு வழங்கப்படும் ‘

lorries.jpgஅத்தியாவசிய சேவைகள் ஆணையாளரால் ஏ9 வீதியூடாக லொறிகளில் அனுப்பிவைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் தனியார் வர்த்தகர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே. கணேஷ் தெரிவித்துள்ளார்.  சிவப்பு நாட்டரிசி , கோதுமை மா, சீனி, பருப்பு, தேயிலை, லக்ஸ்பிறே, அங்கர் பால்மா வகைகள் என்பனவே இவ்வாறு வழங்கப்படவுள்ளன.

குடா நாட்டில் உணவுப்பொருட்களின் விலைகளை தரமாக கட்டுப்படுத்துவதற்காக கூட்டுறவு சங்கங்களுக்கு விற்பனை செய்யப்படும் விலைகளிலேயே தனியார் வர்த்தகர்களுக்கும் விநியோகிக்கப்படும் எனவும் அரச அதிபர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தின் கீழ் 2500 மெற்றிக்தொன் உணவுப்பொருட்கள் களஞ்சியங்களில் இருந்து தனியார் வர்த்தகர்களுக்கும் கூட்டுறவுச்சங்கங்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளன.

சிவப்பு நாட்டரிசி ஒரு கிலோ 75 ரூபாவுக்கும் சீனி ஒரு கிலோ 69 ரூபாவுக்கும் பருப்பு கிலோ 138 ரூபாவுக்கும் தேயிலை கிலோ 150 ரூபாவுக்கும் லக்ஸ்பிறே 400 கிராம் பைக்கட் 200 ரூபாவுக்கும் அங்கர் 400 கிராம் பைக்கற் 278 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளன.

கூட்டுறவுச்சங்கங்கள் தமக்கு தேவையான பொருட்களை இம்மாதம் 20 ஆம் திகதிக்கு முன்பும் தனியார் வர்த்தகர்கள் 21 ஆம் திகதிக்கு முன்பும் செயலக புனர்வாழ்வுப் பகுதியுடன் தொடர்பு கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார். இதேநேரம் குடாநாட்டில் பொருட்களுக்கு நிலவிய தட்டுப்பாடு நீங்கிவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.