அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரால் ஏ9 வீதியூடாக லொறிகளில் அனுப்பிவைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் தனியார் வர்த்தகர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே. கணேஷ் தெரிவித்துள்ளார். சிவப்பு நாட்டரிசி , கோதுமை மா, சீனி, பருப்பு, தேயிலை, லக்ஸ்பிறே, அங்கர் பால்மா வகைகள் என்பனவே இவ்வாறு வழங்கப்படவுள்ளன.
குடா நாட்டில் உணவுப்பொருட்களின் விலைகளை தரமாக கட்டுப்படுத்துவதற்காக கூட்டுறவு சங்கங்களுக்கு விற்பனை செய்யப்படும் விலைகளிலேயே தனியார் வர்த்தகர்களுக்கும் விநியோகிக்கப்படும் எனவும் அரச அதிபர் குறிப்பிட்டார்.
இத்திட்டத்தின் கீழ் 2500 மெற்றிக்தொன் உணவுப்பொருட்கள் களஞ்சியங்களில் இருந்து தனியார் வர்த்தகர்களுக்கும் கூட்டுறவுச்சங்கங்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளன.
சிவப்பு நாட்டரிசி ஒரு கிலோ 75 ரூபாவுக்கும் சீனி ஒரு கிலோ 69 ரூபாவுக்கும் பருப்பு கிலோ 138 ரூபாவுக்கும் தேயிலை கிலோ 150 ரூபாவுக்கும் லக்ஸ்பிறே 400 கிராம் பைக்கட் 200 ரூபாவுக்கும் அங்கர் 400 கிராம் பைக்கற் 278 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளன.
கூட்டுறவுச்சங்கங்கள் தமக்கு தேவையான பொருட்களை இம்மாதம் 20 ஆம் திகதிக்கு முன்பும் தனியார் வர்த்தகர்கள் 21 ஆம் திகதிக்கு முன்பும் செயலக புனர்வாழ்வுப் பகுதியுடன் தொடர்பு கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார். இதேநேரம் குடாநாட்டில் பொருட்களுக்கு நிலவிய தட்டுப்பாடு நீங்கிவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.