அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

பிரபாகரன்தான் போரை முன்னின்று நடத்துகிறார் – பா.நடேசன்

nadesan.jpgபிரபாகரன் எங்கும் ஓடவில்லை. அவர் உயிருடன்தான் இருக்கிறார். எங்களுடன்தான் இருக்கிறார். போரை முன்னின்று நடத்தி வருகிறார் என விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது…

கேள்வி: வன்னிப் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழர்கள் தப்ப முடியாமல் நீங்கள் தடுத்து வருவதாக இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளதே…?

நடேசன்: முதலில் சிக்கியுள்ள என்ற வார்த்தையே தவறானதாகும். இது எங்களது மக்களின் நிலம். காலம் காலமாக, பரம்பரை பரம்பரையாக இங்கு அவர்கள் வசித்து வருகின்றனர். அவர்களது நிலங்களை விட்டு, வீடுகளை விட்டு இலங்கை அரசு விரட்டியடிக்கும் வரை அங்குதான் வசித்து வந்தனர். அவர்கள் சிக்கித் தவிக்கவில்லை, மாட்டிக் கொள்ளவில்லை.

தங்களுக்கு மீண்டும் கவுரவத்துடன் தங்களது நிலம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் போராடி வருகிறார்கள்.

கேள்வி: பிரபாகரன் தற்போது எங்கு இருக்கிறார்?

நடேசன்: நீங்கள் சொன்னது போல எங்களது தலைவர் குறித்து நிறைய வதந்திகள், யூகங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் எங்களது தலைவர், எங்களது மக்களுடன்தான் இருக்கிறார் என்பதை மட்டும் என்னால் உறுதிப்படுத்த முடியும்.

கேள்வி: இனப்போரில், இந்தியாவின் நிலையை மாற்ற விடுதலைப் புலிகள் அமைப்பால் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்?

நடேசன்: இந்தியாவின் நலன்களுக்கு விரோதமாக நாங்கள் எதையும் செய்யவில்லை, அப்படிச் செய்யும் உத்தேசமும், எங்களிடம் இல்லை. இந்தியாவை நாங்கள் எதிரியாகவே பார்க்கவில்லை.

இந்தியாவின் தென் பகுதியின் பாதுகாப்பும், பலமும், ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் இங்குள்ள அரசியல் ஸ்திரத்தன்மையுடன் பின்னிப் பிணைந்தது.

கேள்வி: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால், இந்திய அரசு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தத் தயாராக இருப்பாரா, அப்படிப்பட்ட விருப்பம் அவரிடம் உள்ளதா?

நடேசன்: எந்தவித முன் நிபந்தனைகளும் விதிக்கப்படாமல் இருந்தால், ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னிறுத்தியதாக இருந்தால் நிச்சயம் பேசத் தயார். இந்தப் பிராந்தியத்தில் இந்தியாதான் வல்லரசு. இந்தியா எங்களது நண்பர். எங்கள் பக்கம் இந்தியா இருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் எப்போதும் விரும்புகிறோம். இந்தியா இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும் நாங்கள் கோரி வருகிறோம்.

கேள்வி: ஈழத் தமிழர்கள் பிரச்சினையை, தங்களது உள்ளூர் அரசியல் லாபங்களுக்காக தமிழக அரசியல் தலைவர்கள் பயன்படுத்திக் கொள்வதாக நினைக்கிறீர்களா?

நடேசன்: உள்ளூர் அரசியல் நிலவரங்களில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வேறுபட்ட கொள்கைகள், நிலைப்பாடுகள் இருப்பது சகஜமான ஒன்றுதான். இதுகுறித்து கருத்து கூற முடியாது.

இருப்பினும், தமிழக மக்கள் எங்களுக்கு வழங்கி வரும் ஒருமித்த ஆதரவை ஈழத் தமிழர்கள் முழுமையாக பாராட்டுகிறார்கள், மதிக்கிறார்கள். ஈழத் தமிழர்களின் இன்றைய பெரும் பலமே, தமிழக மக்களின் பேராதரவும், ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் உறுதியான ஆதரவும்தான் என்று கூறியுள்ளார் நடேசன்.

கிழக்கு பல்கலைக்கழக மாணவி தீக்குளித்து தற்கொலை

srilanka.jpgகிழக்கு பல்கலைக்கழகத்தில் பெண்கள் விடுதியில் இன்று காலை முல்லைத்தீவைச் சேர்ந்த மாணவியொருவர் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த ரவீந்திரன் சுதர்சனா ( வயது 23 ) என்ற கலைப்பீட மூன்றாம் ஆண்டு மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

விடுதி குளியல் அறைக்குள் தனக்கு தானே இம் மாணவி தீ மூட்டியமாகவும் ,மாணவியின் அவலக் குரல் கேட்டு அங்கு விரைந்த மாணவர்கள் குளியலறை கதவை உடைத்து உள்ளே நுழைந்து மாணவியை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிர் பிரிந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இப் பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் கடந்த ஒரு மாத காலத்திற்குள் முல்லைத்தீவைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும். முல்லைத்தீவிலுள்ள பெற்றோர் மற்றும் உறவினர்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 26 ம் திகதி முல்லைத்தீவைச் சேர்ந்த மற்றுமொரு மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

அமைச்சர் டக்ளசுடன் தொடர்புகொள்ள…

minister.jpgதங்களது தேவைகள், பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் எவ்வேளையிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் 011 2503467 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் பல்வேறு நிவாரணக் கிராமங்களிலும் நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள மக்களின் நலன்களைக் கவனிக்கவும் மக்கள் நலத்திட்ட பணிகளை முன்னெடுக்கவுமென கடந்த ஒரு வாரகாலமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வவுனியாவில் தங்கியுள்ள நிலையில் மேற்படி தொலைபேசி ஊடாக நேரடியாக அமைச்சருடனோ அல்லது அவரது உதவியாளருடனோ நேரடியாக தொடர்புகொண்டு தங்களது தேவைகள், பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகளை எவ்வேளையிலும் பொதுமக்கள் அறியத்தரலாம்.

44 வகையான விசேட மருந்துப் பொருட்களுடன் கிறீன்ஓஷியன் கப்பல் புதுக்குடியிருப்பு விரைவு

sb_diwarathnass.jpgபுதுக் குடியிருப்பு, புது மாத்தளன் பகுதியிலுள்ள மக்களுக்கென 44 வகையான விசேட மருந்துப் பொருட்களுடன் கிறீன்ஓஷியன் கப்பல் நேற்று மாலை புறப்பட்டுச் சென்றதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண தெரிவித்தார்.

எம்பிசிலின் போன்ற என்டி பயோடிக் (நோய் முறிப்பு) மருந்துப் பொருட்கள் அடங்கிய பொதிகளுடன் நேற்று புறப்பட்டுச் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மருந்துப் பொருட்களை புதுமாத்தளன் பகுதியில் இறக்கிய பின்னர் திரும்பிவரும் கிறீன்ஓஷியன் கப்பல் மீண்டும் அடுத்தவாரம் சுமார் 2000 லக்டோஜன் குழந்தைகள் பால்மா, 2000 என்கர் பிளஸ் வன் குழந்தைகள் பால்மா என்பவற்றுடன் மீண்டும் புதுமாத்தளன் பகுதிக்கு கப்பல் புறப்பட்டுச் செல்லும் என்றும் அத்தியாவ சிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி. திவாரட்ண கூறினார்.

அத்துடன் ஏ-9வீதியூடாக 20 லொறிகளில் பொருட்கள் அனுப்பப்படவுள்ளதாகவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

எதிர்வரும் வியாழக்கிழமையன்று கொழும்பு வெலி சரை களஞ்சியசாலையிலிருந்து 20 லொறிகளும் புறப்படவுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அல்லாத கோழித்தீன், மாட்டுத்தீவனம், அடங்கலான சுமார் 300 மெற்றிக் தொன் பொருட்கள் 20 லொறிகளில் கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்தமுறை போன்றே யாழ். குடாநாட்டிலிருந்து இறால், கருவாடு, வெங்காயம் போன்ற பொருட்கள் கொழும்புக்கு கொண்டு வரப்படவுள்ளன. இவை யாழ். நாவற்குழி களஞ்சிய சாலையிலிருந்து கொண்டு வரப்படும்.

ஏ-9 வீதியூடாக யாழ். குடாநாட்டுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லல் மற்றும் யாழ். உற்பத்திப் பொருட்களை கொண்டுவருதல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளமையையிட்டு யாழ். வர்த்தகர் சங்கம் வெகுவாக பாராட்டியுள்ளதுடன் தொடர்ந்தும் தமது சங்கம் அரசுக்கு ஒத்துழைப்புகளை வழங்கும் என தெரிவித்துள்ளதாகவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண மேலும் தெரிவித்தார்.

ஐ.தே.க தலைமை பதவியிலிருந்து ரணிலை வெளியேற்றுவது உறுதி? – கட்சி வட்டாரம் தகவல்

ranil-wickramasinghe.jpgஐக்கிய தேசியக் கட்சி தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி புதிய தலைவர் ஒருவரை நியமிக்கும் நடவடிக்கைகள் அடுத்த வாரம் நிச்சயமாக நடைபெறும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐ. தே. க.வின் செயற் குழுவில் அங்கம் வகிக்கும் சிலர் ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி அதற்குப் பதிலாக கரு ஜயசூரியவை நியமிப்பது என்றும் முடிவு செய்துள்ளனர். இதற்கு செயற்குழுவின் இன்னொரு சாரார் எதிர்ப்பு தெரிவிப்பதுடன் எஸ். பி. திசாநாய க்க, அல்லது ருக்மன் சேனநாயக்காவை தலைவராக நியமித்து சஜித் பிரேமதாசவை கட்சியின் மிக முக்கியமான பதவிக்கு நியமிக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளனர்.

நிலைமை இவ்வாறிருக்க ஐ. தே. க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தான் கட்சியின் சிரேஷ்ட தலைவர் பதவியில் இருந்து கொண்டு தலைமைப் பொறுப்பை கரு ஜயசூரியவுக்கு வழங்குவதற்கு இணங்கியிருக்கிறார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரணில் விக்கிரமசிங்க கட்சியின் மீளாய்வு தொடர்பாக நியமிக்கப்பட்ட குழுவினரிடமே இந்த முடிவை தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

கட்சியின் யாப்பின் பிரகாரம் செயற்குழு மாதத்தில் ஒருமுறையே கூட வேண்டும். எனினும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு செயற்குழுக் கூட்டம் நாளை 23 ஆம் திகதியும் கூடுகிறது. இந்தக் கூட்டத்தின் போது கட்சியின் யாப்பை திருத்துவது தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளதாக தெரிகிறது.

கச்சத்தீவு விவகாரம்: இலங்கை அரசுக்கு வைகோ கண்டனம்

kachchativu.gif’’இலங்கை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனே நமக்கு உரிமையான கச்சத்தீவு பகுதியை புனிதப் பகுதியாக அறிவிக்க இருப்பதாக இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.  இப்பிரச்சினையை இலங்கையில் உள்ள எதிர்க்கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனாவும் எழுப்பியுள்ளது.

பாரம்பரிய ரீதியாகவும், வரலாற்று அடிப்படையிலும், ஆவணங்கள் அடிப்படையிலும் இந்தியாவுக்கு  சொந்தமான கச்சத் தீவை புனித பகுதியாக இலங்கை அரசு அறிவிக்கக் கூறுவது கடும் கண்டனத்திற்கு உரியதாகும். இந்தியாவை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக இந்த அறிவிப்பு குறித்து பேசுவது பன்னாட்டு சட்டங்களுக்கு முரணானது’’ என்று மதிமுக. பொதுச் செயலாளர் வைகோ  தெரிவித்துள்ளார்

மனிதாபிமான நெருக்கடியை கையாள ஐ.சி.ஆர்.சி.க்கு 30 இலட்சம் யூரோ வழங்குகிறது ஐரோப்பிய ஆணைக்குழு

160309.jpgஇலங் கையின் வடபகுதியில் அதிகரித்துவரும் மனிதாபிமான நெருக்கடிக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உதவும் நோக்கத்துடன் அதற்கு 30 இலட்சம் யூரோக்களை வழங்கவிருப்பதாக ஐரோப்பிய ஆணைக்குழு அறிவித்திருக்கிறது. பெரும் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் மோதல் பகுதியில் சிக்குண்டு பலியாகிவருகின்ற நிலையில் நெருக்கடி நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஷெல் வீச்சினால் மட்டுமன்றி உணவு, நீர் மற்றும் மருத்துவ பராமரிப்பு இல்லாமல் இந் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய அபிவிருத்தி ஆணையாளர் லூயிஸ் மக்கேல் தெரிவித்திருக்கிறார்.

இப்பகுதிக்கு சிறியளவான மனிதாபிமான உதவியே அனுமதிக்கப்படுகிறது. அங்கு மனித நெருக்கடியை தவிர்ப்பதற்கும் பாதுகாப்பாக வாழ்வதற்கும் உடனடியானதும் அவசரமானதுமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சர்வதேச செஞ்சிலுவை சங்கமே மோதல் பகுதியில் மனிதாபிமான பணி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு பணியாற்றிவருகின்றது. அவர்கள் ஆபத்தான சூழ் நிலையில் சிக்குண்டுள்ள மக்களுக்கு உயிரைப்பாதுகாப்பதற்கான உதவி வழங்குவதுடன் காயப்பட்டவர்கள் மற்றும் நோயாளர்களை வெளியேற்றி வருவதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பொறுப்புடன் பொதுமக்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஷெல் தாக்குதலை நிறுத்தும் அதேநேரம் மனிதாபிமான ரீதியில் தேவையான உணவு, மற்றும் மருந்துகளை அப்பகுதிக்கு கொண்டு செல்லவும் காயப்பட்டவர்கள் மற்றும் நோயாளர்கள் வெளியேறுவதற்கு உதவியளிக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு ஏவுகணை விநியோகம்; ஒப்புக்கொண்டது ரஷ்யா

iran.jpgஈரானுக்கு அதிநவீன ஏவுகணைகளை விநியோகம் செய்ய இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்தம் மேற்கொண்டதை ரஷ்யா தற்போது அங்கீகரித்தது. அமெரிக்க ஜனாதிபதியாக புஷ் இருந்த போது ஈரான் நாட்டை “ரவுடி நாடு” என குறிப்பிட்டிருந்தார்.

“ஈரான் அரசால் அன்டை நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் ஆபத்து ஏற்படும் என எச்சரித்திருந்தார். இந்நிலையில், ஈரான் நாட்டுக்கு அதிநவீன எஸ். 300 ரக ஏவுகணையை விநியோகம் செய்ய இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரஷ்யா ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்த விஷயம் சமீபத்தில் அம்பலமானது. இதையடுத்து ரஷ்யா இந்த உண்மையை ஒப்புக்கொண்டது இது குறித்து ரஷ்ய இராணுவ அதிகாரி ஒருவர் குறிப் பிடுகையில், “எஸ். 300 ஏவுகணையை ஈரானுக்கு விநியோகம் செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டாலும், சர்வதேச சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாங்கள் ஏவுகணையை விநியோகிக்கவில்லை இன்னும் அந்த ஒப்பந்தம் காலாவதியாகவில்லை.

படிப்படியாக இந்த ஒப்பந்தத்தை அமுல் செய்ய யோசித்து வருகிறோம் என்றார். ஈரானுக்கு இந்த ஏவுகணையை விநியோகம் செய்தால் ரஷ்யா மேற்கத்திய நாடுகளின் பகையை சம்பாதித்துக்கொள்ள வேண்டியிருக்கும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இரணைமடுக்குளத்தை பிரதானப்படுத்தி வடக்கில் பாரிய நீர் விநியோகத் திட்டம் – அமைச்சர் அமரவீர

mahinda-amaraweera.jpgஇரணை மடுக்குளத்தை பிரதானப்படுத்தி வடக்கில் பாரிய நீர் விநியோகத் திட்டம் முன்னெடுக்கப்படுமென நீர் வழங்கல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.  அமைச்சர் மஹிந்த அமரவீர கருத்துத் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணம் படையினரால் விடுவிக்கப்பட்டு மூன்று மாத காலப் பகுதிக்குள் நீர் வழங்கல் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது போலவே வடக்கிலும் மேற்கொள்ள அமைச்சு திட்டமிட்டுள்ளது. வடக்கில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதும் 12,500 மில். ரூபா செலவில் புதிய நீர் விநியோகத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

யுத்த சூழ்நிலைகள் காரணமாக வடக்கிற்கு ஒதுக்கப்படும் நிதிகள் உரிய முறையில் பயன்படுத்த முடியாமல் இருந்தது. சமாதான காலப்பகுதியில் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்க முனைந்த வேளையில் புலிகள் அதனை தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தாங்களே செய்ய வேண்டுமெனவும் அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி தமக்கு ஊடாகவே செல்ல வேண்டுமென கோரினர். இதனால் குறைந்தளவு நிதியையே கடந்த காலங்களில் ஒதுக்க நேர்ந்தது.

தற்போது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் வட மாகாணம் வந்துள்ளது. படையினரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதும் முதற்கட்ட பணிகள் முன்னெடுக்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் நாம்செய்து வருகின்றோம். இன்னும் மூன்று மாத காலப் பகுதிக்குள் வேலைகள் முன்னெடுக்கப்படும்.

வடக்கில் இரணைமடுக்குளம் பிரதான நீர்த்தேக்கமாக இருந்து வந்துள்ளது. அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பயனடைந்தனர். புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலப் பகுதியில் அக்குளத்தை தமது தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தினர்.

தமிழ்மக்களுக்காக போராடுவதாகக் கூறிக் கொண்டு அம்மக்களுக்கு எதிராகவே செயற்பட்டு வந்தனர். தமிழ் மக்கள் மீது உண்மையாக அக்கறையிருந்திருந்தால் இரணைமடுக்குளத்தை சேதப்படுத்தியிருக்க மாட்டார்கள். தற்போது இரணைமடுக்குளம் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதால் வட பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு எமது அமைச்சு தயாராக இருக்கிறது.

இவ்வாண்டு உலக நீர் தினத்தின் தொனிப் பொருளாக சகலருக்கும் சமமான உரிமை வழங்குவதாகும். நீரின்றி மனிதர்கள் மட்டுமல்ல ஜீவராசிகளும் உயிர்வாழ முடியாது. இந்த நீர்வளத்தை எல்லாக் காலங்களிலும் அனைத்து தரப்பினரும் பெற்றுக் கொள்ளக் கூடிய விதத்தில் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். புதிய நீர் விநியோகத் திட்டத்தின் ஊடாக குடிநீர் வழங்குவது என்பது துரியமாக அபிவிருத்தி கண்டுவரும் இந்த யுகத்தில் நீரைப் பாதுகாப்பதற்கும் நீர்ப்போசனைப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கும் புதிய செயல் திட்டங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

மழை நீரைப் பயன்படுத்துவது பற்றி சிந்திக்கப்படுகிறது. மழை நீரை சேமித்து பயன்படுத்துவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கின்றன. நீருக்கான கட்டணத்தை குறைத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். எதிர்வரும் காலங்களில் கொழும்பு மாநகரப் பகுதிகளிலும் மழை நீரைச் சேமிப்பதற்கான வழிவகைகள் குறித்து அமைச்சு ஆராய்ந்து வருகிறது.

சுத்தமான குடிநீரை 78 வீதமான மக்கள் பயன்படுத்துகின்றனர். 23 வீதமானோர் பாவனைக்கு உதவாத நீரைப் பயன்படுத்துகின்றனர். இதில் பெரும்பாலானோர் வடக்கு கிழக்கைச் சேர்ந்தவர்கள் இதன் காரணமாகவே தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. அவர்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கொழும்பு மாநகர பகுதியில் சில இடங்களில் குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. களனி வலது கரை நீர் விநியோகத் திட்டத்தின் மூலம் சுத்தமான குடிநீர் வழங்கத் தேவையான நடவடிக்கைகளை நீர் வழங்கல் அமைச்சு மேற்கொண்டு வருகிறது. இதற்கென 6500 மில். ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

நீர் வழங்கல் அமைச்சு சலருக்கும் சுத்தமான குடிநீரை வழங்குவதையே பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஒரு முதலீட்டாகும். அசுத்த நீரைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதகமான விளைவுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படல் வேண்டும்.

சுத்தமான குடிநீரை வழங்க வேண்டும். அசுத்த நீரின் பயனால் சிறுவர் நோய்வாய்ப்படும் போது வைத்தியசாலைகளுக்காக செலவிடும் நிதி மிச்சப்படுத்தப்படும். நீர் விநியோகத்திற்கென இவ்வாண்டு 29,000 மில். ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நாடு முழுவதிலும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை அமைச்சு முன்னெடுக்கவுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

“வட,கிழக்கில் 45 ஆயிரம் யுத்த விதவைகள்’ வடக்கு, கிழக்கில் 85 ஆயிரம் விதவைகள்

parliament.jpg“வட, கிழக்கில் 45 ஆயிரம் யுத்த விதவைகள்’ வடக்கு, கிழக்கில் 85 ஆயிரம் விதவைகள் உள்ளனர். இவர்களில் 45 ஆயிரம் பேர் யுத்தத்தால் விதவைகளானவர்களென தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், கடந்த ஜனவரியிலிருந்து இன்றுவரை கிழக்கு மாகாணத்தில் 46 பேர் கடத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற படையினரின் விதவைகள் மற்றும் குழந்தைகளுக்கான ஓய்வூதிய சட்டமூல திருத்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

“யுத்தத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் தினமும் அதிகரித்து வருகின்றது. வடக்கு, கிழக்கில் மட்டும் 85 ஆயிரம் விதவைகள் உள்ளனர். இதில் கிழக்கில் 49 ஆயிரம் பேரும் வடக்கில் 36 ஆயிரம் பேரும் உள்ளனர். இந்த 85 ஆயிரம் விதவைகளில் 45 ஆயிரம் பேர் யுத்தத்தால் விதவைகளானவர்கள். இவர்களில் கிழக்கு மாகாணத்தில் மட்டும் 24 ஆயிரம் பேர் உள்ளனர். இலங்கையில் அதிகமான விதவைகளைக் கொண்ட மாகாணமாக கிழக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதைவிட கிழக்கில் மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றதன் பின்னர் 173 பேர் காணாமல்போயுள்ளனர். 2009 ஜனவரிக்கு பின்னர் மட்டும் இன்றுவரை 46 பேர் கடத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண சர்வகட்சிக்குழு இதுவரை 107 தடவைகள் கூடியுள்ளது. இதில் ஒவ்வொரு தடவையும் பங்குபற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்தும் அவர்கள் பங்கேற்கவில்லையென ஜனாதிபதி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆனந்தசங்கரியைத் தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்று நினைத்துவிட்டார் போலுள்ளது. சர்வகட்சிக் குழுக் கூட்டத்திற்கு இன்றுவரை எமக்கு எந்த வித அழைப்பும் உத்தியோகபூர்வமாக விடுக்கப்படவில்லை.

மதத்தலங்களில் வைத்து புலிகளால் 400க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அரசு கூறுகின்றது. மதத்தலங்களில் வைத்து படையினரால் 1246 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அரசு என்ன கூறுகின்றது.

1990 ஜூன் வீரமுனை பத்ர காளியம்மன் ஆலயத்தில் வைத்து நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். அதேபோன்று 1993 நவம்பர் யாழ். குருநகர் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 1994 ஆகஸ்ட் நவாலி தேவாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, 1997 ஜூன் வவுனியா வவுனிக்குளத்தில் தேவாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 2005 மார்ச் அல்லைப்பிட்டி தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 2005 டிசம்பர் மட்டக்களப்பில் தேவாலயத்திற்குள் வைத்து எமது பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார். இவ்வாறு இன்னும் எத்தனை தாக்குதல்களை அரசு நடத்தியுள்ளது. எனவே யுத்தம் நிறுத்தப்படுவதன் மூலமே விதவைகள் உருவாவதையும் அநியாய உயிரிழப்புகளையும் தடுக்க முடியும்.