அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

பயணிகளின் பொதிகளை ஒப்படைக்க நடவடிக்கை

green-ocean.jpg
முல்லைத்தீவு,  புதுமாத்தளன் பகுதியிலிருந்து சிகிச்சைக்காக கப்பல் மூலம் புல்மோட்டைக்கு “கிறீன் ஓசன்’ கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டவர்கள் விட்டுச் சென்ற பொதிகளை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குச்சவெளி பிரதேச செயலாளர் உமாமகேஸ்வரன் தெரிவித்தார். புதுமாத்தளன் பகுதியிலிருந்து அவசர மேலதிக சிகிச்சைக்காக புல்மோட்டைக்கு “கிறீன் ஓசன்’ கப்பல் மூலம் வந்தவர்கள் சிலர் கைவிட்டுச் சென்ற பொதிகளை உரியவர்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக குச்சவெளி பிரதேச செயலாளர் உமா மகேஸ்வரன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; அவசர மேலதிக சிகிச்சைக்காக புதுமாத்தளன் பகுதியிலிருந்து கிறீன் ஓசன் கப்பல் மூலம் கடந்த 6 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரை வந்தவர்களில் சிலர் பொதிகளை கைவிட்டு வவுனியாவுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில், இவற்றை உரியவர்களிடம் கையளிக்கும் முகமாக இப்பொதிகளை வவுனியா அரச அதிபரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன் எனத் தெரிவித்தார்.

திருமலையில் விபத்திற்குள்ளாகிய கப்பல் முற்றாக மூழ்கியது.

trnco-sea.jpgதிருமலை கடற்பகுதியில் விபத்திற்குள்ளான கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது அக்கப்பல் முற்றாக மூழ்கி விட்டதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்

‘இந்திய அரசே! உன் கைகளிலும் இரத்தம்!’ இந்தியத் தூதரகங்கள் முன் ஆர்ப்பாட்டம் – போராட்டங்கள் தொடர்கிறது. : த ஜெயபாலன் & வி அருட்செல்வன்

இலங்கையில் தொடரும் உள்நாட்டு யுத்தத்தில் இந்தியாவின் பங்களிப்புக்கு எதிர்ப்பும் தெரிவிக்கும் வகையில் உலகின் முக்கிய நகரங்களில் உள்ள இந்தியத் தூதரகங்களிற்கு முன்னால் ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடைபெற்றது. ஏப்ரல் 8 இந்திய அரசின் யுத்த ஒத்துழைப்பிற்கு எதிரான நாளாக பிரகடனப்படுத்தப்பட்டு இப்போராட்டங்களை ‘தமிழர்கள் படுகொலை செய்வதை நிறுத்து’ என்ற போராட்டக்குழு ஏற்பாடு செய்திருந்தது. தங்களது அரசின் இந்த யுத்த ஒத்தழைப்பிற்கு எதிராக இந்திய மக்களும் சென்னையிலும் பெங்களுரிலும் புதுடில்லியிலும் போராட்டங்களை நடத்தி இருந்தனர். மான்ஹட்டன், லண்டன், ரெல்அவிவ், சுவீடன் ஆகிய நகரங்களில் ஒன்றினைக்கப்பட்ட போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது.

லண்டனில் இந்தியா ஹவுஸிற்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். ‘தமிழர்கள் படுகொலை செய்வதை நிறுத்து’ போராட்ட அமைப்பின் லண்டன் கிளை ஏற்பாடு செய்த இப்போராட்டத்தில் அதன் சர்வதேச இணைப்பாளர் சேனன் இலங்கை யுத்தத்தில் இந்திய அரசின் ஒத்துழைப்புப் பற்றி விளக்கினார். இப்பொராட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த பலரும் தங்கள் கருத்தக்களை வெளியிடவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. மாலை 4:00 மணிமுதல் 5:30 வரை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இந்தியா ஹவுஸ் அமைந்திருந்த சதுக்கத்தைச் சுற்றி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசங்களை எழுப்பிய வண்ணம் சுற்றி வந்தனர்.

அப்போது பிபிசி செய்தி நிறுவனம் அமைந்திருந்த புஸ் ஹவுஸை ஆர்ப்பாட்ட அணி அண்மித்த போது ‘பிபிசி நீங்கள் எங்கே போனீர்கள்’ என உரக்கக் கோசம் எழுப்பப்பட்டது.

தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை நிறுத்து! இந்திய அரசே! உன் கைகளிலும் இரத்தம்!! மகிந்த அரசுக்கு ஒரு ரூபாயையோ ஒரு குண்டையோ வழங்காதே!!! போன்ற கோசங்கள் ஓங்கி ஒலிக்கப்பட்டது.

புலி ஆதரவு அமைப்புகள் தமிழ் மக்களை மையப்படுத்தி போராட்டங்களை புலிகளது நலன் சார்ந்து மட்டும் முன்னெடுக்கையில் மக்கள் நலன்களையும் முன்னிலைப்படுத்தி சிறிய அளவிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக லண்டனிலும் மற்றும் முக்கிய நகரங்களிலும் Committe for Workers International அமைப்பினரும் பாரிஸில் சமூகப்பாதுகாப்பு அமைப்பினரும் (Comité de Défense Social) தமிழ் மக்களுக்கு அப்பால் பெரும்பான்மைச் சமூகங்களை இணைத்து போராட்டங்களை முன்னெடுப்பது குறிப்பிடத்தக்கது. இப்போராட்டங்களில் பல இளவயதினர்களும் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.

இவற்றுடன் லண்டனில் வெஸ்ற் மினிஸ்ரர் பாராளுமன்றம் முன்னாக நடைபெறு போராட்டம் நான்காவது நாளாகத் தொடர்கிறது.

london-parliment-meeting2.jpgபிரிட்டன், அமெரிக்காவில் 7 பேர் சாகும்வரை உண்ணாவிரதம்

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கக் கோரியும் அங்கு போர் நிறுத்தமொன்றை ஏற்படுத்தக்கோரியும் இலண்டனில் ஈழத்தமிழர்கள் இருவர் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள அதே நேரம், அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஐவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரித்தானியாவில் தமிழர்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் நடத்திவரும்,இலண்டன் வெஸ்ற் மினிஸ்ரர் பாலம் அமைந்துள்ள பகுதியிலேயே இந்த இளைஞர்கள் இருவரும் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தமது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாகவுள்ள அமெரிக்காவின் ஐ.நா.வுக்கான தூதுவர் சூசன் றைசின் அலுவலகத்திற்கு முன்பாக ஐந்து தமிழர்கள் 24 மணி நேர நீராகாமின்றி உண்ணா விரதப் போராட்டத்தை நடத்தினர். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்ட, நீராகாரமின்றிய இநத உண்ணா விரதப் போராட்டம் மாலை 5 மணிவரை நடத்தப்பட்டது.

இதேபோன்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதுவர் அலுவலகத்திற்கு முன்பாகவும் அரசாங்கத்தின் பயங்கரவாதத்திற்கு இந்தியா துணை போகாது ஈழத்தமிழர்களை காப்பாற்ற வேண்டுமென வலியுறுத்தி அமைதியான போராட்டத்தினை இன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் பின்னர் ஐ.நா.வுக்கான மெக்சிக்கோ தூதுவர் அலுவலகத்திற்கு முன்பாக இலங்கை விவகாரத்தை ஐ.நா. சபை வரை கொண்டு வந்ததற்காக மெக்சிக்கோ அரசுக்கு நன்றி தெரிவிக்கும் பேரணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

வன்னி அகதிகளின் நலன்கருதி குடாநாட்டில் தற்காலிக கொட்டில்கள்

srilanka_idp.jpgகுடா நாட்டுக்கு வரும் வன்னி அகதிகளின் நலன்கருதி கைதடி பனை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 600 தற்காலிக கொட்டில்களை அமைக்கும் பணி தற்பொழுது நடைபெற்று வருகின்றன.
தற்காலிக கொட்டில்களை அமைப்பதற்கு கிடுகுகள் கிடைப்பது மிகக் கடினமாகவுள்ள போதும் கிடைக்கும் கிடுகுகளைக் கொண்டு கொட்டில்கள் அமைக்கப்பட்டு அம்மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக தென்மராட்சி செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வன்னி அகதிகள் தற்காலிக குடிசைகளில் தங்கி தாமே சமைத்து உண்பதற்கு விரும்புவதால் இத்திட்டம் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளையில், நலன் நோன்பு நிலையங்களின் பாதுகாப்பையும் பாதுகாப்புப் பிரிவினர் அதிகரித்துள்ளனர்.

யாழ். மாவட்டத்துக்கு இதுவரை 4,900 அகதிகள் வந்துள்ள போதும் இவர்களுக்கான சகல வசதிகளும் சர்வதேச தொண்டர் நிறுவனங்களின் உதவியுடன் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்நலன் நோன்பு நிலையங்களுக்கு தொலைபேசி வசதியும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச தலைவர் இலங்கை விஜயம்

jakob-kellenberger.jpgசர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜகொப் கௌன்பேக்கர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவின் விசேட அழைப்பினை ஏற்று இலங்கை வந்த ஐ.சி.ஆர்.சி. தலைவருடன் சங்கத்தின் தெற்காசிய நடவடிக்கைகளுக்கான பிரதம அதிகாரி ஜக்குவாஸ் டி மையோவும் இலங்கை வந்துள்ளார்.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சருக்கும் இலங்கை வந்த ஐ.சி.ஆர்.சி. குழுவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கையின் தற்போதைய நிலைவரம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் செயற்பாடு என்பன தொடர்பில் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், வடக்கில் போர் இடம்பெற்று வரும் சூழலில் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பான ஐ.சி.ஆர்.சி. வழங்கி வரும் ஒத்துழைப்புக்கு அமைச்சர் ரோஹித பாராட்டுத் தெரிவித்துள்ளார்

புதுமாத்தளனிலிருந்து 536 பேர் கப்பல் மூலம் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்

green-ocean.jpgமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து கிறீன் ஓசன் கப்பல் மூலம் அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் அனுசரணையுடன் 536 பேர் புதன்கிழமை புல்மோட்டைக்கு  அழைத்து வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதில் 230 பேர் காயமடைந்த நிலையில் காணப்பட்டதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இதுவரையில் 19 தடவை புதுமாத்தளன் பிரதேசத்திலிருந்து திருகோணமலை, புல்மோட்டை பகுதிகளுக்கு நோயாளிகள் உள்ளிட்ட வன்னி பொதுமக்களை அழைத்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சில அரசியல் தலைவர்கள் பிரபாகரனுடன் நீச்சல் தடாகமொன்றில் குளிக்கும் காட்சிகள் அடங்கிய படங்கள் விரைவில் வெளியிடப்படும்

dalas_alahapperuma.jpgபிரபாகரனின் பிறப்புச் சான்றிதழ் மீட்கப்பட்ட அறையில் இருந்து மேலும் பல ஒளிநாடாக்கள், புகைப்படங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. இவற்றிடையே தெற்கில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் சில அரசியல் தலைவர்கள் பிரபாகரனுடன் நீச்சல் தடாகமொன்றில் குளிக்கும் காட்சிகள் அடங்கிய படங்களும் உள்ளன. இவற்றை தேர்தலின் பின்னர் வெளியிடவுள்ளோம் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,

உணவை ஆயுதமாகப் பயன்படுத்தினால் புலிகளை 4 நாட்களில் அழித்துவிட முடியும். ஆனால் எக்காரணம் கொண்டும் அரசாங்கம் உணவை ஆயுதமாகப் பயன்படுத்தாது. பொட்டு அம்மான், பிரபாகரன் ஆகியோர் காலை உணவாக சாப்பிடும் தோசை கூட நாம் அனுப்பும் கோதுமை மா மூலமே தயாரிக்கப்படுகிறது எனவும் அவர் கூறினார்.

இஸ்ரேல் இராணுவம் உணவை ஆயுதமாகப் பயன்படுத்தி பலஸ்தீன மக்களை பட்டினிபோட்டு கொலை செய்ததுபோல நாமும் செய்தால் புலிகளை 4 நாட்களில் ஒழித்துவிட முடியும். ஆனால் நாம் உணவை ஆயுதமாகப் பயன்படுத்தமாட்டோம். இது தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு உறுதி அளித்துள்ளோம்.

பொதுமக்கள் குறித்து கவனிக்காமல் காஸாவில் இஸ்ரேல் கண்மூடித்தனமாக தாக்கியது போல நாமும் தாக்கினால் 10 நிமிடத்தில் புலிகளை அழித்து ஒழித்து விடலாம். ஆனால் உலகத்தில் எந்த ஒரு அரசாங்கமும் செய்யாதவாறு பொதுமக்களுக்கு சேதமேற்படாத வகையில் எமது இராணுவம் மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. வன்னியில் சிக்கியுள்ள 30 முதல் 40 ஆயிரம் வரையான பொதுமக்களை மீட்பதற்கு மிகப் பாரிய மனிதாபிமான நடவடிக்கைக்கு இராணுவத்தினர் தயாராகி வருகின்றனர்.

பாதுகாப்பு வலயத்தினுள் புலிகள் நடமாடுவதை படையினர் கவனித்து வருகின்றனர். வன்னியில் அண்மையில் மீட்கப்பட்ட பீரங்கி செக்கொஸ்லாவாக்கியாவில் இருந்து தருவிக்கப்பட்டது என்பது புலனாகியுள்ளது. இது எவ்வாறு இலங்கைக்கு எடுத்து வரப்பட்டது என்பது அனைவருக்கும் தெளிவு.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கப்போவதாக ரணில் தெரிவிப்பு

ranil-wickramasinghe.jpgதவறானவர்களின் கைகளுக்கு நிறைவேற்று அதிகாரம் போனதால் நாடு சர்வாதிகாரத்தின் பக்கம் சென்றுகொண்டிருப்பதாக விசனம் தெரிவித்த எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அமைத்ததும் முதற்பணியாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டு பாராளுமன்றத்துக்குப் பதிலளிக்கக்கூடிய அதிகாரமுறை கொண்டுவரப்படுமெனத் தெரிவித்தார். நல்ல நோக்கத்துக்காக அமைக்கப்பட்ட நிறைவேற்றதிகாரமுறை இன்று தவறானவர்களின் கைகளுக்குள் சிக்கி ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் எதிர்க்கட்சித்தலைவர் சுட்டிக்காட்டினார்.

கிருலப்பனையில் திங்கட்கிழமை மாலை நடைபெற்ற மேல்மாகாணசபைத் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித்தலைவர் இங்கு தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது; நாட்டு மக்களின் இறைமையை வாக்குரிமையின் மூலமே பாதுகாக்க முடியும். இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாட்டின் இறைமையையும் ஜனநாயகத்தையும் இல்லாதொழிக்கும் பயங்கரமான திசையில் சென்று கொண்டிருக்கின்றார், ஜனநாயகத்தை ஒழிப்பதற்கான ஆயுதமாக அவர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை பயன்படுத்துவதில் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகின்றார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன நிறைவேற்றதிகாரத்தை உருவாக்கியதற்கான பிரதான காரணம் ஸ்திரத்தன்மை கொண்ட அரசாங்கத்தின் கீழ் நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதற்கேயாகும். ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்குப்பின்னர் நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவுசெய்யப்பட்டார். நீண்டகால யுத்தத்தை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வரமுடியும் என்பதில் அவர் கூடுதல் ஆர்வம் காட்டிவந்தார். அதேசமயம் நிறைவேற்றதிகாரத்தின் மற்றொரு முகத்தை அவர் வடமேல் மாகாணசபைத் தேர்தலின்போது காண்பித்தார். இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் ஜனநாயகத்தை எம்மால் அன்று பாதுகாக்க முடிந்தது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மூலமாக 17 ஆவது அரசியலமைப்புத்திருத்தத்துக்கு உடன்பட வைத்து அரசியமைப்புப் பேரவையை உருவாக்க முடிந்தது.  அரசியலமைப்பு பேரவைக்கு நியமனங்களைச் செய்வதற்கான பெருமுயற்சிகளை நான் பிரதமராக இருந்த காலத்தில் மேற்கொண்டேன். துரதிர்ஷ்டவசமாக நிறைவேற்றதிகாரத்தின் பிடிக்குள் சிக்கி எனது ஆட்சிபறிபோகும் நிலை ஏற்பட்டது.

திருமதி குமாரதுங்கவுக்கு பின்னர் மகிந்தராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவானார்.அவர் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையிலுள்ள சகல அதிகாரங்களையும் பயன்படுத்தி நாட்டில் ஜனநாயகத்தை இல்லாதொழிப்பதில் மும்முரமாக செயற்பட்டுவருகின்றார். எனவே நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ஏப்ரல் 25 இல் ஐக்கியதேசியக் கட்சிக்கு வாக்களிக்குமாறு மேல்மாகாண மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன் எனவும் ரணில் விக்கிரமிங்க தெரிவித்தார்.

டென்மார்க் வெளிவிவகார அமைச்சகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 83 தமிழர் கைது

denmark.jpgடென்மார்க்கில் வெளிவிவகார அமைச்சகத்திற்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 83 தமிழர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கையில் இடம்பெறும் மோதல்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து

நேற்று மாலை 5 மணிவரை டென்மார்க் வெளிவிவகார அமைச்சகத்தின் முன் தமிழர்கள் போராட்டம் நடத்த பொலிஸார் அனுமதி வழங்கி இருந்தனர். எனினும் குறித்த நேரத்தின் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வெளியேற மறுத்ததையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரபாகரனுக்கு ஏதாவது நடந்தால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் -வைகோ

vaiko-black-flag.jpgஇலங்கைத் தமிழர்களைக் காக்க வேண்டும். போரை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

சென்னையி்ல் நடந்த போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், பாஜக தேசியச் செயலாளர் திருநாவுக்கரசர், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் வைகோ பேசுகையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ஏதாவது நடந்தால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்றார். இனப்படுகொலையைக் கண்டித்தும், இலங்கைக்கு இந்தியா உதவக் கூடாது என்பதை வலியுறுத்தியும், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இந்த பிரச்சினையில் தலையிட்டு தமிழர்கள் அழிவைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.