படகுகள் மூலம் சட்ட விரோதமான முறையில் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் நீர்கொழும்பு மீபுர பிரதேசத்தில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களின் பயணத்துக்கு பயன்படுத்திய படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள்; விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அருட்சல்வன் வி
அருட்சல்வன் வி
திமுக அழைப்பு விடுத்திருந்த பொது வேலைநிறுத்தம் இன்று காலை தொடங்கியது. இருப்பினும் நேற்று இரவு முதலே அரசு பஸ்வண்டிகள், வெளியூர் பஸ்வண்டிகள், பயம் காரணமாக தனியார் பஸ்வண்டிகள் ஓடவில்லை. கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
ஈழத்தில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி திமுக தலைவர் கருணாநிதி, இன்று பொது வேலைநிறுத்தம் மேற்கொள்ள அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் சில அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. இருப்பினும் அதிமுக, மதிமுக, பாமக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இதில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்து விட்டன.
போராட்டத்திற்கு ஆதரவு தருவதாக திரையுலகம், வணிகர்கள் சங்கம் உள்ளிட்டவை தெரிவித்திருந்தன. இந்த நிலையில், இன்று காலை போராட்டம் தொடங்கியது. பொது வேலை நிறுத்தத்தின்போது போக்குவரத்து இயல்பு நிலையில் இருக்கும், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி அறிவித்திருந்தார்.
இருப்பினும் நேற்று இரவு முதலே அரசு பஸ்வண்டிகள் ஓடவில்லை. குறிப்பாக வெளியூர் பஸ்வண்டிகள் ஓடவில்லை. பயத்தின் காரணமாக தனியார் பஸ் வண்டிகளும் ஓடவில்லை.
பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. ஒரு சில பெட்டிக் கடைகள் மட்டும் அரை கதைவை மூடிய நிலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளன. தலைநகர் சென்னை முதல் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இதே நிலைதான். ரயில் போக்குவரத்தில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. பலத்த பாதுகாப்புடன் அவை இயக்கப்பட்டு வருகின்றன.
நாளையுடன் தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் முடிகிறது. எனவே வேலைநிறுத்தம் காரணமாக இன்று வேட்பு மனு தாக்கலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடாமல் தடுக்கும் பொருட்டு, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் முல்லைத்தீவு, வவுனியா பகுதிகளில் தமிழர்கள் தங்கவைக்கப்பட்டு உள்ள முகாம்களை பார்வையிட்டு விட்டு நேற்று சென்னை திரும்பிய வாழும் கலை அமைப்பின் நிறுவனரும், ஆன்மீகவாதியுமான ஸ்ரீரவிசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இந்திய அரசு எங்களுக்கு உதவும் என்று ரொம்ப நம்பினோம். கைவிட்டு விட்டார்களே என்று வேதனையுடன் தெரிவித்தார்கள். இந்த விஷயத்தில் இந்திய அரசு மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டதாக கருதுகிறோம்.
தமிழர் பிரச்சினையைத் தீர்க்கும் அளவுக்கு தமிழ் தெரிந்த ஒருவரை தூதராக நியமிக்காததே இந்த பிரச்சினைக்கு முடிவு காணமுடியவில்லை என்று கருதுகிறேன். அத்துடன், இலங்கை பிரச்சினை தீராததற்கு இங்கும் சரி, அங்கும் சரி தமிழர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லாததும் ஒரு காரணம் ஆகும். இலங்கை தமிழர் பிரச்சினைக்காக இங்கு பந்த் அல்லது உண்ணாவிரதம் போன்றவற்றை மேற்கொள்வதால் அங்கு பிரச்சினை சரியாகிவிடும் என்று சொல்லமுடியாது.
பந்த் நடத்தினோம். உண்ணாவிரதம் இருந்தோம் என்று திருப்தி அடையலாமே தவிர அங்கு பிரச்சினை தீர்ந்துவிடாது. உணவு, உடை என்று நிவாரண உதவிகளைப் பெறும் நிலையில் முகாம்களில் தங்கி இருந்தாலும், தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்லவேண்டும் என்றே விரும்புகிறார்கள். இது குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் நேற்று நான் பேசினேன். முகாம்களில் தங்கி இருப்பவர்கள் சொந்த வீடுகளுக்கு உடனடியாக செல்ல முடியாத அளவுக்கு வீடு, வாசல்கள் தரை மட்டமாகி உள்ளன. அவற்றை உடனடியாக சீரமைக்க முடியாது என்று ராஜபக்சே தெரிவித்தார்.
தீவிரவாதத்தை வேரோடு அழித்த பின்பே அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்று ராஜபக்சே தெரிவித்தார். இருதரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் பேசி தீர்த்து இருக்கலாம். நானே பிரபாகரனிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பல முறை முயன்றேன். அதற்கு பலன் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.
புலிகளோடு பேச்சு நடத்த வேண்டிய எத்தகைய அவசியமும் அரசாங்கத்துக்கு கிடையாது. மாறாக பயங்கரவாதிகளிடமிருந்து தப்பி வந்துள்ள மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான பேச்சுவார்த்தைகளே அவசியமாகிறது. என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தொடர்ந்தும் சர்வதேச அச்சுறுத்தல்கள், அழுத்தங்களுக்கு மத்தியிலேயே அரசாங்கம் தாய்நாட்டைப் பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பூரண ஆதரவு வழங்க வேண்டியது சகலரதும் கடமையெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சரியா – பிழையா என்பதை சர்வதேசத்துக்கும் உணர்த்துவதாக மேல்மாகாண சபைத் தேர்தல் அமைவதால் தாய்நாட்டின் எதிர் காலத்தைக் கருத்திற்கொண்டு தீர்மானம் எடுப்பது அவசியமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
ஸ்ரீலங்கா சுதந்திர ஆசிரியர் சங்கத்தினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த நிகழ்வொன்று நேற்று மாலை அலரி மாளிகையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
வன்னி மனிதாபிமான நடவடிக்கை மூலம் பாதுகாப்பு வலயம் ஐந்து கிலோ மீற்றர் சதுர கிலோ மீற்றராக மாறியுள்ளது. கடந்த மூன்று தினங்களிலும் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ளனர். அம்மக்களைப் பாதுகாத்துப் பராமரிக்கும் பொறுப்பு இராணுவத்தினரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. உண்மையில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் ஆகியோருக்கிடையிலான வித்தியாசத்தை தப்பிவந்த மக்கள் மட்டுமன்றி தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் போன்ற புலிகளின் தலைவர்களும் உணர்ந்துள்ளனர்.
தமது உணவுப் பொட்டலங்களையும் அப்பாவிப் பொது மக்களுக்குப் பகிர்ந்தளித்து அம்மக்களைப் பராமரிக்கும் படையினருக்கு நாட்டு மக்கள் அனைவரினதும் பாராட்டுக்கள் உரித்தாகின்றன.
புலிகளோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய எத்தகைய அவசியமும் அரசாங்கத்துக்கு இல்லை. மாறாக பயங்கரவாதிகளிடமிருந்து தப்பிவந்துள்ள மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பும் பேச்சுவார்த்தையே அவசியமாகிறது.
இங்கிலாந்து பிரதமர், அவுஸ்திரேலியப் பிரதமர் மற் றும் ஐக்கிய நாடுகள் சபை விசேட பிரதிநிதிகளும் தொலைபேசி மூலம் என்னோடு தொடர்புகொண்டு பேசினர். அவர்களுடனும் நான் இதுபற்றியே கலந்துரையாடினேன் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இலங்கை பிரச்சனை தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு பிரதமர் மன்மோகன் தலைமையிலான அவசர கூட்டம் இன்று இரவு நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே., நாரயணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இலங்கை பிரச்சனை பற்றியும், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பற்றியும் முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் …..
’’இலங்கைத் தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் குறித்து அங்கே உடனடியாக நிரந்தரப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டுமென்று இந்திய அரசை வலியுறுத்தி தந்திக்கு மேல் தந்தி கொடுத்தும்- கடிதங்கள் எழுதியும் – அறிக்கைகள் கொடுத்தும் கடந்த 3 நாட்களாக நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், இலங்கையிலே போர் நிறுத்தம் நிரந்தரமாக ஏற்படவும், அதற்கு ஆவன செய்யும்படி மத்திய அரசை வலியுறுத்திடவும் நாளைய தினம் (23.4.2009) அன்று ஒருநாள் வேலை நிறுத்தம் செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் அறிக்கையினை நேற்றிரவு விடுத்ததோடு, இன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும், நாளேடுகளுக்கும், தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், திரைப் படத்துறையினருக்கும் நேற்று நான் கொடுத்த அறிக்கையின் நகலை இணைத்து இந்த வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளேன்.
அந்த வேண்டுகோள் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கும், அவருடைய தோழமைக் கட்சிகளுக்கும், அவருடைய தொலைக்காட்சி நிறுவனத்திற்கும், அவரது பத்திரிகைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்திலே நானே கையெழுத்திட்டு கட்சி சார்பின்றி அந்த வேலை நிறுத்தத்திற்கு தமிழர் உயிரைக் காப்பாற்றுவதற்காக வேலை நிறுத்தம் செய்திடலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளேன். ஆனால் இவ்வளவிற்கும் பிறகும் ஜெயலலிதா இன்று அவசர அவசரமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த வேலை நிறுத்தம் என்பது கபட நாடகம் என்றும், வரலாறு என்னை மன்னிக்காது என்றும் தெரிவித்திருக்கிறார்.
* இலங்கைத் தமிழர்களுக்காக 1956 முதல் 50 ஆண்டு காலத்திற்கு மேலாக குரல் கொடுத்து வருகிற என்னை வரலாறு மன்னிக்குமா? என்று கேட்கிற ஜெயலலிதாவே, இலங்கையில் இப்போது ராஜபக்சே நடத்தும் யுத்தம் தமிழர்களை எதிர்த்து அல்ல, விடுதலைப்புலிகளைத் தான் என்று அபாண்டமாக பொய் சொன்னீரே, உம்மை வரலாறு மன்னிக்கும் என்று கனவு காண்கிறீரா?
* ஒரு போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான். அது போல் தான் இலங்கையிலே அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுகிறார்கள். இதில் என்ன குற்றம் என்று கேட்டீரே, உம்மை மாத்திரம் வரலாறு மன்னித்து விடும் என்று மனப்பால் குடிக்கிறீரா?
* பிரபாகரனை கைது செய்து, இந்தியாவிற்குக் கொண்டு வரவேண்டு மென்று தமிழக சட்டமன்றத்திலே தீர்மானத்தை முன் மொழிந்தீரே, அப்போது உம்மை வரலாறு மன்னித்து விடும் என்று தானே எண்ணிக் கொண்டு செயல்பட்டீர்.
* அனைத்து கட்சிகளும் சேர்ந்து அரசின் சார்பில் இலங்கைப் பிரச்சினைக்காக சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ள மறுத்தீரே, உம்மை வரலாறு என்ன வாழ்த்திக் கொண்டா இருக்கின்றது?
* உம்மையும் வைகோவையும் தவிர மற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களும் அடாது பெய்த மழையில் விடாது மனித சங்கிலி நடத்தினார்களே, அதை கபட நாடகம் என்று கூறினீரே, அந்த எட்டப்ப துரோகத்தை எப்படி அம்மா வரலாறு மன்னிக்கப் போகிறது?
* தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவரும் இலங்கைப் பிரச்சினைக்காக டெல்லி சென்று போர் நிறுத்தக் கோரிக்கை வைத்த போது, அவர்களோடு போக மறுத்தீரே, அதற்காக உம்மை வரலாறு மன்னிக்கப் போகிறதா?
* எம்.ஜி.ஆருக்கு நீர் செய்த துரோகங்களை வரலாறு மன்னித்தாலும் மன்னிக்கும். இலங்கைத் தமிழர்களுக்காக நீர் அடுக்கடுக்காக செய்து வரும் துரோகங்களை எந்தக் காலத்திலும் வரலாறு மன்னிக்காது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்க என்று குறிப்பிட்டுள்ளார்.
புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்திலிருந்து ஒரு இலட்சம் பேர் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். மூன்றாவது நாளாக இன்றையதினம் பாதுகாப்பு வலயத்திலிருந்து 21,000 பேர் வந்திருப்பதாகவும் இராணுவம் அறிவித்துள்ளது. இடம்பெயர்ந்து அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்திருக்கும் மக்களுக்குத் தேவையான சமைத்த உணவுகள் மற்றும் அத்தியாவசிய உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறி கடல் மற்றும் தரை மார்க்கமாக யாழ் குடாநாட்டுக்குச் சென்றிருக்கும் 3,000ற்கும் அதிகமானவர்கள் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்தவர்களைத் தங்கவைப்பதற்காக முதலாம் தவணைக்காக மூடப்பட்டிருக்கும் பாடசாலைகளை எதிர்வரும் 4ஆம் திகதிவரை மூடிவைத்திருப்பதற்கு யாழ் வலயக் கல்விப் பணிமனை கல்வி அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளது.
இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி 10-வது நாளாக ம.தி.மு.க. அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்கும் பெண்களில் மிகவும் சோர்வுடன் காணப்பட்ட 5 பேரை இன்று அதிகாலை பொலிஸார் கைது செய்தனர். இது குறித்து தெரியவருவதாவது:-
இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பல்வேறு பெண்கள் அமைப்பை சேர்ந்த 100 பெண்கள் சென்னையில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டனர். பொது இடத்தில் உண்ணா விரதம் இருக்க அவர்களுக்கு அனுமதி தராததால் ம.தி.மு.க. அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தனர்.
10-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் பெண்களில் மிகவும் சோர்வுடன் காணப்பட்ட 5 பேரை கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் சென்ற 100-க்கும் மேற்பட்ட பொலிஸார் இன்று அதிகாலை 5.45 மணியளவில் கைது செய்து வானில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.கைது செய்யப்பட்ட லோகநாயகி, ஜெயமணி, சுமதி, சித்ரா தேவி, தங்கமணி ஆகிய 5 பெண்களுக்கும் பொலிஸார் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கொழும்பு உட்பட மேல் மாகாண சபைத் தேர்தலில் மேசைச் சின்னத்தில் போட்டியிடும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தலைமையிலான இடதுசாரி முன்னணிக்கு (லங்கா சம சமாஜக் கட்சி) வாக்களிப்பதன் மூலம் தமிழ் மக்களிற்கான குரலை கொழும்பில் ஓங்கி ஒலிக்கச்செய்ய முடியும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த சில தினங்களில் பாதுகாப்பு வலயத்தில் இருந்த பொதுமக்களுள் 1658 பேர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற தகவல் முற்றிலும் பிழையானதாகும். இது பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஸ்ரீகாந்தா எம்.பி. பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறு நான் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கம் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,
நான் சபையில் அமர்ந்திருக்காத நேரத்திலேயே ஸ்ரீகாந்தா எம்.பி. இவ்வாறு தெரிவித்துள்ளார். வெளியே உள்ள தொலைக்காட்சி மூலம் இதனை அவதானித்த நான் உடனடியாக சபைக்குள் சென்று அதற்கான ஆதாரம் என்னவென அவரிடம் கோரினேன். தான் வெளிநாட்டு இணையத்தளம் ஒன்றின் மூலம் அத்தகவலைப் பெற்றதாக அவர் கூறினார்.
புலிகளுக்கு ஆதரவான இணையத்தளங்களை ஊடகங்கள் எனக் கூற முடியாது. இது முற்றிலும் பொய்யான தகவலாகும். பாராளுமன்றத்துக்குள் இன்னும் பிரிவினை வாதத்துக்கு ஆதரவாகக் குரல் எழுப்பப்பட்டு வருவது கவலைக்குரிய விடயமாகும். பாராளுமன்ற விஷேட உரிமைகளைப் பயன்படுத்தி இவ்வாறான பொய்ப் பிரசாரங்களில் ஈடுபடுவதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.