அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

பேராதனை வைத்தியசாலை மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

doctor.jpgபேராதனை பல்கலைக்கழகம் இணைந்து சுகாதார கற்கை நெறிக்கான மாணவர்களுக்கு செயலமர்வு பயிற்சிக்காக பேராதனை போதனா வைத்தியசாலையினை உபயோகிக்க அனுமதிக்காமையை எதிர்த்து பேராதனை போதனா வைத்தியசாலையை சேர்ந்த 186 மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், நேற்றுமுன்தினம் முதல் நோயாளர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் வெளிநோயாளர் பகுதியிலும் நோயாளர்களை பார்வையிடவில்லை. இதனால் நோயாளர்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.எனவே சுகாதார அமைச்சு இதற்கு தீர்வு காணவேண்டுமென மருத்துவர்கள் கோரியுள்ளனர்.

இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கத்தை நாடு கடத்த வேண்டும்: டி.சுதர்சனம்

sivajilingam0.jpgபிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி, உள்துறை மந்திரி ப.சிதம்பரம், தமிழ்நாடு முதல் அமைச்சர் கருணாநிதி, தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் டி.சுதர்சனம் தந்தி அனுப்பியுள்ளார்.

அதில், இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் என்பவர் ஓர் இந்தியாவைச் சேர்ந்த அரசியல்வாதியைப் போல தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் நேரடியாக பங்கேற்று ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்திய அரசியல் சாசன சட்டப்படியும், சர்வதேச பாஸ்போர்ட் விதிகளின்படியும் ஒரு நாட்டைச் சேர்ந்த எவரும் வேறொரு நாட்டு அரசியலில் தலையிடக்கூடாது. இந்த அடிப்படை நெறிமுறையை மீறி சிவாஜிலிங்கம் என்ற இலங்கை எம்.பி. தற்போது தென்சென்னை பா.ஜ.க. வேட்பாளர் இல.கணேசனுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

அதோடு மட்டுமில்லாமல், காங்கிரஸ் தலைவர்களைப் பற்றியும், மத்திய மற்றும் தமிழக அரசுகள் பற்றியும் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனது பிரசாரத்தில் விமர்சனங்கள் செய்து வருகிறார். அவரது இச்செயல் இந்திய அரசு அமைப்பு சட்டத்திற்கும், சர்வதேச பாஸ்போர்ட் விதிமுறைக்கும் முற்றிலும் எதிரானதும், கடுமையான தண்டனைக்கு உரியதும் ஆகும்.

எனவே, இந்தியாவில் குழப்பம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டுள்ள சிவாஜிலிங்கத்தின் பாஸ்போர்ட்டை உடனடியாக ரத்து செய்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது

ஆம் நாங்கள்தான் சிங்கள ராணுவத்தை வழி நடத்தினோம்- பிரணாப் முகர்ஜி

pranabl.jpgசிங்கள ராணுவத்திற்கும், தனி நாடு கேட்டு போராடும் விடுதலை புலிகளுக்கும் கடந்த 30 வருடங்களாக நடந்து வரும் போரில் சில சமயம் ராணுவத்திற்கு பின்னடைவும் சில சமயம், விடுதலைபுலிகளுக்கு பின்னடைவும் ஏற்பட்டு கொண்டு இருந்தது. ஆனால் கடந்த வருடம் ஆரம்பத்தில் சிங்கள அரசாங்கம், ஒரு தலை பட்சமாக போர் நிறுத்த அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு விடுதலை புலிகளின் மீது போர் தொடுத்தது,

கடந்த வருடம் ஜனவரியில் ஆரம்பித்த இந்த போர் நடவடிக்கை இரண்டு தரப்பிற்கு கடுமையான இழப்புகளை அடுத்து, விடுதலை புலிகளின் பெருவாரியான இடங்களை சிங்கள ராணுவம் கைப்பற்றியது. சிங்கள ராணுவத்தினை வழி நடத்துவது இந்தியாதான், அதற்கு பொருளாதார உதவி, ஆயுதம், போர் நுணுக்கம், உளவுத்துறை உதவி, போர் வீரர்கள் என பல விதத்தில் சிங்கள அரசுக்கு இந்திய உதவி செய்ததாக பத்திரிக்கையிலும், தமிழக அரசியல்வாதிகளும் கூறிவந்தனர்.

ஆனால் இதை டில்லி வாலாக்களும் தமிழக காங்கிரஸ் தலைவர்களும் மறுத்து வந்தனர். சில சமயங்களில் இந்தியாவின் பாதுகாப்பு மந்திரியான எ.கே.அந்தொனியும் இந்தியா சிங்கள ராணுவத்திற்கு உதவில்லை என்று கூறியிருந்தார். மேலும் இராணுவ அதிகாரிகள் தமிழகம் வரும் போதெல்லாம், ராணுவத்தை கொடுத்து உதவவில்லை என்று அறிக்கைவிட்டு சென்றனர். இந்த நிலையில் சிங்கள ராணுவத்தில் இந்திய வீரர்கள் உள்ள தகவலை பல ஆங்கில பத்திரிக்கைகள் வெளியிட்டன.

இதனை அடுத்து வெளியுறவு துறையும், பாதுகாப்பு துறையும் சேர்ந்து ஒப்பந்தபடி நாங்கள் ஆலொசனைகள் தான் வழங்கினோம், கனரக ஆயுதங்கள் எதுவும் கொடுக்கவில்லை என்று சொல்லி வந்தது.   தற்சமயம் புலிகளை மிகவும் குறைந்த பரப்பளவிற்கு நெருக்கிவிட்டது. மேலும் உலக அளவில் நெருக்கடிக்கு இந்தியா, சிங்கள அரசாங்கம் இரண்டுமே ஆளாகிவிட்டது.  இந்த ஒரு சூழ்நிலையில் சிங்கள் ராணுவத்தில் இந்தியாவின் பங்கு பற்றி என்.டி.டி.விக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி பேட்டி ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

சிங்கள அரசாங்கம் எங்களது நண்பர்கள், அவர்களுக்கு உதவ வேண்டியது எங்களது கடமை, மேலும் தெற்காசியாவில் தீவிரவாத செயல்களை அடக்கும் பணியில் நாங்களும் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு உண்டு.  போராளிகளால் இந்தியாவிற்கும் அச்சுறுத்தல்கள் உண்டு இதன் காரணமாக நாங்கள், ஆயுத உதவிகள் வழங்கி வந்தோம்.  இதனிடையில் புலிகளுக்கு சில அமைப்புகள் பெரிய அளவில் கனரக ஆயுதங்கள், மற்றும் தொழில் நுட்ப உதவிகள் வழங்குவது பற்றி எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் சிங்களராணுவத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதோடு, எங்களுக்கு(இந்தியாவிற்கும்) எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இந்த காரணத்தினால் இந்தியா நேரடியாக போராளிகளுடன் போரிடவேண்டிய தேவை ஏற்பட்டு விட்டது. நாங்கள் தீவிரவாத செயல்களை முடக்க ஒரு நடவடிக்கையாகத்தான் இந்த போரை வழிநடத்தினோம். ஆப்கான் மற்றும் ஈராக்கில் அமேரிக்க ராணுவம் மூக்கை நுழைக்கும் என்றால் நாங்கள் எங்கள் அருகில் உள்ள நட்பு நாட்டின் தீவிரவாத செயல்களை நிறுத்த தீவிர நடவடிக்கைகளில் ஏன் ஈடுபடக்கூடாது?

இவ்வாறு என்.டி.டி.விக்கு அளித்த ஒரு பேட்டியில் பிரணாப் முகர்ஜி சிங்கள போரில் இந்திய பங்கு பற்றி கூறினார்.

ராமதாஸ், வைகோவுக்கு ஈழத்தமிழர்கள் முக்கியமல்ல:திருமாவளவன்

thirmavala.jpgஈழத் தமிழர்கள் மீதான அக்கறையைவிட திமுக எதிர்ப்புதான் ராமதாஸ் மற்றும் வைகோவுக்கு முக்கியம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஈழத்தமிழர்களுக்காக உண்மையாக போராடும் அணிதான் எங்கள் அணி என்று சொல்லி டாக்டர் ராமதாஸ் என்னை அதிமுக அணிக்கு அழைத்தபோது, ஈழத்தமிழர்களுக்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்தான் ஜெயலலிதா.

எனவே ஒருபோதும் அதிமுக அணி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவானது என்பதை ஒத்துக் கொள்ளவே முடியாது என்று கூறி அந்த அணிக்கு வரமாட்டேன் என்று கூறிவிட்டேன். வைகோ, ராமதாஸ், நெடுமாறன் போன்றவர்களுக்கு ஈழத்தமிழர் நலனில் உள்ள அக்கறையைவிட இந்தத் தேர்தலில் திமுகவை தோல்வியடைய செய்வதுதான் முக்கியமாக உள்ளது என்றார்.

புலிகளின் ஆமர்பிளேட் வாகனமும் 9 சடலங்களும் மீட்பு – பாதுகாப்பு அமைச்சு தகவல்

armoplate_vehicle.pngபுலிகளால் பாவிக்கப்பட்டு வந்த ஆமர்பிளேட்களினால் மறைக்கப்பட்ட ட்ரக் வண்டி உட்பட மேலும் பல வாகனங்கள் பலவற்றைப் படையினர் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. வாழையர்மடம் தெற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த 600 மீட்டர் நீளமான மண் அணைக்கட்டுக்களை நேற்றுக் கைபற்றிய இராணுவத்தின் 53ஆம், 58ஆம் படைப் பிரிவினரே இந்த வாகனங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

புலிகள் தமது உயர்மட்டத் தலைவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல இந்த வாகனங்களைப் பயன்படுத்தி வந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.

மண் அணைக்கட்டுக்களைக் கைபற்றிய பின்னர் அங்கு தேடுதல் மேற்கொண்ட படையினர் எல்.ரி.ரி.ஈ. யினரின் 9 சடலங்களையும் ரி-56 ரக துப்பாக்கிகள் 15,  ஒரு ஸ்ணைபர் துப்பாக்கி, 11 கிளேமோர்கள்,  1கிலோ கிராம் எடையுள்ள சீ-4 ரக வெடிபொருள்,  75 டெட்டனேடர்கள்,  53 அருள் குண்டுகள், 47 கைக்குண்டுகள் மற்றும் 2 ஐகொம் தொடர்பு சாதனங்கள் உட்பட பெருமளவான ஆயுதங்களையும் கன்டெடுத்துள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

armoplate_vehicle.png

உடனடி யுத்தநிறுத்தத்திற்கு பிரித்தானிய-பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் அழைப்பு: அரசு மறுப்பு

British_French_Foreign_Ministersஇலங்கை அரசாங்கம் உடனடியாக யுத்த நிறுத்தம் ஒன்றினை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை வந்துள்ள பிரித்தானிய வெளியுறவுச் செயலர் டேவிட் மிலிபேண்ட் வலியுறுத்தியுள்ளார். எனினும் இக்கோரிக்கையை இலங்கை அரசாங்கம் ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

மோதல் பிரதேசங்களில் உள்ள பொது மக்களை விடுவிப்பதற்காகவும், அவர்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைகளை வழங்கும் பொருட்டும் இந்த உடனடி யுத்த நிறுத்தம் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு இலங்கையில் யுத்த நிறுத்தம் மேற்கொள்ள வேண்டி சர்வதேசம் அழுத்தங்களை மேற்கொண்டு வருவது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பாதுகாப்பதற்காக அல்ல என அவர் தெரிவித்தார்.

பொது மக்களைப் பாதுகாக்கும் பொருட்டே இவ்வாறான யுத்த நிறுத்தம் தேவைப்படுவதாக பிரித்தானிய வெளியுறவுச் செயலர் டேவிட் மிலிபேண்ட் தெரிவித்தார்.  அத்துடன் மூன்று முக்கிய கருத்துக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தும் பொருட்டு தமது இலங்கை விஜயம் அமைந்ததாக அவர் இதன் போது தெரிவித்தார்.

சர்வதேச சமூகத்தினது அழுத்தங்களுக்கு இலங்கை அரசாங்கம் மதிப்பளிப்பது குறித்தும் அதன்படி நடப்பது குறித்தும் இதன்போது முக்கிய அவதானம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். அத்துடன் பொதுமக்கள் மோதல் பிரதேசங்களிலும் அதற்கு வெளியே இடைத்தங்கல் முகாம்களிலும் அவலப்படும் நிலைமை குறித்து கவலை வெளியிட்டதுடன் இவை தொடர்பிலும் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் மூன்றாவதாக இலங்கை அரசாங்கம், பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் இணங்கி செயற்படுவது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இலங்கையில் மோதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் சுதந்திரமானதும், அமைதியானதுமான வாழ்க்கை முறைமையை உறுதி செய்வது தொடர்பிலேயே தாங்கள் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் டேவிட் மிலிபேண்ட் தெரிவித்தார்.

அதேவேளை, இன்று பிற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் அதன் பின்னர் இந்த விஜயம் தொடர்பான அறிக்கையினை வெளியிடவிருப்பதாகவும் இந்தச் சந்திப்பின் போது டேவிட் மிலிபேண்ட் தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பின் போது, பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குஷ்ணரும் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டார்.

“மோதல் பிரதேசங்களில் தற்போதும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்கியிருக்கின்றனர். அவர்களின் எண்ணிக்கை தொடர்பில் பலரும் பல்வேறு கருத்தினை வெளியிடுகின்றனர். ஆனால் அங்கு உண்மையில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது குறித்து எமக்குத் தெரியவில்லை. எவ்வாறாயினும் அங்கு உள்ள மக்கள் பாதிக்கப்படாமல் மீட்கப்பட வேண்டும் என்பதே எமது ஒரே குறிக்கோளாக இருக்கிறது” என அவர் இதன் போது தெரிவித்தார்.

அத்துடன் மோதல் பிரதேசங்களிலும், இடம்பெயர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களிலும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் பணியாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமெனத் தாம் கருதுவதாக அவர் குறிப்பிட்டார். எனவே மோதல் பிரதேச தொண்டு பணியாளர்களின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதன் மூலமே பொதுமக்களின் உண்மையான நிலவரம் குறித்து வெளியுலகத்திற்குத் தெரிய வருவதுடன், அவர்களின் உண்மையான தேவை அறிந்து சேவை செய்யவும் முடியும் என குஷ்ணர் குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெயர்ந்தவர்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு விஜயம் செய்ததன் பின்னர், தங்களது உண்மையான நிலைப்பாடுகள் குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் தாம் கருத்து வெளியிடுவதாக அவர் தெரிவித்தார். முகாம்களுக்குச் சென்று நேரடியாக அவர்களைப் பார்வையிடுவதன் மூலமாகவே உண்மையில் பொது மக்களின் நிலையினை அறிய முடியும், அதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த ஆராய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

டேவிட் மிலிபண்டின் இலங்கை விஜயத்தைக் கண்டித்து ஜாதிக ஹெல உறுமய ஆர்ப்பாட்டம்

29042009.jpgபிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபண்டின் இலங்கை விஜயத்தைக் கண்டித்து கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் முன்பாக ஜாதிக ஹெல உறுமய ஆர்ப்பாட்டம் மேற்கொண்டது. கைகளில் பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதில் கலந்துகொண்டனர்.

பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக பொய்ப்பிரசாரங்களை பரப்பி அரசியல் இலாபம் தேட சிலர் முயற்சி – ஊவா முதலமைச்சர்

ஊவா மாகாணத்தில் எந்தவொரு பாடசாலையும் மூடப்படவில்லை. ஒரு சிலர் உண்மைக்கு புறம்பான பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு அரசியல் இலாபம் தேட முனைகின்றனர். இவ்வாறு ஊவா மாகாண சபையின் முதலமைச்சர் காமினி விஜிதமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார்.  கடந்த வெள்ளிக்கிழமை முதலமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;

ஊவா மாகாண சபையின் முதலமைச்சர் பதவியும் அதேபோல் கல்வியமைச்சராக பதவியேற்ற பொழுது பதுளை, மொனராகலை மாவட்டத்தில் இயங்கிவந்த மூவின பாடசாலைகளில் மலசலகூடம், கட்டிட வசதிகள் என்பன அதிகமாக இருக்கவில்லை. படிப்படியாக மேற்கொண்ட கல்வி மேம்பாட்டுத் திட்டத்தால் சகல வழிகளிலும் பாடசாலைகள் அபிவிருத்தியடைந்து வந்துள்ளதுடன், கல்வியின் வளர்ச்சி வீதம் அதிகரித்துள்ளது.

கடந்த காலங்களில் கிராம தோட்டப்புறங்களைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் தமது பிள்ளைகளை நகர்ப்புற பாடசாலைகளில் சேர்ப்பதிலேயே ஆர்வம் காட்டிவந்தனர். தற்பொழுது அந்த நிலை மாறத் தொடங்கியுள்ளது. காரணம் கிராம தோட்டப்பாடசாலைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை நகரப் பாடசாலைகளுக்கு அனுப்புவதைத் தவிர்த்து கிராம தோட்டப்பாடசாலைகளில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கிராம தோட்டப்பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவிவந்தன. ஆசிரியர்கள் அதிகமாக இருக்கும் பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகக் காணப்பட்டது. அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் இருக்கும் பாடசாலைகளில் ஆசிரியர்கள் இல்லை. இதையெல்லாம் சரிசெய்து மிகவும் சிரமத்திற்கு மத்தியில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளேன். மாகாணசபைக்குட்பட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கையில் ஒரு போதும் அரசியல் இலாபம் தேடமுனையவில்லை. சுதந்திரமாக செயல்படும் அதிகாரத்தை அதிகாரிகளுக்கு வழங்கியிருந்தேன்.

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை ஊவா மாகாண சபையால் 5 ஆயிரத்து 600 தொண்டர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ள போதிலும் இன்னும் ஆசிரியர் பற்றாக்குறை தீரவில்லை. 40 சித்திரப்பாட ஆசிரியர்களும் விளையாட்டு உடற்கல்வி ஆசிரியர்களும் தேவைப்படுகின்றனர். இவ் ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கு விண்ணப்பம் கோரப்பட்டபோதும் வெற்றியளிக்கவில்லை. இருக்கும் ஆசிரியர்களிலிருந்து தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட தேர்வில் ஊவா மாகாணத்திற்கு மூவர் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டனர்.

பட்டதாரிகளுக்கு வெறுமனமே ஆசிரியர் நியமனம் வழங்க முடியாது. அவர்களுக்கு முதலில் பயிற்சியளிக்க வேண்டும். பயிற்சி இல்லாமல் நியமனங்கள் வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளின் சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டே பயிற்சி வழங்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறேன். ஒரு சிலர் கூறுவது போல் ஊவா மாகாணத்தில் எந்தவொரு பாடசாலையும் மூடவில்லை.

வரப்போகும் மாகாணசபைத் தேர்தலில் நானே முதலமைச்சர் இதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் ஏற்றுக்கொண்டுள்ளார். அதைவிட கட்சியின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டவன் என்ற ரீதியில் ஜனநாயக ரீதியான தீர்ப்பை ஏற்றுக்கொள்வேன். ஒரு போதும் நிராகரிக்கமாட்டேன்.

தற்போது மாகாணசபைக்குட்பட்ட பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சுயவிபரக்கோவையை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவங்கள் அனைத்து பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து விபரக்கோவைகளும் கிடைக்கப்பட்ட பின்னர் அதற்கேற்ற வகையில் மறுசீரமைக்கப்படுவதுடன், கல்வியில் பாரிய மாற்றத்தினையும் ஏற்படுத்த முடியுமெனக் கருதுகிறேன் என்றார்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு மட்டக்களப்பில் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு

vavu-stu.jpgமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வன்னியில் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப்பொருட்களை வழங்குவதில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மட்டக்களப்பு, மண்முனை வடக்கு நகரப்பகுதியிலும், காத்தான்குடி, ஆரையம்பதி ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அதிகமான மக்கள் பொருட்களை வழங்கிவருகின்றனர்.

அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சேகரிக்கப்படும் உணவுப் பொருட்களும் மட்டக்களப்பு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ஆர்.கேதீஸ்வரனிடம் ஒப்படைக்கப்பட்டு மாவட்ட செயலகம் ஊடாக வன்னிக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

இதேவேளை, மாவட்டத்தில் இயங்குகின்ற அரசசார்பற்ற நிறுவனங்களும் பெருமளவிலான நிவாரணப்பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

சர்வதேச ஆணைக்குழு விசாரணைக்கான தேவையை வலியுறுத்தும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம்

இடம் பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள சனச்செறிவான பகுதிகளில் கனரக ஆயுதங்களை பயன் படுத்தியதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளமையானது அரச படைகளும் விடுதலைப்புலிகளும் போர்ச் சட்டவிதிகளை மீறியமை தொடர்பான சர்வதேச ஆணைக்குழு விசாரணையின் தேவையை வலியுறுத்துவதாக உள்ளது என்று நியூயோர்க்கை தளமாக கொண்டு செயற்படும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.  கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளதாக முன்னர் அரசாங்கம் அறிக்கையை வெளியிட்டிருந்தது, பின்னர் நேற்று முன்தினம் அவற்றைப்பயன்படுத்துவதை நிறுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தது. பொதுமக்களுக்கு இழப்புகளை ஏற்படுத்தும் கனரக கலிபர் துப்பாக்கிகள், யுத்த விமானங்கள், வான்மார்க்க ஆயுதங்களை பயன்படுத்துவதை நிறுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்திருந்தது.

“கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது இறுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது’ என்று நேற்று முன்தினம் கூறியுள்ள மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான பணிப்பாளர் பிராட் அடம்ஸ், இலங்கை தொடர்பாக மண்ணுக்குள் தலையை புதைப்பதை ஐ.நா.பாதுகாப்பு சபை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்றும் இருதரப்பும் மேற்கொண்ட துஷ்பிரயோகங்கள் தொடர்பாக சர்வதேச ஆணைக்குழு விசாரணையை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு இடம் பெயர்ந்து வருவோர் பலநாட்களாக உணவருந்தாமல் இருப்பதாகவும் அவர்களுக்கு தொடர்ந்து உணவு, நீர், தங்குமிடம், சுகாதார வசதிகள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பாக அவர்கள் சோதனையிடுவதற்காகவும் பதிவு செய்வதற்காகவும் காத்திருப்பது குறித்தும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் பிரான்ஸ், பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர்கள் இடம் பெயர்ந்த மக்களின் பாதுகாப்பு, நலன்கள் தொடர்பாக அரசாங்கத்தின் “பதிலளிக்கும் கடப்பாட்டை’ உறுதிப்படுத்துவது குறித்து தமது விஜயத்தின்போது முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. இந்த வெளிவிவகார அமைச்சர்களின் வருகை இடம்பெயர்ந்த மக்களுக்கு கடைசி நம்பிக்கையாக இருக்கக்கூடும், பொதுமக்கள்மீதான தாக்குதல்கள் அல்லது அவர்களுக்கான மனிதாபிமான உதவிகள் மறுக்கப்படுவது என்பவை தொடர்பாக இலங்கை அரசின் பதிலளிக்கும் கடப்பாடு குறித்து இந்த வெளிநாட்டமைச்சர்கள் தெளிவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.