புலிகளால் பாவிக்கப்பட்டு வந்த ஆமர்பிளேட்களினால் மறைக்கப்பட்ட ட்ரக் வண்டி உட்பட மேலும் பல வாகனங்கள் பலவற்றைப் படையினர் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. வாழையர்மடம் தெற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த 600 மீட்டர் நீளமான மண் அணைக்கட்டுக்களை நேற்றுக் கைபற்றிய இராணுவத்தின் 53ஆம், 58ஆம் படைப் பிரிவினரே இந்த வாகனங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
புலிகள் தமது உயர்மட்டத் தலைவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல இந்த வாகனங்களைப் பயன்படுத்தி வந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.
மண் அணைக்கட்டுக்களைக் கைபற்றிய பின்னர் அங்கு தேடுதல் மேற்கொண்ட படையினர் எல்.ரி.ரி.ஈ. யினரின் 9 சடலங்களையும் ரி-56 ரக துப்பாக்கிகள் 15, ஒரு ஸ்ணைபர் துப்பாக்கி, 11 கிளேமோர்கள், 1கிலோ கிராம் எடையுள்ள சீ-4 ரக வெடிபொருள், 75 டெட்டனேடர்கள், 53 அருள் குண்டுகள், 47 கைக்குண்டுகள் மற்றும் 2 ஐகொம் தொடர்பு சாதனங்கள் உட்பட பெருமளவான ஆயுதங்களையும் கன்டெடுத்துள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
