இடம் பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள சனச்செறிவான பகுதிகளில் கனரக ஆயுதங்களை பயன் படுத்தியதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளமையானது அரச படைகளும் விடுதலைப்புலிகளும் போர்ச் சட்டவிதிகளை மீறியமை தொடர்பான சர்வதேச ஆணைக்குழு விசாரணையின் தேவையை வலியுறுத்துவதாக உள்ளது என்று நியூயோர்க்கை தளமாக கொண்டு செயற்படும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளதாக முன்னர் அரசாங்கம் அறிக்கையை வெளியிட்டிருந்தது, பின்னர் நேற்று முன்தினம் அவற்றைப்பயன்படுத்துவதை நிறுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தது. பொதுமக்களுக்கு இழப்புகளை ஏற்படுத்தும் கனரக கலிபர் துப்பாக்கிகள், யுத்த விமானங்கள், வான்மார்க்க ஆயுதங்களை பயன்படுத்துவதை நிறுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்திருந்தது.
“கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது இறுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது’ என்று நேற்று முன்தினம் கூறியுள்ள மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான பணிப்பாளர் பிராட் அடம்ஸ், இலங்கை தொடர்பாக மண்ணுக்குள் தலையை புதைப்பதை ஐ.நா.பாதுகாப்பு சபை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்றும் இருதரப்பும் மேற்கொண்ட துஷ்பிரயோகங்கள் தொடர்பாக சர்வதேச ஆணைக்குழு விசாரணையை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு இடம் பெயர்ந்து வருவோர் பலநாட்களாக உணவருந்தாமல் இருப்பதாகவும் அவர்களுக்கு தொடர்ந்து உணவு, நீர், தங்குமிடம், சுகாதார வசதிகள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பாக அவர்கள் சோதனையிடுவதற்காகவும் பதிவு செய்வதற்காகவும் காத்திருப்பது குறித்தும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் பிரான்ஸ், பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர்கள் இடம் பெயர்ந்த மக்களின் பாதுகாப்பு, நலன்கள் தொடர்பாக அரசாங்கத்தின் “பதிலளிக்கும் கடப்பாட்டை’ உறுதிப்படுத்துவது குறித்து தமது விஜயத்தின்போது முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. இந்த வெளிவிவகார அமைச்சர்களின் வருகை இடம்பெயர்ந்த மக்களுக்கு கடைசி நம்பிக்கையாக இருக்கக்கூடும், பொதுமக்கள்மீதான தாக்குதல்கள் அல்லது அவர்களுக்கான மனிதாபிமான உதவிகள் மறுக்கப்படுவது என்பவை தொடர்பாக இலங்கை அரசின் பதிலளிக்கும் கடப்பாடு குறித்து இந்த வெளிநாட்டமைச்சர்கள் தெளிவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.