அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

சட்டப்படி வேலை போராட்டத்தால் தபால் சேவைகள் பாதிப்பு – 5 இலட்சம் கடிதங்கள் தேக்கம்

post-office.jpgதபால் திணைக்கள மத்திய தபால் பரிவர்த்தனை நிலைய ஊழியர்களின் சட்டப்படி வேலைப் போராட்டத்தினால் தபால் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 5 இலட்சம் கடிதங்கள் வரை விநியோகிக்கப்படாது குவிந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. நான்கு தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப்பட்டதை கண்டித்து 4 தொழிற் சங்கங்கள், கடந்த வியாழக்கிழமை முதல் சட்டப்படி வேலையில் ஈடுபட்டுள்ளன.

மோசடியில் ஈடுபட்ட ஊழியர்கள் நால்வரே வேலை நீக்கம் செய்யப் பட்டதாகவும் இந்த வேலை பகிஷ்கரிப்பு முறையற்றது எனவும் தபால் மா அதிபர் எம். கே. பி. திசாநாயக்க கூறினார். சீரான சேவைகளை வழங்குவதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பதிவுத் தபாலில் அனுப்புவதற்காக வழங்கப்பட்ட 6 ஆயிரம் கடிதங்களுக்கு இவர்கள் 50 ரூபா வீதம் குறைவாக அறவிட்டுள்ளதாக தபால் மா அதிபர் கூறினார். இதனால் தபால் திணைக்களத்திற்கு 3 இலட்சத்து 8 ஆயிரம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேற்படி நஷ்டத் தொகையை குறித்த நிறுவனங்கள் மீள வழங்கியுள்ளன.

மேற்படி வேலை பகிஷ்கரிப்பினால் 368 பதிவுத் தபால் பொதிகள் கொழும்பிலும் 406 பொதிகள் கொழும்புக்கு வெளியிலும் விநியோகிக்கப்படாதுள்ளதோடு 23,966 கடிதங்களும் 8834 பதிவுக் கடிதங்கள் கொழும்பிலும் கொழும்புக்கு வெளியிலும் முடங்கிக் கிடப்பதாக தபால் மா அதிபர் கூறினார். மேற்படி மோசடி குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை முறையற்ற விதத்திலே 4 ஊழியர்களும் வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தபால் சேவை சங்கத் தலைவர் ஜயந்த விஜேசிங்க கூறினார். 5 ஆவது நாளாக வேலைப் பகிஷ்கரிப்பு தொடர்வதாகவும் இது குறித்து பேச்சு நடத்த அமைச்சர் முன்வரா விட்டால் அடுத்த கட்டமாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்க உள்ளதாகவும் அவர் கூறினார். கொழும்பு தபால் பரிவர்த்தனை நிலைய ஊழியர்களின் வேலைப் பகிஷ்கரிப்பால் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தபால் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 2 தினங்களுக்குள் தமது கோரிக்கைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

டெங்கு ஒழிப்புக்கு ஒத்துழைப்போருக்கு விஷேட வெகுமதியுடன் கெளரவம்

mos.jpgதிரு கோணமலை மாவட்டத்தில் டெங்கு பரவலுக்கு உடந்தையாக இருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதே நேரம், டெங்கு ஒழிப்புக்கு ஒத்துழைப்போருக்கு வெகுமதிகளுடன் கெளரவமும் வழங்கத் தீர்மானித்துள்ளதாக கிழக்கு சுகாதார அமைச்சர் எம். எஸ். சுபைர் தெரிவித்தார்.

திருமலை மாவட்டத்திலிருந்து டெங்கை ஒழிக்கும் செயல்திட்டம் தொடர்பான உயர்மட்ட மாநாடு நேற்று மாகாண சுகாதாரப் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டத்தின் அனைத்து துறைசார் உயர் அதிகாரிகளும் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

திருமலை நகரம் கிண்ணியா பிரதேசங்களில் டெங்கு தீவிரமடைந்துள்ளது. உடனடியாக இப் பகுதிகளில் டெங்கு ஒழிப்பை தீவிரப்படுத்துமாறு பணிப்புரை வழங்கிய அமைச்சர் சுபைர், இப்பிரதேசங்களில் டெங்கு பரவலுக்கு உடந்தையாக இருப்போர் குறித்து கூடுதலான கவனம் செலுத்துமாறும் பணிப்புரை வழங்கினார்.

யாழ். வீதி விபத்தில் பல்கலைக்கழக மாணவர் இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், கந்தர்மடம் பழம் வீதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் பொறியியல் பீட மாணவன் உட்பட இரு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஞாயிறு இரவு 11.30 மணியளவில் பழம் வீதியில், வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றுடன் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதுண்டபோதே இந்த இரு மாணவர்களும் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

திருநெல்வேலியிலிருந்து பழம் வீதியூடாக இவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதில் பருத்தித்துறை குருநாத சுவாமி கோயிலைச் சேர்ந்த யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட இறுதியாண்டு மாணவனான சாந்தகுமார் சந்துரு (வயது 24), சுண்டுக்குழி, கொழுப்புத் துறைவீதி பண்டியந்தாழைச் சேர்ந்த கண்டி பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீட 2 ஆம் வருட மாணவனான அன்ரன் யோகராஜா கலிஷ்ரஸ் கஜேந்திரன் (வயது 24) ஆகிய இருவருமே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை தான் இச்சம்பவத்தில் பலியான எஸ்.சந்துருவின் பிறந்த தினம் என்பதுடன், கஜேந்திரன் யாழ்.பல்கலைக்கழகத்திற்குப் பயிற்சிக்காக வந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த இருவரது சடலங்களையும் யாழ்.மாவட்ட நீதிபதி ஏ.பிரேம்சங்கர் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டதுடன், யாழ்.பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தொலைபேசி ஊடாக புகார் தெரிவிக்கலாம்

telephone.jpgஉள்ளூராட்சி மன்றங்களால் தீர்க்கப்படாதி ருக்கும் பிரச்சினைகள் குறித்து தொலைபேசி ஊடாக புகார் தெரிவிக்கவென உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு விஷேட பிரிவொன்றை அமைத்துள்ளது.

உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ. எல். எம். அதாஉல்லாவின் ஆலோசனைக்கு அமைய இப்பிரிவு ஸ்தாபிக்கப்பட்டிருப்பதுடன் இது கடந்த சனியன்று திறந்து வைக்கப்பட்டதாகவும் அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றங்களினால் தீர்க்கப் படாதுள்ள பிரச்சினைகள் குறித்து இப்பிரிவில் புகார் செய்ய முடியும்.

அதேநேரம் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகள் குறித்து தேவையான ஆலோசனைகளையும், தகவல்களையும் இப்பிரிவிலிருந்து தொலைபேசி ஊடாக பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இப்பிரிவுக்கான 0112328428, 0112328282 என்ற தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. அப்பிரிவுக்கு தெரிவிக்கப்படும் புகார்கள் குறித்து விஷேட கவனம் செலுத்தவும் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

நீலன் திருச்செல்வம் நினைவு பேருரையாற்றுகிறார் ரோமிலா தாபர்

Neelan Thiruchselvam Drஇந்தியாவின் புராதன வரலாற்றுத் துறை சார்ந்த உலகின் முன்னணி நிபுணர்களில் ஒருவரான ரோமிலா தாபர் நீலன் திருச்செல்வம் ஞாபகார்த்த விரிவுரையை நிகழ்த்தவுள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி மாலை 6 மணிக்கு இலங்கை மன்றக்கல்லூரி மண்டபத்தில் வரலாறுகளும் அடையாளங்களும் எனும் தொனிப்பொருளில் 11 ஆவது நீலன் திருச்செல்வம் நினைவுப் பேருரையை ரோமிலா தாபர் நிகழ்த்தவுள்ளார்.

புதுடில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் புராதன இந்திய வரலாற்றுத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றும் ரோமிலா தாபர், கோர்னெல் பல்கலைக்கழகம், பென்சிலவேனியா பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

பண்டைக்கால இந்திய வரலாறு தொடர்பான பல நூல்கள், கட்டுரைகள், ஆக்கங்களை வெளியிட்டுள்ள தாபரின் அசோகாவும் மௌரியர்களின் வீழ்ச்சியும், அரசுக்கான பரம்பரை, வரலாறும் அதற்கப்பாலும், ஆரம்ப இந்திய வரலாற்றின் கடந்த கால கலாசார கட்டுரைகள், அஞ்ஞாதவாசமும் இராஜ்ஜியமும், இராமாயணம் பற்றிய சில சிந்தனைகள், ஆரம்பகால இந்தியா போன்ற பல நூல்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.

மேல் நீதிமன்றத்தில் “வெள்ளைக்கொடி’ வழக்கு

ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி.யும் முன்னாள் இராணுவத்தளபதியுமான ஜெனரல் சரத்பொன்சேகாவின் “வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு எதிர்வரும் வியாழக்கிழமை (29) மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.வியாழக்கிழமை மேல்நீதிமன்றத்தில் ஜெனரல் சரத்பொன்சேகாவின் பிரசன்னத்தை உறுதிப்படுத்துமாறு கொழும்பு பிரதம நீதிவானிடம் அரச சட்டத்தரணி நேற்று திங்கட்கிழமை கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெனரல் சரத்பொன்சேகா தொடர்பான வெள்ளைக்கொடி விவகார வழக்கு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அத்துடன் ஏனைய கொழும்பு நீதிமன்றங்களில் பொன்சேகாவுக்கு எதிரான இரு வழக்குகளும் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன.

தனியார் பஸ் உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இன்று ஏற்பாடு செய்திருந்த வேலை நிறுத்தப் போராட்டம் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்திற்கும் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவுக்குமிடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து கைவிடப்பட்டது.

மேல் மாகாண தனியார் பஸ்களிடம் இருந்து அறவிடப்படும் பதிவுக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதை ஆட்சேபித்து இன்று நள்ளிரவு முதல் வேலை பகிஷ்கரிப்பில் ஈடுபட முடிவு செய்யப்பட்டிருந்தது. மாதாந்தப் பதிவுக் கட்டணத்தை ஆயிரம் ரூபாவாகவும் வருடாந்த பதிவுக் கட்டணத்தை 5 ஆயிரம் ரூபாவாகவும் அதிகரிக்க மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபை தீர்மானித்திருந்தது.

அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையையடுத்து மாதாந்த பதிவுக் கட்டணத்தை 100 ரூபாவினாலும் வருடாந்தப் பதிவுக் கட்டணத்தை 500 ரூபாவினாலும் உயர்த்த முடிவு காணப்பட்டதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறினார்.

பதினேழு தடவைகள் பிடியாணை; நான்கு நீதிமன்றங்களால் தேடப்பட்ட பெண் கைது!

பதினேழு முறை நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பெண் ஒருவரை கண்டி பொலிஸார் நேற்று (26ம் திகதி) மடக்கிப் பிடித்துள்ளனர்.

இப்பெண் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி நாட்டின் பல பகுதிகளிலும் பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டவராவார். இவர் மீது கண்டி, பேலியாகொடை, ராகமை, புதுக்கடை ஆகிய நீதிமன்றங்களே பிடியாணை பிறப்பித்துள்ளன. இப்பெண் கைது செய்யப்பட்ட சமயம் அவரிடமிருந்து 22 போலி விசாக்கள், 15 போலி வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவரகங்களின் அனுமதிப் பத்திரப் புகைப்படப் பிரதிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

”நடிகர்கள் இலங்கைக்கு பயணிக்க முடியும்.” – தென்னிந்திய நடிகர் சங்கம் தீர்மானம்

Sarathkumar_Actorஇந்திய நடிகர், நடிகைகள் தொழில் ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியாகவோ இலங்கைக்கு பயணிக்க முடியும். இந்நிலையில் “அவர்கள் அவ்வாறு செல்வதைத் தடுக்க முயற்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று நேற்று சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. (இது பற்றி வெளியான செய்தியும் விவாதமும் : அசின் அரசியல் – அரசியல்ரீதியில் சரியா? (Political Correctness) – அசினின் யாழ்-வன்னி விஜயமும் நடிகர் சங்கத்தின் U turn உம் )

இதேவேளை சினிமாவில் ஏற்படும் இலாப நஷ்டங்களுக்கு நடிகர்களிடம் நட்டஈடு கோர முடியாது என்றும் இந்தக் கூட்டத்தின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நடிகர் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் நேற்று சென்னையிலுள்ள நடிகர் சங்க வளாகத்தில் கூடியது. இதில் நடிகர், நடிகையர் இலங்கைக்கு செல்வது உள்ளிட்டவை தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்துக்கு நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். நடிகை அசின் இலங்கை சென்றார். இப்போது நடிகர் கருணாஸ் இலங்கை செல்கிறார். இந்திய கலைஞர்கள் இலங்கை செல்லக்கூடாது என்று தமிழுணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இவர்களின் இலங்கை பயணத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்.

பிரபல கதாநாயகர்கள் நடித்த படங்கள் தோல்வி அடைந்தால் அந்த கதாநாயகனிடம் பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி தியேட்டர் அதிபர்கள் கேட்கும் நிலையும் இருக்கிறது. இதற்கு என்ன முடிவு செய்யப்போகிறது நடிகர் சங்கம் என்ற கேள்வி எழுந்தது. பரபரப்பான இந்த சூழ்நிலையில் சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கக் கூட்டம் கூடியது.

இந்த வருடத்துக்கான பொதுக்குழு கூட்டம், சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க கட்டடத்தில் நேற்று காலை நடந்தது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது. கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ராதாரவி, துணைத்தலைவர்கள் விஜயகுமார், மனோரமா, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

றுகுணு மாணவன் மரணம் தொடர்பான பொலிஸாரின் கருத்தை ஜே.வி.பி. நிராகரிப்பு

றுகுணு பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்திருந்த கருத்தை ஜே.வி.பி. நேற்று ஞாயிற்றுக்கிழமை நிராகரித்துள்ளது.

ஜே.வி.பி.யின் மாணவரமைப்பின் உறுப்பினரொருவரால் தலையில் தாக்கப்பட்டு கடுமையான காயங்களின் விளைவாக வியாழன் இரவு றுகுணுப் பல்கலைக்கழக மாணவன் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்ட கருத்தை ஜே.வி.பி. உறுப்பினரும் ஜனநாயகத் தேசியக் கூட்டணி எம்.பி.யுமான அநுர குமாரதிஸாநாயக்க நிராகரித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது றுகுணு பல்கலைக்கழக மாணவன் ஜே.வி.பி. மாணவர் அமைப்பின் உறுப்பினரால் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை அநுரகுமார நிராகரித்துள்ளார்.

சுசந்த அருண பண்டார என்ற 25 வயது மாணவனின் மரணம் தொடர்பாக பொலிஸாரின் அறிக்கைகள் இதுவரை முரண்பட்டவையாகக் காணப்பட்டதாக அநுரகுமார கூறியுள்ளார். அருண பண்டார இயற்கையாக மரணமெய்தியதாக முதலில் பொலிஸார் கூறியதாகவும் இப்போது தமது நிலைப்பாட்டை மாற்றி அவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவதாகவும் அநுரகுமார தெரிவித்திருக்கிறார். தாக்குதலைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவன் பின்னர் இறந்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரே தாக்கியதாக ஜே.வி.பி.யிடம் தொடர்புபட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், மற்றொரு மாணவனே தனது மகனைத் தாக்கியதாக அந்த இறந்த மாணவனின் தாயார் முறைப்பாடு செய்துள்ளதாகப் பொலிஸார் கூறியுள்ளனர். அந்த மாணவனை அடையாளங்கண்டு கொண்டுள்ளதாகவும் அவர் ஜே.வி.பி. பணியாளர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். ஊவா பரணகமவைச் சேர்ந்த பஸநாயக்க என்பவரே அந்த மாணவரென அடையாளங்கண்டு கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தனது வீட்டிலிருந்து காணாமல் போயிருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். இதேவேளை, இந்த விடயம் குறித்து முழுமையான விசாரணைக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் சனிக்கிழமை உத்தரவிட்டிருக்கிறார்.